யூடியூப் பகிர்வு: தி ரோடு - 5 நிமிடங்களுக்குள் இந்திய நிலப்பரப்புகளின் வழியாக ஒரு பெரும் பயணம்

By பால்நிலவன்

இண்டிபண்டண்ட் மியூசிக் வரிசையில் சமீபத்தில் வெளியாகியுள்ள பாடல் 'தி ரோடு'. பல்வேறு தட்ப வெப்பநிலைகளுக்கான நிலப்பரப்புகளின் பாதைகள் வழியே தனிமையான ஒரு பைக் பயணத்தை இப்பாடல் மிகவும் அழகாக வெளிப்படுத்தியுள்ளது.

இண்டிபண்டண்ட் மியூசிக் என்பது தமிழுக்கோ நமது ஊடகங்களுக்கோ புதியதல்ல. மால்குடி சுபா (வால்பாறை வட்டப்பாறை) போன்றவர்களின் ஆல்பங்களில் நாம் ரசித்து மகிழ்ந்துள்ளோம்.

உணர்வுகளைத் தின்று வாழும் இளவயதின் நாட்கள் பசியறியாமல் பாடல்களை சுவைத்தே வாழ்வின் தேடல்களில் ஜீவிக்கக் கூடியது. அதைசரியாக பயன்படுத்திக்கொண்டது எம்டிவி இண்டிபண்டண்ட் பாடல்கள். ஒரு காலத்தில் எம்டிவி சானல்களில் 24 மணிநேரமும் இண்டிபண்டண்ட் மியூசிக் ஆல்பங்களே ஓடிக்கொண்டிருக்கும்.

இப்போது அப்படி இருக்கிறதா என்று தெரியவில்லை. இப்போது இருக்கிறதா அப்படி என யாராவது சொல்லவும்.

அதற்குப் பதிலாக தமிழ் சேனல்கள் தமிழ் சினிமா பாடல்களை எந்நேரமும் ஒளிபரப்ப நகம்கடித்து பொழுதை மெல்லும் ரசிகர்கள் ஏராளம். ஆனால் இண்டிபண்டண்ட் பாடல்களுக்கு உள்ள தேடல் இவற்றிற்கு ஏனோ இருப்பதில்லை.

காரணம் இண்டிபண்டண்ட் பாடல்களுக்கென்று கிடைத்த இசையமைப்பாளர்கள். அல்லது வாய்ப்புகளின் வாசல்களைத் திறக்க போராடும் நடிப்பு, இசை, நடனக் கலைஞர்கள்.

இவ்வகையிலான பிரிவுளில் பாப், ராக், ஜாஸ் பாடல்களின் தாக்கத்தில் விளைந்த உலகக்கலைஞர்கள் பலரை நாம் அறிவோம். அவ்வகையில் மைக்கேல் ஜாக்சன் ஆல்பங்கள் பலவிதமான சேனல்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய காலங்களை நாம் வேகமாக கடந்து வந்துள்ளோம்.

இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்புதான் வெளியானது தி ரோடு பாடல். அற்குள் 95 ஆயிரம்பேர் பார்த்திருக்கிறார்கள். ரசிகர்களை வசீகரித்த தி ரோடு, பாடலை ''ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்'' தயாரித்திருக்கிறது. ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இண்டிபெண்டண்ட் மியூசிக்காக பிரபல தமிழ்ப்பட இயக்குநர் கவுதம் வாசுதேவன் மேனனால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

அனைவருக்கும் நன்றி அனைத்து சாலைகளுக்கும் நன்றி கார்டுடன் இப்பாடல் தொடங்குகிறது.

தி ரோடு இயற்கை, ஆன்மிகம், வரலாற்று நினைவுச் சின்னங்கள் என பார்வையாளர்களின் பாதைகளை வேகமாக அனூப் நிரச்சனின் இனிய இசையோடு திறந்துவைக்கிறது இப்பாடல்.

இப்பாடலை இயக்கிய அனந்து ராஜனின் ரசிக்கத்தக்க இயக்கத்திற்கு ஒரு சான்று... ஒரு வாசகம் தாங்கிய பலகை இடம்பெறுகிறது.... பைக்கில் செல்லும் இளைஞன் ஒரு அற்புதமான பாடல் ஒன்றின் வழியாக இந்திய பாதைகளின் பல திருப்பங்களை கண்டடைகிறான். ஒரு மலை வாசஸ்தலத்தில் பாதைகளின் சங்கமத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு வாசகத்தைப் பார்க்கிறான், ''உங்களுக்கு இது சாகசம் எங்களுக்கோ இது வழக்கமான ஒன்று'' இதையும் ஏற்றுக்கொள்ளுவதுதான் ஏகாந்த பயணங்களின் ஆழமான தத்துவம்.

கேரளாவிலிருந்து காஷ்மீர் வரை 7ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் நாட்டின் 10 மாநிலங்களை கடந்திருக்கும் ஐந்து நிமிட தி ரோடு பாடலோடு இனி உங்கள் பயணம்.......

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE