ஜார்ஜ் ரிச்சர்ட்ஸ் மினாட் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

நோபல் பரிசு பெற்ற அமெரிக்க ஆய்வாளர்

அமெரிக்க மருந்தியல் ஆய்வாளரும், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஜார்ஜ் ரிச்சர்ட்ஸ் மினாட் (George Richards Minot) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 2). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலம் பாஸ்டன் நகரில் (1885) பிறந்தார். தந்தை உட்பட குடும்பத்தில் பலரும் மருத்துவர்கள் என்பதால், இவருக்கும் இயல்பாகவே மருத்துவத்தில் ஆர்வம் பிறந்தது. பலவீனமான குழந்தையாக இருந்ததால் அடிக்கடி காய்ச்சல் வரும். சிகிச்சையும் பராமரிப்பும் எப்போதும் தேவைப்பட்டன.

l தெற்கு கரோலினாவின் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் வளர்ந்தார். இதனால் இயற்கைக்கு மிகவும் நெருக்கமாக வாழும் வாய்ப்பு கிடைத்தது. இயற்கை அழகின் தாக்கம் இவரை எழுத்தாளராக மாற்றியது. பட்டாம்பூச்சிகள் பற்றி இவர் 1902-ல் எழுதிய கட்டுரைகள், அறிவியல் இதழ்களில் வெளிவந்தன.

l பள்ளிப் படிப்புக்குப் பிறகு, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் பணிபுரிந்தார். மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். ரத்தத்தில் காணப்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார். இதுகுறித்து பல கட்டுரைகளையும் எழுதினார்.

l பால்டிமோரில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ உதவியாளராக பணியாற்றினார். ரத்தசோகையின் பல்வேறு வகைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மசாசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் சேர்ந்தார். ஹார்வர்டு மருத்துவக் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

l ஆர்த்ரைடீஸ், ரத்தம் உறைதல், ரத்தக் கோளாறுகள், ரத்தப் பரிமாற்றத்தின்போது ஏற்படும் பாதிப்புகள், நிணநீர் திசுக்களின் சீர்குலைவுகள், ரத்த சிவப்பணு செயல்பாடுகள், ரத்தப் புற்றுநோய், ரத்த சோகை தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டார்.

l ரத்த சிவப்பணுக்கள் பற்றிய இவரது கண்டுபிடிப்பு மகத்தானது. இவற்றை உருவாக்கும் எலும்பு மஜ்ஜையின் செயலிழப்பு காரணமாகவே ரத்தசோகை ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்தார். உணவுப் பழக்கங்களே இதற்குக் காரணம் என்பதையும் கண்டறிந்தார். புற்றுநோயின் பல்வேறு வகைகள் குறித்து ஆராய்ந்தார்.

l ரத்தசோகை குறித்து ஆராய்ச்சி செய்துவந்த வில்லியம் மர்பி, ஜார்ஜ் விம்பிள் ஆகிய ஆராய்ச்சியாளர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட நாய்களை சோதனை முறையில் விம்பிள் குணப்படுத்தியதைக் கண்டார். அவர்களுடன் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். இவர்களது ஆராய்ச்சிகள், ரத்தசோகைக்கான சிகிச்சை குறித்த கண்டுபிடிப்புக்கும் வழிவகுத்தன.

l குணப்படுத்த முடியாது என்று கருதப்பட்ட பெர்னீஷியஸ் ரத்தசோகைக்கு, கல்லீரல் மூலம் சிகிச்சை அளிக்க முடியும் என்பதைக் கண்டறிந்தனர். இது மருத்துவ வரலாற்றில் மகத்தான வளர்ச்சியாக கருதப்பட்டது. இதற்காக வில்லியம் மர்பி, ஜார்ஜ் விப்பிள் ஆகியோருடன் இணைந்து மருத்துவத்துக்கான நோபல் பரிசை 1934-ல் பெற்றார்.

l ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக 1928-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்வேறு மருத்துவ நிறுவனங்கள், அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்த இவர், உடலியல் குறித்த ஆராய்ச்சிகள், பரிசோதனைகளில் மகத்தான பங்களிப்புகளை வழங்கினார்.

l உலகப் புகழ்பெற்ற மருத்துவ ஆய்வாளராகத் திகழ்ந்தவரும், வாழ்நாள் முழுவதும் ரத்தசோகை பாதிப்புகள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு, சிறந்த சிகிச்சை முறையை வழங்கியவருமான ஜார்ஜ் மினாட், நீரிழிவு நோய் தொடர்பான சிக்கலால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, 1950-ம் ஆண்டு மறைந்தார்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்