1980 மார்ச் 29-ந்தேதி, மைசூர் தேவராஜா மார்க்கெட். ஒரு பர்லாங் நீளத்துக்கு நூல் பிடித்தாற்போல் காய்கறிக் கடைகள். பழக்கடைகள், முட்டைக்கடைகள், கீரை, எலுமிச்சை, தர்பூசணிக் கடைகள், பூக்கடை என்று கண்ணுக்கெட்டிய தூரம் வரை அனைத்து வகை உணவு சார்ந்த விளைபொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
சுஜா-தண்டல் வசூல் செய்யும் ரெளடி. கருத்த உருவம், குடித்துச் சிவந்த கண்கள், முள்ளம்பன்றி முடி போன்ற தலைமுடி, முண்டா பனியன் மீது வெள்ளை ஜிப்பா, கட்டம் போட்ட லுங்கி, ‘சரக், சரக்’ சத்தமிடும் செருப்பு வாயில் பீடி- துஷ்டனின் மொத்த உருவம்.
அவன் தன் சீடனுடன் மார்க்கட்டுக்குள் தண்டல் வசூல் செய்ய வருகிறான். ‘அண்ணாத்தே வர்றாரு -அண்ணாத்தே வர்றாரு!’ என்று சீடன் முத்து எல்லோரையும் எச்சரித்தவாறு முன்னால் வருகிறான்.
பணிவோடு காய்கறி வியாபாரிகள் கஜா கையில் தண்டல் காசு போடுகிறார்கள். இதுதான் தினமும் அதிகாலையில் இந்த ரெளடிக்கு பிழைப்பு.
அலுவலத்தில் வேலை பார்ப்போருக்கும், கோர்ட் வக்கீல்களுக்கும், கல்லூரி பேராசிரியர்களுக்கும் மத்தியான சாப்பாட்டை கேரியரில் வைத்து நடந்து போய் அவர்களுக்கு கொடுக்கும் வேலை செய்பவள் வடிவு.
தள்ளாத வயதிலும் தள்ளு வண்டியில் பாரம் ஏற்றி மார்க்கட்டுக்கு இழுத்துப் போய் சொற்ப வருமானத்தில் வயிறு கழுவும் ‘பாளையம்’ வடிவின் தாத்தா.
பாளையம் கஜாவின் தோஸ்த். தோளில் கைபோட்டு பாளையத்தை கொண்டாடுபவன் கஜா. ஒரு நாள் பாளையம் இறந்து விட, அவன் பயன்படுத்திய கட்டை வண்டியையும், அவன் பேத்தி வடிவையும் அழைத்து வருகிறான் சீடன் முத்து.
15 நாள் துக்கம் அனுஷ்டிக்கும் வரை இந்த வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது என்று வடிவுக்கு உத்தரவு போட்டு தன் குடிசைக்குள் அவளை தங்க வைக்கிறான் கஜா.
சாப்பாட்டுக் கூடை தூக்கும் வடிவின் பரிவும், பண்பும் கல்லூரி புரொபசர் ஒருவரைக் கவர்கிறது. இந்த மாதிரி அன்பும் கனிவுமான பெண் நமக்கு மனைவியாக வரவேண்டும் என்று கனவு காண்கிறார் புரொபசர்.
ராத்திரி பூராவும் சரக்கு அடித்து விட்டு போதையில் உருளும் கஜாவைப் பார்த்து சீறுகிறாள் வடிவு.
‘பிளாட்பாரத்தில் தாத்தா கூட நிம்மதியாக இருந்தேன். என்னை கூட்டியாந்து இங்க அடைச்சு வச்சிட்டு, நேரங்காலம் தெரியாம குடிச்சிட்டு ஆட்டம் போடற நீயெல்லாம் மனுஷனாய்யா? தண்டல் துட்டு, தண்டச்சோறு, ஊராரின் வயிற்றெரிச்சலைக் கொட்டி பலாத்காரமாக அவர்களிடம் வசூல் செய்து பிழைக்கும் எச்சில் பிழைப்பை விட சாப்பாட்டு கூடை தூக்கி வாழ்க்கை நடத்தற நான் மாமுள்ளவள். எனக்கு மானம் ரோஷம் அதிகம். உசிரு போற வரைக்கும் வண்டி இழுத்து கஞ்சி குடிச்சு வாழ்ந்த பாளையத்தோட பேத்தி நான். உங்களை மாதிரி ஈனப்பொழப்பு பொழைக்கறவ இல்லே!’ என்று பொங்கி வெடிக்கிறாள்.
தண்டல் தொழில் அவன் பரம்பரைத் தொழில் அல்ல. சிறுவயதில் அவனும் மார்க்கெட்டில் முதுகெலும்பு ஒடிய மூட்டை சுமந்து போட்டவன்தான். வாரம் முழுக்க மூட்டை தூக்கியதற்கு கூலி கொடுக்காமல் ‘டபாய்த்த’ முதலாளியை, சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்பது போல ஒரு நாள் மூஞ்சி மேல் குத்தி, கட்டிப்புரண்டு சண்டையிட்டான் கஜா.
மார்க்கட்டிலுள்ளோர் இதைப் பார்த்து பயந்து நடுங்கி -கஜாவை, அவர்களாகவே தண்டல் தலைவனாக்கி, காசு கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.
தன்னை எதிர்த்து ஒரு பொட்டப் புள்ளை இவ்வளவு அசிங்கமா பேசிட்டாளே என்று ரோஷப்பட்டு, வெளியே போனவன் 3 நாள் வீட்டுப் பக்கம் தலை காட்டவே இல்லை. வடிவு சீடனை அனுப்பி தேடச் சொல்கிறாள்.
அண்ணாத்தே ஒரு நாள் கூட ராத்தங்கலுக்கு வெளியே போனதே இல்லை. பசி வயித்த கிள்ளுது. கூழுக்காய்ச்சி ஒரு கிளாஸ் ஊத்து என்று கெஞ்சுகிறான் முத்து.
கூழ் தயார் செய்து சாமிக்கு படையில் வைப்பது போல -ஒரு டம்ளர் கஜாவுக்கு ஊத்தி வைத்து விட்டு முத்துவும் வடிவும் ஆளுக்கு ஒரு டம்ளர் கூழ் சாப்பிட ஆரம்பிக்கும்போது வாசல்பக்கம் கஜா.
பேசாமல் உள்ளே வந்தான். இவர்கள் இருவரும் குடிசைக்கு வெளியே போய் விட்டனர். ஓசைப்படாமல் கூழைக் குடித்து விட்டு வாயில் பீடி பற்ற வைக்கிறான் கஜா.
இரவு திண்ணையில் சீடனும், கஜாவும் தூங்க, வடிவு குடிசைக்குள் படுத்திருக்கிறாள். விடியற்காலை கடையாணியை சுத்தியலால் கஜா தட்டும் சத்தம் கேட்டு முத்துவும் வடிவும் எழுந்து விடுகிறார்கள்.
‘எங்க அண்ணாத்தே சொல்லாம, கொள்ளாம மூணுநாள் போயிருந்தே?’
‘அதாண்டா, அந்தக் கஸ்மாலம் திட்டுச்சே. நாம பொழைக்கறது நாய் பொழைப்புதான்னு நெஞ்சுல உறைச்சது. கூட்ஸ் செட்டாண்ட போனேன். ஒரத்தூர் பொன்னுசாமிகிட்ட பேச்சுக் கொடுத்தேன்.
‘நீ ஏன் கஜா கவலைப்படறே. வாடகைக்கு 4, 5 வண்டி வச்சிருக்கேன். ஏதாவது ஒண்ணை எடுத்திட்டுப் போ’ன்னாரு. நமக்குன்னு தனியா வண்டி எதுக்கு? நம்ம தோஸ்த் பாளையம் வண்டி இருக்கேன்னு பெயிண்ட் டப்பாவோட வந்திட்டேன்!’ என்று வண்டிச்சக்கரத்துக்கு பெயிண்ட் அடிக்க ஆரம்பிப்பான் கஜா.
இமயமலையை அசைத்து விட்டோமா? கல் கறைந்து விட்டதா? என் பேச்சு கேட்டு கஜா, உண்மையிலேயே மாறி விட்டானா? தன்னுடைய மகிழ்ச்சியை, தன் உணர்ச்சிப் பெருக்கை சரிதா தன்னுடைய முட்டைக்கண்களில் நீர் கோர்க்கச் செய்து அந்த கண்ணீர் முத்துக்கள் கன்னத்தில் வழிந்தோடியபோது கைகளால் அதைத் துடைக்கும் ஒரு குளோசப் ஷாட்டில் தான் ஒரு அற்புதமான நடிகை என்று நிரூபித்திருப்பாள்.
அடுத்து, அவன் இன்று முதல் வண்டி இழுத்து கெளரவமாக வாழப்போகிறான் என்பதை உறுதிப்படுத்த ஓடிப்போய் பெட்டிக்கடையில் தேங்காய் கற்பூரம் வாங்கி வந்து திருஷ்டி சுத்தி ரோட்டில் உடைப்பாள்.
நாளெல்லாம் வேகாத வெய்யிலில் பார வண்டி இழுத்து காலில் ரத்தம் கட்டி இருக்கும், கைகள் காப்புக் காய்த்திருக்கும். அதற்கு இரவு ஒத்தடம் கொடுத்து அவனுக்கு சாதம் ஊட்டி விடுவாள் வடிவு.
இருவருக்கும் திருமணமாகி முதல் இரவு நாள். பீடியை புகைத்தவாறு ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருப்பான். பீடி நெருப்பு அணைந்து விடும். தீப்பெட்டிக்குள் குச்சி இல்லை. அடுத்த கணம் விளக்கை எடுத்து வந்து அவன் முன்னால் நீட்டுவாள் வடிவு. அப்படியே அவளை வாரி அணைத்துக் கொள்வாள்.
வடிவை திருமணம் செய்து கொள்வது என்று முடிவு செய்து ஊருக்குப் போய் தாயார் அனுமதி பெற்று வருவார் புரொபசர். சேரிக்கு வந்து பெட்டிக்கடையில் சிகரெட் வாங்குவார். கஜா அந்த சிகரெட் பற்ற வைக்க தீக்குச்சி உறைப்பான். இருவரும் பேசிக் கொண்டே குடிசை நோக்கி நடப்பார்கள். வடிவு மேல் தனக்குள்ள விருப்பம், அவளை திருமணம் செய்ய பெற்றோர் சம்மதித்த விஷயம் எல்லாம் கஜாவிடம் கூறியவாறு குடிசைக்குப் போய் வெளித் திண்ணையில் உட்கார்ந்திருப்பார்கள். மார்க்கெட்டுக்குப் போயிருந்த வடிவு ஓடி வந்து பூட்டைத் திறந்து ‘உள்ளே வா துரை’ என்று அழைத்து உடைந்து போன ஒரு நாற்காலியில் உட்காரச் சொல்வாள்.
‘ஊருக்குப் போனியே கல்யாண விஷயம் என்னாச்சு துரை?’
‘நான் பார்த்த பொண்ணுக்கு கல்யாணம் ஆயிருச்சு!’ என்று பூடகமாக சொல்வான்.
‘அதிர்ஷ்டக்காரன் தொரை நீ. ஊர்ல ஏகப்பட்ட பொண்ணுங்க கல்யாணமாகாம ஏங்கிட்டிருக்காங்க. ஒரு தபா நீ போய்ப் பார்த்துட்டு வா. சீக்கிரம் அவங்களுக்கு கல்யாணம் ஆயிடும்!’ என்பாள்.
‘த்தா! துரைக்கு ஒரு ‘ப்ரூ’ வாங்கிட்டு வா!’ என்று முன்பே கணவனை டீக்கடைக்கு விரட்டியிருப்பாள்.
விடைபெற்றுச் செல்லும் போது கஜாவும், புரொபசரும் காமிராவுக்கு முதுகைக் காட்டி, ‘வடிவுக்கு நீங்க கணவர்னு தெரியாம என்னன்னவோ பேசிட்டேன். தப்பா எடுத்துக்க வேண்டாம். உண்மையை சொல்றேன். நான்தான் வடிவு
மேல ஆசைப்பட்டேன். அவளுக்கு இது தெரியாது!’ என்பார் புரொபசர். தோளைத் தட்டி நீங்க கிளம்புங்க என்று ஜாடை காட்டுவான் கஜா. இதெல்லாம் முதுகுப் பக்கம் காமிரா தொடர பேசிக் கொண்டே நடக்கும்போது படமாயிற்று.
ரோட்டு ஓர டீக்கடையில் கஜாவும் முத்துவும் டீ சாப்பிடுவார்கள். பெரிய மார்க்கட் போகணும். வாப்பா என்று ஒரு ஐயப்ப பக்தர் கூப்பிடுவார். எங்க வேணும்னாலும் வர்றேன். பெரிய மார்க்கெட் பக்கம் மட்டும் வர மாட்டேன் என்பான் கஜா. காரணம் அந்த மார்க்கெட்டில்தான் இத்தனை காலம் அவன் தண்டல் வசூலித்துக் கொண்டிருந்தான்.
அன்று நாள் முழுக்க, வாடகைக்கு யாரும் அழைக்கவில்லை. ராத்திரி சமையலுக்கு காசு வேண்டும். ‘பரவாயில்ல போலாம் வா அண்ணே!’ என்பான் முத்து.
தயக்கத்துடனே புறப்பட்டு மார்க்கட் உள்ளே போய் வாடிக்கையாளரை இறக்கி விட்டு அவர் வரும் வரை வண்டிக்குஅ டியில் குத்த வைத்து உட்கார்ந்திருப்பான். மாயாண்டி என்ற முரடன் இப்போது தண்டல் தொழிலை கெடுபிடியாகச் செய்து கொண்டிருப்பான். மார்க்கட் உள்ளே வசூலை முடித்துக் கொண்டு வெளியே நிற்கும் வண்டிக்கருகில் வருவான். தன்னைப் பார்த்து ஊரே நடுநடுங்க, மரியாதையில்லாமல் உட்கார்ந்திருக்கிறானே இவன்’ என்று காலால் தோள் பட்டையை உதைப்பான் மாயாண்டி.
கே. விஜயன் அங்கு ஒரு குளோசப் எடுத்திருப்பார். உதைபட்ட தோள் பட்டையை கஜா லேசாகக் குலுக்குவான். குளோசப் ஷாட்டில் பின் தலையை ’டைட்’ ஆக வைத்து பக்கவாட்டில் பீடி புகையுடன் கஜா திரும்புவதாகக் காட்டியிருப்பார்.
‘ஓ, கஜாவா? நீ மார்க்கெட் உள்ளேதான் வசூல் பண்ணினே. நான் வெளியேவும் சேர்ந்து பண்றேன். காசு எடு!’ என்பான் மாயாண்டி.
காசு கஜாவிடம் இல்லை -பாக்கட்டை தடவுவான்.
‘காசு இல்லையா? உன் பொண்டாட்டிகிட்ட புரொபசர் வந்து போறானே. அவன் குடுத்திருப்பான்ல?’ என்று மாயாண்டி சொன்னதுதான் தாமதம். கஜா கண்கள் எரிமலைக்குழம்பாயின. சிறுத்தை ஒன்றின் சீற்றத்தை இன்டர் கட் செய்து போட்டு அதேபோல் கஜா பல்லைக்கடிப்பதைக் காட்டுவார்கள். அடுத்து மின்னல் போல கஜா பாய்ந்து மாயாண்டியைப் புரட்டி எடுப்பான். கடைசி மோதலில் கஜாவின் வண்டிக்கடையாணி மாயாண்டி வயிற்றில் நுழைய மலைபோல சாய்வான் அவன்.
போலீஸ் வரும். ‘பாஸ்ட்டட்.. பட்டப்பகல்லயே!’ என்று இன்பெக்டர் லத்தியை உயர்த்த ‘துரை நிறுத்து!’ என்று சைகை செய்து போலீஸ் ஜீப்பை நோக்கி ராஜநடை போடுவான் கஜா.
நாகர்கோயில் தியேட்டரில் எழுந்து நின்று ரசிகர்கள் கைதட்டினார்கள்.
வேனில் ஒரு கால் வைப்பான். வடிவு பறந்து வந்து மூச்சிறைக்க கஜாவைப்பார்ப்பாள். கண்களில் நீர். தொண்டை அடைக்க, ‘உன்னைப் பத்தி கேவலமா பேசிட்டாம்மா... த்தா!. வகுந்துட்டேன்!’ என்று கூறி வண்டியில் ஏறுவான்.
கஜா வருவான் என்று நம்பிக்கையில் வடிவு சாப்பாட்டுக்கூடையை மீண்டும் எடுத்தாள் - என்று படத்தை முடித்திருப்பார் டைரக்டர் கே. விஜயன். ஒளிப்பதிவு என். பாலகிருஷ்ணன். இசை சங்கர் கணேஷ்.
‘வா மச்சான் வா. வண்ணாரப்பேட்டை’ என்று எஸ்.பி.பி பாடிய சாராயக்கடை பாட்டு 1980-ல் சூப்பர் ஹிட்.
அது எனக்குப் போட்டிருந்த பாட்டு. அந்தப் பாடல் காட்சியில் நடித்தால் கஜா பாத்திரத்தின் கம்பீரம் குறைந்து விடும் என்பதால் சில்க் சாராயம் ஊத்தித் தர அதை நான் குடித்துக் கொண்டே டான்ஸ் ஆடுவோரைப் பார்த்து ரசிப்பதாக நடித்தேன்.
மைசூரில் தேவராஜா மார்க்கெட்டில் படம் எடுக்க யாருக்கும் அனுமதி வழங்கியதில்லை. எங்களுக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிடைத்தது.
மைசூர் சிட்டிக்குள் -பக்ஸ் பேலஸ் பின்புறம் -பிடபிள்யூடி ஆபீஸ் ரோடு, ஆஞ்சனேயர் கோயில் ரோடு, நஞ்சன் கூடு ரோடு, பிலோமினா சர்ச் பகுதி, மகாராஜா அரண்மனையில் கிழக்கு வாயில், சாயாஜி ரோடு, மைசூர் ரயில்
நிலையத்தின் முன்பகுதி, ஹைவே ஓட்டல் சாலையில் கிழக்காக கர்நாடகா மாநிலப் போக்குவரத்து மத்திய பஸ்நிலையம் - என்று பாரவண்டியுடன் நாங்கள் ஓடியதை போக்குவரத்து போலீஸார் புன்சிரிப்புடன் வரவேற்றனர்.
கஜா-சிவகுமார்- வடிவு-சரிதா, புரொபசர்-சிவச்சந்திரன், பாளையம் -சாமிக்கண்ணு. சில்க்- சில்க் சுமித்தா, முத்து -வினுசக்கரவர்த்தி. ரோசாப்பூ ரவிக்கைக்காரி செம்பட்டை அப்பாவித்தனத்தின் உச்சம். வண்டிச்சக்கரம் கஜா முரட்டுத்தனத்தின் உச்சம். இரண்டு படங்களும் வெற்றிப்படமாக அமைந்தது என் திரைவாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு.
---
அனுபவிப்போம்
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
29 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
4 months ago