தமிழ் புலவர், முருக பக்தர்
ஏராளமான தமிழ் பாடல்களை இயற்றிய புலவர் ‘வண்ணச்சரபம்’ தண்டபாணி சுவாமிகள் (Vannacharabam Dhandapani Swamigal) பிறந்த தினம் இன்று (நவம்பர் 28). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# திருநெல்வேலியில் (1839) பிறந்தவர். இயற்பெயர் சங்கரலிங்கம். தந்தையின் நண்பர் சீதாராம நாயுடுவால் முருகன் மீது பக்தி அதிகரித்தது. சிறு வயதிலேயே தமிழில் புலமை பெற்றிருந்தார்.
# ‘பூமி காத்தாள்’ என்ற அம்மனுக்கு அப்பெயர் வருவதற்கான காரணத்தை, 8 வயதில் வெண்பா மூலம் பாடி விளக்கியவர். முருகனைப் பற்றி ஏராளமான பாடல்கள் பாடியதால் முருகதாசன் என்றும், திருப்புகழைப் பாடிக்கொண்டே இருந்ததால் திருப்புகழ் சுவாமிகள் என்றும் அழைக்கப்பட்டார்.
# மேனி முழுவதும் திருநீறு, நெற்றியில் குங்குமம், இடது தோளில் வடகலைத் திருநாமம், வலது தோளில் தென்கலைத் திருநாமம் தரித்திருப்பார். அக்கமணி மாலை, பாதக்குறடு, கோவணத்துடன், தண்டாயுதம் ஏந்தி வலம் வந்ததால் இவரை ‘தண்டபாணி சுவாமிகள்’ என்றனர் மக்கள். அகப்பொருளின் துறைகளை அமைத்து சந்த யாப்பில் ‘வண்ணம்’ என்ற பெயரில் பாடல்களைப் பாடியதால் ‘வண்ணச்சரபம்’ என்ற அடைமொழி சேர்ந்துகொண்டது.
# தமிழகத்தில் அவிநாசி உள்ளிட்ட 218 ஊர்களுக்கும் கேரளம், இலங்கைக்கும் சென்று பக்தி நெறியைப் பரப்பினார். பழநி, விழுப்புரம் அடுத்த திருவாமாத்தூரில் கவுமார மடத்தை நிறுவி முருக வழிபாட்டு நெறியை வளர்க்கப் பாடுபட்டார்.
# முத்தமிழ் பாமாலை, தமிழ்த் துதிப் பதிகம், தமிழ் அலங்காரம் உள்ளிட்ட பல நூல்களைப் படைத்தவர். திருக்குறளை அடியொட்டி, 1300 குறள் வெண்பாக்களில் மறுநெறித் திருநூல் என்ற நூலை இயற்றியவர். அறுவகை இலக்கணம், ஏழாம் இலக்கணம், வண்ணத்தியல்பு ஆகிய 3 இலக்கண நூல்களை தந்துள்ளார்.
# அரசாட்சி, அருளாட்சி, திருமகள் அந்தாதி, திருமால் ஆயிரம், தில்லை ஆயிரம், சடகோபர் சதக்கந்தாதி, அருணகிரிநாதர் புராணம் என பல இலக்கியங்களைப் படைத்துள்ளார். ஏராளமான கீர்த்தனைகள், தனிப்பாடல்களையும் பாடியுள்ளார்.
# ‘ஆங்கிலியர் அந்தாதி’ என்று நூல் வாயிலாக ஆங்கிலேயர் ஆதிக்கத்தை கண்டனம் செய்தார். 1240 விருத்தப் பாக்களால் ஆன சுயசரிதையை குருபர தத்துவம் என்ற பெயரில் எழுதினார். 72 புலவர்களின் வாழ்க்கை வரலாற்றை 3 ஆயிரம் பாடல்களில் புலவர் புராணம் என்ற நூலாகப் படைத்தார்.
# வள்ளலாரை 3 முறை சந்தித்துள்ளார். தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானின் தந்தை, தமிழ் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் உள்ளிட்டோர் இவரது சீடர்கள். பெண் கல்வி, விதவை மறுமணம், உயிர்க்கொலை புரியாமை, புலால் உண்ணாமை, தமிழ் உணர்வு ஆகியவற்றை தன் நூல்களில் ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளார். மனைவிக்கு கல்வி கற்பித்து புலமைபெற வைத்தார்.
# எழுத்தாணி கொண்டு ஓலைச் சுவடிகளில் இவர் 1 லட்சம் பாடல்கள் எழுதியதாக கூறப்படுகிறது. அவற்றில் 50 ஆயிரம் பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
# இறுதிகாலத்தில் அரிசி உணவைத் தவிர்த்து பயறு வகைகளை மட்டுமே உட்கொண்டார். 19-ம் நூற்றாண்டில் முருகன் வழிபாடு தழைத்தோங்கப் பாடுபட்டவர். கடும் தவத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்ட தண்டபாணி சுவாமிகள் 59-வது வயதில் (1898) மறைந்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago