மழை முகங்கள்: படிப்புக்கு ஓய்வளித்து ஓயாத களப்பணியில் செல்வா

By க.சே.ரமணி பிரபா தேவி

>'தி இந்து' நிவாரண முகாம் நெகிழ்ச்சிப் பதிவுகள்

உழைத்துக் களைத்த முகம். நெற்றியில் வேர்வை வடிகிறது. புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டால், ''சட்டை ரொம்ப அழுக்கா இருக்குங்களே பரவாயில்லையா?" என்கிறார் செல்வா தயக்கத்துடனே.

ஐஏஎஸ் ஆகும் கனவுடன் இங்கு சென்னை வாசம். மத்திய அரசுப் பணியாளர் தேர்வுக்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறார். சொந்த ஊர் சேலம். கல்லூரிப் படிப்பை முடித்தவர், சென்னையில் நண்பர்களுடன் தங்கிப் படிக்கிறார். இந்த மாதம் முதன்மைத் தேர்வு இருக்கிறதே, படிக்க வேண்டாமா என்று கேட்டேன்.

"அன்றாடம் நடக்கற நடப்பு நிகழ்வுகளையும், செய்திகளையும் படிக்க வேண்டியது எங்களுக்கு ரொம்ப முக்கியமான ஒண்ணு. தினமும் செய்தித்தாளை படிக்கற என்னால, இந்த ஒரு வாரமா பேப்பரைத் திறக்கவே முடியல. டிவி பாக்க முடியல. படிப்பை விட இதுதான் முக்கியம்னு ஓடி வந்துட்டேன். ஒரு வாரமா இங்கதான் இருக்கேன். ஏதோ என்னால முடிஞ்ச உதவி.

அம்மா, அப்பா எல்லாம் சேலத்துல இருக்காங்க. அங்கே எதாவது கஷ்டம்னா சுத்தி இருக்கற மக்கள் ஹெல்ப் பண்ணுவாங்கதானே, அந்த மாதிரிதான் இதுவும்.

நிவாரண மையத்துல இருந்து பொருட்களைக் களத்துல கொண்டு போய்க் கொடுத்திருக்கேன். அப்போ ஜனங்க முகத்துல தெரியற அப்படி ஒரு சந்தோஷத்தை பாத்திருக்கேன். அந்தக் கண்கள்ல தெரியற நன்றியை விட வேறென்ன பெரிசா இருந்துட முடியும். கஷ்டப்பட்டுப் படிச்சு பாஸாகி, மக்களுக்கு சேவை செய்யத்தானே போறோம். அதை இப்போவே செஞ்சிட்டுப் போறேனே?"

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE