காவல்தெய்வம் -கே. விஜயன் டைரக்சன் செய்த முதல்படம். பின்னர் வண்டிச்சக்கரம் -படமும் அவர் இயக்கத்தில் வெளியான வெற்றிப் படம். ஆணிவேர் திருப்பூர் மணியின் 4-வது தயாரிப்பு. கொங்கு மண்ணில் பிறந்த சண்முகப்ரியன் கதை வசனம்.
வடநாட்டிலிருந்து தமிழகத்துக்கு மாற்றலாகி -சென்னை கலெக்டராக பதவி உயர்வு பெற்ற அருக்காணி ஐஏஎஸ் (சரிதா) பொறுப்பேற்ற மறுநாளே கோவை மாவட்டம் ஊத்துக்குளிக்குப் போகிறார்.
அருக்காணி என்ற ஒடுக்கப்பட்ட இனத்துப் பெண்ணை மகளாக தத்து எடுத்து இந்த அளவுக்கு உயர்த்தியவர் 60 வயது கடந்த கட்டை பிரம்மச்சாரி ஆசிரியர் கணபதி அய்யர்.
சிறுவயதில் ஊத்துக்குளி கிராமத்தில் ஓராசிரியர் பள்ளி துவக்கப்பட்டபோது அங்கு அருக்காணிக்கு வாத்தியாராக இருந்து பின்னர் அவளை தத்து எடுத்து டிரான்ஸ்பர் ஆன போது உடன் அழைத்து சென்று விடுகிறார்.
சுமார் 15 வருடங்களுக்குப் பிறகு பிறந்த ஊருக்குப் போன அருக்காணி பல சிரமங்கள் பட்டு, தன் ஒரே உறவான அத்தை செல்லக்காளைச் (எஸ்.என். லட்சுமி) சந்திக்கிறார்.
பஞ்சடைந்த கண்களும், பரட்டைத் தலையுமாக அலைந்த மூதாட்டியை வேலை செய்த காட்டில் போய் சந்தித்து, உங்கள் தம்பி மகள் அதே அருக்காணிதான் நான் என்று நம்ப வைத்து தன்னுடன் சென்னைக்கு கூட்டிப் போகிறாள் அருக்காணி.
அத்தை மகன் ராமன்- அருக்காணி லட்சியம் நிறைவேறக் காரணமாக இருந்தவன் - ‘அருக்காணியை ஆசிரியர் கடத்திக் கொண்டு போய் விட்டதாக’ பஞ்சாயத்தில் குற்றம் சுமத்திய போது சீறிப்பாய்ந்து, ஊர்ப் பெரியவரை கடப்பாறையால் வயிற்றைப் பிளந்து கொன்று விடுகிறான்.
அருக்காணி கல்வியைத் தொடர்ந்து கலெக்டராக உயரும் காலத்தில் ஆயுள் தண்டனை பெற்று 15 ஆண்டுகள் சிறையில் இருக்கிறான் ராமன்.
தமிழகத்தின் முக்கிய சிறைகளுக்கெல்லாம் போன் செய்து விசாரித்து கடைசியில் அவன் வேலூர் சிறையில் இருக்கிறான் என்பதையும், ஓரிரு நாட்களில் தண்டனைக் காலம் முடிந்து விடுதலை ஆகிறான் என்பதையும் அருக்காணி தெரிந்து கொள்கிறாள்.
விடுதலையாகி வெளியே வந்தவன் -மிக உயர்ந்த பதவியில், அரண்மனை போன்ற வீட்டில் அருக்காணி இருப்பதைக் கண்டு ஆனந்தக்கண்ணீர் வடிக்கிறான். அவளுக்கேற்ற மாப்பிள்ளை பார்த்து திருமணத்தை நடத்தி வையுங்கள் என்று ஆசிரியரைக் கேட்டுக் கொள்கிறான்.
ஆனால் அருக்காணியோ- சிறுவயதில் ஊரை விட்டு புறப்படும் முன் முனியாண்டி கோயிலில் -இந்தப் பிறவியில் எனக்கு நீதான் கணவன், நான்தான் உன் மனைவி -இதில் மாற்றமில்லை என்று செய்து கொடுத்த சத்தியத்தை நினைவுபடுத்தி -அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்கிறாள்.
அறியாத வயதில் அப்படி சத்தியம் செய்திருந்தாலும், கலெக்டருக்கு ஒரு அறிவிலி, கொலைக்கைதி எப்படி பொருத்தமானவனாக இருக்க முடியும்? என்று ராமனும், ஆசிரியரும் வாதாடுகிறார்கள். பயனில்லை. அருக்காணி பிடிவாதம் வென்று விடுகிறது. வாழ்நாள் முழுவதும் வாழாவெட்டியாக இருந்தாலும் இருப்பேனேயொழிய, வேறொருவன் தாலி கட்ட கழுத்தை நீட்ட மாட்டேன் என்ற அருக்காணி பிடிவாதம் ராமனை மெளனியாக்கி விடுகிறது.
திருமணம் முடிந்து விட்டாலும் அருக்காணிக்கேற்ற கணவன் நானில்லை என்ற எண்ணத்தை ராமனால் மாற்றிக் கொள்ளவே முடியவில்லை.
தன் அந்தஸ்துக்கு ஏற்ற மாப்பிள்ளையை அருக்காணி தேடிக் கொள்ளாதது தவறு என்பதை அவள் உணர வேண்டும் என்பதில் பிடிவாதமாக ராமன் இருந்ததால் அவர்ளுக்குள் எந்த உறவும் வைத்துக் கொள்ள முடியவில்லை.
பதினைந்து ஆண்டுகள் சிறையிலேயே வாழ்ந்து விட்டவனுக்கு வெளி உலகில் நண்பர்கள் யாரும் இல்லை. ஜெயிலிலிருந்து விடுதலையாகி வருபவர்கள் ராமனைப் பார்க்க கலெக்டர் வீட்டுக்கு வருகிறார்கள்.
அப்படி வந்த கைதி நண்பனோடு வெளியே சென்றபோது நண்பன் விலைமகள் வீட்டுக்குப் போக, வெளித் திண்ணையில் சும்மா உட்கார்ந்திருந்த ராமனையும் விபச்சார தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்கிறது போலீஸ். விலைமகள் வீட்டில் ராமன் குடித்திருக்க மாட்டான். எந்த பெண்ணோடும் உறவு வைத்திருக்க மாட்டான் என்பதில் அருக்காணி மட்டும் உறுதியாக இருக்கிறாள்.
படிக்காதவனாயிருந்தாலும், தன்னால் அருக்காணிக்கு எந்த அவப்பெயரும் உண்டாக்காமலிருக்க வேண்டும் என்று வீட்டிலேயே அடைந்து கிடப்பது என்று முடிவு செய்கிறான்.
கணவன் நாள் முழுதும் வீட்டிலேயே இருப்பதை அறிந்த அருக்காணி ஒரு நாள் அவனைத் தன் தோழி வீட்டில் நடைபெற்ற குழந்தை பெயர் சூட்டு விழாவுக்கு வற்புறுத்தி கூட்டிப் போகிறாள்.
எதிர்பாராமல் ராமுவே குழந்தைக்கு பெயர் சூட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. வேறு வழியில்லாமல், தன் குலதெய்வத்தின் பெயர் நினைவுக்கு வர, ‘மாசாணம்’ என்று குழந்தைக்கு பெயர் வைக்கிறான்.
நாகரீகத்தில் மிதக்கும் அந்த கூட்டம் அந்தக் காட்டுமிராண்டி வைத்த பெயரைக் கேட்டு ‘கொல்’லென்று சிரித்தது.
வீட்டுக்குத்திரும்பியவன், இனிமே கழுத்தை நெறித்து என்னைக் கொன்றாலும் தான் கலெக்டர் கணவன் என்று வெளியில் சொல்ல மாட்டேன் என்று அருக்காணியிடம் சபதம் செய்கிறான்.
ஒரு நாள் வடநாட்டிலிருந்து மேலதிகாரிகள் இங்கு வருவதாகவும், திருமணத்திற்கு வர முடியாததால், தம்பதிகளை காண நேரில் வருபவர்களை வீட்டில் வரவேற்று உபசரிக்க வேண்டும் என்றும் அருக்காணி சொல்கிறாள்.
மீண்டும் ஒரு பெரிய மனிதர் கூட்டத்தில் மாட்டப் போகிறோமென்று பயந்தவன், அன்று மாலையே வீட்டை விட்டு வெளியேறி நீண்ட நேரம் கழித்து இரவு வீடு திரும்புவான்.
அதிகாரி முன் அவமானப்படுத்தப்பட்டிருப்பாள் அருக்காணி என்பதை அவன் உணர்ந்த போதிலும், படித்தவர் மத்தியில் கூனிக்குறுகி நிற்காமல் வெளியே போனது சரியென்று வாதிடுவான்.
ஒரு நாள் சாப்பிடும்போது கருவாட்டுக் குழம்பை ருசித்ததால் வாந்தி எடுக்கிறாள் அருக்காணி. வீட்டார் அதை தாய்மை அடையும் நல்ல சகுனம் என்று நினைத்து மகிழ்ச்சியடைகிறார்கள். உண்மையை அவர்களிடம் கூற முடியாமல் குமுறிய அருக்காணி தன் தோழியிடம் நடந்ததை சொல்கிறாள்.
‘நீ நிஜமாகவே தாயாக வேண்டும் என்று விரும்பினால் தினமும் கலெக்டராகவே கணவன் முன் தோன்றாமல், ஒரு சில நாட்களாவது அவரிடம் மனைவியாக நடந்து கொள். அதற்கு ஒரே வழி இருவரும் எங்காவது ஒரு வாரம் சுற்றுலா சென்று வாருங்கள்’ என்கிறாள் தோழி.
அவள் ஆலோசனை வீண்போகவில்லை. ஊட்டியில் பைக்காரா அருவி பின்னணியில் அவன் முதல் முறையாக ‘அருக்காணி’ என்று பெயர் சொல்லி கூப்பிட்டான்.
உண்மையான அன்புடன் மனம் திறந்து பேசினான். பேச்சின் நடுவில் அருக்காணிக்கு கணவனாக இருக்கும் தகுதி தனக்கு இல்லவே இல்லை என்று கூறி -உனது படிப்புக்கும், தகுதிக்கும் ஏற்ப இன்னொருவனை மறுமணம் செய்து கொள் என்கிறான் ராமன்.
அதிர்ந்து விடுகிறாள் அருக்காணி. வீடு திரும்பியபோது அவனை யாரும் மதிக்கவில்லை. விரக்தியில் வெளியே சென்றவன், நண்பன் நாச்சிமுத்து மனைவியை, வீட்டை காலி செய்யச் சொல்லி அவமானப்படுத்தும் கான்ட்ராக்டரின் ஆட்களோடு மோதுகிறான்.
நல்லது செய்யப்போன இடத்தில் பழி இவன் மீது சுமத்தப்பட்டு ஊர் மக்களால் கடுமையாகத் தாக்கப்படுகிறான்.
கலெக்டரின் கணவன் என்று ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் அந்தத் தாக்குதல் நடந்திருக்காது. நல்லவேளையாக கலவரத்தை அடக்க வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அவனை அடையாளம் கண்டு வீட்டில் கொண்டு போய்ச் சேர்க்கிறார்.
‘கலெக்டர் கணவர்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா இப்படி ரத்தக்காயங்கள் ஏற்பட்டிருக்காதே -வாயில என்ன கொழக்கட்டையா வச்சிருந்தே? இப்படி வாயில்லா புள்ளையா எனக்கு வந்து பொறந்திருக்கியே’ என்று அம்மா திட்டுகிறாள்.
‘ஏம்பா நீ சோறுதான் திங்கறியா? மனுஷனா மாடா?’ என்று கணபதி அய்யரும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார்.
பொங்கி எழுந்த ராமன், ‘கலெக்டரின் கணவனாக நான் ஒரு நாள் கூட வாழலை. பணக்கார வாழ்க்கை, இந்த படாடோப வாழ்க்கை என்னைப் பொறுத்தவரை அடிமை வாழ்க்கை. இங்க வாழ்றதை விட நாலு ஆடும், ஒரு கோவணமும் இருந்தால் போதும்- போங்கய்யா’ என்று கோபித்துக் கொண்டு கிராமத்துக்குப் போய் விடுகிறான்.
அமைதியான சூழலில் பச்சைப் பசேல் என்ற வயல்வெளியில் ஒரு சின்ன ஆட்டுக்குட்டியை எடுத்து அணைத்து முத்தமிடுவான்.
வீட்டுக்குப் போனால் வாசலில் கோலம் போடப்பட்டுள்ளது. குடிசைக்குள் நுழைந்தால் அசல் பட்டிக்காட்டுப் பெண்ணாக சுங்கிடி புடவை கட்டி அருக்காணி சிரிக்கிறாள்.
கணவனின் பரிசுத்தமான அன்புக்கு முன்னால் கலெக்டர் உத்யோகம் தூசு என்று வேலையை உதறி விட்டு கிராமத்தில் வாழ முடிவெடுத்தாள் அருக்காணி.
அருமையான படம் என்றாலும், ஒரு ஏழைப்பெண், ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண் கல்வி கற்பது, கலெக்டர் ஆவது சாதாரண விஷயமா? வாழ்வில் உயர்ந்த நிலைக்குப் போனவள், பாதாளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதற்கு இணையானது; அவள் எடுத்த முடிவு என்று பத்திரிகைகள் கண்டித்து விமர்சனம் எழுதின.
படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.
கொங்கு மண்ணில் பிறந்த கதாசிரியர், சண்முகப்ரியன் அந்த மக்கள் பேசும் அசல் மொழியை வசனங்களில் பயன்படுத்தி இருப்பார்.
கணபதி அய்யர் டிரான்ஸ்பர் ஆகி வேறு ஊருக்குப் புறப்படும் போது -வாத்தியாரய்யா! அருக்காணியையும் உங்க கூட கூட்டீட்டுப் போயி படிக்க வச்சு தலவு சேத்து விடுங்க!’ என்பான்.
‘ஊர் ஜனங்க கோவிச்சுப்பாங்களே’ என்பார் ஆசிரியர்.
‘இந்த ஊரை என் கோவணத்துணிக்கு மேல் நான் மதித்ததில்லை. நீங்க பேசாம கூட்டீட்டுப் போங்க!’ என்பான் ராமன்.
கலெக்டர் அருக்காணி, அய்யர் வளர்ப்பில் சைவ உணவு முறைக்கு பழகிப் போய் விட்டாள்.
ஒரு நாள் சாப்பிடும்போது, ‘என்னவோ புதுசா வாசனை வருதே!’ என்பாள்.
‘கருவாட்டுச் சோறு கமகமன்னு மணக்கத்தாஞ் செய்யும்’ என்பான் ராமன்.
அவள் ‘ஓய்’ என்று குரல் கொடுத்து வாஷ் பேசின் அருகே ஓடுவாள்.
‘ஏன் கொமட்டிகிட்டு வருதா? போயிட்டு போகுது. வெறும் வயித்தோட கெடக்காதே. துளியூண்டு வெறுஞ்சோறு போட்டு மொளசாறு (மிளகு சாறு) ஊத்தி சாப்பிடு!’ என்பான்.
ஜெயிலிலிருந்து 15 ஆண்டுகள் முடிந்து -பிரம்மாண்டமான கலெக்டர் பங்களாவுக்குள் நுழைந்ததும், ‘வாப்பா ராமா. இதுதான் உன் அருக்காணி’ என்று கணபதி அய்யர் காட்டுவார். தூரத்தில் கம்பீரமாக, முழுமையாக வளர்ந்த
பெண்- கலெக்டராக நிற்பதைப் பார்ப்பான் ராமன்.
திறந்த மதகு வழி பீய்ச்சியடிக்கும் அணைத் தண்ணீர் போல உணர்ச்சி பொங்கி கண்களில் நீர் சுரந்து கன்னங்களில் வழிய, தாடை துடிக்க, மூக்கு விடைக்க -பச்சைக்குழந்தை போல் வாயைத் திறந்து கேவிக் கேவி அழுவான் அவன்.
டைரக்டர் கே. விஜயன், என் முழு முகத்தைக் கூட காட்டாமல் இரண்டு கண்கள், மூக்கு, வாய், கன்னம் வரை குளோஸ் அப்-பில் ஃபிரேம் வைத்து படமாக்கினார்.
ஷூட்டிங் பார்த்த சரிதா அப்செட் ஆகி விட்டார். என்ன இந்த மனுஷன் இப்படி கத்தி கதறி நடிச்சிட்டாரு. அவர் படிக்காதவர். உணர்ச்சிகளை அப்பட்டமாகக் காட்டலாம். நான் படித்தவள், கெளரவமான கலெக்டர் உத்தியோகம் பார்ப்பவள். அவரைப் போல எப்படி அழ முடியுமென்று தவித்து- அவருக்கு ஷாட் வைத்தபோது மூக்கு விடைக்காமல், கன்னத்து சதை ஆடாமல், புருவங்களை நெரிக்காமல், அந்த முட்டைக்கண்களில் மின்னும் கண்ணீர்த்துளிகள் கீழே விழ விடாமல் -விழிகளில் அவை ஜாலம் செய்ய வைத்து அற்புதமாக ஷாட்டை முடித்தார்.
ஒரு படத்தில் ஒரு நடிகனோ, நடிகையோ, தன்னந்தனியே நடித்து தன் திறமையைக் காட்டுவதை விட, தனக்கு சவால் விடும் நடிகைகளைப் போட்டு அவரோடு போட்டி போட்டு நடிக்கும்போது கிடைக்கிற சுகம் அலாதி என்பதை பல படங்களில் உணர்ந்து மகிழ்ந்திருக்கிறேன்.
----
அனுபவிப்போம்.
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago