1971 ஜூலை 2-ம் தேதி இரவு ‘தேரோட்டம்’ படப்பிடிப்பு வாஹினி ஸ்டுடியோவில் ஹீரோ -ஹீரோயின் படத்தில் அறிமுகமாகும் ‘ஸ்டேஜ்-டான்ஸ்’ இரவு 12 மணி வரை நடைபெற்றது.
உடல் சூடாகி விட்டால் உடனே தூக்கம் வராது. குதிரை மணலில் படுத்துப் புரண்டு அலுப்பைத் தீர்த்துக் கொள்வதுபோல வீடு சென்று 4 மணி நேரம் புரண்டு படுத்தேன். மீண்டும் 7 மணி படப்பிடிப்புக்குத் தயாராகி ஸ்டுடியோ சென்று -படத்தில் சூப்பர்வைசரின் கருங்காலித்தனத்தைக் கண்டித்து நானும் சக தொழிலாளிகளும் வேலை நிறுத்தம் செய்து கோஷம் போடும் காட்சி 11 மணி வரை நடைபெற்றது.
புவனேஸ்வரி மூவிஸ் ‘மூன்று தெய்வங்கள்’ படத்தில் சிவாஜி, முத்துராமன், நாகேஷ் மூவரும் ஜெயிலிலிருந்து தப்பி வந்த திருடர்கள். எஸ்.வி.சுப்பையா சிறிதாக மளிகைக் கடை வைத்திருக்கிறார். ‘நான் ரெண்டு நாள் வெளியூர் போயிட்டு வர்றேன். இந்தக் கடையைப் பார்த்துக்குங்கப்பா’ன்னு திருடன் கையில் பெட்டிச் சாவியைக் கொடுப்பது போல கடையை அவர்களிடம் ஒப்படைத்துப் போவார்.
எதையும் கடையில் திருட முடியாமல் வாடிக்கையாளர்களிடம் மூவரும் எப்படி அவஸ்தைப்படுகிறார்கள் என்பதை நகைச்சுவையாகச் சொல்லும் படம் இது. மராட்டிய கதை. தாதா மிராசி டைரக்டர்.
சுப்பையா மகள் சந்திரகலா. பயந்தாங்கொள்ளி காதலன் நான். பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படத்தில் வளர்ந்து வரும், எனக்கும் சந்திரகலாவுக்கும் 2 பாடல்களைப் படமாக்க முதன் முதல் அவுட்டோர் ஊட்டி போனது இந்தப் படத்திற்குத்தான்.
‘முள்ளில்லா ரோஜா’ என்று எஸ்.பி.பியும், சுசீலாவும் பாடிய சூப்பர் ஹிட் பாடல், ‘நீ ஒரு செல்லப்பிள்ளை நாளொரு வண்ணக்கிள்ளை’ என்று எல்.ஆர். ஈஸ்வரி சந்திரகலாவுக்குப் பாடிய நகைச்சுவைப் பாடலும் அங்கு படமாக்கப்பட்டது.
புவனேஸ்வரி மூவிஸ் தயாரிப்பாளர் வேண்டுகோளை ஏற்று மன்னார்குடியில் இளைஞர் கலா மன்றத்தார் அன்று மாலை நடத்தவிருக்கும் நாடகத்திற்குத் தலைமை ஏற்க அவர்கள் கொண்டு வந்திருந்த காரில் பயணமானேன்.
இரவு 7 மணிக்கு நீடாமங்கலம் தாண்டி மன்னார்குடியை அடைந்தோம். காவிரி பாயும் கன்னித் தமிழ்நாடு பாடல் நினைவுக்கு வந்தது. கண்ணுக்கெட்டும் தூரம் வரை பச்சைப் பசேல் என்று வயல்வெளிகள் ஆங்காங்கே தென்னந்தோப்புகள்.
உழைப்பாளர் வர்க்கம் வாழும் பகுதி என்பதால், பகல் முழுவதும் வேலை பார்த்துவிட்டு இரவு வீடு சென்று சமையல் செய்து சாப்பிட்ட பின்னரே அந்த மக்களுக்கு நாடகம் பார்க்க நேரம் கிடைக்கும்.
ஆகவே, நாடகம் ஆரம்பிக்கும்போதே மணி 10.30 ஆகி விட்டது. நகைச்சுவைக் காட்சிகள் நறுக்குத் தெறித்தாற்போலிருந்தன. நாடகம் முடிய இரவு 1 மணியைத் தாண்டும் என்றார்கள். அதனால் இடைவேளையில் நிகழ்ச்சியை வைத்துக் கொண்டனர். நான் பேசி முடித்ததும் சிங்கத்தின் கர்ஜனை இமயமலை உச்சியில் இருந்து கேட்டால் எவ்வளவு மிரட்டலாக இருக்குமோ அப்படி அடுக்கு மொழியில் தூய தமிழில் கரீம் என்ற இளைஞன் என்னை வாழ்த்திப் பேசினான்.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பி.ஏ.படித்துக் கொண்டிருந்தான். கல்லூரி விழாவில் அறிஞர் அண்ணா முன் இதுபோல் பேசியபோது அவரே வாயடைத்துப் போய் படிப்பு முடிந்து அரசியலுக்கு வா என்று அழைத்தாராம்.
நிகழ்ச்சி முடிந்து கிளம்பும்போது மேடையைச் சுற்றி திமுதிமு என்று ரசிகர்கள் கூடிவிட்டனர். 6 அடி 2 அங்குல உயரமுள்ள கரீம் கழுகு கோழிக்குஞ்சைத் தூக்கிச் செல்வது போல, ஒரு கையில் என் இடுப்புப் பகுதியைப் பிடித்து மேலே தூக்கி, காரில் கொண்டு போய் இறக்கிவிட்டான்.
இரவு சாப்பாடு. நேற்றிரவெல்லாம் தூங்கவில்லை. உடம்பு சூடாக இருக்கிறது. மீண்டும் இன்று விடியும் வரை காரில் சென்னை பயணம் செய்ய வேண்டும். தயிர் சாதமும், சின்ன வெங்காயமும் கிடைக்குமா என்று கேட்டேன். அரை மணி நேரத்தில் கரீம் தயார் செய்து கொண்டுவந்து தந்து வழியனுப்பி வைத்தான்.
50 ஆண்டுகளுக்கு மேலாகியும் எங்கள் நட்பு தொடர்கிறது. அவன் புதல்விகள் திருமண விழாவில் கலந்துகொண்டேன். பேரன் திருவிழாவிலும் காரைக்குடி சென்று சமீபத்தில் கலந்துகொண்டேன்.
என் சகோதரி மகள் ஜானகி மீது நிரம்பிய பாசம் வைத்திருந்தான். 1975-ல் ஜானகி தீ விபத்தில் இறந்தபோது எங்கள் வீடு வந்து SUN-SHADE -ல் தலையை மோதி ரத்தம் சொட்டச் சொட்ட அவன் கதறியது இன்றும் பசுமையாய் நினைவில் உள்ளது.
மதம் வேறாக இருக்கலாம். ஆனால், ரத்தம் ஒரே நிறம்.
இரவு 12.30 மணிக்கு மன்னார்குடியிலிருந்து விடிய விடிய கண் முழித்து அதிகாலை 7 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தேன். வீங்கிய கண்கள், சோர்ந்த முகத்துடன் குளித்து ஒப்பனை செய்து ஸ்டுடியோவுக்குப் பறந்தேன்.
சந்திரகலாவுக்கு கால்ஷீட் பிரச்சினை. நாகேஷுக்கு உடல்நிலை சரியில்லை. சிறிது நேரம் ஓய்வெடுங்கள் என்றார் புரொடக்ஷன் மேனேஜர். வண்டியில் குதிரையைப் பூட்டி கடிவாளத்தையும் மாட்டி விட்டு, கொஞ்சம் மசால் செடி சாப்பிடு என்று குதிரை முன் நீட்டினால் அதற்கு எவ்வளவு கோபம் வரும்? கடிவாள இரும்புக் கம்பி பற்களுக்கிடையில் உரசிக் கொண்டிருக்கும்போது மசால் செடியை குதிரை எப்படி மென்று சாப்பிடும். அதேபோல ஒப்பனையும் போடச்சொல்லி உடையையும் மாட்டிவிட்டு ஓய்வெடுப்பா என்று சொன்னால் என்ன செய்வது? வளரும் காலகட்டம். இதுபோல் ஆயிரம் விஷயங்களைச் சகித்துக் கொண்டு வளர வேண்டும்.
ஒரு வழியாக அந்த இருவரும் 11.30 மணிக்கு வந்து சேர ஒரு மணி வரை படப்பிடிப்பு நடைபெற்றது.
பகல் உணவைப் பொட்டலமாக வாங்கி காரில் சாப்பிட்டுக் கொண்டே பாண்டிச்சேரி -கடலூரை அடுத்த பரங்கிப்பேட்டையில் இன்று மாலை நாடகம் நடத்த பயணமானேன்.
குழுவினர் அதிகாலையே பிரைவேட் பஸ்ஸில் அங்கு சென்று சேர்ந்திருப்பார்கள். கடலூர் தாண்டி 30 மைல் தூரத்தில் பரங்கிப்பேட்டை உள்ளது.
உடன் நடிக்கும் நடிகர்கள் சிலர், ஒப்பனையாளர்கள் என்னோடு வந்தனர். 5.30 மணிக்குப் பரங்கிப்பேட்டைக்குச் சென்று நாடக மேடை ஏற்பாடெல்லாம் பார்த்துவிட்டு 6.30 மணிக்கு நாடகம் ஆரம்பிக்க, ஒப்பனை செய்துகொள்ளப் போனேன். 10 நிமிடத்தில் ஒரு பேய் மழை பிடித்து, சூறைக்காற்றுடன் விளாசித் தள்ளியது. மழை நின்றதும் நாடக மேடையருகே சென்றேன். காற்றின் வேகத்தில் கொட்டகை குப்புற விழுந்து கிடந்தது. மின் சாதனங்கள், எலக்ட்ரிக் ஒயர்கள் எல்லாம் நீரில் மிதந்து கொண்டிருந்தன.
மீண்டும் கொட்டகையை நிமிர்த்தி நாடகத்தை ஆரம்பிக்க 10 மணிக்கு மேலாகலாம். அதை விட கடற்கரையோரமுள்ள மணல் பகுதியில் ஏற்பாடு செய்ததில், மக்கள் உட்காரும் இடத்தில் 2 அடி உயரம் தண்ணீர் நின்றது. இது வடிந்து கொட்டகையை தூக்கி நிறுத்தி இன்று இரண்டு நாடகம் போட முடியாது என்று தெரிந்தது.
நாடகக்குழு மேனேஜர் வந்தார். ‘சார்! நாளை திங்கட்கிழமை. நடிகர்கள் சில பேர் ஆபீஸ் போயே ஆக வேண்டும் என்கிறார்கள். நாளைதான் நாடகம் போட முடியும் என்றால் ஒரு கார் ஏற்பாடு செய்து அவர்களை சென்னைக்கு அனுப்பி அதே காரில் பிற்பகல் 1 மணிக்கு அவர்கள் கிளம்பி இங்கு 6 மணிக்கு வரச் சொல்லலாம் என்றார்.
அதிகாலை பரங்கிப்பேட்டையிலிருந்து கிளம்பிய கார் திண்டிவனம் பக்கம் ‘ஆக்ஸில்’ கட் ஆகி, நடு வழியில் நின்றுவிட்டது என்று போன். அங்கிருந்து ஒரு டாக்ஸி பிடித்து எப்படியாவது சென்னை போய்ச் சேருங்கள் என்றேன்.
ஆபீஸிலிருந்து பிற்பகல் புறப்பட ஏபிஎன் கம்பெனிக்கு போன் செய்து கார் தர முடியுமா என போனில் கேட்டேன். கார் இருக்கிறது டிரைவர் இல்லை என்றார்கள். ஒரு வழியாக மாற்று டிரைவர் ஏற்பாடு செய்து 5.30 மணிக்கு சென்னையில் புறப்பட்டனர்.
6.30 மணிக்கு பரங்கிப்பேட்டையில் நாடகம் தொடங்க வேண்டும். நேற்றே நாங்கள் நாடகம் போட அங்கு வந்து விட்ட விஷயம் பக்கத்து கிராமங்களுக்கெல்லாம் எட்டி, திருவிழா கூட்டம் போல திமுதிமுவென்று 6 மணிக்கு சுமார் 3000 பேருக்கு மேல் கூடி தரையில் சம்மணமிட்டு அமர்ந்து விட்டார்கள்.
6.30 மணி ஆயிற்று. 7 மணி ஆயிற்று. கூச்சல் ஆரம்பமாகி விட்டது. சில சினிமா பாடல் ரிக்கார்டுகளை ஒலிபரப்பி கொஞ்சம் சமாதானப்படுத்தினோம். 8 மணிக்கு மக்களுக்குப் பொறுமை போய்விட்டது.
வேறு வழியில்லை. நானே மேடையில் தோன்றி, ‘பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே - உனக்காக எல்லாம் உனக்காக, குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே.., புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை!’ என சந்திரபாபு பாடல்களை பாடி -சிறுவயதில் மனப்பாடம் செய்து வைத்திருந்த பராசக்தி, மனோகரா வசனங்களை மூச்சிரைக்கப் பேசிக்காட்டி ஓய்ந்து போவதற்குள் சென்னையிலிருந்து கார் வந்து சேர்ந்தது. மணி 10.30, ஒப்பனை ஏதும் வேண்டாம். அப்படியே மேடை ஏறுங்கள் என்று சொல்லி மீசை தாடியை மட்டும் ஒட்டிவிட்டு நாடத்தை நடத்தி முடித்தபோது இரவு ஒரு மணி.
பலத்த கரகோஷத்துடன், ஆரவாரத்துடன் கைதட்டி, அந்த மக்கள் ரசித்தபோது பட்ட துன்பமெல்லாம் மறந்து போய்விட்டது.
----
அனுபவிப்போம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago