திரைப்படச்சோலை 10: திருமலை- தென்குமரி

By செய்திப்பிரிவு

பிரபல ஹீரோ, ஹீரோயின்கள் யாரையும் ஒப்பந்தம் செய்யாமல் முப்பது நாளில், முப்பத்து ஐந்து நடிக, நடிகையரை அழைத்துக் கொண்டு, நான்கு மாநிலங்களுக்கு சுற்றுலா சென்று, ஒரு படத்தை முடித்து வெளியிட்டு, அதற்கு நூறு நாள் விழா கொண்டாட முடியுமா?

1970-ல் அதை சாதித்துக் காட்டியவர் அருட்செல்வர் ஏ.பி. நாகராஜன். படத்தின் பெயர் ‘திருமலை -தென்குமரி’ நந்தனம் டவர் பிளாக்கில் பல மொழி பேசும் குடும்பங்கள் குடியிருக்கின்றன.

மே 1-ம் தேதி ஒரு பேராசிரியர் குடும்பம், ஒரு பாடகரும் அவர் மகளும் ஒரு ஜோடி, வட்டிக்கடை நயினார் தம்பதி, கெளரிப்பாட்டி -அவர் பேரன், ரிடையர்டு ராணுவ வீரர் குடும்பத்தினர் -கல்லூரி மாணவர்கள் 2 ஜோடி, புரோகிதர் குடும்பம், கன்னடத் தம்பதி, அவர் பெற்றோர், இளம் இன்ஜினீயர் தம்பதி, பால்கார மன்னாரு மனைவி முனியம்மா- ஒரு தெலுங்கு குடும்பம் இப்படி 35 பேர் ஒரு பஸ்ஸில் சுற்றுலா புறப்படுகின்றனர்.

ஏபிஎன்

படப்பிடிப்புக்கு ஒரு பஸ்ஸில் இத்தனை கலைஞர்களும், இன்னொரு பஸ்ஸில் இந்த நடிக நடிகையரின் வயதான அப்பா, அம்மா, குழந்தைகள் உதவியாளர்களும், மூன்றாவது பஸ்ஸில் ஒப்பனையாளர் குழு, உடையலங்கார நிபுணர்கள் பத்து பேர், கேமராமேன், உதவி கேமராமேன், லைட் பாய்ஸ், கார் மெக்கானிக்குகள், மருத்துவர் குழு -தயாரிப்பாளர் குடும்பத்தினர், இயக்குநர், உதவி இயக்குநர்கள் என்று மூன்று பஸ்கள், 5-6 கார்கள், 2 வேன்கள் வரிசையாகக் கிளம்பி ஒவ்வொரு ஊரிலும் 4-5 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி முடித்து அடுத்த ஊருக்குப் பயணப்படும்.

முதல் படப்பிடிப்பு, மதுரையில் நடைபெறுகிறது என்றால் ஏபிஎன் அண்ணா மகன் முருகுவின் குழு மூன்று நாட்களுக்கு முன்னால் மதுரையில் 4-5 ஓட்டல்களில் சுமார் 150 பேர் தங்க ரூம் ரிசர்வ் செய்து, சாப்பாடு வகையறாக்களை ஏற்பாடு செய்து விடுவார்கள்.

மதுரையில் படப்பிடிப்பு தொடங்கும்போது கன்னியாகுமரிக்கு முருகுவின் குழு சென்று ரூம் ரிசர்வேஷன், கோயில்களிலும், காந்தி மண்டபத்திலும் படப்பிடிப்பு நடத்த அனுமதி பெறுதல் எல்லாம் செய்து வைக்கும்.

இப்படி 30 நாளில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் உள்ள முக்கியத் திருத்தலங்களில் படப்பிடிப்பைத் திட்டமிட்டபடி நடத்தி முடித்தார் ஏபிஎன்.

சுற்றுலா பஸ்

திருச்சியில் அஜந்தா ஓட்டலில் தங்க ஏற்பாடு செய்திருந்தனர். திருநெல்வேலி செல்லும் முன் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட கயத்தாறு பகுதியில் நின்று -கட்டபொம்மன் சிலை திறக்கப்படும் நிலையில் தயாராக இருந்ததைப் பார்த்தோம்.

கன்னியாகுமரியில் கேப் ஓட்டலில் ஆண்களும், கேரளா கெஸ்ட் ஹவுஸில் பெண்களும், சத்திரத்தில் ஏபிஎன் குடும்பமும், மீனாட்சி பவனில் தொழில் நுட்பக் கலைஞர்களும் தங்க ஏற்பாடு.

இங்குதான் 1964-ல் நான் உட்கார்ந்து படம் வரைந்த பாத்திங் காட் பின்னணியில் என்னையும் குமாரி பத்மினியையும் நடிக்க வைத்து ஏபிஎன் படமாக்கினார்.

‘நீலக்கடல் ஓரத்திலே நிலம் கொண்டு செல்லாமல் காலமெல்லாம் காவல் செய்யும் கன்னி தெய்வம் குமரி அம்மா- என்ற பாடலில் ஒரு பகுதி விவேகாநந்தா நினைவு மண்டபத்தில் படமாக்கப்பட்டது.

ஏபிஎன் உறவுக்கார இளைஞன் அளவுக்கு மீறிய ஆர்வத்தில் ஆர்ப்பரிக்கும் அலைகளுக்கு நடுவே குளிக்கப் போய் கைமூட்டு கழன்று விட்டது. ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போய் சரிசெய்து விட்டனர்.

திருமலை தென் குமரி-யில் குமாரி பத்மினி சம்பந்தப்பட்ட கிளைமாக்ஸ் காட்சியும், திருமண நிகழ்வும் படமாக்கப்பட்டது.

இரவு கன்னியாகுமரி மாவட்டத்தில் பெயர் பெற்ற சுடலையாண்டி கம்பர் நாதஸ்வர கச்சேரி, கலைஞர்களுக்கு நடைபெற்றது. எல்லோரும் நன்கொடை வழங்கினோம். நயினார் சுவாமியின் தவில் வாசிப்பு அனைவரையும் கவர்ந்தது.

மீனாட்சி அம்மன் கோயில்

அதிகாலை 5.30-க்கு பஸ் புறப்பட்டது. பஸ்ஸிலேயே விடுகதை, புதிர் விளையாட்டுகள், நடனம் என்று தூள் பறந்தது.

போலீஸ் கமிஷனர் பரமகுரு ஊர் கரிவலம் வந்த நல்லூர். அங்கு குழு இளைப்பாறி விட்டு மதுரை வந்து சேர்ந்தோம்.

மதுரை கோயிலுள் படப்பிடிப்பு நடக்கும்போது திடீரென்று வானம், கருமேகங்கள் சூழ, ஆலங்கட்டி மழை கொட்டித் தீர்த்தது. மதுரை முழுவதும் வெள்ளக்காடாகி, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

நாங்கள் தங்கியிருந்த மிட்லண்ட் ஓட்டலில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வாட்டர் டேங்கில் நீர் ஏற்ற முடியாமல் அவதிப்பட -எங்கள் ஜெனரேட்டர் வேன் மூலம் மின்சாரம் விடியும் வரை சப்ளை செய்தோம்.

அடுத்த நாள் மதுரையிலிருந்து பதினைந்து மைல் தொலைவிலுள்ள கிடாரிப்பட்டியை அடுத்த காட்டுக்குள் சண்டைக் காட்சியும், இரவு மீனாட்சி அம்மன் கோயிலுள் 10 மணிக்குத் தொடங்கி அதிகாலை 4 மணி வரை படப்பிடிப்பும் தொடர்ந்தது.

சூலூரில் மரியாதை

மே 12-ம் தேதி மதுரையிலிருந்து குருவாயூர் செல்லும் வழியில் நான் படித்த சூலூர் சண்முகதேவி தியேட்டரில் ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்திற்கு ஜனாதிபதி விருது வாங்கியதற்காக சூலூர் மக்கள் சார்பில் எஸ்.ஆர்.எஸ்., தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. ஏற்புரையில் சிவகுமார் நல்லபிள்ளை. உங்கள் ஊர்ப் பகுதியில் அவருக்கு பெண் பாருங்கள். நானே வந்து திருமணத்தை நடத்தி வைக்கிறேன் என்று சொல்லி ஆரவாரமாக கைதட்டல் பெற்றார். வாக்களித்தபடியே 1974 -ஜூலை 1-ம் தேதி என் திருமணத்திற்கு வந்து ஆசி கூறினார்.

குருவாயூரை அடுத்த சாவக்காட்டில் மறுநாள் படப்பிடிப்பு. ஊருக்கு நடுவே ஏரி இருப்பது போல் கடல்நீர் நுழைந்து (BACK WATERS) கண்கொள்ளாக் காட்சியா இருந்தது. அழகிய தோற்றம். திரும்பிய பக்கமெல்லாம் தென்னை மரங்கள். நீராவிப் படகில் பயணம் செய்து இந்தப் பின்னணியில் சில காட்சிகள் படமாயின.

குருவாயூர் கோயிலில் விஜயலட்சுமி பிக்சர் என்ற ஏபிஎன் கம்பெனி சார்பாக லட்ச தீபம் ஏற்றப்பட்டது.

நம் ஊரில் விசேஷ பூஜை செய்பவர்களை மூலஸ்தானம் அருகில் நிறுத்தி முதல் மரியாதை செய்வார்கள். இங்கு எத்தனை ஆயிரம், லட்சம் நன்கொடை கொடுத்தாலும், கூட்டத்தில் ஒருவராக எங்கோ ஒரு மூலையில் நின்றுதான், சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். விசேஷ கவனிப்பு எல்லாம் கிடையாது. குருவாயூர் கோயில் பின்னணியில் சில காட்சிகளைப் படமாக்கிவிட்டு மைசூர் பயணமானோம்.

சூலூரில் மரியாதை

கோவை, சேலம் வழியாகத்தான் மைசூருக்குப் பயணம் செய்ய வேண்டும். சங்ககிரிக்கு மிக அருகில் உள்ள சிற்றூர் அக்கம்மா பேட்டை. அதுதான் ஏபிஎன் பிறந்த ஊர். அவர் தந்தை ஜமீன்தாராக வாழ்ந்தவர். ஆங்கிலேய துரைகளை வீட்டிற்கு அழைத்து வந்து விருந்து கொடுத்தவர். தந்தை இறந்தபின் வாழ்க்கை திசை திரும்பி டிகேஎஸ் நாடகக் குழுவில் சிறு வயதிலேயே ஏபிஎன் சேர்ந்து, வாழ்க்கையில் போராடி இந்த நிலைக்கு வந்தவர்.

சொந்த ஊரில் கலைஞர் குழுவினருக்கு ஏழு, எட்டு ஆடுகளை வெட்டி பிரியாணி விருந்து கொடுத்து, தான் ஹீரோவாக கதை வசனம் எழுதி நடித்த ‘நால்வர்’ படத்தை 16 எம்எம் புரொஜக்டரில் எங்களுக்குத் திரையிட்டுக் காட்டினார்.

மே 17-ம் தேதி அக்கம்மா பேட்டையிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக மைசூர் சென்றடைந்தோம். தாஷப்பிரகாஷ் ஓட்டலில் நடிக, நடிகையருக்கு அறைகள் தயாராக இருந்தன. ஒரு மாடியில் கடைக்கோடியில் ஆண் நடிகர்கள் -பிரம்மச்சாரி அறைகள் -அதை அடுத்துப் பெரியவர்கள் அறைகள் -இந்தக் கோடியில் பெண்களுக்குத் தங்கும் வசதி, மறந்துபோய் எவனாவது தாண்டி பெண்கள் பக்கம் போகாமல் காவல் இருக்க, நடுவில் பெரியவர்களின் அறையை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

மே 19-ம் தேதி சாமுண்டீஸ்வரி கோயிலில் -மலை மீது சூரியன் உதயமாகும் நேரத்தில் படமாக்கத் திட்டமிட்டிருந்தார் ஏபிஎன். இரவு 2 மணிக்கெல்லாம் 35 பேரையும் எழுப்பிக் குளிக்க வைத்து, 7, 8 ஒப்பனையாளர்கள் எல்லோருக்கும் ஒப்பனை செய்து முடித்து, உடை அணிவித்து சாமுண்டி மலை மீது பஸ்ஸில் அழைத்துச் செல்லும்போது 10 நிமிடம் தாமதமாகி சூரியன் மேலே வந்துவிட்டது. ஏபிஎன் பொரிந்து தள்ளிவிட்டார்.

திருப்பதி மலை மேல்

‘நான் உங்களுக்கெல்லாம் என்ன குறை வைத்தேன். பேசிய சம்பளத்தில் அட்வான்ஸாக பாதிக்குமேல் கொடுத்தேன். வயதான பெற்றோர், சிறுவயதுக் குழந்தைகளை ஒரு மாதம் தனியே விட்டு வர முடியாது என்பதற்காக, அவர்களுக்கும் ஒரு பஸ் ஏற்பாடு செய்து உங்களோடு இங்கு கூட்டி வந்துள்ளேன். நினைக்கிற மாதிரி சூரியன் பூமியிலிருந்து மேலே வரும்போது ஒரு ஷாட் எடுக்க முடியவில்லை என்றால் என்ன பிரயோஜனம்? போங்கள் எல்லோரும் ஊருக்கு திரும்பிப் போய் விடுங்கள்!’ என்று உணர்ச்சி வசப்பட்டு கூச்சலிட சிவதாணு என்ற மூத்த நடிகர், ஒரு வழியாக சமாதானம் செய்து படப்பிடிப்பைத் தொடர வைத்தார்.

இளம் ஜோடிகளுக்கு பிருந்தாவனத்தில் சில காட்சிகளைப் படமாக்கினார். திருத்தணியில் படப்பிடிப்பு இடைவேளையில் நடிகை சைலஸ்ரீயை (வெண்ணிற ஆடை படத்தில் மூர்த்திக்கு ஜோடியாக நடித்தவர்) ஒரு மணி நேரத்தில் பென்சில் ஸ்கெட்ச் ஓவியம் வரைந்தால் 100 ரூபாய் பந்தயம் என்றார் ஏபிஎன். 45 நிமிடத்தில் வரைந்து முடித்து பரிசு பெற்றேன்.

சீர்காழி 90 நிமிடங்கள் பல்வேறு பாடல்களைப் பாடி அவரின் தெய்வீகக் குரலில் அனைவரையும் வசீகரம் செய்தார். ‘சிந்தனையில் மேடை கட்டி, கந்தனையே ஆட வைத்தேன்’ சீர்காழி பாடலுக்கு உடம்பெல்லாம் சந்தனம் பூசி, மாலை அணிந்து, காவடி தூக்கிக் கொண்டு, எல்லோரும் மலை ஏறி வரும் காட்சி படமாயிற்று.

திருப்பதி மலை மேல் நடக்கும் படப்பிடிப்பில் பயன்படுத்த ஏழுமலையான், பத்மாவதி தாயார் பென்சில் ஸ்கெட்ச் ஓவியம் ஒன்று வரைந்து கொடுத்தேன்.

ஓவியக் கல்லூரியில் படித்த காலத்தில் 1962-ல் சேனாதிபதி, ரகமத்துல்லா ஆகியோருடன் திருப்பதி வந்து 6 நாட்கள் தங்கி கோயிலையும், மலைகளையும் பல கோணங்களில் வண்ண ஓவியம் தீட்டியபோது கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்ற எண்ணமும் வரவில்லை. மலைப்பாம்பு போல கோயிலைச் சுற்றி நாட்கணக்கில் நிற்கும் பக்தர்கள் ‘க்யூ’வில் நின்று சாமி தரிசனம் செய்வது சாத்தியமும் இல்லை என்பதால் ஓவியம் தீட்டி முடித்து சென்னை திரும்பிவிட்டோம்.

இம்முறை கோயிலுக்குள் அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்தியதால், ஒன்றுக்கு இரண்டு முறை ஏழு மலையான் சிலையின் அழகை அருகிலே நின்று பார்க்க வாய்ப்பு கிடைத்தது.

திருமணத்தில்

பக்தர்களுக்கு விபூதியோ, பிரசாதமோ அர்ச்சகர்கள் தருவதில்லை. ஆண்டவன் முன்புள்ள வெள்ளி கிரீடத்தை எடுத்து வந்து தலையில் தொட்டு ஆசி வழங்குகிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட ஊரில் இருபது நாட்களுக்கு மேல் தங்கி இருந்தும் இரண்டு நாட்கள் கூட உருப்படியாக படப்பிடிப்பை நடத்த முடியாமல் திரும்பிய தயாரிப்பாளர்கள் உண்டு.

அப்படியிருக்க ஏபிஎன் -தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என்று 4 மாநிலங்களில் திட்டமிட்டபடி 35 நடிக, நடிகையரை வைத்துப் படப்பிடிப்பை முடித்தது சாதாரண விஷயமல்ல.

கதை, திரைக்கதை, வசனத்தை முன்பே தெளிவாக எழுதி முடித்து சரியான நடிக, நடிகையரை ஒப்பந்தம் செய்து, அவர்களுக்கான ஒப்பனை உடைகளை தீர்மானித்து தயார் செய்து, ஒரு குறையுமில்லாமல் படப்பிடிப்பை முடித்துவிட்டார்.

5 நடிகர்கள் ஒரே அறையில் ஒப்பனை செய்து உடை மாற்றிக் கொள்வார்கள். ஆனால், 2 நடிகைகள் ஒரே ரூமில் ஒப்பனை செய்து உடை மாற்றிக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.

அப்படியிருக்க, பல்வேறு மனநிலை கொண்ட -‘ஈகோ’ உள்ள கலைஞர்களை, கூண்டில் அடைத்தது போல, 31 நாட்கள் பஸ்களில் அடைத்து, சர்க்கஸ் ரிங் மாஸ்டர் போல, ‘இவர்களை கன்ட்ரோல் செய்து படத்தை எடுத்து முடித்து விட்டார்.

1970 ஆகஸ்ட் 17-ம் தேதி உட்லண்ட்ஸ் ஓட்டலில் ஏபிஎன் அவர்களுக்கு, ‘திருமலை தென்குமரி’ படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் சேர்ந்து பாராட்டு விழா நடத்தினோம். திருத்தலங்களுக்கு அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வழிவகை செய்ததற்கு நன்றி தெரிவித்தோம்.

ஏ.எல் சீனிவாசன், டைரக்டர் ஸ்ரீதர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், என்.டி.ராமாராவ், பாஸ்கர், பக்கெட்டி சிவராவ் ஆகியோருடன் அரசியல் தலைவர் ம.பொ.சிவஞானம் அவர்களும் வந்திருந்து வாழ்த்திப் பேசினார்.

1970, நவம்பர் 22-ம் தேதி படத்தின் 100-வது நாள் விழாவையும் கொண்டாடினோம்.

அனுபவிப்போம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்