திரைப்படச்சோலை 26: ‘பத்ரகாளி’ ராணி சந்திரா

By செய்திப்பிரிவு

1976 அக்டோபர் 11-ந்தேதி பம்பாயில் விமான விபத்து. ஏ.சி. திருலோக்சந்தர் தலையில் இடி விழுந்தது போலாகி விட்டது. ‘பத்ரகாளி’ படத்தின் கதாநாயகி ராணிச்சந்திரா, அந்த விமான விபத்தில் தீக்கு இரையானார். அவர் மட்டுமல்ல, அவரது தாயார், மூன்று சகோதரிகள் என குடும்பமே பலியாகி விட்டனர்.

படம் முடியும் வரை வேறு படங்களில் ஒப்பந்தம் செய்யக்கூடாது, வெளிநாடுகளுக்கெல்லாம் போகக்கூடாது என்று தெளிவாக அறிவுறுத்தி ஏ.சி.டி அவரை ஒப்பந்தம் செய்திருந்தார்.

துபாயில் ஒரு கலை நிகழ்ச்சி. மலையாளக்கலைஞர்களுடன் ஓசைபடாமல் சென்று விட்டு அன்று பம்பாய் வந்து சேர்ந்தவர் -இரவு விமானத்தை பிடித்து சென்னை திரும்பினால்தான் மறுநாள் அக்டோபர் -12 அமெரிக்கா கலை நிகழ்ச்சிக்கு அனைவருடனும் புறப்பட முடியும்.

பம்பாய் விமான நிலையத்தில் சென்னை செல்லும் விமானம் ரத்தானதும் பயணிகள், விமான நிலைய அதிகாரிகள் முன் சண்டையிட்டார்கள். மொத்த பயணிகளில் பாதிக்கு மேல் நாங்கள் இன்று சென்னை எப்படியும் போயாக வேண்டும் என்று வற்புறுத்தவே- அதிகாரி இவர்கள் தொல்லை தாங்காமல், ஒரு பைலட்டை பிடித்து- பழுது பார்க்க நிறுத்தப்பட்டிருந்த ஒரு விமானத்தை பயணத்துக்குத் தயார் செய்து விட்டார் போலும். விதி விளையாடியது. எல்லோரும் விமானத்தில் ஏறி சுமார் ஆயிரம் அடி உயத்தில் பறந்தபோது- கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக திரும்பி பூமியை நோக்கிப் பாய்ந்தது.

விமானத்தில் பெட்ரோல் டேங் பின்பகுதியில்தான் இருக்கும். ‘டேங்க்’ முழுக்க பெட்ரோல் நிரப்புவது எக்ஸ்ட்ரா வெயிட். அதோடு விபத்து நேரங்களில் அதிக பெட்ரோல் இருந்தால் மொத்த விமானமும் பயணிகளுடன் எரிந்து விடும் என்பதால், எந்த ஊரில் இறங்கினாலும் பாதி டேங்க் பெட்ரோல் அங்கு போட்டுக் கொள்வார்கள்.

மேடையில் பாராட்டு

இந்த விமானத்தில் பாதி டேங்க் பெட்ரோல் இருந்தது. தலைகுப்புற திரும்பியபோது -‘சீட் பெல்ட்’ மாட்டி உட்கார்ந்திருந்த பயணிகள் மீது பெட்ரோல் பீறிட்டு அடித்து, விமானம் தரையை நெருங்கும் முன்பே தீ பிடித்து விட்டது.

தரையில் மோதிய சில விநாடிகளில் குபுகுபுவவென தீ எரிந்து அரையும், குறையுமாக மனித உடல்கள் ஒருபக்கம், தலைகள் ஒரு பக்கம் என சிதறி விட்டன.

அடுத்த பம்பாய் விமானத்தில் சென்னையிலிருந்து போன உறவினர்கள், உடலின் பாகங்களை வைத்து இது யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறினார்கள்.

ராணி சந்திரா பலியான செய்தியில் ஏ.சி. திருலோக்சந்தர் நிலைகுலைந்து 6 அடி தாண்டிய மனிதர் அப்படியே நாற்காலியில் சரிந்து விட்டார். உடன்பிறவா சகோதரராக -விஜயபுரி வீரன் -நானும் ஒருவன், காக்கும் கரங்கள், ராமு, அன்பே வா படங்களை அவர் டைரக்ட் செய்ய வாய்ப்பளித்த ஏவிஎம் அவர்கள் குமார் சரவணன் சார் ‘மாரல் சப்போர்ட்டாக’ நின்றார்.

கீழ்பாக்கத்திலுள்ள அவர் வீட்டுக்குப் போகிறேன். ‘சிவகுமார்! கைக்கு வந்தது வாய்க்கு எட்டலேங்கிற மாதிரி -5000 அடி படம் பார்த்து விநியோகஸ்தர்கள் எல்லா ஏரியாவையும் வாங்கிட்டாங்கப்பா. அசல் பத்ரகாளியாவே, ஆவேசமா, அகன்ற கண்களை விரிச்சு, தலை முடியை விரிச்சுப் போட்டு, அந்த கதாபாத்திரத்துக்கு உயிர் குடுத்திருந்தா அந்தப் பொண்ணு. எனக்கு தெரியாம வெளிநாட்டுக்குப் போய் இப்படி முடிவைத் தேடிட்டாளே!’ என்று அங்கலாய்த்தார்.

திருமுல்லைவாயல் கோயில்

மூன்று மாதத்தில் படத்தை முடித்து டிசம்பரில் வெளியிட முடிவு செய்து ஆகஸ்ட் 9-ந்தேதி பூஜை போட்டார். சேலம் மகரிஷியின் கதையை வாங்கி திரைக்கதையை அமைத்தவர் -ஆரூர் தாஸை வசனம் எழுத வைத்தார். இளையராஜா வளரும் காலகட்டம் அது. ‘கண்ணன் ஒரு கைக்குழந்தை’, ‘கேட்டேளே அங்கே பார்த்தேளா இங்கே’ என இரண்டு பாடல்களும் ஹிட். விஸ்நாத்ராவ் ஒளிப்பதிவு.

மேஜர் சுந்தரராஜன் கதாநாயகியின் அப்பா. இரண்டாவது மனைவியாக பவானி என்ற நடனம் அறிந்த நடிகை, தேங்காய் சீனிவாசன் நகைச்சுவைப் பகுதியை ஸ்வீகரித்துக் கொண்டார். சுகுமாரி எனது தாயராக நடித்தார்.

எப்போதுமே நிதானத்துக்குப் பெயர் போன ஏ.சி.டி. இது சொந்த படம். கடன்களிலிருந்து மீண்டிட எடுக்கும் படம் என்பதால், இந்தப் படத்தில் படு சுறு,சுறுப்புக்காட்டினார். சிக்கனமாக எடுத்து முடிக்கும் வண்ணம் பட்ஜெட் போட்டுக் கொண்டார்.

மனநலம் பாதிக்கப்பட்ட கதாநாயகி காயத்ரி, தன் நான்கு வயது குழந்தையை யாரும் தொடக்கூடாது என்று கூச்சல் போட்டு, அந்தக்குழந்தைக்கு குரூரமாக அவளே ஒப்பனை செய்து, நடு இரவில் குளிர்ந்த குழாய்த் தண்ணீரில் அவளே குளிப்பாட்டுவாள். குழந்தை நடுங்கி அழும். முதுகில் நாலு சாத்து சாத்துவாள்.

இன்னொரு நாள் மூன்று சக்கர சைக்கிளில் குழந்தையை அமர்த்தி கரகரவென்று சுத்தி விட்டு வேகமாகத்தள்ளி விட கைப்பிடிச்சுவரில் மோதி குழந்தை தெறித்து கிணற்றுக்குள் விழுந்து விட்டது.

இந்த மனோ நிலையிலும் தன் கணவன் வேறொருத்தியை மணந்து கொண்டது அவளுக்குப் புரிகிறது. வாயும் வயிறுமாக இருந்த 2-வது மனைவி மீது பாய்ந்து முகத்தில் கீறி, கழுத்தைப் பிடித்து இறுக்கப்போகும்போது கணவன் வந்து காப்பாற்றி, மாமனாருக்கு போன் செய்து இனிமேல் அவள் இந்த வீட்டுப்பக்கம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று எச்சரிப்பான்.

100 -வது படம் வாழ்த்து

முதல் மனைவியின் அன்பும், பாசமும், அரவணைப்பும் சுட்டுப் போட்டாலும் அடுத்த பெண்களுக்கு வராது என்று ஹீரோவுக்குத் தெரியும். அவள் பைத்தியமாகி -விவாகரத்து வாங்கி -சட்டரீதியாக அவளை பிரிய நேர்ந்தபோது விதியை நினைத்து கண்ணீர் விட்டான்.

மகன் வாழ்க்கை பாலைவனமாகி விடக்கூடாது என்று நினைத்த விதவைத்தாய் சுகுமாரி, எப்படியும் அவன் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி- அவன் இணங்க மறுத்தபோது பட்டினி கிடந்து சாகப்போவதாக மிரட்டுகிறாள்.

வேறு வழியின்றி திருமணம் செய்தால், வந்தவள், தன்னை இரண்டாம் தாரமாக ஏமாற்றி தாலி கட்டி விட்டனர் என்று தினமும் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறாள்.

இப்படி நரகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும்போது ஒரு நாள் வழியில் சாதுவாக ஒரு பெண் நடந்து போவதை உற்று கவனிக்கிறான். காயத்ரி!. அதே காயத்ரி. தெளிந்த மனநிலையில் முன்னாள் மனைவி. ஸ்கூட்டரை நிறுத்தி, அவளை அழைத்தான். வந்தாள். கோயில் படிக்கட்டுகளில் இருவரும் அமர்ந்தனர்.

அவளது கைவிரல்களில் இருந்த வளையல்களை சுண்டிக் கொண்டே, ‘தோலுக்கு ஆசைப்பட்டு, நான் அவளைக் கட்டிக்கலை. எங்கம்மா தொல்லை தாங்க முடியாமல்தான் கட்டிக்கிட்டேன். உன் மேல் நான் வச்சிருக்கற அன்பு பவித்ரமானது. பரிசுத்தமானது. நீ புரிஞ்சுக்கணும் என்று அவளைச் சமாதானப்படுத்த என்னன்னவோ பேசினான். அவள் மெளனமாக அனைத்தையும் கேட்டுக் கொண்டாள்.

விடைபெறும்போது, ‘வா உன் வீட்டில் இறக்கி விட்டுப் போகிறேன்’ என்பான். ‘இல்லை. நீங்க உங்க வழியில் போங்க. நான் என் வழியில் போகிறேன்!’ என்று கடைசியாக நாலு வார்த்தை பேசிவிட்டு இவனுக்கு எதிர்திசையில் நடப்பாள். காமிராவுக்கு வலதுபுறம் ஒருவர் இடதுபுறம் ஒருவராகச் சென்று மறைவார்கள். அந்தக்கணம்! ஏழ் பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தம் இந்த சொந்தமம்மா, வாழ்விருக்கும் நாள் வரைக்கும் தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா!’ வரிகள் பின்னணியில் ஒலிக்கும். இதுதான் ராணிச்சந்திரா என்னோடு நடித்த கடைசி ‘ஷாட்’.

குழந்தையாக

‘அமெரிக்கா போறேன். உங்களுக்கு ஏதாவது பெயிண்டிங் மெட்டீரியல் வாங்கிட்டு வரட்டுமா சார்!’ என்றாள். ‘எதுவும் வேண்டாம். நீ நல்லபடியா நிகழ்ச்சிகளை முடிச்சிட்டு வா!’ என்றேன். போனவள் திரும்பி வர முடியவில்லை.

ராணிச் சந்திரா சம்பந்தப்பட்ட சில ஷாட்-கள், பாடல் காட்சியில் இணைக்க, படமாக்க வேண்டும். கிளைமாக்ஸ் காட்சியில் முழுசாக அவர், வில்லனை, கோயிலின் துர்க்கை சிலையிலிருந்து சூலத்தை எடுத்துக் குத்திக் கொல்ல வேண்டும். இவை மட்டுமே படமாக்க வேண்டியிருந்தது.

ராணிச்சந்திரா போன்ற தோற்றத்தில் அதே உயரம், அதே முகச்சாயல் உள்ளவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று ஒரு ஓவியன் கண்ணோட்டத்தில் இரவெல்லாம் யோசித்தேன். அதிகாலை ஒரு பொறி தட்டியது.

‘பட்டிக்காட்டு ராஜா’ பாடத்தில் ஒரு கிளப் டான்ஸ் ஆடிய பெண் பொருத்தமாக இருப்பாள் என்று தோன்றியது.

அந்தக் கம்பெனிக்கு போன் செய்து விசாரித்து புஷ்பா என்ற டான்சர் விலாசத்தை வாங்கினேன்.

அதிகாலைக் குறும்பு

ஏ.சி.டி வீட்டிலிருந்து கார் அனுப்பி, அந்தப் பெண்ணை வரவழைத்துப் பார்த்தோம். ஒளிப்பதிவாளர் விஸ்வநாத்ராயும் வந்திருந்தார்.

ராணி சந்திரா -புஷ்பா ஒரே உயரம். அவளுக்கு சுருட்டை முடி. இந்த பெண்ணுக்கும் அதே முடி. ராணி சந்திராவுக்கு பட்டையான அகன்ற விழிகள். புஷ்பாவுக்கு முட்டை போன்ற பெரிய கண்கள். மூக்கில் உதடுகளில் சிறு, சிறு வித்யாசம். விஸ்வநாத்ராய், ‘இரவுக்காட்சி’ என்பதால் லைட்டிங்கில் அந்தக்குறை தெரியாமல் படமாக்கி விடலாம்’ என்றார்.

திட்டமிட்டபடி படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்தது. இன்னொரு சிக்கல். பாதிப்படத்துக்கு மேல் ராணிச்சந்திரா சொந்தக்குரலில் பேசியுள்ளார். கிளைமாக்ஸில் அவர்தான் அதிக வசனம் பேசியாக வேண்டும். என்ன செய்யலாம் என்று யோசித்து திருமதி செளந்திரம் என்ற அம்மையாரை வைத்து மொத்தப்படத்துக்கும் ராணி சந்திராவுக்கு ‘டப்பிங்’ செய்து விட்டோம்.

படம் 10.12.1976 வெளியாகி சக்கைப் போடு போட்டது. ஒளிப்பதிவாளரின் திறமையால் ‘லாங்க்-ஷாட்’டில் வேறு பெண்ணைப் பயன்படுத்தியது, ரசிகர்களுக்குத் தெரியாது.

அம்மா முன்பு கேலி

கோயிலுக்குள் மூங்கில் தட்டியின் சதுரமான இடைவெளிகளில் வெளிப்படும் ஒளியில், என் மடியில் கதாநாயகி படுத்தவாறு வசனம் பேசுவது படமாக்கப்பட்டது. யாராலும் அதையும் ஊகிக்க முடியவில்லை.

பட்டிதொட்டியெங்கும் படம் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது. ‘தமிழ் படத்தில் நடித்துப் பேர் வாங்கணும் சார். சென்னையில் சொந்தமா வீடு வாங்கி, எங்கம்மா, தங்கச்சிங்களோட சந்தோஷமா வாழ ஆசை சார்..!’ என்று சொன்ன ராணிச்சந்திராவின் கனவு, கனவாகவே போய் விட்டது.

--

அனுபவிப்போம்..

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்