திரைப்படச்சோலை 20: கார்டு வேனில் ஓர் இரவு

By செய்திப்பிரிவு

கோவை வேலுமணி அம்மாவைப் பற்றி கொங்கு தேன் 23-ஆம் அத்தியாயத்தில் விரிவாக எழுதியிருக்கிறேன். என் திருமணத்தை முன்னின்று நடத்திய கோடீஸ்வரி.

ராமகிருஷ்ணா கல்யாண மண்டபம், ஆவாரம்பாளையம், கோவையில் எஸ்.என்.ஆர் குரூப் கட்டி முடித்ததுமே, அந்தக்குடும்பத்தை சேர்ந்த வேலுமணி அம்மா, ‘‘டேய் சிவா! உன் கல்யாணம் நம்ப மண்டபத்தில்தான் நடக்கணும். இப்பவே சொல்லீட்டேன்!’’ என்றார்.

‘‘சினிமாக்காரனுக்கு நம்ம பக்கத்தில அவ்வளவு சீக்கிரம் யாரும் பொண்ணு தரமாட்டாங்கம்மா. அப்படி யாராவது அப்பாவி மனுஷன் குடுத்தார்ன்னா கல்யாணம் பண்றதைப் பத்தி அப்புறம் யோசிக்கலாம்!’ என்றேன்.

‘‘உனக்குப் பொண்ணு தரமாட்டாங்களா? என்னடா சொல்றே. நானே பொண்ணு தேடறேன்!’’னு சொல்லி அவங்களும் பல இடங்களில் தேடினார்கள்.

ஒண்ணரை வருட வேட்டைக்குப் பிறகு ஒரு மான் அகப்பட்டுக் கொண்டது. பெண்ணின் தகப்பனார், உறவுக்காரர் சென்னை வந்து என்னுடைய சிறிய வீட்டையும், வெள்ளைச்சேலையில் என் தாயாரையும் பார்த்த பின், நம்பிக்கை ஏற்பட்டு சம்மதம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து -எதற்கும் மாப்பிள்ளை, பெண்ணை ஒரு தரம் பார்த்து விட்டால் நல்லது!’’ என்றார், பெண்ணின் தகப்பனார்.

வேலுமணி அம்மா

‘அதற்கு அவசியமே இல்லை. உங்களுக்கு நம்பிக்கை, திருப்தி ஏற்படுவதுதான் முக்கியம். எனக்கு ஒரு குடும்பப் பெண் வேண்டும். அவ்வளவுதான். அழகான பெண் வேண்டுமென்றால் நடிகைகளில் பல பேர் இருக்கிறார்கள். அறிவான பெண் வேண்டுமென்றாலும் மெட்ராசில் தேடிப் பிடித்து விடலாம். எனக்கு அப்படி தேவை கிடையாது. ராத்திரி பகலாக, நாடகம், சினிமா என்று அலைபவனுக்கு ஒரு குடும்பத்தை உருவாக்கும் ஒழுக்கமான, அன்பான பெண் வேண்டும். அவ்வளவுதான்!’ என்று மிகவும் பிடிவாதம் பிடித்து, நிச்சயதார்த்தத்திற்கு முன்னர் 1974 மே மாதம் 24-ந்தேதி சம்பிரதாயமாக பெண் பார்க்கப் போனேன்.

பெண் நான் எதிர்பார்த்தது போல் இருந்தது. ஆனால் என்னை சரியாகப் பெண் பார்க்கவுமில்லை. என்னைப் பற்றிய விவரங்களும் அவருக்குத் தெரியாது. அதனால் ஆடுபோல் தலையாட்டி விட்டார்.

உடனே வேலுமணி அம்மாவுக்கு போன் செய்து, ‘பெண் ரெடி; ராமகிருஷ்ணா கல்யாண மண்டபம் ரெடியா?’ என்று கேட்டேன்.

அந்தப்பக்கம் மெளனம். ‘என்னம்மா நான் பேசறது கேக்குதா? 1974-ஜூலை 1-ந்தேதி கல்யாணம் ஓ.கேதானே?’

மீண்டும் மெளனம். ‘வாயைத் தொறந்து பேசுங்கம்மா!’

‘அந்த தேதில பொள்ளாச்சிக்காரங்க ஏற்கனவே அட்வான்ஸ் குடுத்து புக் பண்ணியிருக்காங்க. நாம ஒருவாரம் தள்ளி வச்சுக்கலாமா?’ அம்மா கேட்டார்.

‘என்ன விளையாடறீங்களா? ஒண்ணரை வருஷம் வலை வீசித் தேடி, 12 எடங்களைப் பாத்து இப்ப இவங்கதான் ஏதோ சரின்னு சொல்லியிருக்காங்க. தேதிய மாத்தினா - மனசு மாறி கைய விரிச்சுடுவாங்க. எனக்கு அந்த தேதில கல்யாணம் நடந்தாகணும்.!’

மணமேடை

‘சரி, நீ புறப்பட்டு வாடா!’ போனேன். காலையிலிருந்து கோவை, சிங்காநல்லூர், பீளமேடு வட்டாரத்து கல்யாண மண்டபங்களுக்கு நேரே போய் விசாரித்தோம். குருகுககான சபா, யு.எம்.எஸ் திருமண மண்டபம், வெங்கடலட்சுமி கல்யாண மண்டபம் - என்று சுற்றி அலைந்தோம். இப்போது போல 45 வருடங்களுக்கு முன்பு கோவை வட்டாரத்தில் அதிக திருமண மண்டபங்கள் இல்லை.

கோவை வட்டாரத்தில் அந்த தேதிக்கு மண்டபங்கள் எங்கும் இல்லை என்றதும், ‘டேய் ஒரு ஐடியா. அவினாசி-புஞ்சைப் புளியம்பட்டி காலையில் சேவூரை அடுத்த தண்டுக்காரன்பாளையத்தில் நாயுடுமார் குல தெய்வம் கோயிலை ஒட்டி சித்தம்மா கல்யாண மண்டபம் இருக்கு. அதைப் பார்க்கலாம் வா!’ என்று அழைத்துப் போனார்.

ஆஸ்பெஸ்டாஸ் கூரையில் ஒரு ஹால். 250 பேர் அமர்ந்து சாப்பிடலாம். அதற்கு முன்னால் திறந்த வெளி மைதானம் ஒன்று இருந்தது. ‘5000 பேர் உட்காரும் அளவுக்கு பந்தல் போட்டுத்தரும் பொறுப்பு என்னுடையது. தைரியமாக கல்யாணப் பத்திரிகை அடி! ’என்று சொன்னார்கள்.

இன்று 1974 ஜூன் 6-ந்தேதி. நாளை சென்னையில் புதுப்பட பூஜை. மாலை அப்பாவி நாடகம். எப்படியும் இரவு சென்னை புறப்பட்டே ஆக வேண்டும்.

திருவனந்தபுரம் மெயிலில் டிக்கட் வாங்கி வைத்திருந்து அம்மா கொடுத்து வழியனுப்பினார்கள். கொச்சின் எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ், அடுத்து கடைசி 10.20 திருவனந்தபுரம் மெயில்.

ரயில் ஒண்ணாவது பிளாட்பாரத்தில் வந்ததும் முதல் வகுப்பு பெட்டியைத் தேடினேன். அது எஞ்சினுக்கு அடுத்து இணைக்கப்பட்டிருந்தது. நடு பிளாட்பாரத்தில் எஞ்சின் நிற்காது. கடைசியில் போய் நின்றது. மூச்சிரைக்க ஓடிப்போய் பார்த்தேன். பெயர் பட்டியலில் என் பெயரைக் காணோம்.

என் அம்மாவுடன்

முதல் வகுப்பு பெட்டி, வேறு இருக்கிறதா? ரயிலின் பிற்பகுதியில் இருக்கும். கூட்ட நெரிசல் எதிரில் வருவோரையெல்லாம் இடித்துக் கொண்டு 1-ம் கிளாஸ் கம்பார்ட்மெண்ட் தேடி ஓடினேன்.

இடையில் வெள்ளை உடையில், வெள்ளைத் தொப்பியில் கார்டு.

‘ஹலோ சார் எங்கே?’ என்று என்னை நிறுத்திக் கேட்டார்.

‘என்ன கேள்வி. ரயிலுக்குத்தான்!’

‘அப்புறம் ஏன் ஓடறீங்க?’

’முதல் வகுப்பு பெட்டி எங்கே?’

‘வாங்க!’ என்று கூட்டிப் போனார். அந்தப் பெட்டியில் ஒட்டப்பட்ட பெயர்ப் பட்டியலிலும் என் பெயர் இல்லை.

‘வேற ட்ரெயினா? டிக்கட்டை குடுங்க!’ கொடுத்தேன். பார்த்தார் -சிரித்தார். வெயிட்டிங் லிஸ்ட் 4.

‘‘ரிசர்வ் பண்ணினவங்க யாருமே வரலேன்னாத்தான் சார் நீங்க இதுல போக முடியும். எல்லோரும் வந்திட்டா இந்த ரயில்ல நீங்க டிராவல் பண்ண முடியாது.’’

‘‘இப்ப என்ன சார் பண்றது?’’

‘‘என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்கா சார்? கார்டு திடீரென்று கேட்டார்.

இத்தனை பதட்டத்தில் இருட்டில் முழு யூனிபார்மில் இருக்கும் அவரை எப்படி நினைவில் வைத்துக் கொள்வது?

‘‘அடடே நீங்களா?’’ உதார் விட்டேன்.

‘‘யாரு, சொல்லுங்க!’’

‘‘சார் மன்னிச்சுக்குங்க. உண்மையிலேயே உங்களை தெரியலே!’’

‘‘என்ன சார். அதுக்குள்ளே மறந்துட்டீங்க. நடிகர் ஜெமினிபாலு தம்பி நான். உங்க வீட்டுக்கு எதிரில் எங்கண்ணன் வாடகைக்கு குடியிருந்தார். ஒரு பைக் விபத்தில கையை ஒடிச்சுகிட்டு மாவு கட்டு போட்டுட்டு பல நாள் உங்க கேட்டுக்கிட்ட நின்னு உங்களோட பேசியிருக்கேன் சார்!’’

உடனே கற்பனையில் -கையொடிந்த மனிதனுக்கு கார்டு யூனிபார்ம், தொப்பியை எல்லாம் மாட்டிப் பார்த்தேன். அட, அவருதான். இவரா?

‘‘சாரி சார்..!’’

‘‘பரவாயில்லை!’’

இப்ப கார்டு தயவு நமக்கு நிச்சயம் தேவை.

‘‘நான் எப்படியாவது மெட்ராஸ் போயே ஆகணும் சார்..!’’

‘‘சரி, சரி! போய் கார்டு வேன்ல ஏறிக்குங்க. நான் சிக்னல் காட்டிட்டு வர்றேன்!’’ என்று போனார்.

ரயில் பெட்டியில் கடைசியாக பச்சைக் கொடி காட்டி வெண்ணிற உடையில் ரயிலை நகர்த்தும் அந்த மனிதர்களைப் பார்த்து பெருமைப் பட்டிருக்கிறேன் பல நாட்கள்.

கார்டு வேனில் ஏறியபோதுதான், அது எவ்வளவு குறுகலான பெட்டி என்பது தெரிந்தது. கதவைத் திறந்து நுழைந்ததுமே மரநாற்காலி, பெட்டியிலிருந்து துருத்திக் கொண்டிருந்தது. அதில் அமர்ந்து ஏதாவது எழுதுவார்கள். பக்கத்தில் ஒரு கதவு. திறந்தால் டாய்லட். 6 அடிக்கு 4 அடி அளவில் அதற்குள் கிளாஸட், பேசின், கண்ணாடி எல்லாம்.

ரயில் புறப்பட்டதும், கார்டு நண்பர் வந்தார். சினிமா நடிகர்கள், படப்பிடிப்பில் நடக்கும் சுவையான சம்பவங்கள் பற்றி ஆவலாக கேட்டார். ரயில் ஈரோடு ஜங்ஷனை நெருங்கியது.

‘‘ரொம்ப சந்தோஷம் பிரதர். நான் இங்கே இறங்கிக்கறேன். வேற ஒரு கார்டு சென்னை வரை வருவார்!’’

‘‘அய்யய்யோ! அவர் என்னை இறக்கி விட்டுடுவாரோ?’’

‘‘அவர் என்னை விட நாடக, சினிமா பைத்தியம். கவலையே படாதீங்க. நல்லா பொழுது போகும்!’’

கோவையிலிருந்து வந்த கார்டு ஹரிகிருஷ்ணன் இறங்கினார். விஜயகுமார் என்ற கார்டு ஏறினார். சினிமா நடிகர்களுக்கு ஒரு வசதி. பொதுமக்களில் 80 சதவீதம் பேருக்கு அவர்களை நன்றாகத் தெரியும். படம் பார்க்காவிட்டாலும் நடிகர் பெயராவது கேள்விப் பட்டிருப்பார்கள். இந்த விஜயகுமார் எனது நாடகங்களையே மேஜர் சுந்தரராஜன் குழுவில் நடித்தபோது பார்த்திருப்பதாகவும் சொன்னார். ரொம்ப வசதியாகப் போயிற்று.

என்னதான் சுவாரஸ்யமான பேச்சானாலும் 2 மணி நேரத்துக்கு மேல் தாங்காது. காலை முழுதும் கல்யாண மண்டபம் தேடி அலைந்து ரயில் நிலையத்தில் இடம் பிடிக்க பிளாட்பாரத்தில் அலைந்து 10.20-க்கு ஏறி 12.30-க்கு ஈரோடு வந்தாயிற்று. இரவு 1 மணிக்கு முன் கிளம்பி 3 மணி வரை பேசி, பாதி தூக்கத்தில் உடம்பு படுக்க ஆசைப்பட்டது. ஹிந்து ஆங்கில இதழில் 4 பக்கங்கள் பிரித்து கொடுத்தார் கார்டு. விரித்து கையை மடித்து தலைக்கு வைத்து படுத்ததுதான் தெரியும். தேவலோகத்தில் மிதந்தேன். அங்கும் மழை. உடம்பெல்லாம் நனைய டூயட் பாடினேன் கனவில்.

‘‘சார் சார்! என்று பதட்டமான குரலுடன் கார்டு என்னை எழுப்பினார். ஹிந்து பேப்பர் முழுக்க நனைந்திருந்தது என் முதுகிலும் ஈரம். அதைப் பார்த்து பரிதாபமாக சிரித்தார் கார்டு.

புரிந்து விட்டது. டாய்லட் போனவர் ஃபிளஷ் செய்த போது தண்ணீர் ரயிலுக்கு அடியில் போகாமல் டாய்லட் கதவுக்கு அடியில் புகுந்து என்னை தழுவ வந்திருக்கிறது.

நானும் பரிதாபமாக இளித்து, சட்டையைக் கழட்டி ‘பேசினில்’ கசக்கிப் பிழிந்து -கார்டு கதவோரம் நின்று பச்சைக் கொடி காட்டுவது போல சட்டையை வெளிக்காற்றில் பறக்க விட்டு ஈரம் காய்ந்ததும் மாட்டிக் கொண்டேன்.

ஒரு வழியாக பேசின் பிரிட்ஜ் தாண்டி, சென்ட்ரல் ரயில் நிலைய பிளாட்பாரத்துக்குள் எக்ஸ்பிரஸ் ரயில் ஊர்ந்து செல்கிறது. கடைசிப் பெட்டி வரை பிளாட்பாரத்தில் வரிசையாக போர்ட்டர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். ரயில் நின்றதும் பெட்டிக்குள் பாய்ந்து ஹோல்டால், படுக்கை, பெட்டிகளை தூக்கிச் செல்வார்கள்.

கார்டு வேனில் என்னைப் பார்த்தால் ‘வெள்ளிக்கிழமை விரதம்’ நன்றாக ஓடி பிரபலமான ஹீரோ, கார்டு வேனில் வருகிறார் என்றால் -வாயை மூடி சிரிப்பார்களே!

பிளாட்பாரத்திற்கு முதுகைக் காட்டி ரிவர்ஸில் இறங்கி எதிர் திசையில் 100 அடி போய் நின்று கூட்டம் நகர்ந்தவுடன் திரும்பி வந்தேன்.

வழக்கமாக நீலகிரி எக்ஸ்பிஸில்தான் நான் வருவேன் என்று ஸ்டேஷன் வந்து, 6 மணி முதுல் 7.30 வரை காத்திருந்த என் டிரைவர் இன்று ஐயா வரவில்லை என்று நினைத்து வீட்டுக்குப் போய் விட்டான். நான் 8.15க்கு வெளியே வந்த போது கார் இல்லை.

சென்னை ரயில்நிலையம்

வேறு வழியில்லாமல் கர்சீப் வைத்து முகத்தை மறைந்துக் கொண்டே சென்ட்ரல் முன் உள்ள டாக்ஸி ஸ்டேண்ட் தாண்டி ஜிஎச் மருத்துவமனை வந்து டாக்ஸிக்கு காத்திருந்தேன்.

ஒரு பழைய ஸ்டேண்டர்டு 10 டாக்ஸி வந்தது. வயசான வண்டி. வயோதிக டிரைவர். பின் சீட்டில் ஏறி உட்கார்ந்ததும், காலடியில் பட்டை பட்டையாக ஏதோ ஓடியது. காரின் அடியில் ரன்னிங் போர்டு. அதாவது காரின் அடிபாகம் உள்ள ஓட்டையில் தார் ரோட்டின் தீட்டப்பட்ட வெள்ளைப் பட்டைகள் தெரிந்தன.

முதல் கியர் மாற்றி வண்டியை நகர்த்தினபோதே முனகிக் கொண்டு உதறி வண்டி நகர்ந்தது. அப்படியே குளத்து நீரில் எருமை மாடு மிதந்தவாறு செல்வது போல மவுண்ட் ரோடில் ஊறிச் சென்றது.

சாந்தி தியேட்டர் அருகே வந்தவுடன் வலிப்பு வந்தவன் போல இருமுறை உதறி நிரந்தரமாக படுத்து விட்டது.

‘என்னாச்சுங்கய்யா? - என்ன பெட்ரோல் தீர்ந்து போச்சு - என்ன பண்றது? -கீழே எறங்கி தள்ளுங்க -கர்ச்சீப்பால் முகத்தை மறைத்து கட்டிக் கொண்டு, தேவி தியேட்டர் வாசல், பிளாசா தியேட்டர் பாதை தாண்டி, காஸ்மாபாலிடன் கிளப் முன்னால் உள்ள பெட்ரோல் பங்க் வரை தள்ளிக் கொண்டு போனேன்.

பத்து லிட்டர் போட்டாச்சு. வண்டியை எடுங்க தாத்தா என்றேன். தினத்தந்தியை வாங்கி தலைப்புச் செய்தியை படித்துக் கொண்டு காலங்கார்த்தால எதுக்கு ஆலாப் பறக்கறே. இதோ ஒரு டீ அடிச்சுட்டு வர்றேன் இரு!’ என்ற போது செத்தே போய் விட்டேன்.

----

அனுபவிப்போம்.

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்