1979 டிசம்பர் மாதம் 26-ம் தேதி ‘ராமன் பரசுராமன்’ படப்பிடிப்பு. ஹாங்காங் விமான நிலையம்.
படத்தில் வில்லன் பரசுராமன் போலீஸ் கைகளில் அகப்படாமல் தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூர், ஜப்பான், ஹாங்காங் என்று பல நாடுகளில் தலைமறைவாகி தொல்லை கொடுக்கிறான். போலீஸ் ராமன் எப்படியும் பரசுராமனைப் பிடித்தே தீருவது என்று சவால் விட்டு ஒவ்வொரு நாட்டுக்கும் பின்னாலேயே போய்த் தேடுகிறான் என்பது கதையின் பிற்பகுதியில் வரும் காட்சிகள். இரட்டை வேடங்களில் நான் நடித்தேன்.
சிங்கப்பூரில் பரசுராமன் வந்து இறங்குவது பின்னர் அதே சிங்கப்பூர் விமானத்தில் ஏறி ஜப்பான் செல்வது, ஜப்பான் விமான நிலையத்தில் பரசுராமன் இறங்குவது, மறுநாள் அங்கிருந்து தப்பித்து விமானம் ஏறி ஹாங்காங் செல்வது... இப்படிப் படமாக்கப்பட வேண்டும்.
ஹாங்காங்கில் அவன் விமானத்திலிருந்து இறங்கும்போதும் படமாக்க வேண்டும். அதே ஹாங்காங் விமான நிலையத்தில் அவன் மீண்டும் ஏறி வேறு நாட்டுக்குப் பறப்பதும் படமாக்க வேண்டும்.
» திரைப்படச்சோலை 28: நெருப்பிலே பூத்த மலர்
» திரைப்படச்சோலை 27: கவிக்குயில் படப்பிடிப்பும்; கண்ணதாசன் விழாவும்...
இதேபோல் போலீஸ் ராமன் சிங்கப்பூர் விமான நிலையத்தில் வேறொரு விமானத்தில் வந்து இறங்குவது, அந்த ஊரில் பரசுராமனைத் தேடிவிட்டு, அங்கிருந்து விமானம் ஏறி ஜப்பான் செல்வது; அங்கும் அவன் கிடைக்கவில்லை என்று, ஜப்பானில் விமானம் ஏறி ஹாங்காங் வந்து இறங்குவது -இப்படியாக 2 கதாபாத்திரங்களும் சிங்கப்பூர், ஜப்பான், ஹாங்காங் -விமான நிலையத்தில் வருகை-புறப்பாடு இரண்டையும் படமாக்க வேண்டும்.
விமான நிலையத்தில் காட்சியின் தன்மையை ஒரு பக்கத்திற்குள் ஆங்கிலத்தில் எழுதி ஹாங்காங் விமான நிலைய அதிகாரியிடம் கொடுத்து, அவர் அதைப் படித்துப் பார்த்து, ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு விமானம் இறங்கும். இன்னொரு விமானம் மேலே போகும். அதிகமான ‘டிராஃபிக்’ உள்ள விமான நிலையம். உங்களுக்கு 30 நிமிடம் அனுமதி தருகிறோம். 9 பேர் மட்டும் அனுமதிப்போம் என்று தெரிவித்தார்.
நானும், லதா, ரத்தி அக்னிஹோத்ரி- டைரக்டர் கோபிநாத், அவர் உதவியாளர், ஒளிப்பதிவாளர் லால், அவர் உதவியாளர், ஒப்பனைக்கு ஒருவர், உடையலங்கார நிபுணர் ஒருவர் என 9 பேர் விமான ஓடுதளம் வரை சென்றோம்.
கேமரா தயார் செய்து வானத்திலிருந்து இறங்கும் விமானத்தை ‘க்ளோஸ்-அப்’பில் படம் பிடித்து, அது ஓடுதளத்தில் வந்து திரும்பி நிற்கும் வரை முதலில் எடுத்துக் கொண்டோம்.
பயணிகள் ஏணியில் இறங்கி வரும் சமயம் பரசுராமன் முரட்டு மீசை, கலைந்த தலையுடன் ஜெர்க்கின் - ஜீன்ஸ் உடையணிந்து ரத்தியை அழைத்துக் கொண்டு மடமடவென்று படிகளில் ஏறி விமானத்திற்குள் புகுந்து கேமரா ஓட ஆரம்பிக்கும்போது பயணிகளோடு இறங்கி வருவதைப் படமாக்கினோம்.
அடுத்த விமானம் வானத்திலிருந்து இறங்கி ரன்வேயில் வந்து நிற்கும். அந்த 2 நிமிடங்களுக்குள், நான் முரட்டு மீசையை உறித்துவிட்டு, தலைமுடியை வாரி, போலீஸ் உடையணிந்து தயாராகி, 2-வது விமானத்திலிருந்து பயணிகள் இறங்கும்போது போலீஸ் ராமனாக லதாவைக் கையில் பிடித்துக் கொண்டு இறங்குவது படமாக்கப்பட்டது.
மூன்றாவது விமானம் பறந்து வந்து தரையைத் தொட்டு, ஓடுபாதையில் ஓடி திரும்பி வருவதற்குள், ரத்திக்கு உடையை மாட்டி, மீண்டும் நான் பரசுராமன் மீசை, கலைந்த தலைமுடி, முரட்டு உடை மாட்டி -ரத்தியுடன் விமானம் நிற்கும் இடத்துக்கு ஓடினேன்.
பயணிகள் ஏணிப்படியில் இறங்கத் தொடங்கும் முன் இருவரும் விமானத்திற்குள் புகுந்து பயணிகளோடு கீழே இறங்குவது படமாக்கப்பட்டது.
அதற்குள் அடுத்த விமானம் தரையிறங்கத் தொடங்கியது. அது வந்து நிற்பதை படமாக்கி மஃப்டி உடையில், ராமன், லதாவின் மாற்று உடையுடன் ஓடிச்சென்று படிகளில் இறங்கி வருவது படமாக்கப்பட்டது. இனி நிற்கும் விமானத்தில் பரசுராமன் அடுத்த நாட்டுக்குத் தப்பிப் போக படிகளில் ஏறி விமானத்தினுள் செல்வது. அதேபோல கதாநாயகியுடன் போலீஸ் ராமன் 3 முறை 3 விமானங்களில் உடைகளை மாற்றி ஏறுவது, கண்ணை மூடி முழிப்பதற்குள் 25 நிமிடத்தில் படமாக்கி விட்டோம்.
நடு ரன்வே ரோட்டில் நானும், கோபிநாத்தும் ஜமுக்காளத்தை விரித்து மறைப்பாக நிற்க, நீச்சல் உடையில், ஒரு நிமிடத்திற்குள் கவுனை மாற்றி -லதாவும், ரத்தியும் ஒத்துழைப்பு தந்தார்கள்.
விமான நிலைய அதிகாரி இன்னமும் ஐந்து நிமிடம் உள்ளது. நீங்கள் படமெடுக்கலாம் என்றார். எங்கள் வேலை முடிந்துவிட்டது தேங்க்ஸ் என்று சொல்லி வெளியேறினோம்.
மறக்க முடியாத படப்பிடிப்பு அது. இன்னொரு படப்பிடிப்பும் மறக்க முடியாததுதான். 1977 ஜூன் -11ஆம் தேதி சென்னை வளசரவாக்கம் -திலீப்குமார் கார்டன். ‘கவிக்குயில்‘ படத்தில் இறை நம்பிக்கையுள்ள பாடகன் ஹீரோ. அவன் கனவில் வந்த பெண்ணை நேரில் சந்திக்கிறான். அவள்தான் ஸ்ரீதேவி. தெய்வீகக் காதலர்களாக வலம் வருகிறார்கள். - ‘சின்னக்கண்ணன் அழைக்கிறான்’ பாடல், ‘உதயம் வருகிறதே’ - எனப் பாடி மகிழ்கிறார்கள். மகிழ்ச்சியின் உச்சத்தில் ஸ்ரீதேவி கருவுற்று விடுகிறாள். மாதங்கள் கூடும்போது, தான் தவறு செய்து விட்டோம். அண்ணன் ரஜினிக்கு இது தெரிந்தால் கொன்றே போடுவார் என்று ஸ்ரீதேவி அழுகிறாள்.
நீ ஒன்றும் கவலைப்படாதே. உன் அண்ணனை நான் நேரில் சந்தித்து நாம் திருமணம் செய்து கொள்ளப்போவதைச் சொல்கிறேன் என்று ஸ்ரீதேவியை ஹீரோ -நான் சமாதானப்படுத்தி விடுவேன். இதை முந்தைய அத்தியாயத்தில் சொல்லிவிட்டேன்.
ஒரு நாள் காட்டு வழியில் நான் ரஜினியைச் சந்திக்க நடந்து போகும்போது திடீரென வானம் கருத்து, புயல் காற்று வீசி அடைமழை பிடித்துக் கொள்ளும். புயலின் வேகத்தால் வானுயர்ந்த மரம் ஒன்று ஒடிந்து விழும். பாதையில் நடந்து போன என் தலைமீது மரம் சரிய, நான் மயங்கி விழுந்து விடுவேன். பின்னர் மருத்துவமனையில், பரிசோதனைகள் செய்ததில் உயிருக்கு ஆபத்தில்லை. ஆனால் தலையில் அடிபட்டதால் கடந்த கால நினைவுகள் இராது என்று டாக்டர் சொல்வார்.
இந்தக் காட்சியில் ஒரு பகுதி சிக்மகளூரிலேயே யூகலிப்டஸ் மரங்கள் அடந்த காட்டுப் பகுதியில் படமாக்கிவிட்டோம். இப்போது புயல் காற்றில், அடைமழையில் மரம் ஒடிந்து என் தலையில் விழுவது -நான் அடியில் அகப்பட்டுக் கொள்வது படமாக்க வேண்டும்.
வளசரவாக்கத்தில் திலீப்குமார் கார்டன் என்று 4 ஏக்கர் மேடும், பள்ளமும், பலவித மரங்களும் கூடிய இடம் படப்பிடிப்புக்குத் தேர்வு செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி, தருமபுரியிலிருந்து கல் உடைக்கும் தொழிலாளர்கள் குடிசை போட்டு அப்பகுதியில் தங்கியிருந்தனர். ஒரு கிணறு இருந்தது. தண்ணீர் பயன்படுத்தாமலே இருந்ததால் துர்நாற்றம் அடித்தது. 100 பாட்டில் பினாயில் வாங்கி வந்து கிணற்றுக்குள் ஊற்றினார்கள். கடலில் பெருங்காயம் கரைப்பது போல் அதனால் ஒரு பயனும் இல்லை. நாற்றம் குறையவில்லை.
தீயணைப்புப் படை வந்து ஹோஸ் பைப் தயார் செய்தது. முதலில் புயல்காற்று அடித்து புழுதி பறக்கும் சூழலில் நான் நடப்பது படமாக்கப்பட வேண்டும். விமானத்தின் முன்புறம் உள்ள இறக்கைகள் போல, புரஃபெல்லர் ஒன்று கொண்டு வந்து மின்சார இணைப்பு கொடுத்தார்கள். அதில் வரும் காற்று ஆளையே பத்து அடி தூரம் தூக்கி வீசி விடும். அவ்வளவு வேகம் இருக்கும். புரஃபெல்லர் முன் புழுதி, தூசி துரும்பெல்லாம் பறக்கவிட்டு, அதனிடையே நான் தடுமாறிச் செல்வது படமாக்கப்பட்டு விட்டது.
அடுத்து மழை. மழையின் முடிவில் மரத்தின் கிளை ஒன்று என் தலையில் விழுவது போல படமாக்க வேண்டும். ஒரிஜினல் கிளையை 20 அடி உயரத்திலிருந்து என் தலை மீது போட்டால் அந்த நிமிடமே நான் காலி. ரிவர்ஸ் ஷாட் ஆக அதை எடுக்க திட்டமிட்டனர்.
அதாவது மழை நீர்ச்சேற்றில் நான் தரையில் படுத்துக்கிடக்க -மரத்தை என் தலை மீது முதலில் வைத்து கேமரா ஃபிரேமுக்குத் தெரியாமல் மரத்தில் கயிறு கட்டி, கேமரா ஓடும்போது 4 பேர் அந்தக் கிளையை மேலே தூக்க வேண்டும். என் தலையிலிருந்து கிளை மேல் நோக்கிப் போகும்போது நான் சத்தமிட்டுக் கத்தியவாறு எழுந்திருக்க வேண்டும்.
இதைப் படமாக்கி நேராக புரொஜக்டரில் திரையிடும்போது மேலே இருந்து மரக்கிளை என் தலையில் விழ நான் கத்தியவாறு தரையில் விழுவது போல் அழகாகத் தெரியும்.
கிணற்றுக்குள் ‘ஹோஸ் பைப்’ ஐ விட்டு நீர் உறிஞ்சி 4 குழாய் வழி வானத்தில் பீய்ச்சினார்கள். மரங்களெல்லாம் மழையில் நனைய, நான் அந்த மழையில் நனைந்து கொண்டே நடப்பது படமாக்கப்பட்டது.
இப்போது ரிவர்ஸ் ஷாட். ஏற்பாடு செய்து என்னைப் படுக்கச் சொன்னார்கள். சொத சொதவென்றிருந்த அந்தச் சேற்றில் படுத்தேன். வித்தியாசமான வாசனை வந்தது. கொஞ்ச நேரத்துக்குப் பின் தாங்க முடியாத அளவுக்கு நாற்றம் குமட்டிக் கொண்டு வந்தது.
கிருஷ்ணகிரி, தருமபுரி.. மக்கள் திறந்தவெளிப் பொதுக்கழிப்பிடமாக அந்த மேட்டுப்பகுதியைப் பயன்படுத்துகிறார்கள். தனியாக அவர்களுக்கு டாய்லட் வசதி அங்கு கிடையாது. ‘ஹோஸ் பைப்’ -நீர் வானத்திலிருந்து மேட்டுப்பகுதியில் விழுந்து கீழே இறங்கும்போது சென்ற வாரம், நேற்று, இன்று காலை, இன்று மதியம் என அந்த மக்களின் மலம், பல வண்ணத்தில் இருந்தது- நீரில் கலந்து ஓடி வந்து என் கன்னத்தை வருடியவாறு சென்றது.
டைரக்டர் தேவராஜிடம் ‘யோவ் டைரக்டரே! என் கன்னத்துக்குப் பக்கத்தில மஞ்சள், மஞ்சளா தெரியுதே அது என்னய்யா? ’ என்று கேட்டேன்.
‘‘அதுதான்!’ என்றார். அதிர்ச்சி.
‘ஆர்க் புரூட் லைட்டெல்லாம் ஆர்டர் பண்ணி புரொட்யூசர் நிறைய இன்னிக்கு செலவு பண்ணியிருக்காரு. தம் புடிச்சு படுத்துக்க. 10 நிமிடத்தில் முடித்து விடுகிறேன்!’ என்று படப்பிடிப்பைத் தொடர்ந்து -அதாவது இரவு 7 மணிக்கு ஆரம்பித்த படப்பிடிப்பு விடியற்காலை மூன்றரை மணி வரை தொடர்ந்தது.
பல்லைக்கடித்துக் கொண்டு நடித்து முடித்து விடிவதற்கு முன் வீட்டுக்குப் போய் வாசலில் 2 குடம் தண்ணீர் கொண்டு வந்து தலையில் ஊற்றிக் குளித்து விட்டு ஜூன் 12-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் பிடித்து பெங்களூர் பயணமானேன்.
என்எஸ்என் தியேட்டர்ஸ் மேஜர் சுந்தரராஜன் தலைமையில் இயங்கும் நாடகக்குழு இன்று பெங்களூர் ஜோதி பைன் ஆர்ட்ஸுக்காக ‘அப்பாவி’ நாடகத்தை 62-வது முறையாக மேடையேற்றியது.
மேட்டுப்பாளையம் மனோகரும், பெங்களூர் நண்பர் அமுதவனும், கிருஷ்ணமூர்த்தியும் நாடகம் பார்க்க வந்திருந்தனர். நாடகம் முடிந்த கையோடு உடனே 10 மணி இரவு மெயிலைப் பிடித்து சென்னை வந்து சேர்ந்தோம்...
அனுபவிப்போம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago