இந்தியாவின் வட எல்லையில் காவல் காக்கும் ராணுவ வீரர்களை சந்திக்காமல் - எந்த ராணுவ மேஜர், கர்னல் பரிச்சயமுமில்லாமல், சினிமாவில் நிரந்தர மேஜர் ஆக வாழ்ந்தவர் சுந்தரராஜன் அவர்கள்.
ஏஜிஎஸ் அலுவலகத்தில் வேலை பார்த்த கே. பாலச்சந்தர் ஆங்கிலத்தில் எழுதி, தானே மேஜராக நடித்த நாடகத்தை -தமிழில் ராகினி ரிக்ரியேஷன்ஸ் என்ற தனது குழுவுக்கு எழுதி மேஜர் சுந்தரராஜனை கண்பார்வை அற்ற ராணுவ அதிகாரியாக நடிக்க வைத்து -திரைப்படத்திலும் அதே வேஷத்தை செய்ய வாய்ப்பளித்து மேஜர் பட்டம் நிலைக்கச் செய்து விட்டார்.
கம்பீரமான தோற்றம், மெட்டாலிக் வாய்ஸ், அசாத்திய நினைவாற்றல் அவரது பலம்.
மெழுவர்த்தி, நீர்க்குமிழி, எதிர்நீச்சல், நவக்கிரகம் -நாடகங்களில் நாகேஷ் எப்போதும் ஹீரோ. அடுத்த கனமான வேடங்களில் மேஜர் எப்போதும் நடிப்பார். நாகேஷ் பற்றி இதே தொடரில் எழுதியபோது குறிப்பிட்டிருக்கிறேன்.
சாம்பு நடராஜய்யர் -NSN தியேட்டர்ஸ் என்று ஒரு நாடகக்குழு துவக்கினார். அதன் தலைமைப் பொறுப்பு, நாடகங்களை தேர்வு செய்வது, நடிகர்களுக்கு ஒத்திகை பார்ப்பது, அரங்கேற்றம் செய்வது, -இந்தியா முழுக்க பெரிய நகரங்களில் நாடகம் போடுவது என்று சுமார் 5000 முறை நிச்சயம் மேடையேறியிருப்பார் மேஜர் சுந்தரராஜன்.
ஞான ஒளி, ரோஜாப்பூ, தீர்ப்பு -எல்லாம் ஹிட். இந்த காலகட்டத்தில்தான் தான் சொந்த நாடகக்குழு ஆரம்பித்து தமிழ்நாடு முழுக்கு அலைந்து, 50 நாடகங்கள் போட இரண்டரை வருடங்கள் போராடிக் கொண்டிருந்தேன் நான்.
1965-ல் ஜூலை 30-ந்தேதி ஜெமினி ஸ்டுடியோஸ் தயாரித்த மோட்டார் சுந்தரம் பிள்ளையில் நானும், மேஜரும் முதன்முதலில் நடித்தோம்.
ரொம்பவும் எளிமையான மனிதர், பந்தா என்றால் என்னவென்றே தெரியாதவர். எல்லோருடனும் தோள் மேல் கை போட்டுப் பேசும் இனிய சுபாவம் உள்ளவர்.
என்னை ‘குழந்தை’ என்றுதான் கடைசி வரை அழைத்தார். 100-வது பட விழாவில் எம்ஜிஆர் முன்பு பேசும் போதும், குழந்தை நாடகக்குழுவில் நடித்தது எங்களுக்கு பெருமை என்றே பேசினார்.
அவர்தான், ‘குழந்தை, நீ வைரமாக இருந்தாலும் பட்டை தீட்ட ஓர் ஆள் வேண்டும். எங்க குழுவில் வந்து சேர்ந்து கொள்!’ என்றார்.
1971- ஆகஸ்ட் 23-ந்தேதி என்எஸ்என் தியேட்டர்ஸ் பூஜை. செப்டம்பர் 7-ந்தேதி ‘அச்சாணி’ என்ற நாடகத்தில் நடிக்க வசனப்பிரதியை முதன் முதல் வாங்கி வந்தேன். அச்சாணி, சொந்தம், டைகர் தாத்தாச்சாரி, ஜஸ்டிஸ், அப்பாவி, டெல்லி மாமியார், அவன் பார்த்துப்பான் என்று வரிசையாக நாடகங்கள்...
1960-1980 திரையுலகம், நாடக உலகத்தின் பொற்காலம். சென்னையில் சுமார் 125 சபாக்கள் இருந்தன. இயல், இசை, நாடகங்களை மேடை ஏற்ற அப்படி போட்டு போட்டு அழைப்பார்கள்.
MFAC என்பது மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்- ராஜகோபால் செயலாளர். அங்கு நாடகத்தை இன்று அரங்கேற்றினால் மறுநாள் 100 சபாக்களும் தேதி கேட்டு போன் செய்வார்கள்.
பிரண்ட்ஸ் கல்சுரல், கீதாலயா போன்ற சபாக்களில் 2000-க்கும் மேல் உறுப்பினர்கள் இருந்ததால் நாடகம் 3.30-க்கு ஒன்று 6.30-க்கு ஒன்று என இரண்டு நாடகங்கள் சனி, ஞாயிறு தேதிகளில் போடுவோம்.
பம்பாய் ஷண்முகாநந்தா ஹால், செம்பூர் பைன் ஆர்ட்ஸ் பல முறை சென்று நாடகம் போடுவோம். டெல்லியில் DTEA- டெல்லி தமிழ் எஜிகேஷனல் அசோசியேஷன் -தமிழ்நாட்டிலிருந்து டெல்லியில் வேலை பார்க்கும் தமிழர்களின் குழந்தைகள், மைதானத்தில் கூடாரம் போட்டு அதனுள்ளே அமர்ந்து படித்தார்கள். அந்த அமைப்பு பள்ளிக்கட்டிடம் கட்ட எங்கள் நாடகத்தை நடத்தி நிதி வசூல் செய்தார்கள். ஹைதராபாத், பெங்களூர், திருவநந்தபுரம், கொச்சி மற்றும் தமிழ்நாட்டில் நாங்கள் மேடை ஏறாத பெரிய ஊர்களே இல்லை.
நாடகத்தின் தலைவர் ஹீரோ மேஜர்தான். இருந்தாலும் 1973-ல் திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தும் 5 ஆண்டுகள் NSN தியேட்டர்ஸில் செகண்ட் ஹீரோவாக நடித்தேன்.
மேடையில் மேஜருக்கு பாராட்டு என்றால் என்னைத் தேடுவார். நான் பின்னால் போய் ஒளிந்து கொள்வேன். விடாப்பிடியாக என்னையும் இழுத்து வந்து, சபா தரும் மரியாதையை ஏற்கச் செய்வார்.
அப்பாவி என்ற நாடகத்தில் நகைச்சுவை கலந்த அப்பாவி ஹீரோ வேடத்தில் நான் நடிக்க வேண்டும் என்றார். நாடகக்குழுவில் நாகேஷ் காலத்து நிரந்தர நகைச்சுவை நடிகர் ஒருவர் இருந்தார். தனக்குத் தராமல் சிவகுமாருக்கு அந்த வேஷத்தை கொடுத்ததில் அவருக்கு வருத்தம். நாளை நாடக அரங்கேற்றம். முந்தைய நாள் கிரேண்ட் ரிகர்ஷல். அதற்கு அந்த நடிகர் வரவில்லை.
‘வர்றானா இல்லையா கேள். அவன் வரவில்லை என்றால் வேறு ஆளைப்போட்டு, 2 நாளில் அரங்கேற்றம் செய்வேன்!’ என்று மிரட்டியதும் வந்து விட்டார்.
தொடர்ந்து படப்பிடிப்பு இருந்ததால் 15 நாள் நாடக ஒத்திகைக்கு மாலை நேரங்களில் என்னால் போக முடியவில்லை. இருப்பினும் எந்த குறையுமில்லாமல் நடிக்க - மொத்த நாடகம் -250 பக்கத்தையும் கைப்பட நானே எழுதி அப்படியே மொத்தத்தையும் மனப்பாடம் செய்து அரங்கேற்றத்திற்கு செல்வேன்.
ஒரு பிழை இருக்காது. அடுத்தவன் எந்த ‘டைலாக்’ கோட்டை விட்டான் என்று அரங்கேற்றம் முடிந்ததும் நான் சொன்னால் ஆச்சர்யப்படுவார்கள். காரணம் முழு நாடகமும் எனக்குத் தெரியும்.
NSN தியேட்டர்ஸின் 1000-வது நாடகமாக அப்பாவி நடைபெற்றது. சிவாஜி தலைமை தாங்கி, ‘டேய் சிவா, இவ்வளவு டேலண்ட்-ஐ இத்தனை நாள் எங்கடா ஒளிச்சு வச்சிருந்தே?’ என்று கேட்டார். சிவகுமார் பண்ணின அப்பாவி கேரக்டரை சினிமாவுல நான் பண்ணப்போறேன் - என்று அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் சிவாஜி.
வியட்நாம் வீடு சுந்தரம், ராஜசிவா, தூயவன், காரைக்குடி நாராயணன், கோமல் சுவாமிநாதன் என்று பல நாடகாசிரியர்களை மேடையி்ல அறிமுகப்படுத்தியவர் மேஜர்.
வெளியூர்களில் நாடகம் என்றால் கொண்டாட்டம்தான். ரயிலில் ஒரு கம்ப்பார்ட்மெண்ட்டை புக் செய்து அரிசி பருப்பு கய்கறி வகையறாக்களை வாங்கிப் போட்டு, காலையில் பொங்கல்-வடை, பகலில் சாம்பார் சாதம்-தயிர் சாதம், இரவு மசால் தோசை-இட்லி எல்லாம் நடிகர்களே சமைப்பார்கள் மேஜர் பிரமாதமாக சமைப்பார். கல்யாணமாகி வந்த புதிதில் மனைவிக்கு சமைக்க கற்றுக் கொடுத்தவர். வீரராகவன் இன்னொரு மாஸ்டர் ‘குக்’. மற்றவர்கள் சமையல் செய்ய காய்கறி நறுக்கித்தருவது போன்ற வேலை செய்வார்கள்.
நான் பரிமாறுவது, சாப்பிட்ட பின் இலை எடுப்பது போன்ற எளிதான வேலைகளைச் செய்வேன்.
திரையுலகில் எம்.ஆர்.ராதா -எஸ்.வி.ரங்காராவ், டி.எஸ். பாலையா, எஸ்.வி. சுப்பையா காலம் முடியும் தருவாயில் மேஜர் நுழைந்து அத்தனை பேர் போட வேண்டிய வேடங்களையும் இவரே போட்டு நடிப்பார். ஒரு ஆண்டிற்கு 40 படங்கள் நடித்துள்ளார். ரெடிமேடாக, வேலைக்காரன் மீசை, ஜமீன்தார் மீசை, பேராசிரியர் மீசை, விவசாயி மீசை என்று ‘மேக்-அப்’ பெட்டிக்குள் தயாராக வைத்திருப்பார்.
சிவாஜி-எம்.ஜி.ஆர்-ஜெமினி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ராஜன், ஸ்ரீகாந்த், சிவகுமார், -எல்லா ஹீரோக்கள் படத்திலும் ஹீரோயினுக்கு அல்லது ஹீரோவுக்கு அப்பா இவரே.
சிவாஜி-நாகேஷ்-மேஜர் மூன்று பேரும் போட்டோகிராபிக் மெமரி உள்ளவர்கள். 10 பக்க வசனமானாலும் 2 தடவை படிக்கச் சொல்லி உடனே மனப்பாடம் செய்து விடுவார்கள்.
ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சரளமாகப் பேசக்கூடியவர். சில கல்லூரிகளில் நாடகம் போடும்போது மாணவர்கள் காலரியிலிருந்து 1000 பேர் கூச்சல் போட்டு கலாட்டா செய்வார்கள்.
CAN‘T YOU KEEP QUIET -என்று இடி இறங்கினாற்போல் மைக்கில் குரல் கொடுப்பார். அவ்வளவுதான். கப்சிப். நாடகம் முடியும் வரை மூச்சே விட மாட்டார்கள்.
பொட்டல் வெளியாகக்கிடந்த நடிகர் சங்க இடத்தில் சுவாமி சங்கரதாஸ் கலை அரங்கம் உருவாக சிவாஜி தலைவராகவும், இவர் செயலாளராகவும் இருந்து இரவு பகல் வீட்டுக்குப் போகாமல் நடிகர் சங்க வளாகத்திலேயே படுத்திருந்து வேலை செய்தார்.
ஆந்திர ஹீரோக்கள் என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ், கன்னட ஹீரோ ராஜ்குமார், கேரள ஹீரோ பிரேம் நசீர் என 4 மாநில ஹீரோக்களையும் சேர்த்து எம்.ஏ.எம். ராமசாமி, சின்னப்பா தேவர் -போன்ற பெரும்புள்ளிகளையும் இணைத்து ஒரு அறக்கட்டளை நிறுவி -தமிழ்நாடு முழுக்க முக்கிய நகரங்களில் கலை நிகழ்ச்சி நடத்தி வசூல் செய்து நாடக அரங்கம், மினிதியேட்டர் இரண்டையும் ஒரே கட்டிடத்தில் உருவாக்கினார்.
அண்ணன் பாலு, அடுத்தது மேஜர், மூன்றாவது ரங்கராஜன் (ராணுவத்தில் இருந்தவர்) நாலாவது வரதன், ஐந்தாவது ராகவன். கடைசி சம்பத் -அத்தனை சகோதரர்களையும் பாசச்சங்கிலியால் பிணைத்து வைத்து, இவரைக் கேட்காமல் அந்த குடும்பங்களில் எந்த நிகழ்ச்சியும் நடக்காது- அப்படி ஆலமரமாக அந்தக்குடும்பத்தில் வாழ்ந்தவர். அதிகம் புகைப்பிடிப்பார்.
வீரராகவன் மேஜரின் உறவினர். அவர் இறந்து சுடுகாட்டுக்கு உடலை எடுத்துப் போகும்போது மேஜர் வாயில் சிகரெட் எரிந்து கொண்டிருந்தது. ‘இனியாச்சும் இதை விட்டுத்தொலைங்க மேஜர்!’ என்றேன். ‘எங்கே விடறது. செத்ததுக்கப்புறம் சுடுகாட்டுக்கு எடுத்திட்டுப் போகும்போது ஒரு சிகரெட்டை பத்த வச்சு, வாயில் சொருகி எடுத்துட்டுப் போங்க!’ என்று சொல்கிறார் என்றால் அந்த தரித்திரம் பிடித்த புகைப்பழக்கம் எவ்வளவு ஆழத்துக்கு அவருள் இறங்கி இருந்திருக்க வேண்டும்.
உடம்பில் எல்லா உபாதையும் சேர்ந்து விட்டது. கல்லீரல் கெட்டு விட்டது. மஞ்சள் காமாலை, சர்க்கரை வியாதி, இருதய பலவீனம், ரத்தக் கொதிப்பு, சிறுநீரக பாதிப்பு என்று மல்ட்டி ஆர்கன் ஃபெயிலியர் நிலை.
கடைசி தம்பி சம்பத் மகன் ஸ்ரீராம் மேஜரின் செல்லம். ஸ்ரீராம்- ரம்யா திருமணம். 2003- பிப்ரவரி 28-ந்தேதி உறுதி செய்யப்பட்டிருந்தது. மூன்று மாதத்திற்கு முன்பே அவர் உடல் நிலை நம்பிக்கை ஊட்டுவதாக இல்லை. இருப்பினும் என் செல்லம் ஸ்ரீ ராம் கல்யாணத்து வரைக்கும் நிச்சயம் உயிரோடு இருப்பேன் என்று சொல்லி வந்தார்.
இத்தனை உபாதையிலும், ‘இதுதாண்டா என்னோட கடைசி சமையல். எல்லோரும் வீட்டுக்கு வாங்க. சந்தோஷமா சாப்பிட்டு போலாம்!’ என்று நண்பர்கள் குடும்பத்தினர் சுமார் 20 பேரை அழைத்து விதவிதமாக சமைத்துப் போட்டார்.
2003 பிப்ரவரி 27 மாலை ராஜ முத்தையா ஹால் திருமண வரவேற்பு, களை இழந்து இருந்தது. எந்த நேரமும் மேஜர் புறப்பட்டு விடலாம். திருமணம் நின்றுவிடுமோ? விடிந்தது. மணமகன் தாலி கட்டி விட்டான். அட்சதை போட்டு விட்டு நானும் துணைவியும் மேஜர் வீடு சென்றோம். தாங்க முடியாத உபாதையில் புரண்டவாறு அனத்திக் கொண்டிருந்தார். எனக்கு நெஞ்சு வலித்தது. ‘மேஜர், மேஜர்‘ என்று கன்னத்தைப் பிடித்து, ‘குழந்தை வந்திருக்கேன். கண்ணைத் திறந்து பாருங்க!’ என்றேன். எதையும் கேட்கிற நிலையில் இல்லை. உடலுக்கும் உயிருக்கும் இடையே யுத்தம் நடந்து கொண்டிருந்தது.
திருமண விழா முடிந்து ஸ்ரீராமும், ரம்யாவும் வீடு வந்து, ‘பெரியப்பா’ என்று அழைத்தான் செல்லம். ‘ம்ம்ம்ம்..!’ என்று ஓசையைக் கட்டுப்படுத்தி இரண்டு கைகளையும் மேலே தூக்கி ஆசீர்வதித்ததும் அப்படியே கண்கள் மேலே சொருகி விட்டது.
---
அனுபவிப்போம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago