திருச்சி, பொன்மலை சங்கிலியாண்டபுரத்தில் சிறுவயதைக் கழித்தவர் சிவாஜி. கம்பளக் கூத்துக்காரர்கள் நடத்திய கட்டபொம்மன் நாடகம் பார்த்து தானும் நடிகனாக வேண்டும் என்ற பேரார்வத்தில், அந்தச் சமயத்தில் திருச்சியில் முகாமிட்டிருந்த யதார்த்தம் பொன்னுசாமி நாடகக் குழுவில்தான் ஒரு அனாதை என்று சொல்லி சேர்ந்துகொண்டார்.
ராமாயண சீதை வேடம் முதலில் போட ஆரம்பித்து, அதே நாடகத்தில் சூர்ப்பனகை வேடம் போட்டு நடித்தவர்.
கிருஷ்ணலீலா நாடகத்தில் குழந்தை கிருஷ்ணனைக் கொன்று வா என்று கம்சன் அனுப்பிய பூதனையின் அழகுத் தோற்றத்திலும் நடித்தவர்.
பொன்னுசாமி பிள்ளை கம்பெனிக்கு எம்.ஆர்.ராதா வந்து சேர்ந்தவுடன் மேடையில் இருவரும் தூள் பரத்தினார்கள். ‘இழந்த காதல்’ நாடகத்தில் வில்லன் ஜெகதீசாக ராதாவும், சரோஜா என்ற பெண்ணாக சிவாஜியும் கலக்கினர்.
‘பதிபக்தி’ படத்தில் ஹீரோவாக நடித்த சிவாஜி, இளம் வயதில் படத்தில் சாவித்திரி ஏற்ற பெண் வேடத்தில் நாடகமேடையில் தன் திறமையைக் காட்டினார்.
‘கதரின் வெற்றி’ என்ற நாடகத்தில் ஒல்லிப் பிச்சான் சிவாஜி சுதந்திர முழக்கமிட்டு, பாடல் பாடியதைக் கண்சிமிட்டாமல் பார்த்தவர் அன்றைய காங்கிரஸ் தொண்டர் காமராஜர்.
எம்.ஆர்.ராதாவுடன் ஒரு கட்டத்தில் சென்னை வந்தார் சிவாஜி. பெரியார் முன் இவர்களெல்லாம் ஈரோட்டில் நடத்திய நாடகம் படுத்துக்கொண்டது.
கொல்லங்கோட்டு அரசர் முன்னால், முதன்முதலாக மேடையில் மனோகரனாக சிம்ம கர்ஜனை செய்து அவர் கையால் வெள்ளித் தட்டு பரிசாகப் பெற்றார் சிவாஜி. ஆனால், அந்த ஊரில் தொடர்ந்து பல நாட்கள் பெய்த மழையால் நாடகம் நடத்த முடியாது மன்னர் கொடுத்த வெள்ளித்தட்டை விற்று நெடுநாள் பசியைப் போக்கிக் கொண்டது நாடகக்குழு.
போத்தனூரில் சொந்த முயற்சியால் நாடகக் குழு அமைத்து விமலா என்ற நாடகத்தை அரங்கேற்றினார்.
கே.ஆர்.ராமசாமி நடத்தி வந்த கிருஷ்ணன் நாடக சபாவுக்கு 'ஓர் இரவு', 'வேலைக்காரி' என்ற இரண்டு நாடகங்கள் எழுதிக் கொடுத்தார் அண்ணா. 'ஓர் இரவு' நாடகத்தில் கதாநாயகியாக சிவாஜி நடித்து ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தியின் பாராட்டைப் பெற்றார்.
'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்' என்ற அண்ணாவின் நாடகத்தில் சிவாஜியாக நடித்து பெரியாரால் ‘சிவாஜி’ கணேசன் என்று பாராட்டப்பட்டார். 18 வயதில் சக்தி கிருஷ்ணசாமியின் நாடகக்குழுவில் சேர்ந்தார்.
வேலூரில் சக்திநாடக சபா ‘நூர்ஜஹான்’ நாடகத்தை நடத்தியது. அதில் பெண் வேடமேற்று நூர்ஜஹானாக நடித்த சிவாஜி நடிப்பைப் பார்த்து அசந்துபோன பி.ஏ.பெருமாள் முதலியார், பாவலர் பாலசுந்திரத்தின் ‘பராசக்தி’ நாடகத்தை வாங்கிப் படமெடுக்க நினைத்தார்.
ஏவிஎம் நிறுவனத்துடன் கூட்டாக இப்படம் எடுக்கத் திட்டமிட்டபோது ஏவிஎம், கே.ஆர். ராமசாமி ஹீரோவாக நடித்தால், வியாபாரம் ஆகும். அவருக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளது என்றார்.
ஆனால், பி.ஏ.பெருமாள் முதலியார் பிடிவாதமாக சிவாஜிதான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தி, படமாக்கப்பட்ட காட்சிகளை ‘ரீ ஷூட்’ பண்ண வைத்து படத்தின் வெற்றிக்கு, சிவாஜியின் கலையுலக வாழ்வுக்கு ஒளி ஏற்றி வைத்தார்.
ஒரு வழியாகப் படம் முடிந்து 1952 தீபாவளி அன்று வெளியிடத் தயாராகிக் கொண்டிருந்தது.
சிவாஜியின் அம்மாவுக்கு ஒரு பயம் தொற்றிக் கொண்டது. நடிகர்கள் கூத்தாடிகள், குடிகாரர்கள், படிப்பறிவில்லாதவர்கள் என்று தமிழ்நாடு முழுக்க ஒரு அபிப்ராயம் இருந்த காலம் அது. 'பராசக்தி' திரைப்படம் வெளிவந்துவிட்டால் தன் மகனுக்குத் திருமணம் நடக்காது போய்விடுமோ என்று பயந்து, சிவாஜியின் ஒன்றுவிட்ட அக்கா மகள் கமலாவை மணம் முடித்து வைக்க முடிவு செய்தார்.
கமலாவின் ஊர் கும்பகோணம். சுவாமி மலை அருகில் உள்ள களத்தூர்.
1952, மே மாதம் 1-ம் தேதி திருமணம் முடிவாயிற்று. சென்னையிலிருந்து கண்ணதாசன், பி.ஏ.பெருமாள், கலைஞர், சகஸ்ரநாமம், எம்ஜிஆர், அரங்கண்ணல் போன்றோர் வந்திருந்தனர். ஒரு தமிழாசிரியர் திருக்குறளை மந்திரமாக ஓத, கண்ணதாசன் மாலை எடுத்துக் கொடுக்க திருமணம் இனிதே நடந்தேறியது.
திருமணத்தில் வந்த விருந்தினர்களுக்கு எம்.ஜிஆர் வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு உணவு வகைகளை பரிமாறினார்.
திருமணத்துக்கு ஆன செலவு மொத்தம் ரூ.500.
நான் சென்னை வந்த சமயம். சிவாஜிக்கு சாந்தி, ராம்குமார், பிரபு எல்லாம் பிறந்து விட்டார்கள். சட்டக்கல்லூரிக்கு எதிரில் பிராட்வே சாலை உள்ளது. அதில் பிரபாத், பிராட்வே என்று இரண்டு தியேட்டர்கள் இருந்தன.
ஒரு ஞாயிற்றுக்கிழமை பிராட்வே தியேட்டரில் THE LIVING DESERT என்ற ஆங்கிலப் படம் பார்க்கப் போனேன். ஒரு ஆங்கிலோ இந்தியன் டீச்சருடன் 5 வயது தாண்டிய சாந்தியும் குட்டிப் பையனாக ராம்குமாரும் படம் பார்க்க வந்திருந்தனர். கிளைமாக்ஸில் கழுகும், பாம்பும் சண்டையிடும் காட்சியில் பயந்துபோய் இரண்டு குழந்தைகளும் டீச்சரைக் கட்டிப்பிடித்துக் கொண்டனர்.
1968, நவம்பர் 3-ம் தேதி சாந்திக்கும் நாராயணசாமிக்கும் ஆபட்ஸ்பரியில் திருமணம். சென்னையில் அப்போது அந்தக் கல்யாண மண்டபம்தான் பெரியது. விஐபிக்கள் வீட்டுத் திருமணங்கள் அங்கேதான் நடக்கும்.
'திருவிளையாடல்', 'கந்தன் கருணை', 'சரஸ்வதி சபதம்' என்று சிவாஜி ஹிட் படங்கள் கொடுத்திருந்த காலகட்டம். ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் அவரோட மகனாகப் படம் முழுக்க நடிச்சிருந்தேன். ஆனால், 'உயர்ந்த மனிதன்' இந்தக் கல்யாணத்துக்குப் பிறகுதான் வெளிவந்தது.
சிவாஜி வீட்டு முதல் கல்யாணம். அவரைப் பொறுத்தவரை அமெரிக்காவுக்கு கெஸ்ட்டா போயிட்டு வந்திட்டாரு. எகிப்து நாசர் கட்டபொம்மன் படத்துக்கு விருது கொடுத்து ஆசியாவின் சிறந்த நடிகர்னு பாராட்டி ஆயிடுச்சு. இப்ப புகழின் உச்சியில் இருக்கிறார்.
காமராஜர், பெரியார், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர் என்று ஆரம்பித்து தமிழ், தெலுங்கு, இந்தி ஹீரோக்கள், உலகப் புகழ் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் வரை அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் அத்தனை பேரும் ஆஜரான திருமணம்.
சினிமா உலகில், எல்லாக் கலைஞர்களுக்கும் வீடு தேடிப் போய் அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார்கள். 10 ஆயிரம் ரூபாய்க்கு நடித்துக் கொண்டிருந்த வளரும் நடிகனான எனக்கும் அழைப்பிதழ் வந்தது.
கல்யாண மண்டபத்தில் பேரேடு மாதிரி ஒரு புத்தகம் வைத்துக்கொண்டு யார், யார் திருமணத்திற்கு வந்தார்கள், யார் யார் வரவில்லை என்று லிஸ்ட் ஒருத்தர் தயார் செய்வார்.
ஆக, கல்யாணத்தை நாம் தவிர்க்க முடியாது. கூட்டமோ தேனாம்பேட்டை சிக்னலிலிருந்து ஆபட்ஸ்பரியின் வலதுபுறம் அப்போது ஜெமினி ரவுண்டானா இருந்தது. அதுவரை ரோடு முழுக்க வெறும் தலைகள்.. தலைகள்...
தமிழ்நாட்டில் யாரெல்லாம் சிவாஜி ரசிகர்களோ அத்தனை பேரும் சென்னையில் கூடினால் எப்படி இருக்கும்?
அவர்களுக்கு வாழ்விலே ஒரு நாள், தலைவன் வீட்டு முதல் திருமணம்.
நமக்குச் சொந்தமாக வீடோ, காரோ நினைத்துப் பார்க்க முடியாத நிலைமை. கடைசியாக ஒரு ஓட்டை டாக்ஸி பிடித்து ஏறிக்கொண்டு தேனாம்பேட்டை வழி மவுண்ட் ரோடில் கார், பஸ் எதுவும் போக முடியாதபடி கூட்டம் என்பதால் ஆபட்ஸ்பரிக்கு நேராக உள்ள குறுக்கு ரோட்டில் நுழைந்து கல்யாண மண்டப வாசலை நெருங்கிவிட்டேன். அட! இத பார்றா சிவகுமாரு! ஒருத்தன் சட்டையைப் பிடித்து இழுக்கிறான். ஒருவன் கன்னத்தைக் கிள்ளுகிறான். இன்னொருவன் தலைமுடியைக் கலைத்து மகிழ்கிறான்.
கார் கண்ணாடியை ஏற்ற முயன்றால், அது லீவர் வேலை செய்யவில்லை. ஒரு வழியாக டாக்ஸி உள்ளே நுழைந்துவிட்டது. மெதுவாக ஊறிக்கொண்டே மண்டபத்தை நெருங்கியது.
எதிரே சிவாஜி வேட்டி சட்டையில். ஆனால், ராஜராஜ சோழன் கம்பீரத்தோடு, நண்பர்கள் புடைசூழ வாயிலில் வரவேற்பாளராக நிற்கிறார்.
அவர் கண்ணில்படும் முன், டாக்ஸி மீட்டருக்குக் காசு கொடுத்து அனுப்பிவிட்டு, பம்மி பம்மி, சிவாஜி கண்ணில் பட்டுவிட வேண்டும். ஆனால், நேராகப் போய் வணக்கம் சொல்ல துணிவு வரவில்லை. உள்ளே நுழைந்துவிட்டேன்.
மந்திரம் ஓதி தாலி கட்டும் விழா முடிந்தது. மூச்சு முட்டும் கூட்டம். மணப்பந்தலை நெருங்க முடியாது. நெருங்கினாலும் அவர்களுக்கெல்லாம் திருமணப் பரிசு வழங்கும் அளவுக்கு செலவு செய்ய நம்மால் முடியாது.
சாப்பாடு செக்சன் எட்டிப் பார்த்தேன். ஆயிரம் பேர் சாப்பிட்டுக் கொண்டிருக்க, அவர்களுக்குப் பின்னால் அடுத்த பந்திக்கு 1000 பேர் நிற்கிறார்கள்.
சரி வீட்டுக்குப் போகலாம் என்று வந்து எட்டிப் பார்த்தால் அந்தப் பல்லாயிரம் பேரில் ஒருவர் கூட அகலவில்லை. கார்கள் மெயின்கேட்டை கடக்கும்போது இதடா ஜெமினி கணேசன்- அதோடா அசோகன், கே.ஆர்.விஜயா வர்றாங்க.. பார்த்தால் கூச்சலோ கூச்சல்...
காரில் போகிறவர்களுக்கே அப்படி மரியாதை. நாம் எப்படி வெளியே போகப் போகிறோம்? மண்டபத்துக்கு பின்புறச் சுவர் 7 அடி உயரம். உடைந்த கண்ணாடிச்சில்லுகள் குத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு காராக புகை கிளப்பிக் கொண்டு வெளியே போகின்றன. நூற்றுக்கணக்கான கார்கள் இடத்தை காலி செய்து மறைந்துவிட்டன.
இனி இருப்பது மிகச்சில. என்ன செய்யப்போகிறோம்? எப்படி தப்பிக்கப் போகிறோம் என்று குமைந்து கொண்டிருந்தபோது தோளில் ஒரு கை. திரும்பிப் பார்த்தால் பின்னணிப் பாடகர் பி.பி. சீனிவாஸ்.
‘‘என்ன பிரதர் வீட்டுக்குத்தானே?’’
ஆமாம் என்று சொல்ல வெட்கம். இல்லை என்றால் விட்டுவிட்டுப் போய் விடுவார். அசட்டுச்சிரிப்பு சிரிப்புடன் தலையை ஆட்டினேன்.
''வண்டில ஏறுங்க'' என்றார்.
‘‘சார், இந்தக் கூட்டத்தை தாண்டி இறக்கி விட்டாப் போதும். நடந்தே வீட்டுக்குப் போயிருவேன். நீங்க சிரமப்பட வேண்டாம்...!’’
‘‘அட சும்மா உட்காருங்க பிரதர்!’’
வீட்டு வாசலில் இறக்கி விட்டுப் போனார். நன்றி சொல்ல நா எழவில்லை.
30 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஏவிஎம் நிறுவனம் சென்னையில் ஸ்டுடியோ கட்டி படத்தொழிலை ஆரம்பித்து 50 ஆண்டுகள் ஆகியதைக் கொண்டாடும் விழா. கலைஞர் தலைமையில் ஏற்பாடாகி இருந்தது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளக் கலைஞர்கள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள் என பெருங்கூட்டம்.
அத்தனை பேருக்கும் பொறுமையாகச் சிரித்துக்கொண்டே கலைஞர் விருதுகள் கொடுத்து அசத்தினார். இரவு 10 மணியை நெருங்கும்போது விழா இனிதாக முடிந்து எல்லோரும் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார்கள்.
காலி நாற்காலிகளுக்கு நடுவிலேயே ஒரு பெரியவர் தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்தார். அதே பி.பி. சீனிவாஸ் வயதாகி, கண்பார்வை குறைந்து, நடை தளர்ந்து சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தார்.
போய்த் தோளைத் தொட்டேன். திரும்பிப் பார்த்து, ‘‘சார்! நீங்களா? ரொம்ப சந்தோஷம்!’’ என்றார். வாங்க நான் உங்களை வீட்டில் இறக்கி விடுகிறேன்!’’ என்றேன்.
வண்டியில் அமர்த்தி கிருஷ்ணவேணி தியேட்டர் அருகே நந்தி சிலை உள்ள பகுதியில் வீட்டு விலாசம் கேட்டு வாசல் வரை அழைத்துச் சென்று இறக்கிவிட்டேன்.
‘‘உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை!’’ என்றார். 30 வருஷத்துக்கு முன்னாடி இதை எனக்கு நீங்க செஞ்சிட்டீங்க!’’ என்றேன்.
---
அனுபவிப்போம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
1 hour ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago