திரையுலகில் நான் அறிமுகமான 1965-ல் என் முதல் படம் 'காக்கும் கரங்கள்' வெளிவந்து, 3 மாதங்களில் நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சி நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. எம்ஜிஆர் தவிர சிவாஜி, ஜெமினியில் தொடங்கி சாவித்திரி, பத்மினி என்று அந்நாள் ஹூரோக்கள், ஹூரோயின்கள் இந்நாள் ஹீரோக்கள், ஹீரோயின்கள் அத்தனை பேரையும் ஒப்பனை இல்லாமல், பட்டப்பகலில் நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
சிவாஜி டீமில் நான் இருந்தேன். அதிர்ஷ்டவசமாக நான் ‘பவுலிங்’ செய்து 2 பேரை அவுட் ஆக்கியது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. காரணம் கிரிக்கட்டுக்கான முறையான பயிற்சி எடுக்க அவகாசமில்லை. அதோடு நான் ‘லெப்ட் ஹேண்டர்’. இடது கையால் பந்து வீசியதை எல்லோரும் ஆச்சர்யமாகப் பார்த்தனர்.
பிற்பகல் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம். சமீபத்தில் இறந்துவிட்ட கட்டபொம்மன் ஜாக்சன் துரை பார்த்திபன், முத்துராமன், ஏவிஎம்.ராஜன், நாகேஷ் ஆகியோருடன் நானும் ஓடினேன்.
கடைசிவரை நான்தான் முன்னால் இருந்தேன். ‘போட்டோ ஃபினிஷ்’-ல் நாகேஷ் மூக்கை நீட்டி ஜெயித்து விட்டார்.
‘என்னப்பா இந்த ஓட்டம் ஓடறே?’ என்றார்.
‘சார்! உள்ளதிலயே நான்தான் சார் சின்னப் பையன்!’ என்றேன்.
‘காக்கும் கரங்கள்’ படத்தில் நாகேஷ் நடித்திருப்பினும் படப்பிடிப்பு சமயம் நாங்கள் சந்தித்துக் கொள்ள வாய்ப்பில்லை. இருப்பினும் அவர் தாராபுரம், நான் கோவை மண்ணைச் சேர்ந்தவன் என்பதால் அறிமுகத்தில் ஒரு நெருக்கம் காட்டினார்.
‘சர்வர் சுந்தரம்’, ‘திருவிளையாடல்’ படங்கள் வெளியாகி இருந்த சமயம். சர்வர் சுந்திரத்தில் நகைச்சுவைக் காட்சிகளுடன் உருக்கம் கலந்த ஹீரோ வேடம். 'திருவிளையாடல்' தருமி நடிப்பு, நாகேஷ் திரும்பவும் முயன்றாலும் நடிக்க முடியாத சூப்பர் ‘பெர்பாமன்ஸ்’.
ஸ்டேடியத்தில் ரசிகர்களுக்கு மரியாதை செய்யும் விதத்தில் நடிகர்கள் வரிசையாக ஸ்டேடியத்தைச் சுற்றி வந்தபோது நாகேஷ் செய்யும் சேட்டைகளுக்கு கேலரியே அதிரும். அப்படி ஒரு ‘க்ரேஸ்’. எல்லா நிகழ்ச்சியும் முடிந்து நடிகர் முத்துராமன் காரில் (சூப்பர் செலக்ட் ஃபியட்) நாகேஷும் நானும் ஏறிக் கொண்டோம்.
கார் கடற்கரை சாலையில் நுழைய ஆரம்பித்தபோது அடை மழை. வானமே பொத்துக் கொண்டு ஒழுகுவது போல கொட்டித் தீர்த்தது. ‘வைப்பர்’ எவ்வளவு வேகமாக வேலை செய்தாலும் ரோடு தெரியாத அளவுக்கு கார் மீதும் கொட்டியது மழை.
உழைப்பாளர் சிலை பக்கம், காரை நிறுத்தச் சொன்னார் நாகேஷ். அடைமழையை சட்டை செய்யாமல், ஏதோ தென்றல் வீசும் கடற்கரைக்கு உலா வந்தது போல குஷியாக நடந்தார். கடற்கரை மணலில் பாதி தூரம் சென்ற பின் மழையின் அடர்த்தியில் கடலும் மறைந்துவிட்டது. மறுபுறம் கட்டிடங்களும் மறைந்துவிட்டன.
தன்னுடைய கடந்த கால வாழ்க்கையை ‘ஃபிளாஷ் பேக்’-ஆகச் சொல்ல இப்படி ஒரு சூழல் யாருக்குக் கிடைக்கும்?
மழை நீரை கண்கள் மேல் வாங்கிக் கொண்டு, ஒரு முறை ஆகாயத்தைப் பார்த்துவிட்டு ஆரம்பித்தார்.
கோவை தாராபுரத்தில் மாத்வா பிராமணர் (கன்னடம்) குடும்பத்தில் பிறந்தவர் நாகேஷ். தந்தை ரயில்வேயில் அப்போது வேலை பார்த்தார்.
இளம் வயதில் துக்கிரியாக, துடுக்குத்தனம் மிக்கவராக இருந்திருக்கிறார். 200 அடி கோயில் குளத்தில் இந்த முனையில் நீருக்கடியில் போய் 20 அடி ஆழத்தில் வாழை மீன் போல நீந்தி, யார் கண்ணுக்கும் தெரியாமல், அடுத்த கரையில் வந்து ‘ஹேய்’ என்று வெற்றிக் குரல் கொடுப்பார்.
சைக்கிள்களில் ‘ஹெர்குலஸ்’ வண்டிதான் கனம் அதிகம். அந்த சைக்கிளை ஒரு விரலால் தூக்கிக் காட்டுவார்.
குண்டுக் கன்னத்தில் குழி விழ, இவர் சிரிக்கும் அழகை அப்படி ரசித்த மூத்த சகோதரி குண்டுராவ் என்றே அழைப்பார்.
பி.எஸ்.ஜி., கல்லூரியில் -கோவையில் சேர்ந்த சமயம், அம்மை போட்டது. உச்சந்தலையில் இருந்து உள்ளங்காலிலும் கொப்புளம் முகமெல்லாம் கழுகு கொத்தி எடுத்தது போல துளைகள். போதாததற்கு மூன்றாவது முறையும் அம்மை போட்டு முகத்தில் இனி எங்கும் இடமில்லை என்னும் அளவுக்கு அம்மை தழும்புகள் குழி, குழியாய். கண்ணாடியில் பார்த்தபோது, இந்த முகத்துடன் இனி வாழப்போகிறேனா என்று தற்கொலை செய்யத் தோன்றியதாம்.
ஒரு வழியாக ஊரை விட்டு சென்னை வந்து ரயில்வேயில் குமாஸ்தா வேலையில் சேர்ந்தார். பெரும்பாலான அலுவலக நேரத்தில் வேலை இருக்காது. அரை மணி நேரம் மேடையில் ஏறி ஜோக்குகள் சொல்லி மக்களைச் சிரிக்க வைக்கிறாற்போல இவரே ஸ்கிரிப்ட் தயார் செய்து -மாலை நேரங்களில் எந்தத் திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி இருந்தாலும் -தம்பதி மேடைக்கு வரும் முன்பு பெற்றோர் அனுமதி பெற்று, மேடை ஏறி, வந்திருந்தவர்களிடம் தன் வித்தையைக் காட்டி கைதட்டல் பெற்றே கீழே இறங்குவார்.
நடிகர் ஸ்ரீகாந்தின் உண்மைப் பெயர் வெங்கடராமன். வெங்கி என்று எல்லோரும் அழைப்பார்கள். நாகேஷ், வாலி, ஸ்ரீகாந்த் அப்போதே நெருங்கிய நண்பர்கள். அமெரிக்கத் தூதரகத்தில் ஸ்ரீகாந்துக்கு நல்ல சம்பளத்தில் நிரந்தர வேலை. கொஞ்ச நாள் மாம்பலம் கிளப் ஹவுஸில் ஸ்ரீகாந்த் தங்கியிருந்தபோது வாலியும், நாகேஷும் அவர் ரூமில் அடைக்கலம் புகுவார்கள். ஸ்ரீகாந்த் நன்றாகச் சமைப்பார். சமையல் தயாரானதும் கனவு நாயகர்களை அழைத்து, ‘வாங்கடா! கொட்டிக்குங்க!’ என்று வாலியையும், நாகேஷையும் அழைத்து உணவு பரிமாறுவார்.
நாகேஷின் நகைச்சுவையை ஒரு திருமணத்தில் பார்த்த அன்றைய நடிகர் -பின்னாளில் தயாரிப்பாளர் பாலாஜி -அவரை தன் வீட்டுக்கே அழைத்துப் போய் தங்கவைத்து தன் நாடகங்களில் நகைச்சுவை வேடங்களில் நடிக்க வைத்தார்.
தான் ஹீரோவாக நடிக்கிற படங்க்ளின் டைரக்டர்களிடம், என் நாடகக் குழுவில் ஒரு காமெடியன் பிரமாதமாக நடிக்கிறான். அவனுக்கு நம் படங்களில் ஏதாவது ஒரு வேஷம் கொடுங்கள் என்று கேட்பார். நாகேஷ் போனதும் அவர் முகத்தைப் பார்த்துவிட்டு, பாலாஜிக்கு உடனே போன் செய்து, ‘பாலாஜி உங்களுக்கு பேசின சம்பளத்தை விட கொஞ்சம் கூட்டித் தர்றோம். இந்த மூஞ்சிக்கு நம்ம படத்தில் வேஷம் தர முடியாது!’ என்று சொல்வார் டைரக்டர்.
இப்படியெல்லாம் அவமானப்பட்டு 'தாமரைக்குளம்' படத்தில் துண்டு வேடத்தில் அறிமுகமாகி, 'நெஞ்சில் ஓர் ஆலயம்' படம் அவரை திரும்பிப் பார்க்க வைத்தது.
ஊரில் உள்ள அம்மாவுக்கு, ‘இன்னும் கஷ்டப்பட்டுட்டுத்தான் இருக்கேன் அம்மா!’ என்று பொய்யாக கடிதம் எழுதிவிட்டு, ஒருநாள் பெட்டி நிறைய கரன்சி நோட்டுகளை அடுக்கி எடுத்துப் போய், அம்மாவிடம் திறந்து காட்டி அதிர்ச்சி வைத்தியம் தர ஆசை அவருக்கு.
அந்த நாளும் வந்தது. பெட்டி நிறைய 500 ரூபாய் நோட்டுகள். சில லட்சங்கள் சேர்ந்தது. எடுத்துக்கொண்டு காரில் தாராபுரம் புறப்பட்டார்.
விழுப்புரத்தை கார் தாண்டும் நேரம். தாயார் மரணச் செய்தி சென்னைக்கு வந்து சேர்ந்தது. இன்று போல் செல்போன் வசதி கிடையாது. டிரங்காலில் கூப்பிட்டுச் சொல்லவும் வழியில்லை. கார் பயணம்.
அதிகாலை பழனி, தாராபுரம் சாலையில் கார் செல்கிறது. அமராவதி பாலத்தின் மேற்கு முனையில் சுடுகாடு, பாலத்தின் கிழக்கு முனையில் கார். வைக்கோல் ஏற்றிய 10 மாட்டு வண்டிகள் பாலத்தில் வந்து கொண்டிருக்கின்றன. எதிரே இன்னொரு வண்டி செல்ல முடியாத அளவு குறுகிய பாலம்.
மகன் வருவான் வருவான் என்று பார்த்து 7.30 மணிக்கு சடலத்திற்கு தீ மூட்டி விட்டனர். அடுத்த 5-வது நிமிடம் நாகேஷ் போய் பார்க்கிறார். தன்னை ஈன்றவளை தீ தின்று கொண்டிருந்தது.
‘அய்யோ! அம்மாவிடம் உண்மையைச் சொல்லி, நான் வசதியாகத்தான் இருக்கிறேன் என்பதைத் தெரிவித்திருந்தால் அவள் செத்திருக்க மாட்டாளோ -தலையில் அடித்துக் கொண்டு அழுது, புலம்பி -சென்னைக்கு பிரமை பிடித்தவர் போல் வந்து, 17 நாள் படுக்கைக்குச் செல்லாமல் ஒரு நாளைக்கு 6 படங்களுக்கு தினம் 2 மணி நேரம் கால்ஷீட் கொடுத்து இரவு பகலாக பேயாய் வேலை செய்தாராம். 'சர்வர் சுந்தரம்' க்ளைமேக்ஸ் நாகேஷ் வாழ்க்கையில் உண்மையில் நடந்த சம்பவம்.
ஏஜிஎஸ் அலுவலகத்தில் மேஜர் சந்திரகாந்த் நாடகத்தை ஆங்கிலத்தில் எழுதி மேஜர் வேடத்தில் நடித்த கே. பாலசந்தர் தொடர்பு ஏற்படுகிறது. அவர் போட்ட நாடகம்தான் 'சர்வர் சுந்தரம்'. சென்னையைக் கலக்கியது. ஏவிஎம் படமாகத் தயாரித்தனர். ஆனால், கிருஷ்ணன் பஞ்சு இயக்கினர்.
‘நீர்க்குமிழி’ என்ற கே.பி.நாடகத்தை திரைப்படமாக எடுக்க முன்வந்த தயாரிப்பாளர் -கதாசிரியர் ஏ.கே.வேலன் பாலசந்தரை முதன்முதலில் டைரக்டராக அறிமுகப்படுத்தினார். படத்தின் ஹீரோ நாகேஷ். 'பாமா விஜயம்', 'மேஜர் சந்திரகாந்த்', 'எதிர் நீச்சல்', 'நவக்கிரகம்' ஆகிய படங்களில் நாகேஷ் பட்டை தீட்டப்பட்ட வைரமாக மிளிர்ந்தார்.
'திருவிளையாடல்' தருமி வேடம், நாகேஷ் வாழ்க்கையில் மாஸ்டர் பீஸ். சிவாஜி உச்சத்தில் இருக்கிறார். ஏதோ வேலியில் போற ஓணானைப் பார்ப்பது போல அந்த மகா கலைஞனை அலட்சியமாகப் பார்த்து, கிண்டல் செய்து, அதிர்ச்சி அடைந்து காலில் விழும் காட்சியை தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்கவே முடியாது.
‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தைத் தயாரிக்க முடிவு செய்த ஏபிஎன் வைத்தி என்ற பிம்ப் வேடத்தில் ‘கூட்டி’க் கொடுக்கும் ஏஜெண்டாக நாகேஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று மேனேஜரை அனுப்பி கால்ஷீட் கேட்டு வரச் சொன்னார்.
புகழின் உச்சத்தில் நாகேஷ் இருந்த அந்த நேரத்தில், குடும்பத்தில் ஒரு கொலை விழுந்து, போலீஸ் மாமனார், மாமியார், மைத்துனர்கள் என்று ஒவ்வொருவராக அழைத்துக் கடுமையாக விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தச் சமயத்தில் ஏபிஎன் மேனேஜர் போய் நிற்கிறார். ‘இந்த வழக்கில் ஒரு வேளை என்னையும் போலீஸ் கைது செய்யலாம். நான் பாதியில் உள்ளே போய்விட்டால் படம் நின்று விடும். என்னால உங்களுக்கு தர்மசங்கடம் வேண்டாம். வேறு நடிகரைப் பாருங்கள்!’ என்று சொல்லி அனுப்பினார்.
மேனேஜர் இதைச் சொன்னதும், 'அப்படி ஏதாவது அசம்பாவிதம் நடந்துச்சுன்னா, அவர் விடுதலையாகி வெளியே வந்ததுக்கப்புறம் நாகேஷ் சீன்களை ஷூட் பண்ணிக்கலாம். நாகேஷ் இல்லாம மோகனாம்பாள் படம் வராது. போய் அட்வான்ஸ் குடுத்திட்டு வாங்க!'ன்னு ஏபிஎன் சொன்னதைக் கேட்டு, 'என் மேல அவரு இவ்வளவு நம்பிக்கை வச்சிருக்காரா?'ன்னு கண்ணீர் விட்டு அழுதார் நாகேஷ்.
அவர் நடிக்காத கம்பெனியோ -அவர் போடாத வேஷமோ- அவரை டைரக்ட் பண்ணாத டைரக்டரோ- அவர் கூட 40 வருடத்தில் நடிக்காத ஹீரோவோ யாருமே இருக்க முடியாது. 1000க்கும் மேல் படங்கள், ‘காக்கும் கரங்கள்’ என் முதல் படம், 'பூவெல்லாம் உன் வாசம்' 192-வது படம். முதல் படத்திலும் இருந்தாரு. 192-வது படத்திலும் நாகேஷ் இருந்தாரு. இடையில் கிட்டத்தட்ட 30 படங்களில் நாங்கள் சேர்ந்து நடிச்சிருக்கோம்.
என்னை அழகுப் பையான்னுதான் ரொம்ப வருஷம் கூப்பிடுவாரு. கடைசி நாட்களில் கவுண்டரே என்று செல்லமா கூப்பிடுவாரு.
திடீர்னு ஒருநாள் சீதம்மா கல்யாண மண்டபத்துக்கு 10 நிமிஷம் வந்திட்டுப் போப்பான்னு கூப்பிட்டாரு.
மொபரீஸ் ரோட்ல உள்ள அந்த மண்டபத்துக்குப் போனேன். அவர் பேரனுக்கு பூணூல் கல்யாணம் நடந்திட்டிருந்தது. ‘பையனை ஆசீர்வதிச்சுட்டுப் போ!’ன்னாரு.
மனுஷங்க வாழ்க்கையில விபத்துங்கிறது பலவிதமா நடக்குது. என் வாழ்க்கையில் காதல்ங்கிற பேர்ல அந்த விபத்து நடந்தது.
‘கிறிஸ்தவப் பெண் ரெஜினா. நான் கன்னட பிராமணன். என் பேரை பீட்டர்னு மாத்தி கல்யாணம் பண்ணி வச்சாங்க. எப்படியோ திசைமாறிப் போன வாழ்க்கை- மீண்டும் பழைய பாதைக்கே வந்திருச்சு. என் பேரன் உபநயனம் பண்ணி என் வம்சத்தை விருத்தி செய்யப்போறான். இனி நான் நிம்மதியா கண்ணை மூடலாம்’ன்னு சொன்னார்.
நாகேஷ் புகைப்பழக்கம், மதுப்பழக்கம் உள்ளவர்னு எல்லோருக்கும் தெரியும். அதையெல்லாம் தவிர்த்திருந்தா ஒரு வேளை அந்த ஸ்ட்ரெஸ்லயே அவர் தற்கொலை கூட பண்ணியிருக்க வாய்ப்புண்டு என்று நினைப்பேன்.
2009 -ஜனவரி 26-ம் தேதி ‘கம்பன் என் காதலன்’ங்கிற தலைப்பில ஈரோடு திண்டல் வேளாளர் கல்லூரியில நான் கம்பராமாயண உரை 8000 பேர் முன்னாடி நிகழ்த்தி விட்டு, 31-ம் தேதி தமிழ்ச்சங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள டெல்லியிலிருந்தபோது நாகேஷ் உலக வாழ்க்கையிலிருந்து விடுபட்டுப் போய் விட்டார்ங்கிற செய்தி வந்திச்சு.
என் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இதை அறிவித்து ஒரு நிமிடம் மெளனம் அனுசரித்தபின் என் உரையைத் தொடங்கினேன்.
சென்னை வந்து நாகேஷ் இல்லம் போனேன். பரந்து விரிந்து வெறிச்சோடி கிடந்த ஹாலில் நடுவில் மாலையுடன் ஓரு படம். நான் வரைந்த நாகேஷின் ஓவியம். அந்த ஒன்றே ஒன்றுதான் அந்த வீட்டில் வைக்கப்படிருந்தது.
1970-ஜனவரி 6-ம் தேதி அந்த ஓவியத்தை நான் வரைந்து முடித்து நாகேஷ் கையில், ‘இது என் அன்பளிப்பு!’ என்று கொடுத்தபோது, அதைக் கண்ணில் ஒற்றிக்கொண்டு அவர் வாங்கிக் கொண்டது படமாக அப்போது மனதில் வந்து நின்றது.
--
அனுபவிப்போம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago