அருட்செல்வர் ஏபிஎன் அவர்களுக்கு மனோரமாவும் நானும் செல்லக் குழந்தைகள். அவருடைய பெரும்பாலான படங்களில் மனோரமா குறிப்பிடத்தக்க வேடத்தில் பெயர் வாங்கும் அளவுக்கு நடித்திருப்பார்.
‘தாயே உனக்காக’ என்ற பெயரில் கவியரசு கண்ணதாசன் தயாரித்த படத்தில்தான் முதன்முதலில் மனோரமா, நாகேஷ், வி.கே.ஆர்., சம்பந்தப்பட்ட நகைச்சுவைக் காட்சியில் நடித்தேன். என்னோடு எண்ணற்ற படங்களில் நடித்தவர், சூர்யா தலைமுறையிலும் நடிக்கும் அளவுக்கு வலிமை பெற்றிருந்தார்.
'கந்தன் கருணை', 'சரஸ்வதி சபதம்' ஆகிய இருபடங்களிலும் நாகேஷ், மனோரமா கலக்கியிருப்பார்கள். திக்குவாய்ப் பெண்ணாக மனோரமா -தினைபுனத்தில் பரண் மீது நின்று காவல் காப்பவனாக நாகேஷ்.
1970இல் ‘திருமலை தென்குமரி’ தயாரானபோது சுருளி-மனோரமா புதுஜோடி. பால்கார முனியம்மாவாக ‘பாடணும்னு மனசுக்குள்ளே ஆசை நிறைய கீது. ஆனா பாட சொல்லோ பெயம் வந்து முன்னே நிக்கீது!’ -என்று பாடி பஸ் பயணத்தையே குதூகலப்படுத்துவார்.
‘கண்காட்சி’யில் நானும் குமாரி பத்மினியும், ஹீரோ, ஹீரோயின் கள்ளபார்ட் நடராஜன் -சி.ஐ.டி.சகுந்தலா போட்டி நடன ஜோடி. இப்படத்தில் துப்பறியும் அதிகாரிகளாக மனோரமாவும் சுருளியும் 9 வேடங்கள் போட்டு நடிப்பார்கள்.
‘தில்லானா மோகனாம்பாள்‘ -ஜில் ஜில் ரமாமணி வேடம். நாகேஷுக்கு ‘திருவிளையாடல்’ தருமி வேடம் போல் -எந்த சினிமா ரசிகனும் மறக்க முடியாத நடிப்பு.
ஆயிரத்து ஐந்நூறு படங்களைத் தாண்டிய எண்ணிக்கை. அறிஞர் அண்ணா ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’ என்ற நாடகத்தை 1946-ல் எழுதினார். சிவாஜி கணேசன் என்று பெரியார் பட்டம் சூட்டும் அளவுக்கு 18 வயது வி.சி. கணேசன் மகாராஷ்டிரா சிவாஜியாக நடித்தார். காகப்பட்டர் வேடத்தில் அண்ணா நடித்தார்.
பின்னாளில் சிவாஜி வேடத்தை ஈ.வி.கே. சம்பத் மேடையில் நடிக்க அவரது ஜோடியாக இந்துமதி வேடத்தில் நடித்தவர் மனோரமா.
திமுக பிரச்சார நாடகமாக ‘உதயசூரியன்’ கலைஞரால் எழுதப்பட்டு அவரே நாடகத்தில் ஹீரோவாக நடித்தபோது ஜோடியாக நடித்தவர் மனோரமா.
கலைஞர் எழுதிக் கொடுத்த ‘மணிமகுடம்’ நாடகத்தில் எஸ்.எஸ்.ஆருக்கு ஜோடியாக மேடையில் கதாநாயகியாக நடித்தவர் மனோரமா. அது படமானபோது ஜெயலலிதா அம்மையார் அந்த வேடத்தில் நடித்தார்.
அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், என்.டி.ராமாராவ், ஜெயலலிதா என ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த ஒரே நடிகை.
அம்மாவாக, ஆச்சியாக, வில்லியாக, காமெடி, பாடல் - எனப் பன்முகக் கலைஞராக பெண் சிவாஜியாக நடிப்பில் கொடி பறக்கவிட்டவர்.
12 வயதில் ‘யார் மகன்’ என்ற நாடகத்தில் நடிக்க மேடையேறி என்னுடைய கணக்குப்படி சுமார் 2000 நாடகங்கள் நடித்திருப்பார்.
நாடக இயக்குனர் திருவேங்கடமும், ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜனும்தான், பெற்றோர் வைத்திருந்த கோபிசாந்தா என்ற பெயரை மாற்றி மனோரமா என்று வைத்தனர். எவ்வளவு அதிர்ஷ்டமான பெயர்.
1958-ல் ‘மாலையிட்ட மங்கை’ -கவியரசர் தயாரித்த படத்தில்தான் மனோரமா முதன்முதல் நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்தார். கதாநாயகியாக திரையில் பெயர் பெற அவருக்கு அவ்வளவு ஆசை. அவருடைய முகத்தோற்றத்திற்கு நகைச்சுவைப் பாத்திரங்கள் பொருந்துவது போல கதாநாயகி வேடம் பொருந்தாது.
அக்காலத்தில் ஹீரோ, ஹீரோயினுக்கு முகப்பொலிவு- கண், மூக்கு, வாய், பல்வரிசை, வடிவான உடல் அமைப்பு -இப்படிப் பல தகுதிகள் கட்டாயம் இருக்க வேண்டும். சாவித்திரி, பத்மினி, அஞ்சலிதேவி, சரோஜா தேவி, ஜெயலலிதா, கே.ஆர்.விஜயா முகத்தையும் உருவத்தையும் பார்த்தால் அது புரியும்.
அப்படிக் கதாநாயகியாக மனோரமா பிரமாதமாக நடித்திருந்தாலும் விரைவில் மார்க்கட் இழந்து சீக்கிரமே காணாமல் போயிருப்பார். நகைச்சுவையில் ‘நீ சிரஞ்சீவி நடிகை. நீயாக போதும் என்று சொல்லும்வரை நடிப்பாய்’ என்று ஆசி கூறியவர் கண்ணதாசன்.
‘வா வாத்யாரே, ஊட்டாண்டே நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்!’ -‘டில்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்ல தட்டாதே’ என சந்திரபாபுவுக்கு ஒரு வித்தியாசமான குரல் இருந்தது போல- மனோரமாவுக்கு கணீரென்ற குரல் இறைவன் கொடுத்த வரம்.
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, சிங்களம் என 6 மொழிகளில் நடித்துள்ளார். பத்மஸ்ரீ பட்டம் ஒரு நகைச்சுவை நடிகை பெறுவது சாதாரண விஷயமா?
இவ்வளவு சிறப்புகள் பெற்றவர் இளமைக்காலமும், குடும்ப வாழ்க்கையும் புயலடித்த பூமி போல சோகங்கள் நிறைந்தது.
1937, மே 26-ம் தேதி ராஜமன்னார்குடி காசிகிளாக் உடையார் -ராமாமிர்தம் தம்பதிக்கு வசதியான குடும்பத்தில் பிறந்தவர் கோபிசாந்தா.
துரதிருஷ்டவசமாக ராமாமிர்தத்தின் தங்கை மீது கிளாக் உடையாருக்கு காதல் ஏற்பட்டு, ராமாமிர்தம் எதிர்ப்பையும் மீறி அவளை இரண்டாந்தாரமாக உடையார் மணந்துகொண்டார். மானரோஷமுள்ள ஒருத்தி இதைச் சகித்துக் கொண்டு அவரோடு வாழ விரும்பாமல், கையில் காசில்லாமல் கட்டின புடவையோடு சிறுமி கோபிசாந்தாவை அழைத்துக் கொண்டு பள்ளத்தூர் வந்து விட்டார் ராமாமிர்தம்.
வீடு வீடாகப் போய் வேலை கேட்டு, பத்துப் பாத்திரம் தேய்க்கும் வேலையெல்லாம் பார்த்து பாதி வயிறு தண்ணீர், மீதி வயிற்றுக்குச் சோறு என்று தானும் குழந்தையும் பல நாள் வாழ்ந்திருக்கிறார்கள்.
ஆளுயர அண்டாவை 9 வயது மகள் சாம்பல்-புளி போட்டு தேய்த்துக் கழுவுவதைப் பார்த்து ரத்தக்கண்ணீர் வடித்திருக்கிறாள் அம்மா.
வைரம் நாடக சபாவில் மனோரமாவுடன் ஒரு நடிகர் நடித்தார். துரத்தி துரத்திக் காதலித்தார். விரட்டி விரட்டி அடித்தார் மனோரமா. அவர் விடவே இல்லை. அம்மா ராமாமிர்தம் எச்சரித்தார். அவன் நல்லவனில்லை. உன் நிம்மதி போய்விடும். வளரும் வயதில் காதல், திருமணம் வேண்டாம் என்று கெஞ்சிப் பார்த்தார். காதல் போதை கட்டுப்பாட்டை மீறி இருந்தது.
1954-ல் திருச்செந்தூரில் அந்த நடிகருக்கும் மனோரமாவுக்கும் திருமணம் -எளிமையாக அம்மாவுக்குத் தெரியாமல் நடந்தது. அதன் பிறகு அம்மாவுடன் பேச்சுவார்த்தை இல்லை. ‘வாழ்விலும் தாழ்விலும் உன்னை விட்டுப் பிரியேன்’ என்று சத்தியம் செய்து, கபடநாடகம் ஆடியவனின் சுயரூபம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட ஆரம்பித்தது.
திருமணமாகி 2 மாதங்களில் கருவுற்று விரைவில் கருச்சிதைவும் ஏற்பட்டது. உடல்நிலை பாதிக்கப்பட்டு கொட்டாம்பட்டி மருத்துவமனையில் மனைவியைச் சேர்த்த கணவன், மயக்கம் தெளிந்து பார்த்தபோது காணவில்லை. அம்மா மட்டும் எதிரில் காவல் தெய்வமாக நின்று கொண்டிருந்தார்.
வேறு ஊரில் நாடகம் போட கணவன் போய்விட்டார். மீண்டும் சமரசமாகித் தொடர்ந்து நாடகங்களில் அவரோடு நடித்தார். மீண்டும் சில மாதங்களில் வயிற்றில் அடுத்த குழந்தை. 9 மாதம் குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டே ஓய்வில்லாமல் நாடகங்கள். உடம்புக்கு முடியவில்லை என்றாலும் வற்புறுத்தி நடிக்கச் சொல்வார். வருமானம் குறையக்கூடாது அவருக்கு.
6 மாதமாக நாடகங்களில் நடித்ததற்கு காசு வரவில்லை. ‘நான் பார்த்துக் கொள்கிறேன், கவலைப்படாதே!’ என்றார். பிரசவத்திற்கு பள்ளத்தூர் தாய் வீடு வந்துவிட்டார். 9-வது மாதம் ஆஸ்பத்திரியில் ‘பிரசவத்திற்குப் பணம் வேண்டும்!’ என்று கேட்டால், ‘நான் வரும்போது கொண்டு வருகிறேன்’ என்றார் கணவன் வரவில்லை. பிரசவம் ஒரு கொடுமை. பணமில்லாத அவதி இன்னும் கொடுமை.
குழந்தை பிறந்தபோதும் ஆசையோடு மனைவி, குழந்தையைப் பார்க்க வரவில்லை. 15 நாள் கழித்து வந்தார். பணம் எதுவும் கொண்டு வரவில்லை. மனைவியைக் கொஞ்சவில்லை- மகனை அள்ளி எடுத்து முத்தம் கொடுக்கவில்லை. ‘சீக்கிரம் ரெடியாயிரு. நாடகங்கள் நடத்த தேதி கொடுத்துவிட்டேன்!’ என்றார். மனோரமா மூலம் பணம் சம்பாதிப்பது ஒன்றே அவரது நோக்கம்.
அம்மாவால் தாங்க முடியவில்லை. ‘பச்சை உடம்பு. ஒரு மாதம் கூட ஆகவில்லை. இந்த நிலைமையில் ஊர் ஊராக நாடகம் நடிக்க உடம்பு தாங்குமா? என்னய்யா மனுஷன் நீங்க?’ பொங்கிவிட்டார்.
இப்போது மனோரமா -தீர்மானமாக ‘இப்ப நான் வரமுடியாது’ என்றார்- முறுக்கிக் கொண்டு போய்விட்டார் கணவர்.
பின்னர் சென்னையில் குடியேறினார்கள். நாடகங்களிலும், சினிமாவிலும் வாய்ப்புகள் வந்தன. திடீரென்று கணவரிடமிருந்து விவாகரத்து கடிதம்? 1956-ல் விவகாரத்து - அவரது 19 வயதில் கணவனைப் பிரிந்தாயிற்று.
ஏன் விவகாரத்து? பிறந்த மகன் பூபதி ஜாதகத்தை ஜோதிடரிடம் கொடுத்திருக்கிறார் கணவன். தகப்பனை விழுங்கி அம்மாவை உயர்த்தும் ஜாதகம் என்றார் ஜோதிடர். அதாவது நாம் செத்துப் போவோம்! அதிர்ந்தார். விவகாரத்து வாங்கி உயிர் பிழைக்க ஓடிவிட்டார்.
சக நடிகரின் தங்கையை இரண்டாந்தாரமாக மணந்தார். 24 ஆண்டுகள் ஓடின. வேண்டா வெறுப்பாக வாழ்ந்த வாழ்க்கையில் மனோரமா மூலம் ஒரு ஆண் வாரிசு பிறந்தது. உருகி உருகி காதலித்து, கட்டிப்பிடித்து, வாழ்ந்தும் இரண்டாவது மனைவிக்குக் குழந்தை பிறக்கவில்லை.
இறைவன் ஒருவனை எப்படி தண்டிக்கிறான் பாருங்கள்.
1990- டிசம்பர் 18-ம் தேதி மாஜி கணவர் இறந்த செய்தி மனோரமாவுக்கு தெரிவிக்கப்படுகிறது. துக்கம் விசாரிக்க மனோரமா வீட்டுக்குப் போனேன். ‘கணவன் இறந்ததற்கு அழுவதா? அறியாத வயதில் தன்னை ஏமாற்றி ஒரு குழந்தை கொடுத்து விட்டு, தலைமுழுகி விட்டுப் போனவனை நினைத்து சந்தோஷப்படுவதா தெரியவில்லை!’ என்றார்.
பூபதியை, தகப்பனாருக்கு கொள்ளி போட அனுப்பச் சொன்னேன். ‘பூபதியோ அவர் யாரென்றே எனக்குத் தெரியாதே!’ என்றான். ‘அவர்தான் உன் தகப்பன் என்று நான் சொல்கிறேன். தகப்பனுக்கு கொள்ளி போடுவது புண்ணியம் வா!’ என்று அழைத்துப் போய் இறுதி மரியாதை செய்து வந்தார்.
‘‘சிவா! யுத்தம் முடிந்துவிட்டது. இனி நான் எதற்கு இருக்க வேண்டும்? என் வாழ்க்கை எப்படிப் போனால் என்ன என்று, ஈவிரக்கமில்லாமல் என்னை உதறிவிட்டுப் போனவன் முன்னால் வாளெடுத்து சுழற்றி இத்தனை காலம் போராடி, நான் யார் என்று நிரூபிக்க உடல், பொருள், ஆவியை எல்லாம் செலவழித்தேன். எதிராளி வீழ்ந்துவிட்டான். வெறுங்கத்தியைச் சுழற்றிக் கொண்டு எப்படி வாழ்வது? போதும். போய் விடுகிறேன்!’’ என்றார்.
‘ராமாமிர்தம் அம்மா, இந்த மனிதனை நம்பி உங்களைப் பெற்றெடுக்கவில்லை. கலையுலகில் இமயத்தின் உச்சியைத் தொடப் பிறந்தவர் நீங்கள். இன்னும் கடமை பாக்கி இருக்கிறது தொடருங்கள்!’ என்றேன்.
பூபதியை டாக்டராக்க எவ்வளவோ முயற்சிகள் எடுத்தார். அது நிறைவேறவில்லை. பூபதியின் மகன் ராஜராஜனை டாக்டராக்கிவிட்டார். இரண்டு பேத்திகளும் இப்போது திருமணமாகி நன்றாக வாழ்கிறார்கள்.
இதுவரை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத ஒரு சம்பவத்தை இந்தத் தொடரில் பதிவு செய்கிறேன்.
2009 ஜனவரியில் 8000 பேர் முன்பு ஒரே மூச்சில் ஒரு சொட்டு நீர் அருந்தாமல், பேப்பரில் சிறு குறிப்பு வைக்காமல் 100 பாடல்கள் வழி கம்ப ராமாயண உரை நிகழ்த்தினேன். விஜய் டிவியில் அது ஒளிபரப்பாகி, ஆயிரக்கணக்கில் டிவிடிக்கள் போட்டு மக்களிடம் சேர்த்தோம்.
ஒரு நாள், ‘ராமாயணம்’ உரை பார்க்க வேண்டும்!’ என்றார் மனோரமா. ஒரு டிவிடி கொடுத்தனுப்பினேன். மறுநாள் காலை 11 மணிக்கு போன். ‘எங்கப்பா இருக்கே?’, ‘அசோக் நகரில் ஒரு நண்பர் வீட்டில்!’. ‘ஒரு நிமிஷம் வந்துட்டுப் போ!’ என்றார். போனேன். வரவேற்பறையில் உட்கார்ந்தேன். டிவியில் ஏதோ ஒரு செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
திடீரென்று என் தலை மீது பூமாரிப் பொழிந்தது. இடைவிடாது அடைமழைபோல, மூச்சு முட்டும் அளவுக்குத் தலை வழியே பூக்கள் கொட்டப்பட்டன. என் உருவத்தை மறைக்கும் அளவுக்கு அத்தனை பூக்கள். மூட்டை மூட்டையாக வாங்கி வந்து பூ மாரி அபிஷேகம் செய்தார் மனோரமா.
‘என்னம்மா செய்கிறீர்கள்?’
‘‘டேய், சிவா! நான் யார் ? எப்பேர்பட்ட நடிகை- என் திறமை என்ன என்பதெல்லாம் உனக்குத் தெரியும். நடிப்பில் உச்சம் தொட்ட சிவாஜி. நகைச்சுவை மன்னன் நாகேஷுடன் நடிப்பில் சவால் விட்டு மோதியவள். நேற்றிரவு உன் ராமாயண உரையைப் பார்த்தேன். இரவு முழுக்க தூங்க முடியவில்லை. உனக்கு இந்த ஞானம் எப்படி வந்தது? திரையுலகில் எந்த நடிகரும் நினைத்துப் பார்க்க முடியாத சாதனையைச் செய்திருக்கிறாய். உன்னை எப்படிப் பாராட்டுவது என்று தெரியவில்லை. என்னால் முடிந்தது இதுதான்!’’ என்றார்.
அவர் அன்பில் நெக்குருகிப் போய் அப்படியே கட்டி- அணைத்து கண்ணீரால் நன்றி தெரிவித்தேன்.
---
அனுபவிப்போம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
5 hours ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago