அன்பாசிரியர் 9 - இவர்கள் வெறும் ஜாலி வாத்தியார்கள் அல்ல!

By ஈரோடு கதிர்

சிறப்பு அத்தியாயம்

நான் அரங்குக்குள் நுழைந்தபோது 3 மணி இருக்கும். நுழைவு படிக்கட்டுகள் அருகே ஒருவர் அப்போதுதான் மதிய உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அநேகமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இருக்கலாம். அரங்கினுள்ளே பெருந்திரளான ஆசிரியப் பெருமக்கள் ஒரு நீள் அரை வட்டத்தில் அமர்ந்திருந்தனர். குழந்தை நேயப் பள்ளிகள் பற்றிய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி அது.

உண்மையில் அந்தக் கூட்டம் பற்றிய விபரங்கள் எனக்குத் தெரியாது. அரசுப் பள்ளியைச் சார்ந்த ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு என்று மட்டும் தெரியும். என்னுடைய புத்தகத்தை விரும்பி படித்ததோடு தன் தோழமைகளுக்கு தொடர்ந்து பரிந்துரைப்பவரும், சின்னமுத்தூர் பள்ளியின் தலைமையாசியருமான கிருஷ்ணவேணி என்னை அழைத்திருந்தார். "எங்கள் ஆசிரியர்கள் மத்தியில் கொஞ்சம் நேரம் பேச முடியுமா!?" எனக் கேட்டிருந்தார்.

சில வருடங்களாக அவர் மற்றும் அவரின் நட்பில் இருக்கும் ஆசிரியர்களின் பணி, திறன் கண்டு வியந்திருக்கிறேன். "பேசுறனோ இல்லையோ… என்ன நடக்குதுனு பாக்கிறதுக்காச்சும் வர்றேங்க" என்று சொல்லித்தான் வந்திருந்தேன். பின் வரிசையில் ஒரு நாற்காலியை போட்டு அமர்ந்த வண்ணம் என்ன நடக்கிறது எனக் கவனிக்க ஆரம்பித்தேன்.

குழுமியிருந்தவர்களில் விருப்பப்பட்ட ஆசிரியர்கள் தங்கள் அனுபவங்களை மிகச்சுருக்கமாக பகிர்ந்து கொண்டிருந்தனர்...

தன்னிடம் படித்த ஒரு மாணவி திருமணமாகி வெளியூர் சென்று, குழந்தை பிறந்தபின் தன் குழந்தையும் அதே ஆசிரியையிடம் பயில வேண்டும் என்பதற்காக அதே ஊருக்கு குடி வந்திருப்பதாக சொல்லும் 25 ஆண்டுகளாக பணியாற்றும் ஆசிரியை...

வகுப்பறைக்குள் நுழையும்போது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வேடத்தில் நுழைவேன் என்பதையும், பிள்ளைகள் தன்னை கோமாளி வாத்தியார் என்றும் கூட அழைப்பார்கள், சில நேரங்களில் விளையாடும்போது "வாடா போடா" என்று கூடச் சொல்வார்கள் எனச் சொல்லும் ஆசிரியர்...

வேறொரு பள்ளியில் பணிபுரிந்தாலும், மலைக்கிராமம் ஒன்றில் மிகுந்த சிரமங்களுக்கிடையே நடந்துவரும் பள்ளிக்கு உதவ தன் நட்புகளிடம் தனிப்பட்ட முறையில் நிதி திரட்டி, அந்தப் பள்ளிக்கு நூலகம் அமைக்க நிதி வழங்கிய ஆசிரியை…

தங்கள் பள்ளியில் NCC தொடர வேண்டும் என்பதற்காக, பலவிதமான கடும் போராட்டங்களுக்குப் பின்னர், தான் அதே பள்ளியில் 10 வருடம் பணியாற்றுவதாகவும், NCC பொறுப்பாளாராக பணியாற்றுவதாகவும் உறுதிப் பத்திரம் வழங்கி, பொறுப்பேற்று 300 மாணவர்களை விமானப் படை விமானத்தில் விமானி அறை வரை சென்று புழங்கும் வாய்ப்பு பெற்றுக் கொடுத்த ஆசிரியர்...

உயர்நிலைப்பள்ளி வரை இருக்கும் ஒரு நகரிலிருந்து, கிராமத்திலிருக்கும் தங்கள் அரசுப் பள்ளிக்கு வேன் வைத்துக்கொண்டு மாணவ மாணவிகள் வருவதாகச் சொல்லும் ஆசிரியை...

வகுப்பறை அருகே சாலை போடும் ரோலரை சன்னல் வழியே வேடிக்கை பார்க்கும் மாணவர்களை மிரட்டி, அடக்கி உட்கார வைக்காமல், ஆசிரியர்களின் பாதுகாப்போடு சாலையோரம் நிறுத்திவைத்து, சாலை போடும் நடவடிக்கையை முழுக்க பார்க்க அனுமதித்த ஆசிரியர்...

தமது பள்ளிக்கான கட்டிடம் மற்றும் தளவாடங்களுக்காக நகரின் பெரு முதலாளிகளை நாள் முழுக்கக் காத்திருந்து சந்தித்து விளக்கிக் கூறி வேண்டியதைப் பெற்று வந்த ஆசிரியர்…

பள்ளியின் கற்பித்தல் திறனை அறிந்து, தனியார் பள்ளியில் ஆரம்பக் கல்வி படிக்கும் ஒரு குழந்தையின் அம்மா, "எம்புள்ள அந்த ஸ்கூல்ல படிக்குது, இங்க சேத்துறாலாம்னு இருக்கேன், டிசி தருவாங்ளானு தெரியல, டிசி இல்லாம சேத்துக்குவீங்ளா!?" எனக் கேட்பதாகச் சொல்கிறார் ஓர் ஆசிரியை…

மலைப் பிரதேசத்தில் இருக்கும் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க அங்குள்ள பள்ளிக்கு விருப்பப்பட்டு வற்புறுத்தி பணி மாறுதல் பெற்று, தினம்தோறும் காலையும் மாலையும் சேர்த்து சுமார் 160 கி.மீ தூரத்தை 7 மணி நேரம் பயணத்தில் சென்று வரும் ஆசிரியர்…

பழுதடைந்த சமையல் கூட கான்க்ரீட்டிலிருந்து பெயர்ந்த கம்பி ஒன்று உணவு பாத்திரத்தில் விழுந்துவிட, சமையல் கட்டிடத்தை புதுப்பித்துத் தர வேண்டுகிறார். விதிகள் வேறுமாதிரி வியாக்கியானங்கள் பேசுகின்றன. விதிகளுக்கு வேண்டுவதுபோல் "சிறப்பான" வேலைகளைச் செய்து போராடி புதுக் கட்டிடம் உருவாக்கிய ஆசிரியர்…

பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்காக மண் பரிசோதனை செய்ய துறை சார்ந்த அதிகாரிகள் வந்தபோது அனைத்து மாணவர்களையும் பாதுகாப்பாக சுற்றிலும் நிற்கவைத்து முழு நிகழ்வுகளை பார்த்துத் தெரிந்துகொள்ள உதவிய ஆசிரியர்...

தான் பணியாற்றும் நடுநிலைப் பள்ளியில் இருக்கும் மாணவ மாணவியர்களுக்கு விக்கிப்பீடியாவில் கணக்குகள் தொடங்கி தமிழில் மாணவர்கள் அறிந்த, விரும்பிய தகவல்களை பதிவு செய்ய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் ஆசிரியை…

வில் எடுத்துக்கொண்டு குருவி வேட்டைக்குப் போகும் மாணவனை, "குருவியை சுட்டு திம்பியா!?" எனக் கேட்டிருக்கிறார் ஆசிரியர். "சும்மா புடிச்சு ஊட்ல வச்சுக்குவேன் சார்" என மாணவன் சொல்ல. "அதுக்கு ஏன் டா வில் வச்சு அடிக்கிறே, வீட்டுக்கே குருவி வர நான் வழி சொல்றேன்" எனச் சொல்லிவிட்டு, மண் சட்டிகளில் கொஞ்சம் சருகும் சுள்ளிகளும் போட்டு வீட்டு முற்றங்களில் கட்டி வைத்து, இரை போட குருவிகள் அங்கேயே குடி பெயர்ந்து வந்திருக்கின்றன. அதே அமைப்புகளை வகுப்பறை முன்பிலும் நிறுவ, குருவிகள் மட்டும் வரவில்லை. காத்திருந்து சலித்த மாணவர்கள் "இங்க ஏன் சார் வரல" எனக் கேட்க, "நீங்கெல்லாம் என்னேரம் சத்தம் போட்டுக்கிட்டே இருந்தா எப்படிடா வரும், குருவிங்க வரனும்னா நீங்க அமைதியா இருக்கோனும்" எனச் சொல்ல இப்பொழுதெல்லாம் வகுப்பறை முழுவதும் அடர் அமைதி. ஆசிரியரிடம் சந்தேகம் கேட்பதைக் கூட கிசுகிசுப்பான குரலில்தான் கேட்கிறார்களாம். தினம் ஒரு மாணவர் குருவிகளுக்கு இரை போடும் வாய்ப்பையும் வழங்கியிருக்கிறார். குருவிகளுக்கு மண் சட்டிகளில் கூடு அமைத்து வீடுகளுக்கே வரவழைத்ததை ஒரு குறும்படமாக இயக்கி அதை திரையிட்டு, இதையெல்லாம் பகிர்ந்துகொண்ட ஆசிரியர்…

தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது 'மாணவர்கள்', 'மாணவிகள்', 'ஸ்டூடண்ஸ்', 'பிள்ளைகள்' என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் "எங்க கொழந்தைங்க… எங்க கொழைந்தங்க" எனச் சொன்ன ஆசிரியர்கள், ஆசிரியைகள்…

ஒரு ஞாயிறு மாலையில் 2 மணி நேரங்களை ஒதுக்க மறுத்திருந்தால் மேற்கண்ட எவரையும் நான் அறியாமலே போயிருக்கலாம். 29.11.2015 அன்று ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற "குழந்தை நேயப் பள்ளிகள்" பற்றிய அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் விதவிதமான ஆசிரியர்கள் தங்கள் செயல்பாடுகள் குறித்து ஒவ்வொருவராகப் பகிர்ந்துகொள்ள உண்மையில் மிரண்டு போனேன்.

நான் அறிந்த வரையில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது மக்களுக்கு பொதுவாக இரண்டு விதமான மேம்போக்கான கருத்துகள் உண்டு. ஒன்று, 'நல்ல' சம்பளம் வாங்குறாங்க, மற்றொன்று "எங்க ஒழுங்காச் சொல்லித் தர்றாங்க, அவிங்க புள்ளைங்ளே தனியார் ஸ்கூல்லதான் படிக்குதுங்க". இவ்வாறான கூற்றுகள் சரியா தவறா என்ற ஆராய்ச்சிக்கு முன்பு எல்லோருக்கும் மற்ற எல்லோர் குறித்தும் எந்த விதமான கருத்துகள் வேண்டுமானாலும் உருவாகலாம். அப்படி உருவாகுவதை அவ்வளவு எளிதில் தடுத்துவிட முடியாது. இன்னும் சொல்லப்போனால் எல்லோரிடமிருந்தும் எல்லாவற்றையும் தடுத்து நிறுத்திவிட முடியாது. மேலோட்டமாக இப்படியாக வைத்திருக்கும் கருத்துகளைத் தாண்டியும், எந்தவித ஒப்பீடுகளும், கணக்குகளும், ஏற்றத்தாழ்வுகளும் வைத்துக் கொள்ளாமல் நேர்மையாக, கடுமையாக, அர்ப்பணிப்போடு பணியாற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்களும் இருக்கிறார்கள் என்பதை நாம் நிச்சயம் தெரிந்துகொள்ளவே வேண்டும்.

ஒரே கல்வி மாவட்டத்தில் அருகருகில் இருக்கும் இரண்டு பள்ளிகளில், ஒரு பள்ளி சுமார் 50 பிள்ளைகளோடு 'நடந்து' கொண்டிருக்கின்றது, மற்றொரு பள்ளி சுமார் 300 மாணவர்களோடு 'ஓடி'க் கொண்டிருக்கின்றது. 50 மாணவர்கள் இருக்கும் பள்ளி ஆசிரியர், "தனியார் பள்ளிகளில் சேர்ப்பதை கௌரவமாக நினைக்கிறார்கள் பெற்றோர்கள். அதனால் எண்ணிக்கை கூடவில்லை" என்கிறார். 300 மாணவர்கள் இருக்கும் பள்ளி ஆசிரியர், "தனியார் பள்ளிகளுக்கு நாங்கள் கடும் போட்டியாக இருக்கிறோம். 29 பிள்ளைகள் அங்கிருந்து இங்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள்" என்கிறார். சென்செஸ் கணக்குப்படி இரண்டு குழந்தைகள் மட்டுமே இருக்கும் கிராமத்தில் குழந்தை சேர்ப்புக்காக பேரணி நடத்தச் சொல்கிறார்கள் உயரதிகாரிகள் என்கிறார் ஒரு ஆசிரியர்.

இத்தனை உழைப்புக்குப் பின்னால் இருக்கும் ஒரு மறுக்க முடியாத உண்மை, பொதுவாக அரசுப் பள்ளிகளுக்கு பள்ளியின் கற்பித்தல் திறன், கட்டமைப்புத் தகுதி பார்த்து சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பமே. 120 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய தேசத்தில், கல்வி பயிலும் வயதில் இருக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை சுமார் 23 கோடிப் பேர் என்றால், அதில் சுமார் 3 கோடிக் குழந்தைகள் ஒரு போதும் பள்ளிக்கூட வாசலை மிதித்துவிட முடியாதவர்களாகவே இருக்கிறார்கள் எனும் மிகக் கசப்பான உண்மையை கணக்கில் கொண்டே ஆகவேண்டும். அந்த எண்ணிக்கை குறைய வேண்டுமென்றால், அது அரசுப் பள்ளிகள் மட்டுமே செய்ய முடியும்.

அரசுப் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையில் 90% தனியார் பள்ளியில் கட்டணம் செலுத்தி படிக்க வைக்கமுடியாது என்ற நிலையில் வருகிறார்கள் என்றே கருதலாம். எல்லாக் கதவுகளும் அடைபட்டு, வேறு வழியின்றி அரசுப் பள்ளியில் அடைக்கலம் தேடும் மாணவர்களை, மனித இயல்புக்கே உரிய கீழ்மைத்தனத்தோடு ஒருபோதும் அணுகாமல், அர்ப்பணிப்போடு, தன் திறனை, உழைப்பை, நேரத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தரும் ஆசிரியர்கள் மிக நிச்சயமாகப் போற்றுதலுக்குரியவர்கள், அதைவிட வணக்கத்திற்குரியவர்கள்.

அப்படியான ஆசிரியர்களை தொடர்ந்து இனம் கண்டு அங்கீகரிப்பதும், மற்ற ஆசியர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்திற்கே நம்பிக்கை தருவதாகவும், மாற்றங்களை விதைப்பதாகவும் இருக்கும்.

செய்வோம்!

ஈரோடு கதிர் - தொடர்புக்குkathir7@gmail.com

முந்தைய அத்தியாயம்: >அன்பாசிரியர் 8 - நேசமணி: கணினி மூலம் தேர்வும் மதிப்பீடும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்