துப்பாதீர்கள்; கரோனாவைப் பரப்பாதீர்கள்!

By வா.ரவிக்குமார்

ஸ்டாப் இந்தியா ஸ்பிட்டிங் பிரச்சாரத்தைக் கடந்த ஆண்டிலிருந்து தீவிரமாக முன்னெடுத்து வருகிறது 'பியூட்டிஃபுல் பெங்களூரு' என்னும் தன்னார்வ அமைப்பு. இதன் நிறுவனர்களில் ஒருவரான ஓடெட் கட்ரக் உடன் பெங்களூரு மாநகராட்சியும் கைகோத்திருக்கிறது. மருத்துவமனை வளாகங்கள், விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் என எங்கும் இவர்களின் துப்புவதைத் தவிர்ப்போம் பிரச்சாரப் பதாகைகள் மக்களுக்கு விழிப்புணர்வை அளிக்கின்றன.

பெங்களூருவில் இவர்கள் அளிக்கும் விழிப்புணர்வைப் பற்றி பிரதமர் வானொலி உரையில் குறிப்பிட்டுப் பேச, இந்தியாவின் மற்ற மாநிலங்களிலிருந்தும் நகரங்களிலிருந்தும் இந்தப் பிரச்சாரத்தை ஆர்வமுடன் பல தன்னார்வலர்கள் முன்னெடுத்து வருகின்றனர். தமிழகத்தில் சென்னையில் மாலினியும், வழக்கறிஞர் ராஜ்குமாரும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து ஓடெட்டிடம் பேசினோம். “கடந்த 20 ஆண்டுகளாகவே கல்வி, உடல் நலம் உள்ளிட்ட சமூகப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம். முன்பெல்லாம் பொது இடங்களில் துப்பாதீர்கள் என்று நாங்கள் சொன்னால் எங்களையே கிண்டல் செய்வார்கள். ஆனால் கரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட காலத்தில் பொது இடங்களில் துப்பாதீர்கள் என்று நாங்கள் செய்துவரும் பிரச்சாரத்தை நிறையப் பேர் காது கொடுத்துக் கேட்கின்றனர். இதற்கு கரோனா பீதியும் ஒரு காரணம்.

''பொது இடங்களில் நீங்கள் பார்க்கும் போது யாராவது துப்பினால்… என்ன செய்வீர்கள்?'' என்று கரோனா பெருந்தொற்று பரவுவதற்கு முன்பாக நாங்கள் ஒரு சர்வே எடுத்திருந்தோம். அதில் பெரும்பாலானவர்கள், ''எங்களுக்கு ஏன் வீண் வேலை.. துப்புபவரைத் தவிர்த்துவிட்டு நாங்கள் கவனமாக வேறு பக்கமாகப் போய்விடுவோம்'' என்றே பலரும் கூறியிருந்தனர்.

கரோனா பெருமளவு பாதித்தபிறகு அண்மையில் நடத்திய சர்வேயில் ஏறக்குறைய 80 சதவீதத்துக்கும் அதிகமானோர், ''பொது இடங்களில் துப்புபவரை அப்படிச் செய்யாதீர்கள். உங்களுக்கும்... உங்களால் அடுத்தவர்களுக்கும் துப்புவதால் நோய் பரவும் அபாயம் இருப்பதைப் புரியவைப்போம்'' என்றனர். இது ஒரு நல்ல முன்னேற்றம்.

இதைத் தொடர்வதற்குத்தான் பள்ளிக் குழந்தைகள், படித்தவர், பாமரர்கள் என எல்லோருக்கும் விழிப்புணர்வை அளிக்கும் வகையில் கார்ட்டூன் அனிமேஷன் காணொலிகள், பாடல்கள், இசை எனப் பல வடிவங்களிலும் விழிப்புணர்வை அதிகரித்து வருகிறோம். சீக்கிரமே பொது இடங்களில் துப்பாத இந்தியா மலரும்!” என்கிறார்.

மாலினி கல்யாணத்தின் பிரச்சாரம்

'துப்புவதை நிறுத்துங்கள்' பிரச்சாரத்தை இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்லும் #STOPINDIASPITTING தன்னார்வ அமைப்பில் தமிழகத்தில் விழிப்புணர்வு அளிப்பவராகத் தன்னை முன்னிறுத்திக் கொண்டிருப்பவர் மாலினி கல்யாணம். சுதந்திரப் போராட்டத் தியாகியும், மகாத்மா காந்தியின் செயலராகவும் இருந்த காந்திய அறிஞர் கல்யாணத்தின் மகள் இவர்.

பொது இடங்களில் எச்சில் துப்புவதால் கரோனா பரவுகிறது என்னும் பிரச்சாரத்தை பாமரர் முதல் படித்தவர் வரை அனைவரையும் உணர வைப்பதற்காகப் பல வழிகளிலும் யோசித்து அதைச் செயல்படுத்தி வருகிறார் மாலினி. கடந்த 2014 முதல் இதற்காகப் பல்வேறு விதங்களில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுப்பதோடு பயனற்ற பொருட்களிலிருந்து பயனுள்ள பொருட்களை உருவாக்குவது தொடர்பான ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறார்.

மாலினி கல்யாணம்

கரோனா ஊரடங்கு தொடங்குவதற்கு முன்னதாகவே பொது இடங்களில் துப்புவதால் ஏற்படும் தீமைகளையும் அதனால் ஏற்படும் சுற்றுப்புற, சுகாதாரப் பிரச்சினைகளையும் தமிழகத்தின் 37 மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார் மாலினி. அந்தப் பகுதிகளில் இருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களைக் கொண்டு பொதுமக்களிடம் இந்தக் கருத்தை வலியுறுத்தும் பணிகளையும் செய்திருக்கிறார்.

"நாங்கள் 'டியூபர்குளோசிஸ் அசோசியேஷன் இந்தியா' உடனும் இணைந்து பொது இடங்களில் துப்பும் பழக்கத்தால் ஏற்படும் தீமைகளை விளக்குவதற்குப் பணிபுரிகிறோம். அந்த அமைப்பின் மூலம் எங்களுக்குத் தெரியவந்த ஓர் அதிர்ச்சியான புள்ளிவிவரத்தை இங்கே பகிர்ந்துகொள்ள வேண்டும். ஒரு காசநோயாளியின் 1 மில்லி அளவுள்ள எச்சிலில் 10 ஆயிரம் காசநோயைப் பரப்பும் பாக்டீரியாக்கள் உள்ளன என்பதுதான் அந்த அதிர்ச்சியான புள்ளிவிவரம்.

எனவே காசநோய்த் தடுப்பு அமைப்புடன் இணைந்து நாங்கள் துப்புவதற்கு எதிரான பிரச்சாரத்தைத் தீவிரமாக மக்களிடம் கொண்டு சென்றோம். அதேபோல் செஞ்சிலுவைச் சங்கத்தோடும் இணைந்து இந்தப் பிரச்சாரத்தை பலமாக்கினோம். எங்களின் பலவிதமான பிரச்சாரங்களால் இன்றைக்கு மக்களிடம் பொது இடங்களில் துப்புவது மரணத்தைப் பரப்புவதற்குச் சமம் என்னும் கருத்து தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுமைக்கும் பரவி உள்ளது" என்கிறார் மாலினி.

வழக்கறிஞர் ராஜ்குமார் பேசுகையில், தமிழகத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.100 முதல் ரூ.500 வரை அபராதம் விதிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழ்நாடு புகை பிடித்தல் மற்றும் எச்சில் உமிழ்தல் சட்டத்தின் (The TN Prohibition of Smoking and Spitting Act 2002) படி ஒரு முறை எச்சில் துப்பினால், ரூ.100, இரண்டாவது முறை துப்பினால் ரூ.200, மூன்றாவது முறை துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் ராஜ்குமார்

இதுபோன்ற சட்டங்கள் இயற்றப்பட்டாலும் அவை மக்களுக்குச் சரிவரத் தெரிவதில்லை. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்தும் அதை அரசாங்கம் செயல்படுத்தவில்லை. பொது இடங்களில் எச்சில் துப்பினால் தண்டனை கிடைக்கும் என்ற பயமே இல்லாமல் பெருவாரியான மக்கள் இச்செயல்களில் ஈடுபடுகிறார்கள் எனக் கூறுகிறார் .

நான்கு கால் பிரச்சாரகர்கள்!

ஸ்டாப் இந்தியா ஸ்பிட்டிங் பிரச்சாரத்தில் சென்னை சார்பாக `டேல்ஸ் வித் டெயில்ஸ்’ அமைப்பு, நிலா, ஜானி, மவுஸ், ஸ்கூபி, கிப் ஆகிய செல்லப் பிராணி நாய்களை வைத்தே ஒரு விழிப்புணர்வுக் காணொலியை வெளியிட்டிருக்கின்றனர்.

அதைக் காண: https://youtu.be/SjgMAp1wJ3As

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்