நூல் மதிப்புரை: இருட்டில் காணும் பிம்பங்களை வெளிச்சத்துக்கு அழைக்கும் கட்டுரைகள் -  ''திரையின்றி அமையாது உலகு''  

By பால்நிலவன்

குமரன்தாஸ் கடந்த பத்தாண்டுகளில் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய 19 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். அவரது கட்டுரைகளை வெளியிட்டுள்ள பத்திரிகைகள் பெரும்பாலும் கடைவீதிகளில் கிடைக்காதவை. சிறு வாசகர் குழுக்களை மட்டுமே கொண்டவை என்றாலும் பெருவாரியான மக்கள் சமூகத்தின் பிரச்சினைகளை பிரக்ஞையோடு அலசி ஆராய்பவை.

நூலுக்குள் நுழைவதற்கு முன் பதிப்பாசிரியர் நீலகண்டனின் பதிப்புரை சினிமா சார்ந்த புதிய அறிமுகம் ஒன்றைத் தருகிறது. அதில் தாமஸ் ஆல்வா எடிசன் கூறிய ஒரு மேற்கோளை முன்வைக்கிறார். ''கேமரா பொய் சொல்லாது. ஆனால், கேமரா மூலம் பொய் சொல்ல வைக்கமுடியும்'' என்று. மேலும் சாதிய வேட்டை, மதவெறி வேட்டை, பெண்கள் மீதான பாலியல் வேட்டை எனப் பரிணாமம் பெற்ற இந்த வேட்டைத் தொகுப்புகளின் மெச்சூரிட்டி ஆர்ட் வடிவமாக திரைத்துறை இயங்கி வருகிறது என்று நீலகண்டன் குறிப்பிடுகிறார்.

குமரன்தாஸ் எழுதியுள்ள ''திரையின்றி அமையாது உலகு'' நூல் எதைக் குறித்தானது என்பதைப் புரிந்துகொள்ளவும் தமிழ் சினிமாக்கள் சார்ந்த ஒரு விமர்சன நூலுக்குள் எளிதாக செல்லவும் நீலகண்டனின் வரிகள் உதவுகின்றன.

நாம் ரசித்து மகிழ்ந்த தமிழ் சினிமாவில் இவ்வளவு ஓட்டைகளா என்ற கேள்வியே குமரன்தாஸ் புத்தகத்தைப் படிக்கும்போது தோன்றிய கேள்வியாகும்.

இன்றைய சினிமாக்கள் எவ்வளவு மோசமாக இருக்கின்றன என்பதைக் குழந்தைகளே சுட்டிக்காட்டும் நிலைகளைக்கூட இன்று நாம் காண்கிறோம். சில சினிமாக்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் அதன் லாஜிக் ஓட்டைகளைச் சுட்டிக்காட்டி உண்மையிலேயே தங்களின் புத்திசாலித்தனங்களை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் வளர்ந்த பெரியவர்களான நாம் அதே சினிமாவில் வரும் சமூகம் சார்ந்த சாதி சார்ந்த, ஆண் பெண் சார்ந்த தவறான அணுகுமுறைகள் அப்படங்களில் காணப்படும் குறைபாடுகளை ஏனோ சுட்டிக்காட்ட அல்ல புரிந்துகொள்ளக்கூட நாம் தயாரில்லை. காரணம், ஏற்கெனவே நமது பொதுப்புத்திகளில் படிந்துபோன சமூகப் படிநிலைகள் சார்ந்த கற்பிதங்கள்தான்.

குமரன்தாஸ் நூலைப் படிக்கும்போது எத்தனையோ படங்களில் காணப்படும் சிக்கலான திரைக்கதை பிரதிகளின் உள்ளீடான பிரச்சினைகளை அவர் எடுத்துச் சொல்லும்போது எப்படி இதை கவனிக்கத் தவறினோம். நாம் கூட இதை வியந்து ரசித்திருக்கிறோமே என்ற குற்ற உணர்ச்சியே மேலிடுகிறது. அதற்கு எவ்வளவு படிததவர்களானாலும் சமூகம் சார்ந்த புரிதல்களில் போதிய அக்கறையின்மைதான் காரணம் என்பதை ஒப்புக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. அவ்வகையில்தான் நமது சினிமாக்களும் ஊடகங்களும் பொதுவெளிகளும் வீடுகளும் நம்மை மிகவும் தவறான வகையில் நம்மை ஊட்டி வளர்த்துள்ளன.

நமது நாட்டில் உள்ள சாதியப் பிரச்சனைகளுக்குள் தீவிரமாக இவர் பேசியுள்ள பகுதிகளையெல்லாம் நான் இங்கு பேசப்போவதில்லை. எனவே அவர் இதில் பேசியுள்ள பல்வேறு பிரச்சினைகளில் ஒன்றை மட்டும் இங்கு பேசலாம் என்று தோன்றுகிறது.

பழங்குடியினரை நமது சினிமாக்கள் எப்படிக் காட்டுகின்றன? என்பதுதான் அவர் முன்வைக்கும் ஒரு கேள்வி. அக்காலப் படங்களில் பழங்குடியினர் என்றால் வனப்பகுதிகளுக்குள் தெரியாத்தனமாக வந்துவிடும் மனிதர்களை ஜிம்பளக்கா ஜிம்பாவோ ஓலமிட்டு என்று வெட்டிக்கொன்று சாப்பிடுபவர்கள் என்றே பல படங்களிலும் காட்டியிருப்பார்கள். அதற்குப் பின்னர் வந்த படங்களில் பழங்குடியினப் பெண்கள் அவர்கள் வாழும் பகுதிக்கு தெரியாத்தனமாக வரும் ஹீரோவை மயக்கும் ஆபாசப் பண்டங்களாகவே சித்தரித்திருப்பார்கள். இதற்கு எந்த பிரபல இயக்குநரும் விதிவிலக்கில்லை என்று கூறும் குமரன்தாஸ், அவ்வகையில் சமூகம் சாரந்த புரிதல்கள் இல்லாதவர்களாக மட்டுமின்றி அத்தகைய மக்களைத் தமிழ் சினிமாவின் பெரிய இயக்குநர்கள் அவர்களை வஞ்சித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமட்டுமின்றி நாம் கொண்டாடித் தீர்த்த முக்கியமான வரலாற்றுப் படங்களில்கூட கதாநாயக பிம்பங்கள் பெரும்பாலும் ஆதிக்க சாதியினத்தைச் சார்ந்தவர்களாகவும் அத்தகைய வரலாற்றுக் கதைகளில் தாழ்த்தப்பட்ட பிரிவுகளைச் சார்ந்த உண்மையாக வாழ்ந்த வரலாற்றுக் கதாபாத்திரங்களை மக்கள் கைகொட்டிச் சிரிக்கும் வகையிலான கேலிக்குரிய வசைகளை ஏற்பதாகவும் சித்தரிப்பதை இந்நூலாசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தகைய நகைச்சுவைப் பாத்திரங்கள் தாழ்த்தப்பட்ட மக்களாகவே, பிற சிறு இனக்குழு மக்களாகவே காட்டப்படுவது எவ்வகை சிந்தனையிலிருந்து உருவாகிறது என்ற கேள்வியையும் எழுப்புகிறார்.

நமது தமிழ்ச் சமூகத்திலேயே மிகவும் சின்னஞ்சிறிய இனக்குழுக்கள் உள்ளன. பெரிய பெரிய இயக்குநர்களுக்கே அவர்கள் வாழ்க்கை, அவர்கள் தொழில் அவர்கள் பண்பாடு சார்ந்த புரிதல்கள் இல்லையா? அவற்றைச் சரியாகக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் இல்லையா? என்பதுதான் இவர் முன்வைக்கும் கேள்வி.

இவர் முன்வைக்கும் கேள்விகள் பெரும்பாலும் ரசிகனைப் பார்த்து வைக்கவில்லை. காரணம், ரசிகன் பெரிய ஆராய்ச்சிகளில் இறங்குவதில்லை. அந்த நேரத்தில் பார்த்துவிட்டு கைதட்டிவிட்டுப் போய்விடுவான் என்பது மட்டுமல்ல, அதையே சரியான புரிதலாகவும் நம்பி தன் மனதிலும் அதையே பதியவைத்துக்கொண்டு சென்றுவிடுவான். இல்லையெனில் தமிழ்நாட்டு அரசியலில் ஐந்து தலைமுறைகளுக்கும் மேலாக சினிமா சார்ந்த நாயக பிம்பங்கள் கோலோச்ச முடியுமா?

குமரன்தாஸ் கட்டுரைகள், நாம் திரையரங்க இருட்டில் மெய்மறந்து காணும் பிம்பங்களை விசாரணைக்காக வெளிச்சத்திற்கு அழைக்கின்றன.

இக்கட்டுரைகள் மூலம் குமரன்தாஸ் முன்வைக்கும் கேள்விகள் எல்லாம் ரசிகனைப் பார்த்து கேட்கப்படக்கூடிய கேள்விகள் அல்ல. பெரிய பெரிய இயக்குநர்கள் என்று கூறிக் கொள்பவர்கள், மிகச்சிறந்த படைப்புகளைத் தந்துவிட்டதாக நம்பிக் கொண்டிருப்பவர்கள் குறைந்தபட்சம் பெற்றிருக்க வேண்டிய சமூகம் சார்ந்த புரிதல்கள் கூட ஏன் இல்லை என்பதுதான். அல்லது அவ்வளவு பொறுப்பின்மைக்கான காரணம் என்ன என்ற கேள்விதான். அத்தகைய திரைப்படங்களில் நேர்ந்த பிழைகளை ரசிகன் புரிந்துகொள்ள இயலாத நிலையிலேயே அவனை வைத்திருக்கும் நமது கல்வி, ஊடகம் உள்ளிட்ட பல்வேறு அறிவுத்தளங்களின் நிலையையும் இதன் மூலம் அவர் கேள்வி எழுப்புகிறார்.

இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளுக்கு வேண்டிய திரைப்படக் காட்சிக்கான படங்களை அங்கங்கே தவறாமல் இடம்பெறச் செய்து நூலை மேலும் எளிமையாக்கித் தந்துள்ளது கருப்புப் பிரதிகள். சமூக அக்கறையோடு சிறந்த ஆய்வு நூலை வெளியிட்ட பதிப்பகத்தாருக்கு நமது பாராட்டுகள்.

திரையின்றி அமையாது உலகு,
கட்டுரைகள்,
குமரன்தாஸ்.

வெளியீடு: கருப்புப் பிரதிகள்,
பி55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை,
சென்னை 600 005.
தொலைபேசி - 94442 72500.

பக்.210, விலை ரூ.180

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE