அஞ்சலி: நாடகக்காரர்- கல்வியாளர் சுனிபா பாசு

By அம்ஷன் குமார்

வங்காளத்தைத் தாய்மொழியாகக் கொண்டு தமிழ்நாட்டில் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை வாழ்ந்து தமிழர்களின் கலை, கலாச்சாரம் ஆகியவற்றுடன் இரண்டறக் கலந்தவர்களில் முக்கியமானவர் திரைப்பட இயக்குநர்-ஒளிப்பதிவாளர் நிமாய் கோஷ். `சின்னமூல்`(1950) வங்கப் படத்தில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏற்பட்ட அகதிப் பிரச்சினையைத் துணிகரமாக எடுத்துக்காட்டி அதன்காரணமான எதிர்ப்பினால் அவர் கொல்கத்தாவைவிட்டு சென்னைக்கு நிரந்தரமாகக் குடியேறினார். தமிழகத்தை தனது இரண்டாம் தாயகம் என்றே பெருமையுடன் குறிப்பிட்டார். அவரைப் போன்றே மற்றொரு வங்காளி தமிழ் நாடகம், தமிழர்களின் முறைசாராக் கல்வி, திரைப்பட ரசனை ஆகியவற்றில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு சென்னையில் பலகாலம் வாழ்ந்து இம்மாதம் 11ஆம் தேதி தனது 72ஆம் வயதில் மறைந்தார். அவர் சுனிபா பாசு.

சுனிபா பாசு 1948 நவம்பர் மாதம் மூன்றாம் தேதி ஒடிசா மாநிலத்திலுள்ள கட்டாக்கில், அக்ஷய குமார் சக்ரபர்த்தி-சுதாராணி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். 1950ஆம் ஆண்டிலேயே அவரது குடும்பம் சென்னைக்கு குடியேறியது. சென்னை ஐஐடியில் படிப்பை முடித்து யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியில் டிவிஷனல் மேனேஜராக உயர்பதவி வகித்த சமயத்தில், அவர் தாமாகவே அதிலிருந்து பணி ஓய்வு பெற்றார். முழுநேர எழுத்தாளராக வேண்டும் என்கிற எண்ணத்தை அந்த முடிவு நிறைவேற்றியது.

சிறுவயதிலிருந்தே கவிதைகள், கதைகள் எழுதத் தொடங்கியிருந்தாலும் அவற்றைப் பிரசுரத்திற்கு அனுப்புவதில் அவருக்குத் தொடர்ந்து தயக்கம் இருந்து கொண்டிருந்தது. ஒரு மாறுதலுக்காக அவர் ஒரு சர்வதேச சிறுகதைப் போட்டிக்கு அனுப்பிய சிறுகதையொன்றுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கவே தொடர்ந்து பிரசுரித்தார். சிறுகதைகள், நாடக திரைப்பட விமர்சனங்கள், புத்தக மதிப்புரைகள் என்று பலவாறாயும் அவரது எழுத்துகள் பல இதழ்களில் தொடர்ந்து வெளியாகின.

சுனிபா பாசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு `த மேன் இன் த ரெட் மாருதி` பரவலான கவனத்தைப் பெற்றது. ஒற்றைக் கருவினை எடுத்துக்கொண்டு அதைத் தளர்வில்லாது முடிவுக்கு கொண்டுவரும் சுவாரஸ்யமிக்க கதைகள் அவை என்று வங்காளத்தின் குறிப்பிடத்தக்க விமர்சகர் சமீக் பந்தோபாத்யாய பாராட்டினார்.

நிமாய் கோஷ் பற்றிய அவரது நூல் அவரது எழுத்துகளில் முக்கியமானது. `பாதை தெரியுது பார்` (1960) என்கிற தொழிலாளர் பிரச்சினை குறித்த தமிழ்ப் படத்தை நிமாய் கோஷ் எடுத்தார். அது தமிழ் சினிமாவின் மைல்கல்லாக இன்றளவும் கருதப்படுகிறது. நிமாய் கோஷ் பற்றிய முதலும் முடிவுமான நூல் என்று சொல்லத்தக்க அதைக் கடும் ஆய்வுகளுக்குப்பின் எழுதினார். நிமாய் கோஷ் போன்றே சுனிபாவும் தீவிர இடதுசாரி சிந்தனை கொண்டவர். அந்நூல் தேசிய ஆவணக் காப்பகத்தின் வெளியீடாக வந்தது.

பாட்டி_வீட்டு_திண்ணை

அவர் எழுதிய ஒரே நாவல் `பான்ட்ஸ் ஆப் ஜல்தங்கா`. நகர்ப்புற நாகரிகம் கிராமத்தின் சுற்றுப்புறத்தை எல்லா வகைகளிலும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை அவர் ஒரு சமூகவியலாளரின் கூர்மையோடு அந்த நாவலைப் படைத்தார். சுனிபா ஆங்கிலத்திலேயே எழுதினார். தமிழில் தன்னால் எழுத முடியவில்லை என்பது அவரது ஏக்கமாக இருந்தது. ஆனால், தமிழை மிகவும் விரும்பியவராதலால் அதில் அவருக்கு நல்ல பரிச்சயம் இருந்தது.

புதுவையில் தனது கிராமத்து வீட்டிற்கருகில் வசித்த பொருளாதார வசதியற்ற பள்ளிச் சிறார்கள், நகர்ப்புற பள்ளியில் கற்றுத் தரப்படுவனவற்றை இழக்கக் கூடாது என்கிற அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட முறைசாராக் கல்வியை, இலவசமாகப் புகட்ட வேண்டி, அவர் தன் வீட்டிலேயே நடத்திய பயிலகத்திற்கு `பாட்டி வீட்டுத் திண்ணை` என்று பெயர். அப்படியொரு அழகான தமிழ்ப் பெயரிட்டவரே அவர்தான். பாட்டி வீட்டுத் திண்ணையைத் தமிழ்வழி கல்வி போதிக்கும் பயிலகமாக மாற்றிய அவர் யாராவது தொடர்ந்து வரவில்லையெனில் அம்மாணாக்கரின் தாய்தந்தையரைத் தொடர்புகொண்டு அவரை மீண்டும் அங்கு அழைத்து வருவார். அவர்களுக்கு ஓவியம் வரைவது, இசை, நாடகப் பயிற்சி, உபயோகமற்றதெனெ தூக்கியெறியப்பட்ட பொருட்களை வைத்து கைவினைப் பொருட்களைச் செய்வது போன்றவற்றையும் கற்றுக் கொடுத்தார். தன்னாலான பொருளுதவியையும் செய்தார் . அது அவரது மிக முக்கியப் பங்களிப்பு.

நடிகர்_சுனிபா_பாசு(இடது)

சுனிபாவின் மற்றொரு மிக முக்கியமான பங்களிப்பு நவீனத் தமிழ் நாடகம் சார்ந்தது. நவீன தமிழ் நாடகக்காரர்களுடன் தன்னை ஆற்றலுடன் பொருத்திக் கொண்டார். கூத்துப்பட்டறை நாடகங்களில் அவர் பங்கேற்றார். நாடகத்தின் பல்வேறு துறைகளான ஒப்பனை, ஆடை அலங்காரம், மேடை ஒளியமைப்பு ஆகியனவற்றுடன் நாடக இயக்கத்திலும் அவர் ஈடுபாடு கொண்டிருந்தார். உத்பல் தத்தின் நாடகங்களை மொழிபெயர்த்தார். சுதிப்தா பௌமிக் எழுதிய `பலோக்` என்கிற வங்க நாடகத்தை மொழிபெயர்த்ததுடன் அதை `வேலி` என்கிற பெயரில் தமிழில் அவர்தம் கணவர் பிரணாப் குமார் பாசுவின் இயக்கத்தில் மேடையேற்றவும் செய்தார். எழுத்தாளர் அசோகமித்திரன் அதை வெகுவாகப் பாராட்டி விமர்சனம் எழுதினார். சென்னையில் வங்க நாடகங்களையும் அவர் இயக்கினார். காலம் சென்ற பத்திரிகையாளரும் பரீக்ஷா நாடகக் குழுவினரைத் தோற்றுவித்தவருமான ஞாநியை வங்க நாடகமொன்றில் நடிக்கவைத்த பெருமை சுனிபாவினுடையது. எனது பாதல் சர்க்காரின் நாடகம், சி.வி.ராமன் ஆகிய ஆவணப்படத் தயாரிப்புகளுக்கு உறுதுணையாக இருந்தார்.

சில காலமாகவே நோயுற்றிருந்த போதிலும் தன்னை எப்போதும் மலர்ச்சியுடன் வெளிப்படுத்திக் கொள்பவராக இருந்தார். மனதில் பட்டதை ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்துபவராகவும் விருந்தோம்பல் பண்பு நிறைந்தவராகவும் இருந்தார். தமிழ் நாட்டின் கலை, கல்வி வளர்ச்சிப் பணிகளுடன் தன்னை இணைத்துக்கொண்ட சுனிபா பாசுவின் மரணம் ஈடுசெய்ய இயலாதது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்