பெய்ய வேண்டியதிலும், பொய்த்துப் போவதிலும் ஒருபோதும் இயற்கைக்கு அளவீடுகள் இருப்பதில்லை. வீடுகளுக்குள்ளேயே தனித்தனி தீவுகளாக வசிக்கும் மனிதர்களை உள்ளடக்கிய நகரங்கள் பெருமழை நாட்களில் தீவுகளாக மிதப்பது வருத்தமாகத்தான் இருக்கின்றது. ஆனால், அது முழுக்க முழுக்க இயற்கையின் குற்றமல்ல.
குளங்கள், ஏரிகள் மூடப்பட்டு வீட்டுமனைகளும், பேருந்து நிலையங்களும், வணிக வளாகங்களும் உருவாக்கப்பட்டபோது, எல்லாம் அருகில் இருப்பதும் ஒரு வகையில் வசதிதான் என மவுனமாய் இன்னும் சரியாகச் சொல்லவேண்டுமெனில் கள்ளமவுனமாய்க் கடந்துபோன, நமக்கான பாடம் அல்லது எச்சரிக்கை இந்த பெருமழையில் ஏற்பட்டிருக்கும் சங்கடம் என்பதை காலம் தாழ்ந்தேனும் புரிந்துகொள்ளத்தான் வேண்டும்.
வெள்ளப் பாதிப்புகள் குறித்து பார்வையிட கொடிகள் புடைசூழச் செல்பவர்களை, நிவாரணம் வழங்குமிடங்களில் பெரிய அளவில் நிறுவப்படும் பதாகைகளை, சகித்துக் கொண்டு மறந்துபோவது போலவே மழை நீர் சேகரிப்பையும், மிக எளிதாக மறந்துபோனோம்.
வாழ்நாள் கனவாக இடம் வாங்கி வீட்டைக் கட்டும் எவரும், அதற்கு முன் அந்த இடம் ஏரியாக இருந்ததா? குளமாக இருந்ததா? என்பது குறித்து கிஞ்சித்தும் யோசிக்கவோ, கேள்வி கேட்கவோ பொறுமையில்லை.
ஏரிகளைச் சமாதியாக்கி அதன் மேல் எழும்பி நிற்கும் சாம்ராஜ்யங்களின் காலடி முழுக்க இதுதான் என் இடமென மழை நீர் நாய்க்குட்டிபோல் காலைச் சுற்றியபடி சூழ்ந்துகொண்டு அடம் பிடிக்கின்றது. சாலையில் மிதந்து செல்லும் விலை உயர்ந்த கார்களுக்கு இப்போது அங்கு வேலையில்லை. அழுக்கடைந்த படகுகள்தான் அசைந்தபடி வந்திருக்கின்றன அனைவரையும் மீட்க.
ஒரு சுனாமியில் பெரும் பாதிப்படைந்த நாம், இன்னொரு சுனாமி வந்தால் எதிர்கொள்ளவும் தப்பிக்கவும் முன்தயாரிப்புகளோடு, யுக்திகளோடு இருக்கிறோமா என்பதற்கான நேர்மையான பதில் தேவை.
முந்தைய ஆண்டுகளில் இதைவிட பாதிப்பேற்படுத்திய மழை வெள்ளத்தில் சிக்கிய நாம், இந்த ஆண்டு மழை வெள்ளத்தை எதிர்கொள்ளவும், தப்பிக்கவும் எவ்விதத்திலும் தயார் நிலையில் இருக்கவில்லை என்பதை வரவேற்பரையில் பிரியமாய் நிற்கும் வெள்ள நீரில் வெடவெடத்தபடி ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
சரியான நேரத்துக்கு திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை, கடை திறக்கும் நேரத்திற்கு முன்பாகாவே காத்திருந்த வாடிக்கையாளர்களை, தொப்பலாய் நனைந்தபடி முண்டியடித்து அரசு கொடுக்கும் விலையில்லாப் பொருட்களைப் பெற்று வந்தவர்களையும் இந்தப் பெருமழை தினங்களில் காணமுடிந்தது.
கிராமங்களையும்தான் மழை பதம் பார்த்துள்ளது. கிராமங்கள் மீண்ட வேகத்தில் நகரங்கள் மீள முடிவதில்லை. அதன் கைகள் கட்டப்பட்டுள்ளனவா அல்லது விரல்கள் இக்கட்டுகளுக்கு சிக்கிக் கொண்டிருக்கின்றனவா என்பது அவரவர்க்குத் தெரியும். பொதுவாக கூடுதல் வாடகைக்குப் போகும் தரை தளத்து வீடுகள், மழை வெள்ளத் தாக்குதலையொட்டி, இனி அதிகம் கவனம் பெறாமல் போவது மட்டும்தான் இந்த மழையிலிருந்து கற்றுக்கொண்ட பாடமாக இருந்தால் இன்னும் எத்தனை மழை வந்தாலும் நம்மைத் திருத்தமுடியாது என்றெல்லாம் அறிவுரை சொல்வது மட்டுமல்ல இப்போதைய நோக்கம்.
நகரத்தினர் பெரிதாக அறிந்திடாத பல்லாயிரம் கிராமங்களின் கதைகள் இங்குண்டு. உதாரணத்துக்கு அதில் ஒன்றை இங்கே பகிர்வது மட்டுமே இப்போதைய நோக்கம்…
கர்நாடக அரண்களைத் தாண்டி ஒகேனக்கல்லில் குதித்து வரும் காவிரி ஆறு சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணையில் தஞ்சம் அடைகிறது. அங்கிருந்து புதுவடிவமெடுத்து ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களை உரசிச் சென்றாலும், அம்மாவட்ட மக்களுக்கு காவிரியால் பெரிதாகப் பயனேதும் இல்லையென்றே சொல்லலாம். நீர்மின் திட்டங்கள் தவிர்த்து ஜேடர்பாளையம்வரை தடுப்புகள் கிடையாது. கால்வாய்கள் கிடையாது. ஜேடர்பாளையத் தடுப்பணையிலிருந்து வேலூர் மோகனூர் என நாமக்கல் மாவட்டத்தின் ஒரு பகுதிக்கு மட்டும் பாசனம் உண்டு. ஆனால் மேட்டூர் அணையிலிருந்து தனியாக அமைக்கப்பட்ட இடதுகரை, வலது கரை கால்வாய்கள்தான் சேலம், ஈரோடு மாவட்டங்களில் ஓரளவு நேரடியாகப் பலன் தருபவை. நீர் திறப்பில் தஞ்சைக்கு முதலிடம் கொடுத்துவிட்டு, அதன்பின்னரே இடது மற்றும் வலது கரை கால்வாய்களுக்கு என்பதுதான் விதி.
"ஒகேனக்கல்லில் வெள்ளம்" என மின்னும் மகிழ்ச்சியான செய்திகளைக் காணும்போதே, களைத்த முகத்துடன் யாரேனும் ஒருவர் "ம்ம்ம்ம்... ஒகேனக்கல்ல குளிக்கலாம்னு வந்தம், தண்ணி நெறய போவுதுனு வுடமாட்டேங்றாங்க… ப்ச்… இப்ப என்ன பண்றதுனு தெரியல!?" என வருத்தம் தோய்ந்த முகத்தோடு காவிரியை சபிக்கும் மனநிலையோடு பேட்டி கொடுப்பார்.
"அருவியில் குளிக்கத் தடை, சுற்றுலாப் பயணிகள் அவதி" என்றும் செய்திகள் வரும். அப்படிப் பேட்டி கொடுப்பவர்களைப் பார்க்கும்போது அடிவயிற்றிலிருந்து அப்படியொரு கோவம் வரும். அவர்கள் குளிக்க முடியவில்லையே எனக் காவிரியைச் சபிக்கும் நேரத்தில் இங்கே எழுநூறு அடி ஆழ்துளைக்குழாய் கிணற்றிலிருந்து திணறித் திணறி மோட்டார் உவர் நீரை கொஞ்சமாய் உமிழ்ந்து கொண்டிருக்கும். அதில்தான் மாடு கன்று, மனிதர்கள், எஞ்சியிருக்கும் செடி கொடிகள், தப்பிப்பிழைத்திருக்கும் தென்னை மரங்கள் உயிர் பிழைத்தாக வேண்டும்.
எப்படியும் மைசூர் அணை நிரம்பிவிடும், கபினி நிரம்பிவிடும், நிலத்தை வெட்டியாக போட்டு வைத்திருக்க முடியாது என ஏதாவது பயிரிட நினைக்கும் ஒவ்வொரு முறையும் காவிரியின் மடியை இறுத்திப் பிடித்துக்கொண்டு கர்நாடகா வஞ்சிக்க, விவசாயிகளின் வயிறு கபகபவென எரிந்து கொண்டிருக்கும். சில நேரங்களில் "விதைத்து தொலையாவிட்டாலும் போகுது, இருக்கிற பண்டம்பாடிகளுக்கு குடிக்கத் தண்ணி வேணுமே!" என்பதே வேண்டுதலாய் இருக்கும்.
ஆடியில் முறையாய் ஆடிப்பாடி வந்தடைய வேண்டிய தண்ணீர் தரையெட்டாமல் மேகத்திற்குள்ளேயே பதுங்கிக் கிடந்தது. ஆடிப் பட்டம் தேடி விதை என்பதற்கு இந்த ஆண்டும் வாய்ப்பில்லாமல் போனது. மே, ஜூன் பருவ மழை ஏமாற்றிப்போக, காவிரி மேல் இருந்த நம்பிக்கை தூர்ந்துபோனது கால்வாய்ப் பாசன விவசாயிகளுக்கு. கடந்த ஆண்டுகளிலும் கூட ஏதோ ஒரு மாயம் நிகழும், மேட்டூர் நிரம்பும், காவிரி கடைமடைவரைப் பாயும்.
இந்த ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர் வருமா வராதா என்ற கவலையில் மேட்டூர் அணையை நோக்கி இடைவிடாது பிரார்த்தித்தபடி தவமிருந்த அந்த சந்தேகக் காலத்தில், கபினி அணை மட்டும் ஒரு முறை நிரம்ப, ஆணையத் தீர்ப்புக்காக கொஞ்சம் நீர் திறக்க என மேட்டூர் அணை திக்கித் திணறி 80 அடிகளைக் தொட்டு நின்றது. ஒருவழியாக "மாண்புமிகு முதல்வரின் ஆணைக்கிணங்க பாசனத்திற்காக மேட்டூர் இடது மற்றும் வலதுகரை கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது" எனும் மின்னற்செய்திகளைப் பார்த்தபோது உயிரின் வேர்களில் 'நீர்' வார்த்ததுபோன்றே இருந்தது.
சில நாட்களில் தண்ணீர் கால்வாய்களில் தாமதமாகத்தான் வந்து சேர்ந்தது. தயங்கித் தயங்கி வந்தடைந்த தண்ணீரை ஒருவரும் நம்பத் தயாரில்லை. மேட்டூர் அணைக்கு நீர் வருவதும், நிற்பதுமான கண்ணாமூச்சிக் காலத்தில் சற்று தாமதமாய்ப் பூத்த நம்பிக்கையில் நாற்றங்கால்களைத் தயார்படுத்தினார்கள். ஓரிரு மழைகளும் உதவிட நடவும் செய்தார்கள். பயிர் வேர் பிடித்து பச்சை அடர்த்தியாகும் தருணத்தில் அணைக்கு நீர் வரத்து அற்றுப்போக நீர்மட்டம் 60 அடிக்கும் கீழே சறுக்கத் தயாராக இருந்தது. 60 அடித் தண்ணீரை நம்பி பயிர்கள் விளைந்துவிடும் என நம்புவது மூட நம்பிக்கைக்கு நிகரானது. விட்ட தண்ணீர் விளைச்சல் வரை நீடிக்குமா, கொடுஞ்சாபமாய் கருகிப்போகுமா என்ற பயத்தில் ஒவ்வொரு விவசாயியும் உறக்கம் வராமால்தான் புரட்டாசியில் புரண்டு கொண்டிருந்தார்கள். வெயில் வேறு தன் பங்கிற்கு சித்திரைபோல் வெளுத்து வாங்கியது.
பொதுவாக ஐப்பசி மாதம் அடைமழைக்காலம். இயற்கையின் கருணை ஈரம் மிகுந்தது. உண்மை மீண்டும் உரத்து நிரூபிக்கப்பட்டது. கர்நாடகம் கருணை காட்டவில்லையெனினும், ஆங்காங்கு பெய்த மழையின் உதவியோடும் கர்நாடகத்தின் துணையின்றியே மேட்டூர் அணை 60 அடியிலிருந்து அடுத்த சில நாட்களில் 85 அடியை எட்டிவிட்டது.
விவசாயிகள் கால்வாய்களில் தங்களுக்குத் தண்ணீர் வேண்டவே வேண்டாமென கெஞ்சும் அளவிற்கு எங்கும் பரவலாய் அடைமழை, புயல்மழை, பேய்மழை பெய்யத் தொடங்கியது. ஓர் இரவில் மட்டும் கொட்டிய மழையில், கால்வாயின் கசிவு நீரும் இணைந்துகொள்ள 40 ஆண்டுகளில் காணாத பெரு வெள்ளத்தை எங்கள் கிராமங்கள் தரிசித்தன. காலம் காலமாய் நிரம்பாத, வானம் பார்த்த பூமியின் கிணறுகள் கடை போகின்றன. எதனினும் வலியது இயற்கை என்பதை இன்னுமொருமுறை தன் போக்கில் நிரூபித்துவிட்டது.
இடைவிடாமல் மழை நனைத்த தீபாவளி நாட்கள் குறித்து கிராமத்தில் எவருக்கும் பெரிதாய்ப் புகாரில்லை. உரச் சாக்கினை மடித்து கொங்கடை செய்து தலையிலும் முதுகிலும் போட்டுக்கொண்டு வயலோரங்களில் மாடுகளையும் எருமைகளையும் மேய்த்தபடி அவர்கள் மழையை கடந்துபோகும் தருணங்களில் நகரங்கள் அதுவும் குறிப்பாக தலைநகரம் தண்ணீரில் மிதக்கும் செய்தி கேட்டு வருந்துவதா, நொந்து போவதா, பிரார்த்தனை செய்வதா எனும் மனநிலையில் இருக்கையில், நகரத்தின் நெடு வீதிகளில் படகு ஓடுவதை நகரங்களில் வாழ்வோரே படம் பிடித்து பகடி செய்து இணையவெளியெங்கும் பரப்பிக்கொண்டிருப்பதை கசப்பான புன்னகையோடு பார்க்க மட்டுமே செய்யமுடிகிறது.
காவிரி ஆற்றின் கிளைக் கால்வாயின் கரையிலமர்ந்து நான் இதை எழுதுவது போன்றே பல்லாண்டுகளுக்குப் பிறகு வெள்ளத்தைக் கண்ட பாலாற்றின் கரையில் மனசை அமர்த்தி ஒருவர் எழுதுவதும் உங்கள் கண்களில் படும் சாத்தியமுண்டு.
உண்மையில், மழை வேண்டும்… வேறு வழியில்லை… கண்டிப்பாக மழை வேண்டும்… அதை எவ்வகையிலும் நிந்திக்க இயலவில்லை…!
அதேநேரத்தில், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பாதிப்பிலிருந்து மீண்டு வரவேண்டும் எனும் வேண்டுதல்களும், இனியாவது எச்சரிக்கையுடன் கூடிய உள்கட்டமைப்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும் எனும் கோரிக்கைகளும் உண்டு!
ஈரோடு கதிர் - எழுத்தாளர், >‘கிளையிலிருந்து வேர் வரை’ நூல் ஆசிரியர்.
தொடர்புக்கு - kathir7@gmail.com
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
17 hours ago
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
27 days ago