திரைப்படச்சோலை 27: கவிக்குயில் படப்பிடிப்பும்; கண்ணதாசன் விழாவும்...

By செய்திப்பிரிவு

பஞ்சு அருணாசலம் தம்பி சுப்பு, எஸ்பிடி பிலிம்ஸ் சார்பில் அன்னக்கிளியை அடுத்து தயாரிக்கும் படம் கவிக்குயில். இந்தப் படத்துக்கும் செல்வராஜ்தான் மூலக்கதாசிரியர்.1976-நவம்பர் 27ந்தேதி, இளையராஜா ஏவிஎம் ரிக்கார்டிங் தியேட்டரில் இன்று அற்புதமான பாடல் ஒன்றுக்கு இசையமைத்து ஒலிப்பதிவு செய்தார்.

‘கவிக்குயில்’ படத்தின் ஹீரோ(சிவகுமார்) இறை நம்பிக்கையுள்ள இசைக்கலைஞன். கர்ணனும், கவசகுண்டலமும் போல, புல்லாங்குழல் இல்லாமல் அவனைப் பார்க்க முடியாது.

ஒரு இரவு அவன் கனவில் ஒரு தேவதை வந்து கண்சிமிட்டுகிறாள். விருட்டென்று எழுந்து பார்க்கிறான். எதிரில் யாரும் இல்லை. அது கனவுதான் என்று மீண்டும் உறங்கி விடுகிறான். மறுநாள் கனவில் வந்த அதே தேவதை (ஸ்ரீதேவி) காட்டு வழியில் நேரில் வந்தாள். கையை கிள்ளிப்பார்த்துக் கொண்டான். இறைவன் நமக்காகவே இவளைப் படைத்தானோ என்று -அவள் பார்வை, பேச்சு, உடல்மொழியில் மயங்கி விடுகிறான். காதல் அரும்புகிறது. ‘சின்னக்கண்ணன் அழைக்கிறான்’ என்று அவன் பாட, அவள், அவன் புல்லாங்குழல் இசையிலும், பாடலின் இனிமையிலும், தன்னை இழக்கிறாள். வயிற்றில் கரு உண்டானது. 3-வது மாதத்தில் உறுதியாக தெரிகிறது. அண்ணனுக்கு (ரஜினி) தெரிந்தால் கொலை விழும் என்று நடுங்குகிறாள். நான் வந்து அண்ணனிடம் பேசுகிறேன் என்று சொல்லி புறப்பட்டவன், விபத்தில் சிக்கி, கடந்த காலத்தை மறந்து விடுகிறான் ஹீரோ. வேறு பெண்ணுக்குத் தாலிகட்ட மணவறையில் இருந்த போது காதலியின் குரலில், ‘சின்னக்கண்ணன் அழைக்கிறான்’ பாடல் கேட்கிறது. படிப்படியாக பழைய நினைவு திரும்ப, அவளைத் தேடி ஓடி, தற்கொலை செய்ய இருந்த அவளைக் காப்பாற்றி, இருவரும் இணைகிறார்கள்- என்பது கதை. எஸ்.வி. சுப்பையா என் தாத்தாவாக நடிக்கிறார்.

சிவகுமார்-ஶ்ரீதேவி

டிசம்பர் -25ந்தேதி. பெங்களூர் மெயிலில் பயணம் செய்து அதிகாலை பெங்களூர் மோதி மகாலில் குளித்து தயாராகி, நண்பர் அமுதவனுடன் காலை 6.15-க்கு காரில் சிக்மகளூர் புறப்பட்டோம்.

தும்கூர், திப்தூர், அரிசிகெரெ- கடூர் வழியாக சிக்மகளூர் சென்று வசந்த விகார் லாட்ஜில் தங்கினோம்.

சிக்மகளூரிலிருந்து சுமார் 5 மைல் தொலைவிலுள்ள ஹிராகுளேலே ஏரி்பபகுதி, பாபாபுடன் பள்ளத்தாக்கு, முடுகெரெ கிராமம். அய்யண்ணகெரெ, ஆல்தூர்மேடு போன்ற பகுதிகளிலுள்ள அடந்த மலைப்பகுதிகள் 500 ஆண்டுகள் வளர்ந்து விழுது விட்ட ஆலமரம். கிருஷ்ணன் கோயில் என வித்தியாசமான இயற்கைப் பின்னணியில், ‘ஆயிரம் கோடி காலங்களாக ஆனந்த லீலையின் நாயகன் நீயே!’ என்று கிருஷ்ண பரமாத்மாவை உருகி, உருகி பாலமுரளி கிருஷ்ணா பாடிய பாடலை படமாக்கினோம்.

அதிகாலை 3 மணிக்கு எழுந்து குளித்து, கிருஷ்ணன் வேடம் பூண்டு, புல்லாங்குழலுடன் -நடுங்கும் குளிரில், 360 டிகிரியில் மலைகளின் அழகு மிளிர -ஒரு மலை முகட்டில் அமர்ந்து, அப்போதுதான் புறப்பட்ட குளிர்ந்த பிராணவாயு உடலைத்தழுவ, சூரியன் பூமி மேல் தலைகாட்டி மஞ்சள் வெயிலைப் பாய்ச்ச, அதை உடல்மீது வாங்கிக் கொண்டு புல்லாங்குழல் வாசித்தவாறு நடித்தபோது, நானே கிருஷ்ணபரமாத்மாவாக உணர்ந்து சிலிர்த்தேன்.

சிக்மகளூர் பகுதியில் 15 நாட்கள் முடித்து விட்டு சேலம் ராசிபுரத்தை அடுத்த கொல்லிமலையில் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கத் திட்டமிட்டோம்.

நடுங்கும் குளிரில், சிக்மகளூர் மக்கள் கம்பளிக்குள் சுருண்டு படுத்து தூங்கும் நடுநிசியில், எங்கள் படப்பிடிப்புக்குழு எழுந்து தயாராகும். பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் -இவர்கள் மனிதர்களே இல்லை. கொள்ளிவாய்ப் பிசாசுகள். விடிய, விடிய தூங்க விடாமல் இப்படி அலைகிறார்களே என்று அலுத்துக் கொண்டாலும், படப்பிடிப்பை காண வரும்போது பல்லைக்காட்டி சிரிப்பார்கள்.

ரஜினி -படாஃபட்

ஒரு கட்டப்படப்பிடிப்பு முடிந்து அடுத்த ஊருக்கு புறப்படும்போது, காலை 11 மணிக்குத்தான் வயசுப் பெண்கள் தூங்கி எழுந்து, வாயில் ஜொள்ளுடன், கண்ணில் பூளையுடன் பாவாடையை தூக்கி, ஒரு பக்கம் சொருகிக் கொண்டு பல் விளக்கிக் கொண்டிருப்பார்கள்.

பரபரப்புக்கும், அந்த கிராம மக்களுக்கும் சம்பந்தமே கிடையாது. ஆசைகளும் இல்லை. தேவைகளும் இல்லை.

இருப்பதை வைத்து இயற்கையோடு இயைந்து வாழ்கிறார்கள்.

ஸ்ரீதேவியை நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. 4 ஆண்டுகளுக்கு முன், ‘திருமாங்கல்யம்’ படத்தில் சிறுமியாக என்னோடு நடித்தவள். நெடு,நெடுவென வளர்ந்து என்னை விட உயரமாகி விட்டாள். கை,கால்களில் மொசு,மொசுவென்று முடி முளைக்க ஆரம்பித்து விட்டது. மூக்கினுள் வளர்ந்த முடி வெளியே எட்டிப் பார்த்தது. பெண் வளர்ந்து விட்டாளே தவிர, உள்ளம் அதே குழந்தை உள்ளம். அம்மா மடியில் அவள் உட்கார்ந்து கொள்ள, கார் பயணத்தின்போதே தாயார் சாதம் ஊட்டி விடுவாள்.

கவிக்குயில், மச்சானைப் பார்த்தீங்களா, சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு -என்று 3 படங்களில் இருவரும் ஜோடியாக நடித்தோம். துரதிருஷ்டவசமாக 3-ம் வெற்றிக்கனியை பறிக்கவில்லை.

சேலத்திலிருந்து ராசிபுரம் வழி 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கொல்லிமலை. ஊட்டி, கொடைக்கானல் போன்று வானுயர்ந்த மலைகளோ, நவீன பங்களாக்களோ எதுவும் இங்கு இல்லை. மனிதன் நாசம் பண்ண துவங்காத காலம் அது. ஆதிவாசிகள் மட்டுமே குடியிருந்தனர். ஆனால் தமிழ் பேசினார்கள்.

1977 மே 26-ந்தேதி ஒப்பனை செய்து கொண்டு நானும், ஸ்ரீதேவியும் மாலை 4.30 மணி வரை காத்திருந்தோம். நேற்று இரவு காமிரா,லைட், நாகரா, ஒலிப்பதிவு எந்திரம், மைக் அனைத்தையும் ஏற்றிக் கொண்டு சென்னையில் புறப்பட்ட யூனிட் வேன் இன்னும் வந்து சேரவில்லை. பகல் உணவே, பசி போன பிறகு 4.30க்கு சாம்பார் சாதம், தயிர் சாதம் பொட்டலமாக வந்தது.

சந்ததி -பாடல்

அவுட்டோர் யூனிட் வந்து படப்பிடிப்புக்கு தயாரான போது, சென்னையிலிருந்து பஞ்சு அருணாசலம் போன். 27-ந்தேதி காலை ‘காயத்ரி’ -பட பூஜை உள்ளது. ஸ்ரீதேவி கதாநாயகி. பூஜையில் அவர் இருக்க வேண்டும். ஏதாவது ஒரு ரயில் பிடித்து அவரை சென்னை அனுப்பி வையுங்கள் என்றார். மறுநாள் ஸ்ரீதேவி இல்லாமல் என் வரையுள்ள ஷாட்டுகளை பிரித்து எடுத்தனர்.

28-ந்தேதி காலை 10.30 மணி வரை ஸ்ரீதேவிக்காக காத்திருந்து படப்பிடிப்பை ஆரம்பித்தால், மலைப்பிரதேசம் என்பதால் 12 மணிக்கு மழை பிடித்துக் கொண்டது. இரவு ஏற்காடு எக்ஸ்பிரசில் எல்லோருக்கும் டிக்கட் ரிசர்வ் செய்தாயிற்று.

படாதபாடுபட்டு -தூறல் நிற்கும் போதெல்லாம் காமிராவை ஆன் செய்து படப்பிடிப்பை முடித்து- வழியில் மார்க்கட் கலவரம், லெவல் கிராசிங் தடை, காரில் பெட்ரோல் பிரச்சனை அனைத்தையும் கடந்து, ரயில் பெட்டியில் கால் வைத்தபோதுதான் உயிர் வந்தது.

இந்த கவிக்குயில் -படப்பிடிப்பு சமயத்தில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு கவியரசர் கண்ணதாசனின் 50-வது பிறந்தநாள் விழா. பெங்களூரில் வழக்கம்போல மேம்போக்காக தமிழ்நாட்டில் எல்லா ஹீரோ, ஹீரோயின், டைரக்டர்களுக்கும் கவிஞர் அலுவலகத்திலிருந்து போன் மூலம் அழைப்பு. பெங்களூர் அவசியம் வந்து கவிஞரை வாழ்த்த வேண்டும் என்று.

கடைசி நேரத்தில் எல்லோரும் காலை வாரி விட்டனர். மனோரமா, கமல் என குறைந்த கலைஞர்களே வந்திருந்தனர்.

அன்று காலை சிக்மகளூரிலிருக்கும் எங்களுக்கும் கவிஞர் ஆபீசிலிருந்து போன். படப்பிடிப்பில் உள்ள அத்தனை நடிக,நடிகையரையும் பெங்களூர் அழைத்து வரவும் என்று.

பிற்பகல் பஞ்சு அருணாசலம், ரஜினிகாந்த், செந்தாமரையுடன் நானும் காரில் புறப்பட்டுச் சென்றேன். பெங்களூர் இளைஞர் காங்கிரஸ் -முதலமைச்சர் தேவராஜ் அர்ஸ் தலைமையில் 1977 -ஜனவரி 9-ந்தேதி கவியரசரின் 50-வது பிறந்தநாளைக் கொண்டாட அற்புதமாக ஏற்பாடு செய்திருந்தனர்.

5000-க்கும் மேற்பட்ட அமைதியான ரசிகர்கள் கூட்டம். என்னைப் பேச அழைத்தனர். கவியரசு கண்ணதாசன் பாடல்களை, எழுத்துக்களைப் படித்தவர்கள், கேட்டவர்கள் நிறைய பேர் இருப்பீர்கள். ஆனால் உங்கள் யாருக்கும் கிடைக்காத பாக்கியம் என்போன்ற கலைஞர்களுக்கு உண்டு. நாங்கள் கவிஞர் மடியில் வளர்ந்தவர்கள். அவர் கைப்பிடித்து நடந்தவர்கள்.

‘தாயே உனக்காக’ -படத்தில் ஒரு போர் வீரனுக்கு எது பெருமை என்று ஒரு வசனம் எழுதியிருப்பார்.- ‘நெற்றியிலே

குங்குமம் -நெஞ்சிலே ஆசை -கழுத்திலே மாங்கல்யம்- கண்ணீரிலே காதல்- கையிலே வளையல் -காலிலே சலங்கை -கன்னத்திலே முத்தம் -பெண்ணுக்கு வாழ்வு -வெற்றியுடன் திரும்பினால் வீட்டிலே பாட்டு- விழ்ந்து பட்டாலோ சரித்திரத்தில் வாழ்வு. பாய் போட்டு படுத்து, நோய் வந்து பிடித்து பலநாள் கிடந்து மடிவதா முடிவு? கண்ணென்றால் கனல் பறக்க வேண்டும். கையென்றால் கருவி ஏந்த வேண்டும்; மார்பென்றால் காயம்பட வேண்டும். மரணம் கூட இந்த நாட்டுக்காகவே நிகழ வேண்டும். ஜெய் பாரத்!’

இது சிவாஜிக்கு கவிஞர் எழுதின வசனம். 1966-ல் பேசி நடிச்சார். 11 வருஷமாகியும் பசுமரத்து ஆணி போல என் மனசில பதியக்காரணம். வசனமும் கவிதை போல, தாளக்கட்டுடன் வார்த்தை ஜாலத்துடன் அவரால் எழுத முடியும்.

அப்பா மேஜர். கிரிமினல் லாயர். எந்த வழக்கையும் அனாயாசமா ‘ஹேண்டில்’ பண்ணி ஜெயிச்சுடுவார். ஒரு வழக்கை அவர் எடுத்துக்கறார்னா, எதிர்பார்ட்டி நிச்சயம் தோத்துப் போகும். அப்படிப்பட்ட புத்திசாலி. ஆனால் எல்லா கெட்ட பழக்கங்களும் உள்ளவர்.

அவர் மகன் விவேகாந்தர் மாதிரி. மனிதப்புனிதன் (சிவகுமார்). அமெரிக்காவில் படிச்சுட்டு தாயகம் திரும்பறான். விமான நிலையத்திலேயே வக்கீலின் நண்பர்கள் பலர் அவனை வரவேற்க வர்றாங்க. தன்னோட மாப்பிள்ளையா, அவனை ஏத்துக்க அப்படி போட்டா போட்டி. என் மகனுக்கு பொண்ணு தர எவனுக்கும் யோக்கியதை இல்லை- போங்கடான்னு திமிர்ல வெட்டி விடறாரு வக்கீல். கொஞ்சநாள்ள மகன் உடல் நிலை ஆரோக்கியமா இல்லை. டாக்டர்கிட்ட பரிசோதிச்சா அவனுக்கு பிளட் கேன்சர். ரத்தத்தில் புற்றுநோய்.

மனிதன் பாதம் படா மலைகள்

அதிர்ந்து நிலைகுலைஞ்சிடறாரு வக்கீல். சுதாரிச்சு எப்படியும் மகன் மூலமா நமக்கு ஒரு வாரிசு வேணும்- சந்ததி வேணும்னு - இப்ப, இவர் வெற்றிலை பாக்கு பழத்தட்டை தூக்கிட்டு சம்பந்தம் பேச நண்பர்கள் வீட்டுக்கதவைத் தட்டராறு. ஒரு கட்டத்தில மகனுடைய லேப்-ரிப்போர்ட் வெளியில் தெரிய நண்பர்கள் எச்சரிக்கை ஆயிடறாங்க.

என் மகள் அவ்வளவு சீக்கிரத்தில் விதவையாகறதில உனக்கேனப்பா அவ்வளவு சந்தோஷம். லேப்லருந்து ரகசியம் வெளியாயிருச்சுன்னு -மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லி விரட்டி அடிக்கிறாங்க நண்பர்கள்.

கடைசியா காசுக்கு உடம்பை விற்கிற பாலியல் தொழிலாளி ஒருத்திய பாம்பாய்ல சந்திச்சு, கல்யாணம் பண்ணிகிட்டா 25 ஆயிரம், குழந்தை பெற்றுக் கொடுத்தா 50 ஆயிரம்னு பேசி கூட்டி வந்து -என்னோட டெல்லி நண்பர் துரைசாமி மகள் இவள்னு மகனுக்கு அறிமுகப்படுத்தி, கல்யாணம் பண்ணி இலங்கைக்கு தேனிலவுக்கு அனுப்பறாரு வக்கீல். அங்கே அவள் கருவுறுகிறாள். பம்பாயிலிருந்து இலங்கை வந்த ஒரு ஆள், பம்பாயில் இந்த விலைமகளை சந்திச்சவன் - ‘யாரு இது? புது கிளையண்டா?’ என்று ஹீரோவைப் பார்த்து அவளிடம் கேட்க, சண்டை வந்து விடுகிறது.

உடனே சென்னை திரும்புகிறார்கள். நான் பாலியல் தொழிலாளி என்பது உங்கள் மகனுக்கு தெரிந்து விட்டது என்று அழுகிறாள் அவள்.

ஆனால் வக்கீலோ மீண்டும் ஒரு பொய்யைச் சொல்லி சீசர் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவள். இவளும் அப்படிப்பட்டவள் என்று மிரட்டி மகனைச் சமாதானப்படுத்துகிறார்.

கடைசியில் அமெரிக்காவில் ஹீரோவுடன் படித்த நண்பன் மூலம் அவள் காசுக்கு உடம்பை விற்பவள்தான் என்று தெரிந்து அதிர்ச்சியில் கூச்சல் போடுகிறான். வாயில் ரத்தம். மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். இப்படி போகிறது கதை. இந்த சூழ்நிலையில் அவன் பாடும் பாடலுக்கு, கவிதை எழுத, கவிஞரை அழைத்திருந்தார்கள். சந்ததி -படத்தின் பெயர். அப்பா சந்ததிக்கு ஆசைப்படுபவர். அதனால் சந்ததி என்ற வார்த்தையும் பல்லவியில் வரணும். புற்றுநோய் என்பதும் பல்லவியில் வரணும் என்றார் டைரக்டர் கெளசிக். நாகர்கோயில் பெருமாள் -‘சந்ததி’ என்ற பெயரில் நாடகம் எழுதி மேஜருக்கு கொடுத்து அது ஹிட் ஆன பின் எடுக்கும் படம் இது.

‘எழுதிக்குங்க!‘ என்றார் கவிஞர்.

‘‘என்னிடத்தில் அன்புற்று நோய் கொடுத்தான் இறைவன். சந்ததியில் விருப்புற்று நோய் கொண்டான் தந்தை, அப்போது புரியவில்லை ஆண்டவனின் வடிவம். இப்போது வருகிறது இறைவனவன் கடிதம்!’ மானுட வாழ்க்கையின் நிலையாமையை 4 வரியில் சொல்லுவார்.

‘உதயத்தை நான்தான் முடிவு செய்தேனோ- இரவினிலே நான் கவலை கொள்ள- அங்கு உள்ளவன் நேரில் வருவானா -நான் நேரில் தவணைக் கேட்டுக் கொள்ள- ஒரு துளி நீரில் ஆறடி உருவம் உலகினில் வந்தது எவனாலே- அந்த ஆறடி உருவம் ஆறடி மண்ணில் அடங்கப்போவதும் அவனாலே!’

இந்த மொத்தக்கதையும் 4 வரியில சொல்லுங்க..

‘‘இரவுக்கு வாழ்ந்த பெண்களில் ஒருத்தி

உறவுக்கு வந்தது என் வீடு-அதில்

வரவுக்கு ஒன்றை வைத்த பின்னாலே

செலவில் முடிந்தது என் ஏடு

வேலியில் ஒருவன் தாலியில் ஒருத்தி

யார் கடன் முதலில் நான் கொடுப்பேன்

- என் வேஷத்தில் ஒருவன் பாசத்தில் பிறப்பான்

வானத்திலிருந்து நான் பார்ப்பேன்’

மனைவிக்கு குழந்தை பிறக்கும்போது நான் மேல் உலகம் போய் விடுவேன்! என்ன கவிஞர். கண்ணெதிரில் வார்த்தைகள் அருவியாய் அவர் வாயிலிருந்து வந்ததைப் பார்த்து மலைத்துப் போனேன்..

-இதை மேடையில் பேசி முடித்த போது ஆரவாரமான கை தட்டல் வானில் எதிரொலித்தது. ரஜினிகாந்த் சிலையாகி விட்டார். எங்க ஊரில் வந்து இப்படி பேசி கைதட்டல் வாங்கிய உங்களைப் பார்த்தா பொறாமையா இருக்கு சார்!’’ என்றார்.

---

அனுபவிப்போம்.

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்