டெல்லி. ஒரு காலைப் பொழுது. மத்திய அரசாங்கத்தின் முத்திரைபதித்த அந்த கார் மிகப் பெரிய கடிகாரக் கடைக்கு வந்து நின்றது. அதிலிருந்து சஃபாரி உடை அணிந்த, குளிர் கண்ணாடி அணிந்த, கையில் ஒரு ஃபைலுடன் மிடுக்கான அதிகாரி இறங்கினார்.
அந்தக் கடையை அளவெடுப்பது போலப் பார்த்தார். உள்ளே நுழைந்தார். எதிர்ப்படும் ஆசாமியிடம் “உங்கள் முதலாளியைப் பார்க்க வேண்டும்’’ என்று சொல்லி, தன் விசிட்டிங் கார்டைக் கொடுத்தனுப்புகிறார்.
கடைக்குள்ளேயே இருக்கும் அலுவலக அறையில் இருந்த முதலாளி விசிட்டிங் கார்டில் மத்திய அமைச்சரின் அந்தரங்கக் காரியதரிசி என்கிற பதவியைப் பார்த்ததும் அடுத்த நிமிடம் ஓட்டமாக வந்து அவரை வரவேற்றார். மிகவும் மரியாதையுடன் அழைத்துச் சென்று அமர வைத்தார்.
“அமைச்சர் தன் பிறந்த நாளுக்காக தனது அலுவலகத்தில் வேலை பார்ப்பவர் களுக்கு ஒரு விருந்து கொடுக்கவுள்ளார். அப்போது அனைவருக்கும் ஒரு கை கடிகாரம் பரிசு தர விரும்புகிறார். ஆயிரம் ரூபாய் மதிப்பில் நல்ல கை கடிகாரம் கிடைக்குமா?’’
“ஆயிரம் ரூபாய் மதிப்பில் நிறைய மாடல்கள் இருக்கின்றன. எத்தனை வேண்டும் சார்?”
“எண்பத்தைந்து வேண்டும்.’’
பல மாடல்கள் கொண்டுவரப்பட்டன. அதில் ஒரு மாடலைத் தேர்வு செய்தார் அதிகாரி.
“உங்கள் நபர் யாரையாவது கடிகாரங்களுடன் என்னுடன் அனுப்புங்கள். அமைச்சர் இப்போது அலுவலகத்தில்தான் இருக்கிறார். கையோடு செக் வாங்கிக் கொடுத்துவிடு கிறேன்.’’
கடையின் ஊழியர் கை கடிகாரப் பெட்டியுடன் காரில் ஏறிக் கொண்டார். கார் பாராளுமன்றம் அருகில் குறிப்பிட்ட அமைச்சரின் அலுவலகம் இருக்கும் கட்டிடத்தின் வாசலில் நின்றதும் அதிகாரி இறங்கினார்.
ஊழியரை அங்கேயே காத்திருக்கச் சொல்லிவிட்டு அதிகாரி அந்த அலுவலகத்தின் உள்ளே சென்றார். சில நிமிடங்களில் திரும்பி வந்து, அமைச்சர் கையெழுத்திட்ட செக்கை நீட்டினார்.
அந்த ஊழியரிடம் இருந்து கை கடி காரப் பெட்டியை வாங்கிக் கொண்டு அதிகாரி அலுவலகம் உள்ளே சென்றுவிட்டார். ஊழியர் கடைக்குத் திரும்பி முதலாளியிடம் செக்கைக் கொடுத்தார்.
மறுநாள் முதலாளி தன் வங்கிக்குச் சென்று அந்தச் செக்கைக் கணக்கில் போடச்சொல்லும்போதுதான் அந்தச் செக் ஒரு போலி என்று அதிர்ச்சியான செய்தி சொல்லப்பட்டது.
அப்படி அரசு அதிகாரியாக நடித்து ஏமாற்றிய மிதிலேஷ்குமார் என்கிற நட்வர்லால், உலகளவில் மிகப் பெரிய மோசடி மன்னர்களாகக் கருதப்படும் நபர்களில் ஒருவன். இந்தியாவின் நம்பர் ஒன் மோசடி ஆசாமி.
பிஹாரைச் சேர்ந்த நட்வர்லால் ஒரு வழக்கறிஞர். அவன் செய்யாத பித்தலாட்டங்களே இல்லை. வாயைத் திறந்தாலே பொய்கள் அருவியாகக் கொட்டும். கொஞ்சம்கூட சந்தேகம் வராத படி மிக சாமர்த்தியமாகப் பேசி மயக்கும் வல்லமை படைத்தவன். தன் பேச்சுக்கு ஆதாரமாக அத்தனை போலி ஆவணங்களையும் தயாரித்துக்கொள்வான். நட்வர்லால் தனக்கு உருவாக்கிக் கொண்ட புனைப் பெயர்கள் ஐம்பதுக்கும் மேல் இருக்கும்.
அவன் மேல் இந்தியாவின் கிட்டத் தட்ட அத்தனை மாநிலங்களிலும் வழக்குகள் இருந்தன. மொத்தம் நூறு வழக்குகளுக்கு மேல் நட்வர்லால் மேல் பதிவு செய்யப்பட்டன.
நட்வர்லால் மொத்தம் ஒன்பது முறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். அவனுக்கு வழங்கப்பட்ட மொத்த தண்டனை காலம் 113 வருடங்கள். ஆனால், அவன் அனுபவித்தது 20 வருட சிறைத் தண்டனைதான். அதையும் அவன் தொடர்ச்சியாக அனுபவிக்க வில்லை. நட்வர்லால் 8 முறை பல சிறைகளில் இருந்து தப்பிச் சென்றிருக்கிறான்.
எத்தனை முறை சிறையில் அடைத்தாலும் கொஞ்சம்கூட திருந்தாமல் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அவன் தன் அடுத்த பித்தலாட்டத்தை ஆரம்பித்துவிடுவான். இவனுடைய மோசடிகளுக்கு இலக்கான ஆயிரக்கணக்கான நபர்களில் டாட்டா, பிர்லா, அம்பானி போன்ற பிரபல தொழிலதிபர்களும் அடங்குவார்கள்.
அவன் செய்த பித்தலாட்டங்களிலேயே சுவாரஸ்யமானவை சிலவற்றை அறிந்தால்ஆச்சரியமாக இருக்கும். ஒரு வெளிநாட்டு நிறுவன அதிபரிடம் தன்னை இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதியாக அறிமுகப்படுத்திக்கொண்டு, அரசாங்கம் சில காரணங்களால் தாஜ்மஹாலை விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பதாக நம்பவைத்து, அதற்குப் பொருத்தமான ஆவணங்களையும் காட்டி ஒரு பெரிய தொகையையும் வாங்கிவிட்டான்.
இதுபோல அவன் மூன்று முறை வேறு வேறு நபர்களிடம் தாஜ்மஹாலை விற்றிருக்கிறான். மேலும் செங்கோட்டையையும் விற்றிருக்கிறான். இதில் உச்சம், நமது பாராளுமன்றக் கட்டிடத்தையே விலை பேசியதுதான். இலவச இணைப்பாக அதில் உள்ள 545 பாராளுமன்ற உறுப்பினர்களையும் சேர்த்து விற்றிருக்கிறான்.
அப்படியென்றால் சம்பந்தப்பட்டவர்களை எத்தனை தூரம் மூளைச் சலவை செய்திருக்க வேண்டும். அவர்களை நம்பவைக்க எத்தனை தூரம் இவன் மெனக்கெட்டிருக்க வேண்டும்.
சாதாரண செக் மோசடியில் தொடங்கி மிகப் பெரிய மோசடிகளைச் செய்த இவன், ஒரு சில கூட்டாளிகளையும் தன் நாடகங்களுக்குப் பயன்படுத்தி யிருக்கிறான். அவர்களை காவல்துறையினரால் பிடிக்க முடியவில்லை. தனக்கு ஒரு மகன் மட்டுமே என்று இவன் சொன்ன வாக்குமூலமும் பொய். நட்வர்லாலுக்குத் திருமணமாகி ஒரு மகள் மட்டும் இருக்கிறார் என்பதே உண்மை. அந்த மகள் ஒரு ராணுவ வீரரை மணந்தார் என்பது ஓர் அழகான முரண்.
நட்வர்லால் கடைசியாக கைது செய்யப்பட்டபோது அவனுக்கு வயது 84. அந்த வயதிலும் மோசடியைத் தொடர்ந்த நட்வர்லால், மோசடியால் சேர்த்த சொத்துக்களை என்ன செய்தான் என்கிற கேள்விக்கு, தான் ஒரு இந்திய ராபின்ஹுட் என்றும் அத்தனை சொத்துகளையும் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டேன் என்றும் பதில் சொன்னான்.
நட்வர்லாலைக் கடைசியாக காவல் துறையினர் சிறைக்கு அழைத்துச் செல் லும்போது அவன் சாமர்த்தியமாக தப்பிச் சென்றது 1996-ல். அதன் பிறகு அவனைப் பற்றிய தகவல் இல்லை. பிறகு பல வருடங்கள் கழித்து நட்வர்லால் இறந்துவிட்ட தாக ஓர் ஆவணத்தை சம்ர்ப்பித்து அவன் மீது இருந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்தது காவல்துறை.
ஆனால் 1996-லேயே நட்வர்லால் இறந்துவிட்டதாகவும், தான் அவரை எரித்துவிட்டதாகவும் நட்வர்லாலின் சகோதரர் அறிக்கை வெளியிட்டார். ஆகையால் நட்வர்லாலின் மரணத்திலும் ஒரு மர்மம் நீடிக்கிறது. நட்வர்லாலின் மோசடிகளை மையமாக வைத்து ‘ராஜா நட்வர்லால்’ என்று அமிதாப்பச்சன் நடித்த ஒரு இந்தி திரைப்படம் கூட வெளியானது. தவிர, ஆஜ் தக் என்னும் தொலைக்காட்சி யில் தொடர் ஒன்றும் வெளியானது.
அவன் எத்தனைப் பெரிய மோசடி மன்னனாக இருந்தாலும் பிஹாரில் அவன் பிறந்த கிராமத்தில் பலர் அவனை இன்றும் ஒரு ஹீரோவாகக் கொண்டாடுகிறார்கள். ஒருவேளை அவன் நிஜமாகவே மோசடி செய்து சேர்த்த சொத்துக்களை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமோ என்றுதான் தோன்றுகிறது.
- வழக்குகள் தொடரும்...
வாஞ்சிநாதனுக்கு சிலை உள்ளது
‘வ.உ.சியின் சுதேசிக் கப்பல் நிறுவனம் விற்கப்பட்டபோது அதை வாங்கியது ஆங்கில அரசு அல்ல; B.I.S.N என்கிற ஆங்கில கப்பல் நிறுவனம்தான் வாங்கியது.
வ.உ.சி கைது செய்யப்பட்டபோது நெல்லையில் எழுந்த மக்கள் எழுச்சியை ஒடுக்க துப்பாக்கிச் சூடு நடத்தியது ஆஷ் அல்ல; அந்த மாவட்ட கலெக்டராக இருந்த விஞ்ச் என்கிற ஆங்கிலேயர்.
எங்குமே வாஞ்சிநாதனுக்கு சிலை இல்லை என்பதும் தவறு; நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் வாஞ்சியின் ஆள் உயரச் சிலை உள்ளது. பாளையங்கோட்டையில் ஆஷின் கல்லறைதான் உள்ளது; சிலை அல்ல.’
- சென்ற வாரம் வெளியான ‘எப்படி இப்படி’ தொடரில் இடம்பெற்ற மேற்கண்ட தவறுகளை சுட்டிக்காட்டிய தென்காசி முன்னாள் எம்.எல்.ஏ வேங்கடரமணா, வரலாற்று ஆய்வாளர் தூத்துக்குடி ஆ.சிவசுப்ரமணியன் ஆகியோருக்கு நன்றி!
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: pkpchennai@yahoo.co.in
முந்தைய அத்தியாயம்: >எப்படி? இப்படி! 31 - ரத்தத்தில் செய்த சபதம்!
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago