சர்வதேச மருத்துவ அறிஞர்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த உயிரியல் ஆய்வாளரும் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வென்றவருமான எலிசபெத் ஹெலன் பிளாக்பர்ன் (Elizabeth Helen Blackburn) பிறந்த தினம் இன்று (நவம்பர் 26). அவரைப் பற்றிய அரிய முத்துகள் பத்து:
# ஆஸ்திரேலியா, தாஸ்மானியா தீவின் ஹோபர்ட் என்ற இடத்தில் பிறந்தார் (1948). பெற்றோர், மருத்துவர்கள். இதனால் குழந்தைப் பருவத்தில் இருந்தே இவருக்கு அறிவியலில், குறிப்பாக உயிரியலில் ஆர்வம் பிறந்தது. 4 வயதில் குடும்பம் லான்செஸ்டன் என்ற நகரத்தில் சென்று குடியேறியது.
# சிறுவர்களுக்கான அறிவியல் புத்தகங்களை ஆர்வத்துடன் படித்து வந்தார். குறிப்பாக சிறுமியாக இருந்தபோது மேரி க்யூரியின் வாழ்க்கை வரலாற்று நூலை மீண்டும் மீண்டும் படித்தார். அப்போதே தாம் ஒரு விஞ்ஞானியாக உருவாக வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்.
# அறிவுக்கூர்மை மிக்க மாணவியான இவர் பள்ளியில் படிக்கும்போது பியானோ வாசிக்கக் கற்றுக்கொண்டார். பியானோ வாசிப்பதில் மிகுந்த ஆர்வமும் திறனும் கொண்டிருந்தார். அப்போது இசைக்கலைஞராக வேண்டும் என்ற ஆசை அரும்பியது. ஆனால் அறிவியல் தாகம், இவரை விஞ்ஞான ஆய்வுகளில் மூழ்க வைத்தது.
# 1970-ல் மெல்பர்ன் பல்கலைக்கழகத்தில் உயிரி வேதியியலில் பட்டப் படிப்பும் அதையடுத்து முதுகலைப் பட்டமும் பெற்றார். 1975-ல் இங்கிலாந்து சென்ற இவர், அங்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பாக்டீரியாபேஜ் என்ற வைரஸ் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார்.
# அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் குரோமோசோம்கள், அவற்றின் அமைப்புகள் குறித்து ஆய்வை மேற்கொண்டார். மரபணு செல்களின் உறுதித் தன்மைக்குக் காரணமாக இருக்கும் டெலோமியர் (telomere) என்கிற முனைக்கூறுகளின் தோற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்விலும் ஈடுபட்டார்.
# 1977-ல் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு உயிரியியல் துணைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அங்கு டெலோமியர் குறித்த தனது ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். 1985-ல் இவரும் இவரது உதவியாளர் கரோல் டபிள்யு கிரைடல் என்பவரும் டி.என்.ஏ.விலிருக்கும் புதிய டெலோமியர்களை ஒன்றிணைத்து அவற்றின் நீள, அகலங்களைக் கட்டுப்படுத்தும் டெலோமெரிஸ் என்ற என்சைமை வெற்றிகரமாகப் பிரித்தெடுத்தனர்.
# இந்த அபாரமான கண்டுபிடிப்பு உலகம் முழுவதும் உள்ள உயிரியலாளர் களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. இதனால் ஆராய்ச்சியாளர்களுக்கு டி.என்.ஏ.க்களைப் பற்றிய தெளிவான புரிதல் ஏற்பட்டது. மரபணு செல்களின் சிக்கலான செயல்பாடுகளையும் அவற்றின் மர்மமான இரட்டிப்பாக்கும் (replication) தன்மையைப் புரிந்துகொள்ளவும் இது வழிவகுத்தது.
# இந்தத் தன்மையைக் கட்டுப்படுத்துவதற்கான செயற்கை டெலோமியர்களை உருவாக்கவும் இந்தக் கண்டுபிடிப்பு, தூண்டுகோலாக அமைந்தது. டெலொமியர் என்சைம்களைப் பிரித்தெடுத்த இந்த வரலாற்று சிறப்பு மிக்க சாதனை, இவருக்கு சர்வதேச அளவில் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. நுண்ணுயிரியலுக்கான எல்லி லில்லி விருது 1988-ல் வழங்கப்பட்டது.
# 1990-ல் சான்ஃபிரான்சிஸ்கோவில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் (UCSF) நுண்ணுயிரியல் மற்றும் நோய்த் தடுப்பியல் பிரிவில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1993-ல் அந்தத் துறைத் தலைவராகவும் பணியாற்றினார். இதன் மூலம் இந்தப் பல்கலைக்கழக வரலாற்றிலேயே இந்தப் பதவியை அலங்கரித்த முதல் பெண்மணி என்ற புகழைப் பெற்றார். 1995-ல் டெலோமியர்களைக் குறித்த கட்டுரைத் தொகுப்பான டெலோமியர்ஸ் என்ற நூலை வெளியிட்டார்.
# 2009-ல் தனது குழுவைச் சேர்ந்த கரோல் கிரெய்ட்டர், ஜாக் சொஸ்டாக் ஆகியோருடன் இணைந்து மருத்துவத்துக்கான நோபல் பரிசை வென்றார். ஆராய்ச்சிகள், பேராசிரியர் பணியோடு, டெலோமியர்கள் மற்றும் புற்றுநோய் குறித்து இடைவிடாமல் உரையாற்றுவதிலும், கருத்தரங்குகள் நடத்துவதிலும் முனைப்புடன் ஈடுபட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago