உலக வானொலி நாள்: வறுமையிலும் வாழ்க்கையை அழகாக்கித் தந்த மின்காந்த அலைகள்

By பால்நிலவன்

விவரம் அறிந்து நான் ரேடியோ கேட்கத் தொடங்கியிருந்தபோது தொடர்ந்து மூன்று நான்கு ஆண்டுகள் வானம் பொய்த்த காலம். தேவையான அளவு நீரைப் பாய்ச்சி நெல்லைப் பயிரிட முடியாமல் விவசாயத்தில் பருத்தி போன்ற வறண்டநிலத் தாவரங்களைப் பயிரிட்டு வாழ்ந்த காலம். காசு பணம் இருந்தால்தான் ரசனையான வாழ்க்கை என்றில்லை. காதுக்கினிய பாடல்களைக் கேட்டும் கவலையில்லாத வாழ்க்கையைப் பெறமுடிந்த நாட்களும் அவைதான்.

அப்போதெல்லாம் வாழ்க்கை இவ்வளவு விலை உயர்ந்ததாக இருக்கவில்லை. எனினும் பல்வேறு நிகழ்ச்சிகளையும் வழங்கிக் கொண்டிருந்த வானொலி மட்டுமே இருந்ததால் பெரிய பெரிய வீடுகளில் மட்டுமல்ல சின்ன சின்ன வீடுகளிலும் வாழ்க்கை அவ்வளவு சீக்கிரம் சலித்துப்போய் விடவில்லை யாருக்கும்.

கிராமங்களில் ஒரு வீட்டில் சைக்கிள் இருந்தால் மற்றவர்களைவிட அவர்கள் சற்றே வசதியானவர்கள் என்று அர்த்தம். இன்னொரு வீடடில் டைனமோ வைத்த சைக்கிள் இருந்தால் (டைனமோவுக்குக்கூட மஞ்சள் துணி ஸ்கார்ப் போட்டு வைத்திருப்பார்கள்) பெரிய நிலச்சுவான்தார் குடும்பமாகவோ அல்லது பள்ளித் தலைமையாசிரியர் குடும்பமாகவோ இருக்கும். அத்தகைய குடும்பங்களும் விரல்விட்டு எண்ணக்கூடியதாகவே இருக்கும். அதேபோலத்தான் மின்விசிறி, வானொலி, இன்னபிற வசதிகள் பலவும். பிலிப்ஸ் பேனாசோனிக், மர்பி ரேடியோ, டிரான்சிஸ்டர் எனப் பல ரகங்கள் வீட்டுக்குத் தகுந்த மாதிரி இருந்தன.

அக்காலத்தில் சில வீடுகளில கதாகாலட்சேபங்கள், அண்ணா, காமராஜர் பேச்சுகளை மக்கள் கேட்கட்டுமே என வெளியே திண்ணையில் கொண்டுவந்து வைத்துவிடுவார்கள். நான் கேள்விப்பட்ட வகையில் கிருபானந்த வாரியாரின் சொற்பொழிவு ஒலிபரப்பாகும்போது என் தாத்தா, மக்கள் கேட்பதற்காக திண்ணையில் கொண்டுவந்து வைத்துவிடுவாராம். மாலை நேரங்களில் வேலை முடித்துவரும் மக்களும் பொறுப்பாக வந்து ரேடியோ முன்வந்து அமர்ந்து கொள்வார்களாம்.

பிற்காலத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை வானொலியில் நேயர் விருப்பம் ஒலிபரப்பாகும்போது இளையராஜாவின் அன்னக்கிளி பாடல்கள் (மச்சானைப் பாத்தீங்களா மலையாளத் தோப்புக்குள்ளே), பத்ரகாளி பாடல்கள் (கேட்டேளே அங்கெ அதப் பாத்தேளா இங்கே எதையோ நினைச்சேன் அதையே முடிச்சேன் நான்.....) , கிழக்கே போகும் ரயில் (மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ) வீட்டின் வெளிவராந்தாவில் வைத்து தெருவே கேட்கும்படி சவுண்டு வைத்த சில வீடுகளையும் நான் கண்டதுண்டு. மின்காந்த அலைகளில் இளையராஜாவின் பாடல்கள் சாலையில் சென்ற ரசிகனைக்கூட கிறங்கச் செய்தன. பள்ளிக்கூட மாணவர்களோடு சினிமா செய்திகளை மட்டுமின்றி வானொலியில் ஒலிபரப்பப்படும் பாடல்களையும் பகிர்ந்து அளவளாவக்கூடிய சம்பவங்கள் ஏராளம்.

எங்கள் வீட்டில் ஒரு பழைய ரேடியோ இருந்தது. மூன்று வால்வுகள் உள்ள ஒர மர்பி செட். கொரகொர சவுண்டு இல்லாமல் அட்சரசுத்தமான சொற்களோடு அழகழகான இசையொழுங்கோடு அதன் ஒலிபரப்பில் மயங்கிக் கிடந்த நாட்கள் அவை. அந்த ரேடியோ முகப்பின் அழகே தனி. ரேடியோ ஆன் செய்ததும் நான் பலநேரம் ஸ்பீக்கரிலிருந்து வரும் இனிய பாடல்களைக் கேட்டவாறே, ரேடியோவின் ஸ்டேஷன் வைக்கும் முள் நகரும் எண்கள் பகுதிகளில் வண்ண மின்விளக்கு ஒளிரும் பகுதியை வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பேன். அதற்குள் ஆட்கள இருந்துகொண்டு கச்சேரி செய்கிறார்கள் என்றே நான் சின்ன வயதுகளில் நினைத்ததுண்டு.

பொன்னி அரிசி, தூயமல்லி சம்பா அரிசி சாப்பிட்ட காலம்போய் ரேஷனில் இருந்து ஆந்திரா மோட்டா அரிசியும் சாப்பிடவேண்டிய (அதுகூட இல்லாமல் கிராம விவசாய மக்கள் பலரும் சிரமத்திற்கு ஆளான) நிலைக்குத் தள்ளப்பட்டபோது வாழ்க்கையை ரம்மியமாக்கித் தந்தவை வானொலியின் மின்காந்த அலைகள்தான். பிறகு மழை பெய்து கிராமங்களில் மீண்டும் பசுமை துளிர்க்கத் தொடங்கினாலும் அந்த அழகிய நாட்களுக்கு இணையாக வேறெதுவும் இல்லை என்பதுதான் உண்மை.

எனக்குப் பிரியமான நண்பனின் குடும்பம் அன்றைய நாட்களில் திடீரென வறுமை நிலைக்கு ஆளானது. எவ்வளவு வறுமையிலும் ரேஷனிலோ மளிகைக்கடையிலோ அரிசி வாங்கி நான் பார்த்ததில்லை. ஆனால், பின்னர் அவர்கள் நிலம் மழையின்றி பாளம்பாளமாய் வெடித்திருந்த நாட்களில் போகப்போக எல்லாமே தலைகீழ் ஆனது.

ரேஷன் கடைக்கு அவனைத் துணைக்கு அழைத்துச்செல்ல அவனைத் தேடி போகும்போதெல்லாம் அவர்கள் வீட்டில் பாடல்கள் ஒலித்துக் கொண்டேயிருக்கும். அன்றைக்கு ஏதாவது ஒரு கூலிவேலைக்குப் போனால்தான் அவர்கள் வயிறு நிறையும் என்ற நிலையிலும் அவர்கள் பாடல்களை ரசித்துக் கேட்கும் விதம் மிகவும் வியப்பாக இருந்தது. முக்கியமாக இலங்கை வானொலி கூட்டுத்தாபன பாடல்கள் ஒலிபரப்பு என்றால் அவர்களுக்குக் கொள்ளை மகிழ்ச்சி.

''ஏஎம் ராஜா, ஜிக்கி பாடல்களை இலங்கை ரேடியோவில கேட்கணும்.... இந்த வாழ்க்கைய சுகமா அனுபவிக்கணும்'' என்பார் என் நண்பனின் தந்தை.

ஒரு ஜப்பானியக் கவிதையில், ''வீட்டில் அனைவரும் பசியோடு இருக்கிறார்கள். எனினும் தட்டு நிறைய வண்ண மலர்களை அடுக்குவோம்'' என்பது. எனக்கு இக்கவிதைக்கு உதாரணமாக அவர்கள் குடும்பம் இருந்ததை இன்றைக்கும் நினைத்துப் பார்க்கிறேன்.

வானொலிப் பெட்டி ரிப்பேர் ஆகக்கூடாது என்று நான் பலமுறை கடவுளை வேண்டிக் கொள்வதுண்டு. காரணம் எங்கள் ஊரில் இருந்த ரேடியோ ரிப்பேர் செய்யும் அண்ணன் வீட்டுக்கு ரிப்பேருக்காக ஒரு வானொலிப் பெட்டி போனால் அவ்வளவு சீக்கிரம் திரும்பி வராது. சில ரேடியோக்கள் ரிப்பேர் செய்யப்பட்டு உரிய இடங்களை அடைய இரண்டு ஆண்டுகள் கூட ஆனதுண்டு. அதற்கு அவர் சொன்ன காரணம் கையில காசு வாயில தோச என்பதுதான். அதாவது கிராமத்து மக்கள் அவ்வளவு சீக்கிரம் பணத்தைக் கொடுத்து வானொலியை வாங்கிச் செல்ல மாட்டார்களாம்.

சென்னை, புதுவை, திருச்சி, கோவை நெல்லை என பல்வேறு வானொலி நிலையங்களும் ரசனை அடிப்படையிலான நிகழ்ச்சிகளை, அரசியல் செய்திகளை மிகச்சிறப்பாகவே வானொலிகள் வழங்கிக் கொண்டிருந்தன. அதிலும் விவிதபாரதியின் வர்த்தக ஒலிபரப்பு என்றால் அதில் விளம்பரங்கள் உள்ளிட்டுப் பேசும் குரல்களிலிருந்து ஒலிக்கும் பாடல்கள் வரை நேயர்களுக்கு நெருக்கமானதொரு பிணைப்பு. ஞாயிறுகளில் திரைப்பட ஒலிச்சித்திரம் ஒரு நல்ல சினிமாவைப் பார்த்த திருப்தியைத் தரக்கூடியது. தங்கப்பதக்கம் சினிமா ஒலிபரப்பானபோது நடிகர் திலகத்தின் கணீர் குரலில் ஒலிபரப்பைக் கேட்கும் பல வீடுகளும் கப்சிப்பென்று உணர்ச்சிவயப்பட்டு ரசித்துக் கேட்டுக்கொண்டிருக்கும்.

விவிதபாரதியில் மட்டும்தான் இசையமைப்பாளர் பெயர், பாடியவர் பெயர்களோடு பாடலாசிரியர் பெயரையும் சொல்வார்கள். இதனால் எந்தெந்தப் பாடல் யார் யார் எழுதியது என்பது அக்கால வானொலி ரசிகர்களுக்கு மிக எளிய முறையில் மனப்பாடம் ஆகியிருக்கும். கல்யாணப் பரிசு பாடல்கள் அனைத்தும் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடல்கள் என்றால் மன்னாதி மன்னன் பாடல்கள் அனைத்தும் கண்ணதாசன் பாடல்கள். படகோட்டி, அடிமைப்பெண் பாடல்கள் அனைத்தும் வாலி பாடல்கள் என்றால், பாவமன்னிப்பு, பார்த்தால் பசிதீரும், பாசமலர் பாடல்கள் அனைத்தும் கண்ணதாசன் பாடல்கள். ஆறு நிமிடங்கள் இடம்பெறக்கூடிய சில பாடல்களும் உண்டு. பாடலின் பாதி முடிந்ததும் இசைத்தட்டு திருப்பிப் போடும் ஓசையும் வானொலியில் கேட்கும்.

நம்ம ஊர் விவித பாரதிபோல இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தமிழ் ஒலிபரப்பில் பெரும்பாலும் தமிழ்ப்படப் பாடல்கள்தான். பொங்கும் பூம்புனல், இரவின் மடியில் எனத் தலைப்புகள்தான் மாறுமே தவிர, பாடல்களை நாள் முழுவதும் கேட்டுக் கொண்டேயிருக்கலாம்.

சென்னை வானொலி நிலையத்தில் சினிமா நிகழ்ச்சிகளை மட்டுமல்ல வானொலிக்கென்று பிரத்யேக நிகழ்ச்சிகள் நம் மனதைக் கவரும் வகையில் அமைந்திருக்கும். செவிகளுக்கு விருந்தாகும் இந்த சினிமா ஒலிபரப்பு வாரந்தோறும் வருவதில்லை. மாதத்தில் ஒரு ஞாயிறு என்று நினைவு. மற்ற ஞாயிறுகளில் வானொலி நாடகங்கள். அதில் முக்கியமானது அகில இந்திய நாடகப் போட்டி. இந்திய அளவில் தேர்வான நாடகங்களை அனைத்து மொழிகளிலும் வானொலி ஸ்டுடியோக்களில் தயாரித்து ஒலிபரப்புவார்கள். பெரும்பாலும் நாடகத்தில் நடிக்கும் கலைஞர்களின் குரல்கள் நமக்கு நன்கு பழகிப்போய்விடும். நாடகங்கள் பெரும்பாலும் குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து கேட்கக்கூடிய தரமான படைப்புகளாக அமைந்திருக்கும். அற்புதமான பாரதியார் பாடல்களைக் கொண்டு சேர்ந்திசையை வழங்கிய எம்.பி.சீனிவாசனை வானொலி அன்றி வேறு எந்த சாதனம் மூலம் நாம் அறிந்திருக்க முடியும். தனது எளிய மெல்லிசையால் இனிய பாடல்களைத் தந்த டி.ஆர்.பாப்பாவை வானொலி மூலம்தானே நாம் அதிகம் அறிந்தோம். சிறுவர் சோலை நிகழ்ச்சிகளில் குழந்தைகளுடன் அன்போடு பேசும் வானொலி அண்ணா, கூத்தரபிரானாக மாறி நாடகங்களில் அதிரும் வசனங்களைப் பேசும் ஜாலங்களை வானொலிதான் தந்தன.

பள்ளிக்கூடங்களில் கல்வி ஒலிபரப்புகளில் கட்டிடங்களுக்கு அப்பால் உளள மரத்தடிகளில் ஒரு ஸ்டூலில் வானொலியை வைத்துவிட்டு பொறுப்பாகக் கேளுங்கள் என்று ஆசிரியர் அருகிலேயே உட்கார்ந்திருப்பார். அவ்வழியே குளத்திற்குப் போகிற வருகிவர்களைப் பார்த்துக்கொண்டே வானொலி வகுப்புகளைக் கேட்ட சுதந்திரத்தில் பாடம் தலைக்கேறியதோ இல்லையோ ஒருவித உற்சாகம் நிலவியது என்னவோ உண்மை.

விண்வெளியில் நடந்த முதல் இந்திய வீரர் வானிலிருந்து பேசியதை நேரலையில் ஒலிபரப்பினார்கள். அவரிடம் உரையாடியவர் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி. இதுகுறித்துப் பல தகவல்களும் இணையதளங்களில் காணக் கிடைக்கின்றன. ஆனால், அன்று மிகுந்த பரவசத்தோடு வானொலியில் இந்நிகழ்ச்சியை அனுபவித்தபோது கிடைத்த பரவசம் சொல்லி மாளாது.

மணிக்கு ஒருமுறை தேர்தல் முடிவுகளை வெளியிடும்போதும், பதவியேற்ற பிறகு நாட்டு மக்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் பேசும்போதும் எங்கோ உள்ள கிராமத்து குடிமகன் அதிசயமான ஒன்றைக் கேட்பதுபோல ஊக்கம் பெறுவான்.

நாட்டின் முக்கியமான தலைவர்கள் இறந்துவிட்டால் ஷெனாய் வாத்தியம் ஒலிக்கும் காலங்களும், அடுத்தடுத்த நாட்களில் தலைவர்களோடு பழகியவர்கள் பேட்டியளிக்கும் நிகழ்ச்சிகளும் உணர்ச்சிமயமானவை. சுகத்தில் மட்டுமல்ல நாட்டுக்கு நேரும் சோகத்தோடும் அனைவரையும் ஒரே புள்ளியில் இணைக்கும் சக்திவாய்ந்த ஊடகமாக வானொலி நிகழ்ச்சிகளை வடிவமைத்த அதன் ஒலிபரப்பாளர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் என்றென்றும் போற்றக்கூடியவர்களே.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

28 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்