சமீபத்தில் முதன்மைக் கல்வி அலுவலர்கள், ஆசிரியர்களை அழைத்துப் பேசுகிறார்கள். ரிசல்ட் ஏன் குறைந்துவிட்டது? உயராமல் போனதற்கான காரணங்கள் என்ன? என்ற பொதுவான கேள்விகளில் பேச்சு தொடங்குகிறது.
ஒவ்வொரு பள்ளிப் பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்புகளின் கரும்பலகையில் "இந்த ஆண்டு தேர்ச்சி இலக்கு 100" என்று எழுதப்பட்டு வருகிறது. இந்த இலக்கை நோக்கி மாணவர்கள், பெற்றோர்கள் செயல்படுகிறார்களோ இல்லையோ, ஆசிரியர்கள் கட்டாயமாக நகரவேண்டும். நகர்த்தவேண்டும். தமிழகத்தின் ஒட்டுமொத்த சராசரி விழுக்காடு குறைந்த, சென்ற ஆண்டு விழுக்காட்டைவிட குறைந்த பள்ளிகளின் ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு, மிகவும் நாகரிகமான வார்த்தைகளில் அநாகரிகமான கேள்விகள் தொடுக்கப்படும்.
1. நாங்கள் வந்தாலும் சிறப்பு வகுப்புகளுக்கு மாணவர்கள் வருவதில்லை.
2. தின, வாரத் தேர்வுகளை அக்கறையுடன் மாணவர்கள் எழுதுவதில்லை.
3. மாணவர்கள் பள்ளிக்குச் சரியாக வருவதில்லை. கடைசி நேரத்தில் பரிந்துரையால் தேர்வு எழுதிவிட்டுச் சென்றுவிடுகிறார்கள்.
4. வார விடுமுறைகளில் சிறப்பு வகுப்புகளுக்கு மாணவர்கள் வருகை குறைவாக அமைகிறது.
5. தனி கவனம் செலுத்தினோம், சில மாணவர்கள் தேறிவிட்டனர். சிலர் தேரவில்லை.
6. அந்த மாணவனுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. சொல்லிக்கொடுத்தும் பயனில்லாமல்போனது.
இந்த ஆசிரியர்களின் பதில்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும். இவை எல்லாம் பதில் இல்லை? ஏன் உங்கள் வகுப்பில் மாணவர்கள் தேர்ச்சி அடையவில்லை? என்ற ஒற்றைக் கேள்வியைத் திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டே இருப்பார்கள் அதிகாரிகள். புதிய அனுபவ பதில் இல்லாமல் ஆசிரியர்கள் தலை குனியத்தான் வேண்டும்.
ஒருவேளை, அந்தப் பிள்ளைக்குப் படிக்கத் தெரியாது என்று சொன்னால், நீ என்ன செய்தாய் என்கிற கேள்வி எழும். பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பிற்கு வந்துவிட்ட படிக்கத் தெரியாத மாணவருக்கு எழுத்தறிவு தருவதா? போர்ஷன் முடிப்பதா? தேர்வுகள் வைப்பதா? என்ற குழப்பத்திற்கு அதிகாரிகள் பதில் சொல்லமுடியாது. நீங்கள் எதைச் சொன்னாலும் அதை மறுப்பதற்கு அவர்களிடம் பதில்கள் இருக்கின்றன.
1. நீங்கள் காலை எட்டு மணிக்கு வந்து பாடம் எடுப்பதாகச் சொன்னீர்கள். குட். ஏன் காலை ஏழுமணிக்கு வரக்கூடாது? முயற்சிக்கலாமே?
2. நீங்கள் மாலை 5 வரை சிறப்பு வகுப்பு எடுப்பதாகச் சொன்னீர்களே. குட். ஏன் இரவு 7 வரை எடுக்கலாமே? (எடுப்பவர்கள் ஆணா. பெண்ணா என்பதில் அதிகாரிகளுக்கு அக்கறை இல்லை)
3. சனி, ஞாயிறு கிழமைகளில் வந்து வகுப்பு எடுக்கலாமே?
4. மாணவர்கள் வரத் தயாராகத்தான் இருக்கிறார்கள். நீங்கள்தான் பொய் சொல்கிறீர்கள்?
இவ்வாறு பலவிதமான சரமாரி பதில்கள் வைத்திருப்பார்கள். தேர்ச்சி அளிக்கமுடியாத ஆசிரியர்களின் ஓரே பதில் தலைகுனிவுதான்.
பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பு முன்னிட்டு அமையும் தேர்ச்சி – ஆசிரியர் - பள்ளி விழுக்காடு - அதிகாரிகள் விசாரணை என்ற நிகழ்வுகளில் பெற்றோர் - மாணவர் மட்டும் மிஸ்ஸிங்.
இந்த மீளாய்வுக் கூட்டம் என்பது இலக்கை அடையமுடியாத இலக்கிற்கு நடத்தப்படுவது. இந்த இலக்கின் அம்பு பயனற்ற மரத்தை நோக்கிப் பாய்ச்சப்படுவதுதான் வேதனை. இங்கு பயனற்ற மரம் என்பது வெறும் தேர்ச்சி என்பதுதான்.
பொதுவாகத் தேர்ச்சி என்பது பாடங்களில் தேர்ச்சி அடைவது மட்டுமில்லை. தேர்ச்சிக்கான கல்வி இல்லை இது. வாழ்க்கைக்கான கல்வி இது.
பத்து, பன்னிரெண்டாம் வகுப்பு வந்தபின்னும் (ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்ற அரசின் தாராளக்கொள்கையால்) வாசிக்கத் தெரியவில்லை என்பது வருத்தம்தான். ஒருவேளை அதே மாணவன் கல்லூரிக்குப் போனபின் வாசிக்கத்தெரியவில்லை என்றால், கல்லூரி விரிவுரையாளரிடம், அந்த மாணவனுக்குப் படிக்கத் தெரியவில்லையே? நீ என்ன செய்தாய்? என்று கேட்கமுடியுமா அதிகாரிகளால். அவர் முதுகலை ஆசிரியரிடம் கை காட்டுவார். முதுகலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரிரைக் காட்டுவார். பட்டதாரி ஆசிரியர் இடைநிலை ஆசிரியரைக் கைக்காட்டுவார். அவரோ தொடக்கநிலை ஆசியரைக் காட்டுவார். தொடக்கநிலை ஆசிரியர் யாரைத்தான் கைக் காட்டுவார்? பிள்ளைமீதுதான்.
இந்தப் பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களைச் சர்வே எடுத்துப்பார்த்தால்,
1. அவர்களுக்கு எழுத்துக் கூட்டி வாசிக்கத் தெரியாது.
2. பள்ளியின் மீது அக்கறை இருக்காது.
3. அதிகம் வராதவர்களாக இருப்பார்கள்.
4. கடைசி நேரத்தில் பரிந்துரையின் பேரில் பள்ளிக்கு நுழைந்து தேர்வு எழுதிவிட்டுப் போவார்கள்.
இவர்களைச் சொல்லிக் குறையில்லை. பத்து, பன்னிரெண்டாம் வகுப்பில் வாசிக்கத் தெரியாத மாணவர்களின் அடிப்படை பிரச்னை.
பத்து, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்துவதுபோல், தொடக்கநிலையில் கல்வி கற்பதற்கு முயலும் மாணவர்களுக்கு எனச் சிறப்பு வகுப்புகளை அந்தத் துறை நடத்தவேண்டும்.
ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சொல்லிக்கொடுத்து, அனைத்து மாணவர்களுக்கும் வாசிக்கத் தெரியவில்லை என்றால், அது ஆசிரியர்மீதான பிரச்னை. நடவடிக்கை எடுக்கவேண்டும். ஒரு சில குழந்தைகளால் மட்டும் வாசிக்கத்தெரியவில்லை என்றால் அது பிள்ளைகளின் பிரச்னை. என்னிடம் பத்தாம் வகுப்பில் பயின்ற மாணவனுக்கு அ, ஆ தெரியாது. அவனுக்குத் தனியாக நோட் போட்டு, மாணவர்கள் முன்னிலையில் அ முதல் ஔ வரை சொல்லிக்கொடுத்தும், அடுத்த வாரம் கேட்கும்பொழுது ஐ, ஏக்கும் வித்தியாசம் தெரியவில்லை. அதாவது எழுத்தை ஞாபகம் வைத்துக்கொள்ள இயலவில்லை. ஆக அவனுக்கு உளவியல் பிரச்னை உள்ளது என்பதான் உண்மை.
ஒரு செய்தித்தாளை வாசிக்க இயலாத மாணவனுக்கான எழுத்தறிவை, ஆரம்பப் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் ஏற்படுத்தி சரிசெய்யவேண்டும். ஐந்தாம் வகுப்பில் ஒரு செய்தித்தாளை முழுமையாகப் படிக்க இயலாத மாணவனுக்குத் தனிப் பயிற்சித் திட்டங்களை உருவாக்கவேண்டும். அவனால் முழுவதுமாக வாசிக்கமுடிந்தால் மட்டுமே ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சி அளிக்கவேண்டும். இந்த நிலைகளை அடிப்படையில் செய்தால் மட்டுமே உயர்நிலையில் தேர்ச்சி அடைய முடியும்.
எனக்கு இந்தத் தேர்ச்சி சதவீத விஷயங்களைக் கடந்து சில விஷயங்கள் கேள்வியாக அமைகின்றன.
1. பத்து, பன்னிரெண்டு மட்டும்தான் வகுப்புகளா? ஒன்று முதல் ஒன்பதுவரை வகுப்புகள் இல்லையா?
2. அனைவருக்கும் கல்வி இயக்கம் என்கிற திட்டம் ஒன்று முதல் ஒன்பது வரை தங்குதடையில்லாத தேர்ச்சிமட்டும்தானா? (பள்ளிக்கு வந்தாலே பாஸ்)
3. பத்து, பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான மாலைவேளை, விடுமுறைநாள் சிறப்பு வகுப்புகளை ஏன் ஆரம்ப கல்வியில் அமைக்கவில்லை?
4. முழுமையான எழுத்தறிவு, பேச்சு அறிவு தேவையில்லாததா?
5. பத்து, பன்னிரெண்டுக்கு வைக்கும் மீளாய்வுக் கூட்டத்தை, கவனத்தை ஏன் மற்ற வகுப்புகளில் அதிகாரிகள் மேற்கொள்வதில்லை?
6. ஐந்தாம் வகுப்பில் வாசிக்கத் தெரியாத மாணவனை வடிகட்டி, முழுமையான எழுத்தறிவு வந்தபின் ஆறாம் வகுப்பிற்கு அனுப்பவதில் என்ன பிரச்னை?
7. அடிப்படையான எழுத்தறிவு இல்லாமல் மாணவன் பத்தாம் வகுப்பு வந்து, தோல்வி அடைந்தபின் ஆசிரியர்கள் மட்டும், தோல்வியை ஏன் ஏற்றுக்கொள்ளவேண்டும்? பெற்றோரின் பங்கு ஏன் கேள்விக் கேட்கப்படுவதில்லை?
8. ஸ்காலர்ஷிப் வந்தால் உடனடியாகக் கையெழுத்துப்போட வரும் பெற்றோர்கள், மாதாந்திர கூட்டத்திற்கு ஏன் வருவதில்லை?
பத்து, பன்னிரெண்டாம் வகுப்புகளில் முழுமையான தேர்ச்சி என்ற இலக்கை அடைவதற்குமுன். நாம் செய்யவேண்டிய ஒன்று, அடிப்படையைச் சீராக்குவதுதான். தொடக்கநிலையைக் கல்வியில் மொழி மற்றும் கணித, அறிவியல் சிந்தனையை முழுமையாக ஒரு மாணவன் பெற்றால் மட்டுமே, பத்து, பன்னிரெண்டில் முழுமையான இலக்கை அடைய இயலும்.
தேர்ச்சி இலக்கில் குறைபாடு நேர்ந்தால் ஆசிரியர்களை மட்டும் குறைசொல்லிப் பயனில்லை. இந்தத் தோல்வியில் ஒரு மாணவனின் பொருளாதார, குடும்ப, மன நிலையில் பிரச்னை உள்ளது. பெற்றோரின் அக்கறையும் உள்ளது. இவற்றைத் தீர்க்காமல் கேள்விக்கான விடை எழுதி தேர்ச்சி அடைவது என்பது முட்டாள்தனமானது. கல்வி வாழ்க்கைக்கானது, தேர்ச்சி இலக்கிற்கானது அன்று.
ஒரு மாணவனுக்கு முழுமையான எழுத்தறிவு இருந்தால் மட்டுமே. அரசுப் பள்ளிகளில் பத்து, பன்னிரெண்டாம் வகுப்புகளில் முழுமையான தேர்ச்சி அளிக்கமுடியும்.
சமீபத்தில் நடந்த பொதுத்தேர்வில் எழுதப் படிக்கத் தெரியாத அந்த மாணவன் தமிழில் 7, ஆங்கிலத்தில் 18, கணிதத்தில் 18, அறிவியலில் 58, சமூக அறிவியலில் 60. எப்படி என்றுதான் புரியவில்லை.?
கடைசியாக அதிகாரிகளுக்கு சில கோரிக்கைகள்...
ஏன் 100 சதவீதம் உங்களால் தரமுடியவில்லை என்று கொச்சையான கேள்விகளைக் கேட்காதீர்கள். ஐயா, இந்த மாபெரும் தமிழ்நாட்டில் பத்து, பன்னிரெண்டாம் வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடைந்து, தமிழகம் 100 சதவீதம் அடைந்துவிட்டால் என்ன நிகழும் என்பதைத் தெரிவியுங்கள். அடுத்தகட்ட இலக்குதான் என்ன?
அடுத்து எல்லா பாடத்திலும் எல்லாரையும் 100 சதவீதம் எடுக்க வைப்பதுதான் அடுத்தகட்ட இலக்கா?
தேர்ச்சி மட்டும் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இந்தக் கல்வித் திட்டத்தின்மீது கல்வியாளர்களும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் கேள்விக்கேட்டால் மட்டுமே சரியான விடை கிடைக்கும்.
தேர்ச்சி என்பது விழுக்காடில் இல்லை. முழுமையான எழுத்தறிவில். பட்டறிவில் மட்டுமே உள்ளது. உண்மையான இலக்கு என்பது, ஐந்தாம் வகுப்பில் உள்ள மாணவர் சரளமாக வாசிக்கவும் எழுதவும் தெரிந்திருப்பதுதான்.
ரா.தாமோதரன் - தொடர்புக்கு raa.damodaran@gmail.com
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago