டி.ஆர்.மகாலிங்கத்தின் நினைவு நாள்: ஏப்ரல் 21, 1978.
பாட்டு... தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத வசந்தம் - ராஜவீதிகளில் வலம்வரும் தேவதைகளின் தெவிட்டாத ஊர்வலம் - உடற்கூட்டுக்குள் சிறகடிக்கும் உயிர்ப் பறவை - சிட்டுக்குருவியைப் போல துன்பங்களிலிருந்து விட்டு விடுதலையாகும் சுக அனுபவம்.
தமிழ் நாடக மேடைகளில், இடியாய் முழங்கி, தென்றலாய் தவழ்ந்து, ரசிக நெஞ்சங்களில் பாட்டு மழை பொழிந்த சங்கீத சாம்ராட் எஸ்.ஜி. கிட்டப்பா. 'எல்லோரையும் போலவே என்னை எண்ணலாகுமோடி போடி' என்ற கிட்டப்பாவின் குரல் வளம், பொருள் வளம் என எல்லா வளமும் நிறைந்திருந்தது, அந்தப் பாட்டில்.
குரல் வளத்தில், குறைசொல்ல முடியாத சங்கதிகளில் கிட்டப்பாவை கிட்ட நெருங்க முடியாத பாடகர்கள் பலர் இருக்க, பின்னாளில் ஓரிருவர் மட்டும் அவரது பாணியைத் தெரிந்துகொண்டு, அவரைப் பின்பற்றத் தொடங்கினார்கள். அவர்களில் ஒருவர் செல்லப்பா. அதற்குப் பின்னால், ஒரேயொரு பெயரைத்தான் சொல்ல முடியும், அவர்தான் டி.ஆர். மகாலிங்கம்.
''காயாத கானகத்தே'' - என்ற 'ஸ்ரீவள்ளி' படப் பாடலில், கிட்டப்பாவின் சாரீரத்தை, தனது சரீரத்தில் சம விகிதத்தில் கலந்து, ஓங்கி ஒலித்த இந்தக் குரலை மறக்கத்தான் முடியுமா?.
ஒலிநயம் உள்ள சொற்கோர்வைகளின் தொகுப்புதான் பாட்டு எனப்படுகிறது. பத்துப்பாட்டு, எட்டுத்தொகையில் உள்ள நீண்ட செய்யுள்களை, பாடல் என வழங்கும் மரபு தொன்றுதொட்டு இருந்து வருகிறது. இறைவனையே இசையவைத்தது இசை. இது தலைகனம் அல்ல. தமிழ் கனம்!
வையத்தில் வாழ்வாங்கு புகழுடன் மிளிர்ந்து, சங்கம் வளர்த்த மதுரையில், வைகைக் கரையின் வளமான பூமிதான் சோழவந்தான். வெற்றிடம் இல்லாமல், வெற்றிலைக் கொடிகால்களும், பாரதி பாடிய பத்து பதினைந்து தென்னை மரம் பக்கத்தில் இருப்பது போல் தென்னஞ்சோலைகளும் நிறைந்த பூமி. நிலச்சுவான்தார் ராமகிருஷ்ணனின் மூன்றாவது மனைவிக்கு முத்தாய் உதித்தவர்தான் மகாலிங்கம். வேதபாட சாலைக்கு அனுப்பப்பட்ட மகாலிங்கத்துக்கு, பாடம் பதியவே இல்லை. மனசு முழுக்க பாட்டுதான் பரவிக்கிடந்தது. திண்ணை பள்ளிக்கூடத்தில் 4-ம் வகுப்பு வரை ஒருவழியாய் நகர்ந்தபின், செல்லூர் சேஷ அய்யங்கார் கோஷ்டியுடன் பாட்டோடு இணைந்த மகாலிங்கம், பஜனை மடங்களிலும், கோயில்களிலும் தன் உரத்த குரலால் பாடி, உள்ளூர்வாசிகளை ஆனந்தம் அடையச் செய்தார்.
12 வயதில், ஒரு நாடகத்தில் பாடி நடித்தபோது, மகாலிங்கத்தின் பாட்டில் மனம் லயித்த, அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சத்யமூர்த்தி, மகாலிங்கத்திற்கு தங்க மோதிரம் பரிசளித்தார். மோதிரக் கையில் குட்டுப்பட்டதாலோ என்னவோ, சினிமா மோகத்துடன் அலைந்துகொண்டிருந்த டி.ஆர்.மகாலிங்கத்திற்கு, ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரின் 'நந்தகுமார்' படத்தில் கிருஷ்ணர் வேடம் கிடைத்தது. 1938-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில், 'யுக தர்ம முறையே' என்ற பாடலைப் பாடி, அறிமுகம் ஆன மகாலிங்கத்திற்கு, 'நந்தகுமார்' நல்ல அறிமுகமாக இருந்தது.
'நந்தகுமார்' தந்த அறிமுகத்தால், 'பக்த பிரகலாதா', 'சதிமுரளி', 'பரசுராமர்', 'பூலோக ரம்பை' எனத் தொடர்ச்சியாக படங்கள். ஆனால், சொல்லிக் கொள்ளும்படியாக வேடங்கள் கிடைக்கவில்லை. 1945-ம் ஆண்டு டி.ஆர். மகாலிங்கத்திற்கு திருப்புமுனையாய் அமைந்தது. ஏ.வி. மெய்யப்பச் செட்டியார், 'ஸ்ரீவள்ளி' என்ற ஜனரஞ்சகமான படத்தை எடுத்தார். நாயகி குமாரி ருக்மணி. குரல் வளத்துடன் நல்ல ஒருவரை கதாநாயகனாகத் தேடினார் மெய்யப்பச் செட்டியார். கிட்டப்பா போல் பாடி நடிக்கும் பாடகர் ஒருவரைத் தேடினார். நந்தகுமாரில் நடித்த பிறகு, பிரிந்து சென்றுவிட்ட மகாலிங்கத்தை நாடினார்.
கிட்டப்பாவின் உச்சஸ்தாயியும், பிருகாவும், அசைவுகளும், மகாலிங்கத்தின் குரலில் வெட்டிவிடமுடியாமல் ஒட்டியே இருந்தது. 1945-ல் வெளியான 'ஸ்ரீவள்ளி' அமோக வெற்றியடைந்து 55 வாரங்களுக்கு மேல் ஓடியது.
'ஸ்ரீவள்ளி'யைத் தொடர்ந்து, டி.ஆர்.மகாலிங்கத்தின் கலைக்காட்டில் கனமழை. தமிழ்த் திரையுலகில் வெற்றிக் கதாநாயகன் ஆனார். 23 வயதில், ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகரானார்.
'ஆதித்தன் கனவு' என்ற திரைப்படப் படப்பிடிப்பின்போது, ஆதித்தனாக நடிக்கும் மகாலிங்கத்தின் மீது, கல் வீச வேண்டிய காட்சி. இதற்காக, பல துணை நடிகர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அந்தக் காட்சியில், மகாலிங்கத்தை ஆதர்ஷ நாயகனாக நினைத்து, பாட்டுகளைப் பயின்றுவந்த ஒரு துணை நடிகரும் இருந்தார். தனது கனவு நாயகன் மீது கல் வீசக் கூடாது என நினைத்து, காட்சியின்போது, அவர் கல் வீசவில்லை. இயக்குநர் டி.ஆர்.சுந்தரத்தின் கோபத்திற்கு ஆளானார் அந்தத் துணை நடிகர். அந்த அளவுக்கு மகாலிங்கத்தின் குரலுக்கு மயங்கிப்போன அந்தத் துணை நடிகர் தான், பின்னாளில் பிரபல பின்னணிப் பாடகரானார். அவர்தான் சீர்காழி கோவிந்தராஜன்.
1948-ல், டி.ஆர். மகாலிங்கம் நடித்த மற்றொரு வெற்றிப் படம் 'ஞான சௌந்தரி'. "அருள்தாரும் தேவமாதாவே" என்ற கம்பதாசனின் கற்பனையில் உருவாகி ஜிக்கியின் பக்தி ரசம் ததும்பும் அருமையான பாடல், இந்தப் படத்தில்தான் இடம் பெற்றிருந்தது. இந்தப் பாடலுக்கு எஸ்.வி.வெங்கட்ராமன் இசையமைத்தார். 1950-ம் ஆண்டு சென்னை ராயப்பேட்டையில் தனக்கென புதிய நிறுவனத்தை நிர்மாணித்துக் கொண்ட டி.ஆர்.மகாலிங்கம், ஸ்ரீசுகுமார் புரொடக்ஷன்ஸ் என்று அதற்குப் பெயரிட்டார். அதே ஆண்டில் 'மச்சரேகை' என்ற படத்தைத் தயாரித்து நடித்தார் மகாலிங்கம்.
சொந்தப் படங்களான 'சின்னதுரை', 'விளையாட்டு பொம்மை' போன்றவற்றில் சகானா ராகத்தில் இடம்பெற்ற நிலவே நீதான் மற்றும் தீர்த்தக்கரையினிலே போன்ற பாடல்கள் இன்றளவும் டி.ஆர்.மகாலிங்கத்தின் பெருமை பேசுகின்றன.
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவற்றையும் இழந்து மஞ்சள் கடுதாசி கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். வறுமையால் வெல்லப்பட்டார். ஆழ்கடலில் முத்திருக்க, அலைகளால் கரையில் கொண்டு சேர்க்கப்படும் சாதாரண சிப்பியாக ஒதுங்கினார் மகாலிங்கம். எல்லாவற்றையும் இழந்தது மகாலிங்கம் என்ற தயாரிப்பாளர்தான்.
இசைக்கலைஞன் அல்லவே. கீழே விழுந்த மகாலிங்கத்தைத் தூக்கி நிறுத்தினார் கவியரசு கண்ணதாசன். கண்ணதாசன் தான் சொந்தமாகத் தயாரித்த முதல் படமான 'மாலையிட்ட மங்கை'யில் துணிந்து மகாலிங்கத்தை நாயகனாக ஒப்பந்தம் செய்தார். 'செந்தமிழ் தேன்மொழியாள்' இன்றுவரை செந்தமிழைப் போல ரசிகர்களின் நெஞ்சில் செழிப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறது.
உச்சஸ்தாயிலேயே பாடி பழக்கப்பட்ட டி.ஆர்.மகாலிங்கத்தை மென்மையான குரலில் பாடவைக்க முடியுமா? உயரமாய் பறக்கும் பருந்தை செல்லமாக குழையும் சிட்டுக்குருவியாக்க முடியுமா? ஆனால், மென்மையான பாடலைப் பாடவைத்து, தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக்கிக் காட்டினார்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி. மாலையிட்ட மங்கையில் வரும் 'நானன்றி யார் வருவார்?' பாடல் மென்மையின் மேன்மையைச் சொல்லும்.
சந்தத்திலிருந்து பிசகாமல் கவிமணம் வீசும் கண்ணதாசனின் பாடல் வரிகள், பழைமையின் பக்குவத்தை மீறாத விஸ்வநாதன் ராமமூர்த்தியின் மெட்டுகள், உச்சஸ்தாயில் ஊர்வலம் போகும் மகாலிங்கத்தின் மயக்கம் தரும் குரல். இவைதான், மாலையிட்ட மங்கையை மங்களகரமாக மாற்றியது. 'எங்கள் திராவிடப் பொன்னாடே' பாடலும் மிகப் பிரபலம்.
'மாலையிட்ட மங்கை' மகாலிங்கத்தின் கழுத்தில் மாலையிட்ட மங்கையானது. படம் அமோக வெற்றி. சரிவில் இருந்து மீண்டார் மகாலிங்கம். 1959-ம் ஆண்டு வெளியான 'அமுதவல்லி', பாடல்களின் இன்பவல்லி. பட்டுக்கோட்டை என்ற தமிழர்களின் பாட்டுக்கோட்டையோடு விஸ்வநாதன் ராமமூர்த்தியின் ஜனரஞ்சகமான மெட்டில் ஆடை கட்டிக் கொண்டது நிலவு. அமுதவல்லியின் 'ஆடைகட்டி வந்த நிலவோ' பாடலை ரசிக்காதவர்கள் யார்?
1960-ம் ஆண்டு - எழுத்தாளர் எல்லார்வி எழுதிய ''கலீர் கலீர்'' நாவல்தான் 'ஆடவந்த தெய்வம்' ஆனது. முக்கோணக் காதல் கதை. டி.ஆர்.மகாலிங்கத்தோடு ஈ.வி.சரோஜா, அஞ்சலி தேவி ஆகியோர் நடித்திருந்தனர். சாஸ்திரிய சங்கீத காதலர்களுக்கு விருந்து படைத்துக் கொண்டிருந்த மகாலிங்கம், இந்தப் படத்தில் சாதாரண மக்களுக்கும், சங்கீத சாதம் பரிமாறியிருப்பார். அவர்களது குரலில் தன்னை உருமாற்றியிருப்பார். 'மழை கொட்டு கொட்டு கொட்டுது பாரு இங்கே' பாடல் எளிய மனிதர்களின் வாழ்க்கையையும், எல்லோரையும் சமமாகப் பார்க்கும் சோசலிசத்தையும் சொல்லியது.
'ரத்தினபுரி இளவரசி'யில், காதலுக்கு நாலு கண்கள், கவலையில்லாத மனிதனில், நான் தெய்வமா? இல்லை நீ தெய்வமா? என மகாலிங்கம் நடித்த படங்களில் ஓரிரு பாடல்கள் வெற்றியடைந்தாலும், படங்கள் தோல்வியைத் தழுவின.
1960-ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து, அந்தி வானத்து ஆதவன் போல டி.ஆர்.மகாலிங்கத்தின் கலையுலக வாழ்வு அஸ்தமனத்திற்கு அடிகோலத் தொடங்கியது. ஆனால், 1965-ல் A.P. நாகராஜனின் 'திருவிளையாடல்' டி.ஆர். மகாலிங்கத்தின் பெயரைத் திரும்பிய திசையெல்லாம் மீண்டும் ஒலிக்கச் செய்தது. இசைத்தமிழை அவர் இசைத்தது, இன்றுவரை அருஞ்சாதனையாக ரசிகர்கள் மனதில் அகலாமல் இருக்கிறது.
உணர்ச்சிப் பெருக்குடன் ஓங்கி ஒலித்த இசைத்தமிழ், தெய்வ பக்திப் பாடலாய் இன்றளவும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
1972-ம் ஆண்டு வெளிவந்த 'அகத்தியர்' திரைப்படத்தில், சீர்காழி கோவிந்தராஜனோடு சேர்ந்து நடித்தார் டி.ஆர். மகாலிங்கம். சீர்காழிக்குத்தான் இதில் பிரதான வேடம். இருப்பினும், பட டைட்டிலில், தனக்குப் பிறகு மகாலிங்கத்தின் பெயர் வருவதை விரும்பாத சீர்காழி, அவர் மீது கொண்ட மரியாதை காரணமாக, மகாலிங்கத்தின் பெயர்தான் முதலில் வர வேண்டும் என அடம்பிடிக்க, ஒரு வழியாக, இருவர் பெயரையும் ஒரே வரிசையில் போட்டு அந்தப் பிரச்சினைக்கு முடிவு காணப்பட்டது. சீர்காழி கோவிந்தராஜனின் சிறந்த பண்பாட்டை விளக்கும் செய்தி இது.
'ஆண்டவன் தரிசனமே', 'இசையாய் தமிழாய் இருப்பவனே', 'தஞ்சை பெரியகோயில் பல்லாண்டு வாழ்கவே' போன்ற பாடல்கள், குன்னக்குடி வைத்தியநாதனின் குறைவிலா இசையில், மகாலிங்கத்தின் மயங்க வைக்கும் குரலால் மெருகேற்றப்பட்டன.
உச்சஸ்தாயி குரலில் உரக்கப் பாடி வந்த டி.ஆர். மகாலிங்கத்தின் குரல், 60களுக்குப் பின்னால், கொஞ்சம் அடங்கிப் போனது. திரையுலகப் பயணத்தில் பல முட்டுச் சந்துகள் அவரை முடக்க வைத்தன. ஆனால், எத்தனை இடையூறுகள் வந்தாலும், யாருக்கும் பின்னணிக் குரல் கொடுப்பதில்லை என்ற வைராக்கியத்தை மகாலிங்கம் கடைசிவரை கடைப்பிடித்து வந்தார்.
1978-ம் ஆண்டு மலேசியாவில், நாடகங்கள் நடத்தும்போது அவரது உடல் பலவீனமானது. அதே ஆண்டு, தென்கரையில், சித்ரா பௌர்ணமிக்கு முதல் நாள், பிற்பகல் இரண்டரை மணியளவில் இதயத்தைப் பிடித்தபடி தன் அறையில் மகாலிங்கம் என்ற பாட்டுப்பறவை தன் பயணத்தை முடித்துக் கொண்டது.
ஐந்து கட்டையில், ஆயிரம் ஆயிரம் மேடையில் முழங்கிய இந்த தென்கரையின் பாட்டுப்பறவை, மரணம் என்னும் கூட்டுக்குள் அடைபட்டுக் கொண்டது.
சுமார் 45 ஆண்டுகள் கலை உலகைத் தனது கம்பீரக் குரலால் கட்டுப்படுத்தி வைத்திருந்த இந்த கானப்பறவை, 54-வது வயதில் மரணத்தைத் தழுவியது.
வாழ்க்கை எவ்வளவு நிஜமோ?. மரணம் அவ்வளவு நிஜம். ஆனால், மரணத்தைப் பொய்யாக்கி விடுகிறது, மகாலிங்கத்தின் ஒவ்வொரு பாடலும்.
லாரன்ஸ் விஜயன்,
மூத்த பத்திரிகையாளர்.
தொடர்புக்கு: vijayanlawrence64@gmail.com
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago