திரைப்படச்சோலை 28: நெருப்பிலே பூத்த மலர்

By செய்திப்பிரிவு

1980- அக்டோபர் 30-ந்தேதி சேத்துப்பட்டு செயின்ட் லூர்து ஆலயத்தில் ‘நெருப்பிலே பூத்த மலர்’ -படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை படமாக்கத் துவங்கினோம்.

‘சந்ததி’ படத்தை கதை வசனம் எழுதி டைரக்ட் செய்த நாகர்கோயிலைச் சேர்ந்த பெருமாள் சினிமாவுக்காக கெளசிக் என்று பெயர் மாற்றம் செய்துள்ளார். சத்யநேசன் என்ற தன்னுடைய நாகர்கோயில் நண்பரைத் தயாரிப்பாளராக்கி எலிசபெத் புரொடக்சன்ஸ் சார்பில் ஏப்ரல் 14-ந்தேதி ‘நெருப்பிலே பூத்த மலர்’ என்ற இப்படத்தை திருவனந்தபுரம் மெரிலாண்ட் ஸ்டுடியோவில் ஆரம்பித்து, சுமார் 17 நாட்களில் 8500 அடி வளர்த்து விட்டார். மெரிலேண்ட் ஸ்டுடியோவில் படப்பிடிப்பை முடித்து கன்னியாகுமரி சென்று பத்து நாட்கள் லேடி இம்மாகுலேட் மிடில் ஸ்கூல், கன்னியாகுமரி கிழக்குக் கடற்கரையிலுள்ள சர்ச், மேற்கு கடற்கரையில் உள்ள சகாயமேரி சிலை, காந்திமண்டபம், விவேகானந்தர் மண்டபம், நீச்சல் குளம், அடுத்து சித்தாறு அணைப்பகுதிகளிலும் மடமடவென்று படப்பிடிப்பை நடத்தி முடித்தார்.

இன்று சேத்துப்பட்டில் படப்பிடிப்பை தொடர்கிறார். செங்கல்பட்டை அடுத்த மாமண்டூரிலிருந்து உத்திரமேரூர், வந்தவாசி வழியாக வந்தால் சேத்துப்பட்டு என்ற ஊர் வருகிறது.

தமிழ்நாட்டில் பல பகுதிகளைச் சுற்றிப் பார்த்த நான் முதன் முறையாக இந்தப் பகுதிக்கு வருகிறேன். ரொம்பவும் வறண்ட பகுதி. தண்ணீர் தட்டுப்பாடு சொல்லி மாளாது. இங்குள்ள தொழு நோயாளி மருத்துவமனையில் 10 அடி நீளம் 10 அடி அகலத்தில் ஒரு அறை எனக்கு மட்டும் ஒதுக்கினார்கள். 20 லிட்டர் பிடிக்கும் பக்கட்டில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து நாளை வரை சமாளித்துக் கொள்ளுங்கள் என்றார் வாட்ச்மேன். அதிலேயே டாய்லட், ஷேவிங், குளியல் மூன்றையும் முடித்து 4 லிட்டர் தண்ணீர் மிச்சம் வைத்திருந்தேன். சிக்கனம் எல்லாம் சிறுவயதில் கற்றுக் கொண்டதால் சிரமம் இல்லை.

இங்கு செயிண்ட் லூர்து மேரி சர்ச் கட்டப்பட்டு 94 ஆண்டுகள் ஆகிறது. இந்த சர்ச்சும், டோமினிக் சேவியோ பள்ளியும், செயிண்ட் தாமஸ் மருத்துவமனையும் சேத்துப்பட்டின் அடையாளங்கள்.

சேத்துப்பட்டு-லூர்துமேரி ஆலயம்

ஜெர்மனியைச் சேர்ந்த சில முக்கிய டாக்டர்களும், இந்திய மருத்துவர்களும் இணைந்து நடத்தி வரும் இந்த ஆஸ்பத்திரியில் தொழு நோயாளிகளை குணப்படுத்தி, அவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் அனாதைக் குழந்தைகள், ஆதரவற்ற முதியோரை அரவணைத்து பாதுகாப்பும் அளிக்கிறார்கள்.

ஆஸ்பத்திரியில் பொதுவான சிகிச்சையுடன் அறுவை சிகிச்சைக்கும் ஒரு பிரிவு உள்ளது.

தமிழகத்தின் பல பாகங்களிலிருந்தும் எஸ்.எஸ்.எல்.சி. முடித்த மாணவர்களுக்கு தொழுநோய் மருத்துவம் பற்றி ஓராண்டு விசேஷப் பயிற்சி அளிக்கப்படுகிறது. எம்.பி.பி.எஸ் படிக்காமலே அந்த வியாதிக்கு இவர்கள் அடிப்படை சிகிச்சையளிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.

பிரான்சின் தலைநகரான பாரிசிலிருந்து விசேஷ தகுதி பெற்ற பாதிரியார் தாராஸ் (DARRAS) இந்தப் பகுதிக்கு அனுப்பப்பட்டு 40 ஆண்டுகள் இங்கு தங்கி இந்த செயிண்ட் லூர்துமேரி ஆலயத்தை கட்டி முடித்து சுமார் 30 ஆயிரம் ஏழைகளை ஆதரவற்றவர்களை கிருத்தவர்களாக மாற்றி அருஞ்சேவை செய்திருக்கிறார்.

நூற்றாண்டை நெருங்கும் இந்த ஆலயம் கட்டடக்கலையின் பெருமையை சொல்கிறது. தமிழ்நாட்டிலுள்ள சிறந்த ஆலயங்களில் ஒன்று இது.

‘நெருப்பிலே பூத்த மலர்’ கிருத்துவ மதப்பின்னணியை வைத்து எழுதப்பட்ட ஆழமான கதை. நானும், பூர்ணிமா என்ற நடிகையும் ஜோடியாக நடித்தோம்.

கதாநாயகன் லாரன்ஸ் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்க்கிறான். அதே பள்ளியில் மேரியும் ஆசிரியை. இருவருக்குமிடையே காதல் அரும்பி, மொட்டு மலராகிறது -லாரன்ஸின் தாத்தா அவனை பாதிரியாராக காண ஆசைப்பட்டு, வற்புறுத்தி செமினரிக்கு அனுப்பி வைக்கிறார். 7 ஆண்டுகள் கடுமையான பயிற்சி எடுத்து அவன் பாதிரியார் ஆகிறான்.

பாடல் காட்சி

லாரன்ஸ் செமினரிக்குச் செல்ல, வார்த்தையளவில் அனுமதி கொடுத்த மேரிக்கு, அவனை மறக்க முடியவில்லை. வெளியூருக்கு மாற்றலாகி மிஷன் பள்ளியில் வேலைக்கு சேர்கிறாள்.

அதே ஊருக்கு லாரன்ஸ் பாதிரியாக வருகிறான். தூக்க மாத்திரைக்கு மேரி அடிமையானதை அறிந்து, லாரன்ஸ் வருந்துகிறான். பழைய காதல் நினைவுகளை அழிக்க முடியாமல்தான், தூக்க மாத்திரைக்கு அடிமையானதாகச் சொல்கிறாள் மேரி.

மேரியின் மாமன் (சத்தார்) கொலைக்குற்றத்தில் தண்டனை பெற்று சிறைக்கு சென்றவன் விடுதலையாகி மேரியைத் தேடி வருகிறான். தூக்க மாத்திரை அளவுக்கதிகமாகப் சாப்பிட்டு மயக்கத்திலிருந்தவளை குடிபோதையில் மாமன் பாலியல் பலாத்காரம் செய்து விடுகிறான்.

சுயநினைவு வந்ததும், பாதிரியாரைத் தேடிப் போனவன், அவர் காலில் விழுந்து மேரியை போதையில் பாலியல் பலாத்காரம் செய்து உறவு கொண்டு விட்டேன். எனக்குப் பாவமன்னிப்பு தர வேண்டுமென்று அவர் காலைப் பிடித்து மன்றாடுகிறான்.

அடிபட்ட பாதிரியாக

சர்ச்சில் பல பாதிரியார்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுவதை லாரன்ஸ் கண்டுபிடித்து விடுகிறான். அவனோடு துணைக்கு வந்த மேரியின் மாமனுக்கு அரிவாள் வெட்டு விழுகிறது. பலத்த காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அவன் சேர்க்கப்படுகிறான்.

கொலைகாரர்களை கண்டுபிடித்த லாரன்ஸ் பாதிரியாருக்கு திருச்சபையும், ஊர் மக்களும் சேர்ந்து பாராட்டு விழா ஒன்றை ஏற்பாடு செய்கிறார்கள்.

அக்கம்பக்கத்து ஊர்களிலிருந்து திரளாக மக்கள் கூடுகிறார்கள். பாதிரியாருக்கு சீருடை அணிந்த சிறுமிகள் மலர் தூவி வரவேற்கிறார்கள்.

குழந்தைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த மேரி மயங்கி விழுகிறாள். டாக்டர் ஒருவர் நாடி பிடித்துப் பார்த்து மேரி கர்ப்பமுற்றிருப்பதாக தெரிவிக்கிறார். கன்னியாக இருந்தவள் கருத்தரித்தது எப்படி என்று ஊரே அவள் மீது கேள்விக்கணை தொடுக்கிறது.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இரவு அவள் அறையில் அகால நேரத்தில் விளக்குகள் எரிந்ததைப் பார்த்து, பாதிரியார் அங்கே போகிறார். அவள் ஆடை கலைந்து கசங்கிய மலராக கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார். போர்வையால் அவளை மூடும் போது பாதிரியார் கழுத்திலிருந்த சிலுவை கழண்டு தரையில் விழுந்து விடுகிறது.

மறுநாள் காலை எழுந்த மேரி, சிலுவையைப் பார்த்து தன்னை பலாத்காரம் செய்தவன் பாதிரியார் என்று சந்தேகப்படுகிறாள். இருப்பினும் இந்தக் கூட்டத்தில் முன்னாள் காதலனைக் காட்டிக் கொடுக்க அவள் விரும்பவில்லை.

‘எவ்வளவு வற்புறுத்திக் கேட்டாலும் யார் இதைச் செய்தது என்று நான் சொல்ல மாட்டேன். எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறேன்!’ என்கிறாள் மேரி.

பிடிவாதமாக பேர் சொல்ல மறுத்தவளை ஊர் மக்கள் கல்லாலும், செருப்பாலும், துடைப்பத்தாலும் அடிக்கிறார்கள்.

அவள் மாமன் செய்த காட்டுமிராண்டிச் செயலுக்கு, இவள் இப்படி அடி வாங்குகிறாளே என்று கலங்கிய பாதிரியார், மேடை ஏறி மக்கள் முன்பு, மேரியும் நானும் முன்னாள் காதலர்கள். இந்த ஊரில் அவளைப் பார்த்தபோது பழைய உணர்வுகள் மேலோங்க, தான்தான் அவளை பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்கிறார்.

பாதிரிக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் ஒரு விலைமகள். என்னை தண்டியுங்கள் என்று ரத்தம் சொட்டச் சொட்ட மேரி கதறுகிறாள்.

மேரியைக் காப்பாற்ற படிகளில் இறங்கி ஓடி வந்த பாதிரியார் கால் தடுக்கி உருண்டு வருகிறார். அதைப் பார்த்த மேரி ‘லாரன்ஸ்’ - என்று தன்னை மறந்து கத்தியவாறு அவரைத் தூக்கி விட ஓடி வருகிறாள்.

‘இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள். ‘லாரன்ஸ்’- என்று அவள் அழைத்ததிலிருந்தே அவள் என் காதலி என்று உங்களுக்கு தெரியவில்லையா?’ என்று கேட்கிறான் பாதிரியாகிய லாரன்ஸ். இப்போது ஊர் மக்களுக்கு, தெளிவாகப் புரிந்து விட்டது. இருவரும் காதலர்கள்தான். இருவருமே குற்றவாளிகள் என்று ஊர் மக்களின் கோபம் சூறாவளியாகக் கிளம்பி சுழற்றிச் சுழற்றி கற்களாலும், செங்கல்லாலும், செருப்புகளாலும், துடைப்பத்தாலும்

தங்கள் கோபம் தீர அடித்துக் கொல்லப் போகிறார்கள்.

சித்ரவதை

பாதிரியாரின் மண்டை உடைந்து ரத்தம் நெற்றியில் வழிகிறது. கல்லடிபட்ட கன்னம் வீங்கியுள்ளது. சட்டை தாறுமாறாகக் கிழிந்து தொங்குகிறது. உடல் பலமுள்ள மட்டும் தடுத்துப் பார்த்து, இனி முடியாது எந்த நொடியிலும் உயிர் உடம்பை விட்டு போக வேண்டியதுதான் என்ற கட்டத்தில் -மருத்துவமனையில் மாமனுக்கு அதிர்வு. ஏதோ தப்பு நடக்கிறது என்று உள்ளுணர்வு சொல்ல- படுக்கையிலிருந்து எழுந்து தள்ளாடியவாறு ஓட்டமும் நடையுமாக சர்ச் அருகே வருகிறார்.

மரம் வேரோடு தரையில் சாயப்போகும் நிலையில் பாதிரியார் சாய்கிறார். பாய்ந்து வந்த மாமன்காரன், ‘‘இந்த தெய்வத்தையா அடிக்கிறீர்கள்- துன்புறுத்துகிறீர்கள்? மேரியை கெடுத்த பாவி நான்தான். FATHER இடம் CONFESS செய்ததால் உயிரே போனாலும் அதைச் சொல்லக்கூடாது என்று மெளனம் காத்தார். என்னைக் கொல்லுங்கள். துண்டு, துண்டா, வெட்டி எறியுங்கள்!’’ என்று மன்றாடுகிறான் மாமன்.

புனிதமான பாதிரியாரை காமுகன் என்று சந்தேகப்பட்டு விட்டோமே என்று, அவர் காலில் விழுந்து மன்னிக்கச் சொல்லி உயிரை விடுகிறாள் மேரி.

அக்கம்பக்கத்து ஊர்களிலிருந்து தினம்தோறும் ஆயிரக்கணக்கில் படப்பிடிப்பு காண மக்கள் வந்தனர். கிளைமாக்ஸ் அன்று 3 ஆயிரம் பேர் கூடினர் - எல்லோரிடமும் ஆளுக்கு ஒரு செருப்பு, ஒரு டம்மி செங்கல், துடைப்பக்கட்டை, டம்மி கருங்கல் கொடுத்து -100 அடிக்கு ட்ராலி போட்டு கேமராவை ஏற்றி, கேமிராவுக்கு முன்னால் நான் அடி வாங்கியவாறு நகர பின்னணியில் ஓயாது திட்டிக் கொண்டே மக்கள் அடிப்பது 4 முறை எடுக்கப்பட்டு விட்டது.

படம் முடிந்து சவேரா ஓட்டலில் உள்ள ப்ரிவியூ தியேட்டரில் நண்பர்களுக்கு திரையிட்டுக் காட்டினோம். என் மகன் கார்த்திக்கு 4 வயது கூடப் பூர்த்தியாகவில்லை. சூர்யாவுக்கு 6 வயது/ அவன் கண்களில் குளம்போல் நீர் கட்டி நிற்க மெளனமாக அழுகிறான். ஆனால் கார்த்தி அப்பா அடி வாங்கி உடம்பெல்லாம் ரத்தம் வடிய, சட்டையெல்லாம் கிழிந்து தொங்க துன்பப்படுவதைப் பார்த்து, ‘‘அப்பாவை அடிக்கிறாங்க. அப்பாவை அடிக்கிறாங்க. அய்யோ!’ ன்னு வீறிட்டு அழ ஆரம்பித்து விட்டான்.

சூர்யா, கார்த்தி

‘அது சினிமாதான் அப்பா உன் பக்கத்தில்தான் உட்கார்ந்திருக்கேன்!’ என்று எவ்வளவு சொல்லிப் பார்த்தும் அழுகையை அடக்க முடியாமல் படம் முடிவதற்குள்ளேயே அவனைத் தூக்கி காரில் போட்டுக் கொண்டு பீச் புகாரி ஓட்டல் போய் ஐஸ்கிரீம் வாங்கி ஊட்டி விட்டேன். வாயில் ஐஸ்கிரீம் சுவையாக இருந்தது. அதையும் மீறி ‘அப்பாவை அடிக்கிறாங்க!’ என்றான்.

கார்த்தி

‘டேய்! அப்பா, உன் முன்னாடி நிக்கறேன். பேசாம சாப்பிடு ன்று சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.

---

அனுபவிப்போம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

30 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

4 months ago

மேலும்