என்னோடு கிராமத்தில் வளர்ந்தவர்கள், பள்ளியில் படித்தவர்கள், ஓவியக்கல்லூரியில் படித்தவர்கள் யாருமே என்னை ‘டா’ போட்டுக் கூப்பிட்டு இதுவரை பேசியதில்லை.
திரையுலகில் சிவாஜி, ஜெமினி -இருவர் மட்டுமே பாசமாக, ‘என்னடா கவுண்டரே!’ என்று சிவாஜியும், ‘வாடா சிவகுமார்’ என்று ஜெமினி மாமாவும் அழைப்பார்கள்.
மற்றவர்கள் எவ்வளவு நெருக்கமாகப் பழகியபோதும், மறந்தும் ‘டா’ போட்டு பேசியதில்லை.
ஒருவருக்கு மட்டும் அந்த ‘டா’ போட்டு பேசும் உரிமையைக் கொடுத்திருக்கிறேன். அவன் சீனா என்றும் சீனு என்றும் நான் செல்லமாகக் கூப்பிடும் சேலம் சீனிவாசன்தான்.
விசித்திரமான சூழ்நிலையில் அவனை நான் சந்தித்தேன். 1968- செப்டம்பர் 2-ந்தேதி மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில் கல்கியில் வந்த ‘அம்மன் தாலி’ குறுநாவலுக்கு எம்.எஸ்.பெருமாள் நாடக வடிவம் தர, லாரன்ஸ் என்ற நண்பர் இயக்கிய நாடகம் அரங்கேறியது.
சேலம் அமெச்சூர் பைன் ஆர்ட்ஸ் சபா, அந்த நாடகத்தை சேலத்தில் நடத்த ‘புக்’ செய்ய வந்திருந்தார்கள்.
இந்த சபாவின் பொருளாளராக 28 வருஷம் இருந்தவன் சீனு. அவர்கள் சபாவில் எங்களுடைய அம்மன்தாலி, குங்குமச்சிமிழ் நாடகங்கள் மட்டுமல்ல, மேஜருடன் சேர்ந்து நான் நடித்த நாடகங்களையும் ‘புக்’ செய்து சேலம் ரசிகர்களை மகிழ வைத்தார்கள்.
அன்றைய தினம் ‘அம்மன்தாலி’யை சேலத்தில் நடத்துவது சம்பந்தமாக என் வீட்டில் பேசி விட்டு கிளம்பினார்கள். வந்திருந்த நண்பர்களை அதட்டி, மிரட்டி ராணுவ மேஜர் போல் நடத்தினார் ஒருவர். பஸ் புறப்படும்போது அவர் கடைசியாக ஏறப்போனார். கைப்பிடியை பிடித்து ஒரு காலை பஸ்ஸில் வைப்பதற்குள் பஸ் ஸ்டார்ட் ஆகி விட்டது. ‘டேய்.. டேய்..!’ என்று கூச்சல் கேட்டு பஸ் நின்றது.
அவன் வயதுக்கு, பஸ் இன்னும் வேகமாகப் போனால் கூட ஓடிப் போய் ஏறி விட முடியும். ஆனால், அதை அவன் செய்ய வில்லை. காரணம், அவனுடைய இடது கால் செயற்கையாகப் பொருத்தப்பட்டது. அந்த இளைஞன்தான் சீனு.
‘திக்’ என்று நெஞ்சில் யாரோ அறைந்தது போலாகி விட்டது. என்ன நடந்தது என்று விசாரித்தேன்.
1961- செப்டம்பர் 29-ந் தேதி. சீனுவுக்கு அப்போது 14 வயது. 10-ம் வகுப்புத் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்தவன் இரவு தூக்கத்தை விரட்ட நண்பன் வீட்டுக்குப் போய் டீ குடித்து விட்டு சிறிது நேரம் வாசலில் நின்று அரட்டை அடித்துக் கொண்டிருந்திருக்கிறான்.
அந்த வீட்டுக்கு நேர் எதிரே மெயின் ரோடு. அது வீட்டருகே வந்ததும் பாதை. இடது வலது பக்கமாக பிரிகிறது.
அன்றைக்கு லோடு ஏற்றிக் கொண்டு அசுர வேகத்தில் வந்த லாரி ஒன்று வலது புறம் அல்லது இடதுபுறம் திரும்பிச் செல்ல வேண்டும். ஆனால் நேரே வீட்டுக்குள் நுழைந்து விட்டது.
சீனு தரையில் மல்லாக்கக் கிடக்கிறான். தலைக்கு மேலே லாரி பம்ப்பர், நம்பர் பிளேட்டில் MDS 3968 எழுத்துக்கள் தெரிகிறது. பக்கவாட்டில் இரண்டு புறமும் ராட்சத சக்கரங்கள். நம்பர் பிளேட் அடியில், லாரியின் அடிபாகம் முழுதும் தெரிகிறது.
வலதுபுறம் சற்று திரும்பிப் பார்த்தான். அங்கு கிடக்கிறதே என்ன அது என்று கேட்டான். ‘உன் கால்’ என்றார்கள். மயக்கமாகி விட்டான்.
அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள். தொடை எலும்பின் மேல்பகுதி கோணலாக முறிந்திருக்கிறது என்று அதிலும் 2 அங்குலம் வெட்டி எடுத்து விட்டார்கள். 7 நாள் ஆஸ்பத்திரி படுக்கையில் ஆடாமல் அசையாமல் கிடந்தான்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு பூனா ராணுவ மருத்துவமனையில் செயற்கைக் கால் பொருத்தப்பட்டது.
விடாமுயற்சியுடன் பள்ளிப் படிப்பை முடித்து அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ., பட்டம் பெற்று 4 ஆண்டுகள் சார்ட்டர் அக்கவுண்ட்டண்ட் படிப்பை தொடர்ந்தான்.
நண்பர்களுடன் சேர்ந்து அலோபதி மருந்துகள் மொத்த வியாபாரம் செய்து கொண்டிருந்த சமயத்தில் 1968-ல் நான் அவனைச் சந்தித்தேன். மறந்தும் கூட தனக்கு இப்படி ஆகி விட்டது என்று கண்கலங்கியோ, மனம் ஒடிந்தோ ஒரு வார்த்தை அவன் பேசியதில்லை.
அவனது தன்னம்பிக்கையையும், துணிவையும் பார்த்து, ‘டேய் சீனா! உனக்கு நான் பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்டா என்று சென்னையில் பெண் தேடினேன்.
கஸ்தூரி திலகம், அன்னை வேளாங்கண்ணி, காரைக்கால் அம்மையார், திருமலை தெய்வம், சொல்லத்தான் நினைக்கிறேன், கிருஷ்ணலீலா, துர்க்காதேவி உள்ளிட்ட படங்களில் ஸ்ரீ வித்யா என்னோடு நடித்துக் கொண்டிருந்தார். அவருடைய நெருங்கிய தோழி எனக்குப் பழக்கமானார். அவரிடம் சீனு பற்றிச் சொல்லி, அவன் படிப்பு, தொழில் பற்றி ஒளிவு மறைவில்லாமல் விளக்கினேன். அந்தத் தோழி திருமணத்திற்கு பூரணமாக சம்மதித்தார். ஆனால் பெற்றோர் இவனது உடல் குறைபாட்டை மனதில் வைத்து மறுத்து விட்டார்கள். நான் மட்டுமல்ல, அவனும் அப்செட் ஆகி, ‘இனிமேல் எனக்கு பெண் தேடுகிற வேலையை விட்டு விடுடா!’ என்றான்.
ஆண்டுகள் உருண்டோடின. திடீரென்று ஒரு நாள், ‘டேய் சிவா! எனக்குப் பொண்ணு கிடைச்சுட்டா’ என்று போன் செய்தான். ‘எங்கடா புடிச்சே?’ன்னேன்.
‘எங்க தெருவிலேயே குடியிருக்கற உஷா!’ன்னான்.
அந்த வீராங்கனையை, வேலுநாச்சியை மானசீகமாக வணங்கினேன். வாழ்த்தினேன்.
1981- மார்ச் 5-ந்தேதி திருமணம். கலைஞானம் அவர்களின் நெல்லிக்கனி படப்பிடிப்பு. கடைசி நாள் என்பதால் 4-ம் தேதி கோவை வந்து பால்ய விதவையான பெரியம்மா -85 வயது வரை வாழ்ந்த மிளகாய்க்கார பெரியம்மா -இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு விட்டு விமானம் பிடித்து சென்னை சென்று 5-ந்தேதி அந்தப் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன்.
அடுத்து மார்ச் 8-ந்தேதி சீனு-உஷா திருமண வரவேற்பில் கலந்து கொள்ள சேலம் சென்றேன். மாலை வரவேற்பு.
காலை நீலகிரி எக்ஸ்பிரசில் சேலம் ஜங்ஷனில் இறங்கியதும் கோகுலம் ஓட்டலில் குளித்து விட்டு ஆட்டையாம்பட்டி சென்றேன்.
எனது பெரும்பாலான படங்களை -ரோசாப்பூ ரவிக்கைக்காரி, வண்டிச்சக்கரம், ஆணி வேர் உள்பட பல படங்களை வாங்கி சேலம் ஏரியாவுக்கு விநியோகம் செய்யும் ஜோதி முருகன் பிக்சர்ஸ் தங்கமுத்துவின் குமார் -T. செல்வராஜ், வைஜயந்தி மாலா திருமணம் நடைபெற்றது. நானும் டைரக்டர் K.S. கோபாலகிருஷ்ணன், ஒளிப்பதிவாளர், டைரக்டர், தயாரிப்பாளர் கர்ணன், திருப்பூர் மணி ஆகியோரும் மணமக்களை வாழ்த்தி விட்டு சேலம் திரும்பினோம்.
மணக்கோலத்திலிருந்த சீனுவைக் கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டேன். உஷாவுக்கு நெஞ்சம் நிறைந்த ஆசிகளைத் தெரிவித்தேன்.
உஷா வெறும் குடும்பப் பெண் மட்டும் அல்ல. பி.யு.சி படிப்பை முடித்து, ஆங்கிலம் சுருக்கெழுத்தில் ஹையர் தேர்ச்சி பெற்றவர். ஸ்டெனோ கிராபராக கைத்தறி வாரியத்தில் 22 ஆண்டுகள் பணி செய்து, விருப்ப ஓய்வு, பென்சனுடன் -பெற்று குடும்பத்தை இனியாவது கவனித்துக் கொள்ளலாம் என்று வந்தவர்.
அத்துடன் சும்மா இருக்கக்கூடாது என்று அங்கே உள்ள பெரிய மருத்துவமனைக்கு ‘டயட் உணவு’ 200 பேருக்கு,500 பேருக்கு தினம் தயார் செய்து அனுப்பியிருக்கிறார்.
சீனுவும் சும்மா சாப்பிடவில்லை. 1984 -முதல் 2004 வரை ஏற்றுமதி நிறுவனத்தில் 20 ஆண்டுகள் ஆடிட்டராக பணிபுரிந்தான். 2005-லிருந்து 2015 வரை புகழ் பெற்று விளங்கிய, ‘வாசன் ஐ கேர்’ நிறுவனத்தில் சீனியர் ஜெனரல் மானேஜராக 10 ஆண்டு பணிபுரிந்தான். என்னையும் அம்மருத்துவமனை நிகழ்ச்சிக்கு அழைத்திருக்கிறான்.
ஓயாது உழைத்துக் கொண்டே ஒழுங்காக இல்லற வாழ்விலும் ஈடுபட்டு ஒரு மகன், ஒரு மகள் வாரிசாகப் பெற்றனர். மகள் ஐஸ்வர்யா வாஷிங்டன் டி.சியில் மருந்து கம்பெனியில் பணிபுரியும் கணவன் அனந்தகிருஷ்ணனுடன் வாழ்கிறாள். ஐஸ்வர்யா மாண்டிச்சேரி பள்ளியில் டீச்சர் வேலை பார்க்கிறாள். அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் பிறந்துள்ளனர். பேரன் 10-ம் வகுப்பும், பேத்தி 9-ம் வகுப்பும் படிக்கின்றனர்.
மகன் கார்த்திக் சென்னையில் நேவிஸ் லோகோஸ்டிக்ஸ்’ கம்பெனியில் ‘ப்ராடக்ட்’ மானேஜராக உள்ளான்.
இப்போது சீனு, உஷா மகனுடன் சென்னையில் ஓய்வுக் காலத்தை கழிக்கிறார்கள். இந்தக் காலத்தில் பெரும் படிப்பு படித்து பெரிய சம்பளம் வாங்கும் பிள்ளைகள், பெண்கள் பெரும்பாலோர் திருமணத்தை அவ்வளவாக விரும்புவதில்லை. கார்த்தியும் அந்த வரிசையில் இருக்கிறான்.
இவ்வாண்டு எப்படியும் அவனுக்கும் ஒரு கால்கட்டு போட முயன்று கொண்டிருக்கிறோம். இந்தப் பதிவு 05.03.2021 -அன்று வருகிறது. இன்று சீனு உஷா தம்பதிக்கு இது 40-வது ஆண்டு திருமண நாள். எல்லோரும் அவர்களை மனமார வாழ்த்துவோம்.
---
அனுபவிப்போம்...
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago