திரைப்படச்சோலை 15: எம்.ஆர். ராதா

By செய்திப்பிரிவு

1970- நவம்பர் 1-ம் தேதி சென்னை சிறையில் எம்.ஆர்.ராதா அவர்களைச் சந்தித்தேன். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கைதிகளை மகிழ்விக்கவும், இனிப்பு வழங்கவும் என்னையும் ஜெமினி கணேசன் அவர்களையும் ஒரு அமைப்பு கேட்டுக்கொண்டது. அதனால் அன்று மாலை நானும் ஜெமினி மாமாவும் சிறைக்குச் சென்றோம்.

எம்.ஜி.ஆர்- எம்.ஆர்.ராதா துப்பாக்கிச் சூடு வழக்கில் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். டைரக்டர் பீம்சிங் இயக்கிய ‘பாகப்பிரிவினை’- ‘பாவ மன்னிப்பு’ - போன்ற படங்களில் குணச்சித்திரமும், வில்லத்தனமும் கலந்த வேடங்களில் அவர் நடித்தது போல் இன்னொரு நடிகரை நாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

‘பாகப்பிரிவினை’ படத்தில் ஒரு கை, ஒரு கால் விளங்காத சிவாஜி இடது கையை மடித்து வைத்துக் கொண்டு காலை விந்தி விந்தி நடப்பார்.

எந்த நேரம் ராதா என்ன வசனம் பேசுவார் என்று டைரக்டருக்கே தெரியாது. ஸ்கிரிப்ட்டில் இல்லாததை சேர்த்துப் பேசுவார். உடன் நடிக்கும் நடிகர் திண்டாடுவார்.

ஒரு ஷாட்டில் சிவாஜியிடம் போய் ராதா ஏதோ பேச வேண்டும். ஆனால் கேமரா ஓட ஆரம்பித்ததும், ராதா பேச ஆரம்பித்து விட்டார்.

எம்.ஆர்.ராதா (ஓவியம்)

‘‘காதுல ரெண்டு டேஞ்சர் லைட்டு. கையை மந்தி மாதிரி வச்சுகிட்டு, படிக்காத பய, நாய்க்குப் பிஸ்கட் போடறான்’’ என்று சொந்தமாக ‘டயலாக்’ சொல்லிச் சிரிக்க, - சிவாஜி என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பேந்தப் பேந்த விழிப்பார். படத்தில் இன்னும் அந்த ‘ஷாட்’ உள்ளது.

‘ரத்தக்கண்ணீரி’ல் குஷ்டரோகம் வந்து கண் பார்வை மங்கி, பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்துவிடுவார். தன் வீட்டுக்கே சென்று மனைவியிடம் பிச்சை கேட்பார்.

‘‘ஏனய்யா! உங்களுக்கு இந்த நிலைமை வந்துச்சு?’’ -அந்த அம்மா.

‘‘எல்லாம் கொண்டவளை விட்டுட்டு கண்டவ கூட போனா இப்படித்தான் ஆகும்!’’

‘‘எங்க வீட்டுக்காரர் கூட இப்படித்தான் ஆயிட்டாரு!’’

‘‘ஒரு வேளை நாந்தான் உன் ஊட்டுக்காரனோ?’’

‘‘என்ன சொல்றே!’’

‘‘இல்லம்மா! என் வாய் சும்மா இருக்க மாட்டேங்குது!’’

சாதம் போட்டு விட்டு, ‘ரோடில் கல்லு கொட்டியிருக்காங்க. பாத்துப் போங்க!’ என்பார் - ரஞ்ஜனி அவர் மனைவி.

இவர் அந்தக் கல் குவியல் மீது வேண்டுமென்றே விழுந்து, ‘அய்யோ! அப்பா!’ என்று கூச்சல் போட்டு, ‘கல்லைக் கொட்டி 2 மாசம் ஆச்சு. ரோடு போட இன்னும் 4 மாசம் பண்ணுவானுங்க போலிருக்கு!’’ என்று கிண்டலாக கமெண்ட் அடிப்பார்.

எம்.ஆர்.ராதா

படத்தின் கிளைமாக்ஸில் -கடற்கரைச் சாலையில் நடந்து வருவார். இவர் நண்பர் எஸ்.எஸ்.ஆர் எதிரே வருவார்.

‘‘ஐயா! பசி தாங்க முடியலே. ஏதாவது பிச்சை போடுங்க!’’

‘‘ஏம்பா, நடு ரோட்ல கேட்டா எப்படி? வா, ஓட்டல்ல சாப்பாடு வாங்கித் தர்றேன்!’’

‘‘ஓட்டலுக்கா! வேணாம்பா, கண் இருக்கறவனே, கை வச்சு நிரண்டறான், கல் பொறுக்க. கண்ணில்லாத நான் எப்படி அங்க வர்றது?’’ - என்பார்.

எஸ்.எஸ்.ஆர் வீட்டு வாசலில் பெட்டி தூக்கி வந்த கூலி ஆளுக்கு அவர் 8 அணா கொடுப்பார்.

‘‘என்ன சாமி எட்டணா தர்றீங்க. கொஞ்சம் பார்த்துப் போட்டுக் குடுங்க. சிங்காநல்லூர்லருந்து தூக்கிட்டு வர்றேன்!’’

‘‘பேசினதே அவ்வளவுதானேப்பா. இப்ப திடீர்னு அதிகமா கேக்கறியே?!’’

ராதா இடைமறித்து, ‘‘நீ பொழைக்கத் தெரியாத ஆளுப்பா -முதல்ல 4 அணா குடுத்து -மேற்கொண்டு கேட்டா 4 அணா குடுத்திருந்தீன்னா -பேசாம போயிருப்பான்!’’

கூலி ஆள், ‘‘யோவ், இதுக்குத்தான்யா ஆண்டவன் உனக்குக் கூலி குடுத்திருக்கான்!’’

‘‘என்ன கூலி குடுத்திருக்கான். நீ சுமந்து திங்கறே. நான் சும்மா திங்கறேன். போடா..!’’ என்பார்.

எஸ்.எஸ்.ஆரிடம் திரும்பி, ‘‘சாப்பாடு போடறது போடறீங்க. கொஞ்சம் கறி சோறு போட்ட நல்லா இருக்கும். சாப்பிட்டு நாளாச்சு!’’

‘‘ஐயய்யோ! நாங்க அசைவம் சாப்பிட மாட்டோம்!’’

‘‘ஏங்க?’’

‘‘நாங்க ஜீவகாருண்ய கட்சி’’

‘‘அப்படின்னா?’’

‘‘உயிர்களைக் கொல்ல மாட்டோம்!’’

‘‘சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. ராத்திரியில மூட்டைப் பூச்சி கடிச்சா என்ன பண்ணுவீங்க?’ - வேணாம்பா! இந்த வாய் சும்மா இருக்க மாட்டேங்குது. ஏதாவது பேசி கிடைக்கற சோத்துக்கும் ஆபத்து வந்திடப் போகுது’’...

தியேட்டரில் சிரிப்பொலி அடங்க நேரமாகும்.

1958-ல் சென்னை வந்து மோகன் ஆர்ட்ஸில் பயிற்சி ஓவியனாக இருந்தபோதே என் மாமாவின் வேண்டுகோளை ஏற்று தெற்கு போக் ரோட்டிலிருந்த ராதா அவர்களை நான் சந்தித்திருக்கிறேன்.

எம்.ஆர். ராதாவின் நாடகக்குழு பொள்ளாச்சியில் முகாமிட்டு 10 நாள் நாடகங்கள் போட்டபோது - எனது மாமா நாடகக்குழுவினர் சுமார் 50 பேரையும், தன் ஹோட்டலில் 3 வேளையும் இலவசமாகச் சாப்பிட்டுப் போகச் சொல்லியிருக்கிறார். அசைவ ஓட்டல் அது. வறுமையிலும், பசியிலும் இருக்கும் நாடக நடிகர்கள் சும்மா ஒரு கட்டு கட்டுவார்கள்.

பிறவியிலேயே முரட்டு சுபாவம் உள்ளவர் ராதா. அப்பா ராஜகோபால் நாயுடு. பழைய சாமான் வாங்கி விற்கும் ஆக்கர் கடை வைத்திருக்கிறார். பின் ராணுவத்தில் சேர்ந்து ரஷ்யா எல்லையில் பஸ்ஸோவா என்ற இடத்தில் போரில் மாண்டவர்.

அண்ணன் ஜானகிராமனுக்குப் படிப்பு நன்றாக வரும். இவரும் தம்பி பாப்பாவும் படிப்பில் மட்டம். ஆலந்தூர் ‘டப்பி’ ரங்கசாமி நாயுடு முதன்முதல் நாடகத்தில் நடிக்க அழைத்தார். ராஜா, மந்திரி வேடம் போடுவோருக்கு கை, கால் அமுக்கிவிடும் வேலை ராதாவுக்கு.

ரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதா

மைசூர் சாமண்ணா அய்யர் - பி.ஏ படித்தவர் - ‘டம்பாச்சாரி’ நாடகத்தில் 13 வேடம் போட்டு நடிப்பார். அவர் நாடகக் கம்பெனியில் எஸ்.வி. வெங்கடராமன், பி.டி. சம்பந்தம், கே. சாரங்கபாணி, சி.எஸ்.ஜெயராமன், யதார்த்தம் பொன்னுசாமி, நவாப் ராஜமாணிக்கம் போன்றோர் நடித்து வந்தனர்.

‘நாடக உலகின் தந்தை’ - ஜெகநாத அய்யர் கம்பெனியில் ராதா டிரைவர், மெக்கானிக், எலக்ட்ரீஷியன், நடிகர் - எனப் பல வேலைகள் செய்வார்.

வெள்ளையனை விரட்ட, காந்தி வழியை விட பகத்சிங் வழியை ஆதரித்தார். மாயவரத்தை அடுத்த தில்லையாடி வள்ளியம்மை ஆதி திராவிடப் பெண், தென்னாப்பிரிக்காவில் நிறவெறியை எதிர்த்து காந்தி போராடியபோது அவருக்கு பக்கபலமாக இருந்து உயிர்த் தியாகம் செய்தவர். அவர் ஊருக்கு காந்தி வந்து பேசிய போது கூட்டத்திலிருந்தோர் தங்கள் ஆடைகளைக் களைந்து நெருப்பில் போட்டு எரித்தனர். ராதாவும் தான் கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து நெருப்பிலே போட்டார்.

பிரபலமான பிறகு ‘இம்பாலா’ கார் வாங்கினார். வர்ணம் அடித்த தகரத்துக்கு இத்தனை மரியாதையா என்று மாடுகளுக்கு வைக்கோல் வாங்கி, அந்த காரில் ஏற்றி வீட்டுக்கு அனுப்புவார்.

குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனுக்குப் பயன்படுத்த அந்தக் காரைக் கேட்டபோது ராதா ஓட்டவே தகுதியில்லாத காரில் ராதாகிருஷ்ணன் செல்லக்கூடாது என்று மறுத்துவிட்டார்.

‘ராஜசேகரன்’ முதல் படம். ஹீரோ ஈ.ஆர்.சகாதேவன். திரைக்கதை, டைரக்ஷன் செய்த டி.ஆர். பிரகாஷ் பணக்கார வீட்டுப் பிள்ளை. ராதா மேலுள்ள கோபத்தில் இவரைப் பலமுறை குதிரை மேலிருந்து குதிக்கச் சொல்லி காலை ஒடித்து விட்டார்.

இழந்த காதல் நாடகத்தில் வில்லன் ஜெகதீசாக மேடையில் கொடி கட்டிப் பறந்தார். இவருக்கு ஜோடியாக சரோஜா என்ற தாசி வேடத்தில் சிவாஜி நடித்தார்.

ஈரோடு, பெரியாரின் குடியரசு இதழில் பணிபுரிந்த அறிஞர் அண்ணா தினமும் சேலம் வருவார். ஹாலிவுட் நடிகர் பால்முனி என்று ராதாவைப் புகழ்ந்து விமர்சனம் எழுதினார்.

கலைவாணர் ‘இழந்த காதல்’ கதையைத் திரைப்படமாக எடுத்தபோது கதாநாயகன் ஜெகதீஷ் வேடத்திற்கு, பராசக்தி பூசாரியாக நடித்த கே.பி.காமாட்சியை ஒப்பந்தம் செய்தார். தனக்கு துரோகம் செய்த கலைவாணரைச் சுட ராதா துப்பாக்கி ஒன்று தயார் செய்து கலைவாணரைத் தேடினார். அதற்குள் அவரே ராதாவைச் சந்தித்து, ‘அடேயப்பா! நீ பெரிய நடிகன். உன்னை மிரட்டி வேலை வாங்க பயந்துதான், காமாட்சியைப் போட்டேன். சுடணும்னா இப்பவே சுடு!’’ என்று நெஞ்சைத் திறந்து காட்ட சமாதானமாகி விட்டார்.

பெரியார், அண்ணா, ஈ.வி.கே.சம்பத் ராதா நாடகத்தை, தரையில் அமர்ந்து பார்த்து ரசிப்பார்கள்.

ஆனால், அதே பெரியார், ஈரோடு நாடகக் கொட்டகைக்குத் தரவேண்டிய கடன் பாக்கியைத் தராததால், நாடகத்திற்குப் பயன்படுத்தும், சீன், செட், மைக் எல்லாவற்றையும் ஒரு வீட்டுக்குள் வைத்து பூட்டுப் போட்டு விரட்டியடித்தார்.

கோவை ஜி.டி.நாயுடுவின் தொழிற்பள்ளியில் நாடகம் போட்டபோது விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் தலைமை ஏற்று, அஞ்ஞானத்தைப் போக்க வெறும் விஞ்ஞானம் படித்தால் போதாது; இது போன்ற புரட்சிக் கருத்துள்ள நாடகங்களும் தேவை!’’ என்று பேசினார்.

நாட்டு நிலைமையைப் படம் பிடித்துக் காட்டும் ராதாவுக்கு , காலத்தைப் படம் பிடித்துக் காட்டும் கைக்கடிகாரத்தை பரிசாக அளிக்கிறேன் - என்றார் ஜி.டி.நாயுடு.

நாகப்பட்டினத்தில், ‘விதவையின் காதல்’ அரங்கேற்றத்தைத் தடை செய்வார் கலெக்டர் கணேசய்யர் என்று எதிர்பார்க்க, அவர் மனதாரப் பாராட்டி விட்டுப் போனார்.

அன்றைய தமிழக முதல்வர் டி.பிரகாசம் கம்யூனிஸ்ட்டுகளைக் கைது செய்து சிறையில் அடைத்தார். தலைவர் ஜீவானந்தத்திற்கு மொட்டை அடித்து, பட்டை தீட்டி, நாடகக் கொட்டகையின் முதல் வரிசையில் அவரை அமர வைத்து நாடகம் பார்க்க வைத்தார் ராதா.

ஜீவா காதல் வயப்பட்டு, பத்மாவதிக்கு கடிதங்கள் எழுதிய நாட்களில் அவற்றை ராதா புறாவிடும் தூது போல கொண்டு போய் பத்மாவதியிடம் கொடுப்பார்.

திருவாரூர் சிங்கராயர் சிபாரிசில் வந்த கலைஞரின் ‘தூக்கு மேடை’ நாடகத்தை வாங்கி அரங்கேற்றினார்.

அறிஞர் அண்ணாவின் ‘ஓர் இரவு’ - என்று ராதா நாடக விளம்பரம் செய்தபோது அறிஞர் கருணாநிதியின், ‘தூக்கு மேடை’ என்று ராதா விளம்பரம் தயாரித்தார். ஆனால், அறிஞர் பட்டம் அண்ணாவுக்கு மட்டும்தான் எனக்கு அந்தப் பட்டம் வேண்டாம் என்று மறுத்து விட்டார்.

1952-ல் ஏவிஎம் -பராசக்தியில் நடிக்க சிவாஜிக்கு மாதச் சம்பளம் 250 ரூபாய். அதே ஏவிஎம்-மில் 1954-ல் ரத்தக்கண்ணீர்-ல் நடிக்க ராதா 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினார்.

பாய்ஸ் கம்பெனி நாடகங்களில் ஆண்களுடனே நடித்து வந்த ராதா கோவையைச் சேர்ந்த நடிகை பிரேமா அழகில் மயங்கினார். தங்க, வைர நகைகளில் அவரை கனகாபிஷேகம் செய்தார்.

அம்மை நோயில் அவர் அகால மரணமடைந்தபோது கோவை பாலக்காடு ரோட்டிலுள்ள மயானத்தில் அவருக்குக் கோயில் போன்ற ஒரு சமாதி கட்டினார்.

ஜி.டி. நாயுடு அதைக் கிண்டல் செய்தபோது -மும்தாஜ் நினைவாக தாஜ்மகால் கட்டிய ஷாஜகான் முட்டாள் என்றால் நானும் முட்டாள்தான் என்று பதிலளித்தார்.

1957 -குளித்தலை தேர்தலில் கலைஞரை எதிர்த்துப் போட்டியிட பெரியார், மணியம்மை, வீரமணி ஆகியோர் கேட்டபோது பிடிவாதமாக மறுத்துவிட்டார்.

ஒரு தடவை, ‘உங்களுக்குச் சிறந்த குணச்சித்திர நடிகர்னு ஜனாதிபதி விருது குடுக்கப் போறாங்களாம்!’ என்றதற்கு - ‘நான் யாருன்னு ஜனாதிபதிக்குத் தெரியுமா? என்னை யாருன்னே தெரியாத ஒருத்தர குடுக்கற அவார்டு எனக்கு வேண்டாம். மக்கள்தான் என் எஜமானர்கள்!’ என்று தவிர்த்து விட்டார்.

கொலை வழக்கில் ராதா சிறை வந்த செய்தி பீம்சிங் போன்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 2 மாதம் கழித்து ராதாவைப் பார்க்க சென்ட்ரல் ஜெயில் பீம்சிங் போனார். துக்கம் தொண்டை அடைக்க, கண்களில் கண்ணீர் சுரக்க, ‘அண்ணா’ என்றார் பீம்சிங்.

‘‘வாயா! பீம்பாய்! எப்படி இருக்கே?’’

‘‘நீங்க எப்படி இருக்கீங்க, அண்ணா?’’

‘‘இங்கே எனக்கு ராஜ உபச்சாரம்தான். திராவிடர் கழக பாய்ஸ்தான் ஜெயில் அதிகாரிங்க.. வெளியிலிருந்து சிக்கன், மட்டன், பிரியாணி எல்லாம் வருது. சாப்பிட்டு நல்லா தூங்கறேன். பிக்பாக்கட் பசங்க கால் அமுக்கி விடறாங்க. ஒரு குறையுமில்லை. வெளியே இருந்தா குடிச்சே செத்திருப்பேன்!’’ என்றார்.

ஜெமினியும், நானும் போய் அவரைச் சந்தித்தோம். என்னைப் பார்த்ததும், ‘‘புதுசா நீ படங்கள்ல நடிக்கற செய்தி பேப்பர்ல படிக்கிறேன்!’’ என்றார்.

‘‘பொள்ளாச்சி ஆறுமுகக்கவுண்டர் ஞாபகம் இருக்குங்களா?’’

‘‘நம்ம தோஸ்த் ஆச்சே! எப்படி இருக்கிறார்?’’

‘‘அவர் சமீபத்தில் இறந்துட்டார். 10 வருஷத்துக்கு முன்னாடி அவர் ஒரு பையனை அனுப்பி, உங்களைப் பாக்கச் சொன்னார். அந்தப் பையன் உங்க படம் போட்டுக் கொண்டு வந்து காட்டினான். ஞாபகம் இருக்குங்களா?’’

‘‘ஆமா. போட்டோ மாதிரியே இருந்துச்சு. நடிக்க சான்ஸ் கேட்டான். முட்டாள். பவுடர் போட்டவன் எல்லாம் நடிகன்னு சொல்லிக்கலாம். ஆனா, பிரஷ் எடுத்தவன் எல்லாம் ஆர்ட்டிஸ்ட் ஆக முடியாது. ஏதோ பொம்மை காலேஜ் இருக்குன்னு சொன்னியே அங்கே போய்ப் படி. அதுக்கப்புறம் தலையெழுத்து இருந்தா சினிமாவக்கு வா!’-ன்னு சொன்னேன்!’’

‘‘அந்தப் பையன் நான்தான் சார்..!’’

‘‘அடப்பாவி! நீதான் இப்ப நடிகனா ஆயிட்டியா?’’ன்னு சிறைச்சாலை அதிருகிற மாதிரி அட்டகாசமாக ஒரு சிரிப்பு சிரித்தார்.

--

அனுபவிப்போம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்