ஆலயங்கள் எழுப்பப்பட்ட வரலாறுகளை உன்னிப்பாகப் பார்த்தால் அதனை உருவாக்கிய அரசர்களுக்கு இருந்த அளப்பரிய பக்தி, அவர்களுக்குத் துணை நின்ற அருளாளர்களின் சக்தி, ஆகியவை வெளிப்படுகின்றன. முதல் கல் எடுத்து வைத்த அரசனில் தொடங்கி முன்னால் நின்று வழிபடும் அடியவர்கள் வரை அத்தனை பேர்களின் உயிர்களையும் உள்ளங்களையும் ஊடுருவிச் சென்றது இறைபக்தி என்பதை எவரும் அறிவர்.
சுதந்திரத்துக்குப் பின் இந்த தேசம் மதச்சார்பற்றதாக அறிவிக்கப்பட்ட வினாடியிலேயே
ஆலயங்கள் பக்தர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும். சமயச் சார்பு இல்லாத அரசுக்கு சமய நிறுவனங்களை நிர்வகிக்கும் அடிப்படை உரிமை இல்லை.
ஆனால், விழிப்புணர்வு இல்லாததாலோ, உரிய ஒருங்கிணைப்பு இல்லாததாலோ இருவேறு பின்னடைவுகள் இந்து சமய ஆலயங்களுக்கு ஏற்பட்டன.
1) இந்து ஆலயங்களின் சொத்துகள் வழியிலான வரவு பக்தர்களின் காணிக்கை ஆகியவை அரசாங்கத்தால் வெவ்வேறு துறைகளின் தேவைகளுக்குச் செலவிடப்பட்டதோடு சில நிர்வாகிகளால் தவறாகவும் பயன்படுத்தப்பட்டன.
2) பொதுவெளியில் தங்களை நாத்திகர்கள் என்று அழைத்துக்கொண்டு வலம் வருபவர்கள்
தாங்கள் சார்ந்திருக்கும் அரசியல் கட்சி வழியாக ஆலயங்களின் அறங்காவலர்கள் என்னும் பதவியில் அமர்ந்துகொண்டனர். அதாவது தேர்தலில் வாய்ப்போ, வாரியங்களில் பதவியோ தரப்படாத கட்சிப் பிரமுகர்களின் கண்ணீர் துடைக்க அறங்காவலர் பதவி கைக்குட்டைகள் போல் விநியோகிக்கப்பட்டன.
இதன் காரணமாக அன்பும் பணிவும் பக்தியும் பெருக்கெடுக்க வேண்டிய ஆலயங்கள் அதிகார
ஆட்டத்தின் ஆடுகளங்களாக மாறிவிட்டன.
சமீப காலங்களில் கூட அரசியல் சார்பில்லாத - அறநெறி நாட்டமுள்ள பொது மனிதர்களை
அறங்காவலர் குழு தலைவர்களாக நியமிக்கும் நிலை இருந்தது. அவர்கள் ஆலயங்களை மேம்படுத்தவும் பக்தர்களின் நலனுக்காகவும் உருவாக்கிய எத்தனையோ நல்ல திட்டங்கள் அவர்களுடைய பதவிக் காலம் முடிந்ததும் தொடராமல் முடக்கப்பட்டுவிட்டன.
உதாரணமாக ஆலயங்களில் அம்பாளுக்கு சார்த்தப்படும் புடவைகள் ஏலம் விடப்படக் கூடாது
என்றும், ஏழ்மை நிலையில் உள்ள இந்துப் பெண்களுக்கு இலவசமாகத் தரப்பட வேண்டும் என்றும் புகழ்மிக்க ஆலயம் ஒன்றின் அறங்காவலர் குழுத் தலைவர் ஒரு வழக்கத்தைக் கொண்டு வந்தார். அவர் பதவிக் காலம் முடிந்ததுமே இந்த நல்ல திட்டத்திற்கு மூடுவிழா காணப்பட்டு மீண்டும் புடவைகள் ஏலத்துக்கு வரத் தொடங்கிவிட்டன.
ஓர் ஊரின் உயிர்நாடியாகக் கருதப்படுபவை ஆலயங்கள். நான்கு திசைகளிலிருந்தும் மனிதர்கள்
கோயிலுக்கு வரவேண்டும் என்பதாலேயே நான்கு வாயில்கள் வைக்கப்பட்டன.
ஆலயங்கள் என்பதை சமுதாய மையங்களாக, கலைக்கூடங்களாக, சித்த வைத்திய சாலைகளாக, பசி தீர்க்கும் அறச்சாலைகளாக இருந்தன. இன்றும் ஆலயத்தின் நிதி ஆலயத்துக்காகவே என்ற நியாயமான நிலை நீடித்திருந்தால் இந்த அறப்பணிகள் ஆலயங்களில் தொடர்ந்து நடைபெற்றிருக்கும்.
ஆள்கிற அரசன் தன்னை ஆலயத்தின் முதல் தொண்டனாகக் கருதி கிடந்த சம்பவங்கள் ஆதாரத்தோடு பதிவாகியிருக்கின்றன.
முற்காலச் சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள் மட்டுமின்றி, பின்னால் வந்த அரசர்களும்
அந்தப் பணிவிலும் பக்தியிலும் நிகரற்று விளங்கினார்கள். பதினான்காம் நூற்றாண்டிலிருந்தே தென்காசி சிவாலயம் புலி மூடு விளங்கி வந்துள்ளது. 1422இல் ஆட்சிக்கு வந்த பராக்கிரம பாண்டியன் அந்தத் திருக்கோயிலைக் கட்டுவித்தான். அவனுடைய சிறந்த சிவ பக்திக்கு அடையாளமாக பாண்டிய மன்னன் விடுத்த வேண்டுகோள்கள் கல்வெட்டில் பாடல்களாக பொறிக்கப்பட்டுள்ளன.
பொன் ஆலயமாகத் திகழ்கிற தென்காசி சிவாலயத்திற்கு ஏதேனும் குறைவுகள் எதிர்காலத்தில்
ஏற்பட்டால் அந்தக் குறைகளைக் களையக் கூடியவர்களை இந்த உலகம் அறியும் விதமாக இப்பொழுதே பணிந்து வணங்குகிறேன் என்று கல்வெட்டில் குறிக்கும் அளவு அந்த அரசனின் பக்தி ஆழமானதாகத் திகழ்ந்திருக்கிறது.
ஆராயினும் இந்தத் தென்காசி மேவு பொன்னால் ஐந்து
வாராதோர் குற்றம் வந்தால் அப்போது அங்கு தந்ததனை
நேராகவே ஒழித்துப் புரப்பார்களை நீதியுடன்
பாரறியப் பணிந்தேன் பராக்கிரம பாண்டியனே
என்பது அந்தப் பாடல்.
ஓர் அரசன் தன்னை ஆலயத்தின் கடைசித் தொண்டனாக கருதியது அந்தக் காலம். ஓர் அரசியல்
கட்சியின் கடைசித் தொண்டன் தன்னை ஆலயத்தின் முதன்மை மனிதனாகக் கருதிக் கொள்வது இந்தக் காலம். சொல்லப் போனால் சில அரசியல்வாதிகளும் சில அதிகாரிகளும் தங்களை கடவுளுக்கும் மேலாகக் கருதிக் கொண்டு கீழான செயல்களில் ஈடுபட்டனர். அதனால் ஆலயங்களுக்கு ஏற்பட்ட இழிவுநிலை, எழுதும் தரமன்று.
அரசின் பிடியில் இருந்தும் அரசியல்வாதிகள் சிலரின் அதிகாரப் பேராசையில் இருந்தும்
ஆலயங்கள் விடுவிக்கப்பட்டு பக்தர்களின் பராமரிப்பில் அளிக்கப்பட வேண்டும்.
சோழநாட்டில் இன்றும் பாடல் பெற்ற சிவாலயங்கள் பலவற்றை ஆதீனங்கள் நிர்வகித்து
வருகின்றன. ஆதீனத் தலைவர்களின் முழுமையான நிர்வாகத்தில் அந்த ஆலயங்கள் அளிக்கப்பட வேண்டும் ஆதீனங்கள் சார்பில் சொந்த செலவிலோ பக்தர்கள் காணிக்கை கொண்டோ செய்யப்படும் ஆலயத் திருப்பணிகளுக்குக் கூட அரசாங்கத்தின் அங்கீகாரத்தை எதிர்பார்த்து நிற்க வேண்டிய சங்கடமான சூழ்நிலை நம் சமயத் தலைவர்களுக்கு இருக்கிறது.
இது எத்தனை இந்துக்களுக்குத் தெரியும்?
தொல்லியல் அறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியம் சமீபத்தில் வெளியிட்டு இருக்கும் 'கலைமிகு கோயில்களும் கல்வெட்டு சாசனங்களும்' என்கிற நூலில் அரசர்கள் ஆலயங்களுக்கு கொடைகள் தந்ததுடன் நில்லாமல் அறப்பணிகள் நில்லாமல் தடைப்படுவதால் அந்த அறக்கொடை தீங்கு செய்பவர்கள் தனி நபராக இருந்தாலும் அரசராக இருந்தாலும் அதற்காக இறைவனுக்கு தண்டத்தொகை செலுத்த வேண்டும் என்று குறிக்கப்பட்டுள்ளதோடு, அறக்கொடை தடைப்பட்டால் அந்தக் குற்றம் ஓர் அரசனைக் கொன்ற குற்றத்திற்கும் ஒரு பெண்ணுக்குத் தவறு செய்த குற்றத்திற்கும் இணையாகக் கருதப்படும் என்று கல்வெட்டுகள் சொல்வதை மேற்கோள் காட்டியுள்ளார்.
அப்படியானால் இன்றைய சூழலில் ஆலயங்களுக்கு அரசாங்கங்கள் எவ்வளவு கோடி தண்டத்தொகை
செலுத்த வேண்டும் என யோசித்துப் பார்த்தால் தலை சுற்றுகிறது.
இந்தக் காலகட்டத்தில்தான் காலத்தின் குரலாக “கோயில் அடிமை நிறுத்து” என்னும் முழக்கம்
எழுகிறது.
இந்த நியாயமான கோரிக்கை எல்லா திசைகளிலும் பரவி எழுச்சி பெற்றுக் கொண்டிருக்கிறது.
ஏற்கெனவே இது குறித்து வழக்குகள் போடப்பட்டிருந்தது வழிகாட்டுதல்கள் பெறப்பட்டிருந்தும் உரிய சட்டங்கள் ஏற்படுத்தப்படவில்லை. இந்துக்களின் போதிய கவனம் பெறாமலேயே இந்த ஆதாரமான சிக்கல் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
பராமரிப்பில்லாத ஆலயங்கள் - பூசை இல்லாத கடவுளர்கள் - பேணப்படாத அர்ச்சகர்கள்
- போற்றப்படாத மரபுகள் - பயன்படுத்தப்படாத கோயில் கலைகள்... இதுதான் இன்றைய நிலை.
- கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
11 hours ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago