வெள்ளத்துக்குப் பிறகு வீடுகளை சுத்தப்படுத்த இயற்கை வழிகள்!

வெள்ளத்தில் இருந்து சென்னை மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. அரசும், மக்களும் கொசுக்களைப் போக்கவும், பூச்சிகளை விரட்டவும் பல்வேறு பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இயற்கை மருத்துவத்தின் மூலமாகவே எல்லா இடங்களையும் சுத்தப்படுத்தி, பூச்சிகளை விரட்ட முடியும் என்கிறனர் இயற்கை ஆர்வலர்கள்.

இது குறித்து, சித்த மருத்துவர் ஜெரோம் சேவியர் கூறியது:

அசுத்தத்துக்கு என்ன காரணம்?

வெள்ளம் வடிந்த பின்னர் அங்கே தேங்கி நிற்கும் தண்ணீராலும், சுத்தப்படுத்தப்படாத இடங்களாலும் அங்கே கிருமிகள் உற்பத்தியாகின்றன. நோய்களுக்கான அடிப்படைக் காரணம் கிருமிகள்தான். சுகாதாரமில்லாத இடங்களில், பூஞ்சைகளின் தொற்று பரவ வாய்ப்பிருக்கிறது. குளிர் காலங்களில் கிருமிகளின் இனப்பெருக்கம் அதிகமாகிறது. சித்த மருத்துவம் மார்கழி மாதத்தை முன்பனிக்காலம் என்று சொல்கிறது.

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் காற்று மாசுபாடு அதிகம். காற்று மூலமும் நோய்கள் பரவுகிறது. தண்ணீர் மற்றும் காற்று மாசுபாடு காரணமாக நோய்கள் அதிக அளவில் பரவுகின்றன.

சருமத் தொற்று நீங்க..

பஞ்சகற்பம் என்று அழைக்கப்படும் கஸ்தூரி மஞ்சள், வேப்ப விதை, கடுக்காய்த் தூள், நெல்லிப்பருப்பு, மிளகு ஆகிய ஐந்தையும் பசும்பாலில் இட்டு அரைத்துக் குளித்து வர, மழைக்காலத்தில் ஏற்படும் சருமத் தொற்றுகள் நீங்கும்.

பாசிப்பயிறு, வெட்டிவேர், சந்தனம், கோரைக்கிழங்கு, கார்போகி, விளாமிச்சை, கிச்சிலிக் கிழங்கு ஆகியவற்றை அரைத்துப் பொடி செய்து பூசியும் குளிக்கலாம்.

பூச்சிகளை விரட்ட

குங்கிலியத்தைப் புகைத்து வீட்டுக்குள் போட கிருமிகள் வராது, வளராது.

வீட்டின் அலமாரிகள், இடுக்குகள், ஓரங்களில் பூச்சிகள் குடியிருக்கலாம். கற்பூரம் மற்றும் மிளகை அரைத்துப் பொடியாக்கி, சிறிய துணியில் முடிந்து வைக்க பூச்சிகள் அண்டாது. வீட்டிக்குள் இருக்கும் காற்றும் சுத்தமாகும். செம்புப் பாத்திரங்களில் தண்ணீர் வைத்துப் பயன்படுத்துவது நல்லது.

கொசுக்களை ஒழிக்க

நொச்சி இலையை வீட்டுக்குள் போட்டு வைக்கலாம். கற்பூரவள்ளி இலையை அரைத்து வீட்டுக்குள் தெளியுங்கள். லெமன் கிராஸை வீட்டுக்குள் போட்டு வைக்க கொசுக்கள் அகலும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE