கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு – பிரச்சினைகளும் தீர்வுகளும்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் வருடந்தோறும் பிப்ரவரி 9ஆம் தேதியன்று, கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புத் தினமாக அனுசரிக்க கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23ஆம் தேதியன்று அரசாணை (எண் 448) தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையால் வெளியிடப்பட்டது.

அதனடிப்படையில் இன்று தமிழகமெங்கும் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இத்தினத்தை அனுசரிக்க தொழிலாளர் நலத்துறை எடுத்த முயற்சிகளை வரவேற்பதும் பாராட்டுவதும் நமது கடமையாகும். அதேநேரத்தில், கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பிலுள்ள, சவால்களை வெளிப்படையாகக் கூறுவதும், அதற்கான தீர்வுகளை முன்வைப்பதும், சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் தங்கள் நடவடிக்கைகளை மேம்படுத்த ஏதுவானதாக இருக்கும்.

கொத்தடிமைத் தொழிலாளர் முறை நவீன அடிமைத்தனத்தின் (Modern Slavery) ஒரு வடிவமாக கருதப்படுகிறது. இந்தியாவில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை என்பது இன்றளவும் நடைமுறையில் இருக்கிறது என்பது கசப்பான உண்மை. இந்தியாவைப் பொறுத்தளவில் மனிதன் சாதி ரீதியாக பிரிக்கப்பட்ட நாளிலிருந்து, கொத்தடிமை தொழிலாளர் முறை என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு வழக்கமாகவே இருந்து வருகிறது.

பொருளாதாரரீதியாக பின்தங்கிய கீழ் சாதியினர், மேல் சாதியினரைச் சார்ந்து வாழவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டதால், அவர்களின் தேவைகளுக்காக மேல் சாதியினரிடம் பணத்தைக் கடனாகப் பெற்று ஜீவித்து வாழவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு நிலவியது. அவர்களுடைய செலவினங்களுக்கு கடன்பெற அடமானமாக கொடுக்க நிலம் அல்லது பொருட்கள் ஏதும் இல்லாததால், குடும்ப உறுப்பினர்களில் ஒருவரை அடமானமாக வைத்து செலவினங்களை மேற்கொண்டு வந்தனர். சமூக கோட்பாடு, வழித்தோன்றல்கள், சாதி மற்றும் பிற பொருளாதார காரணங்கள் கொத்தடிமைத் தொழிலாளர் முறையை ஊக்குவித்து வந்தன.

கொத்தடிமைத் தொழிலாளர் முறையால் பாதிக்கப்பட்டவர்கள், மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதும் மோசமான வேலைச் சூழலில் ஈடுபடுத்தப்படுவதும், உடல் மனம் மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதும் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் போல் மாறிவிட்டன. இம்முறையை ஒழிக்க 1976ஆம் ஆண்டு கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு, 45 ஆண்டுகள் கடந்தும், இன்றும் இந்த முறை பரவலாக இந்தியாவில் இருக்கிறது என்பது வேதனை தருகிறது. செங்கல் சூளை, கல்குவாரி, அரிசி ஆலை, பஞ்சாலைகள், உப்பளம், பட்டு நெய்தல், வீட்டுவேலை போன்ற பல்வேறு தொழில்களிலும் கொத்தடிமை முறை இருந்து வருகிறது என்பதே யதார்த்த நிலை.

வரையறை

கடன் அல்லது கடமைக்காக, ஒரு நபர் தன்னுடைய சட்டப்படியான குறைந்தபட்ச ஊதியம் பெறும் உரிமை அல்லது சுதந்திரமாக விருப்பப்பட்ட வேலையை செய்யும் உரிமை அல்லது விருப்பப்பட்ட இடத்திற்கு செல்லும் உரிமை அல்லது தான் உற்பத்தி செய்த பொருளை சந்தை விலைக்கு விற்பனை செய்யும் உரிமை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை இழந்தால் அவர் கொத்தடிமைத் தொழிலாளர் என்று கருதப்படுகிறார்.

இந்தியாவில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு

கடந்த ஜூன் மாதம் அமெரிக்க அரசால் வெளியிடப்பட்ட மனிதக் கடத்தல் குறித்த அறிக்கை (Trafficking in Persons Report), இந்தியாவில், ஒட்டுமொத்தக் கடத்தலுக்கு எதிராக எடுக்கப்பட்ட முயற்சிகள் - குறிப்பாக கொத்தடிமைத் தொழிலாளர் முறைக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. விசாரணைகள், வழக்குத் தொடர்தல், தண்டனைப் பெற்றுத் தருதல் போன்றவை அரசால் குறைக்கப்பட்டுள்ளன. சட்ட அமலாக்கம் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண தேவையான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

1976 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை சுமார் 3,13,000 கொத்தடிமைத் தொழிலாளர்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் தொண்டு நிறுவனங்கள் சுமார் 8 மில்லியன் பேர் கடத்தலில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன. அரசு கூறும் மதிப்பீடு, தொண்டு நிறுவனங்கள் கூறும் மதிப்பீட்டில் 4 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கிறது. தொண்டு நிறுவனங்களின் கூற்றுப்படி கொத்தடிமை வழக்குகளில் குறைந்தபட்சம் பாதி வழக்குகள் கூட காவல்துறையால் முறையாக பதியப்படவில்லை. 36 மாநிலங்களில் / யூனியன் பிரதேசங்களில், 17-ல், 2017 அல்லது 2018 இல் ஒரு கொத்தடிமைத் தொழிலாளர்கள்கூட இனம் காணப்படவில்லை. அரசு அலுவலர்கள் கொத்தடிமைத் தொழிலாளர்களை இனம்காண குறைந்தபட்ச முயற்சி கூட எடுக்கவில்லை என்று இந்த அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

கொத்தடிமையாக இனம் காணப்பட்டவர்களில், 43 சதவீதம் பேருக்கு மட்டுமே மீட்புச் சான்றிதழ் (Release certificate) வழங்கப்பட்டுள்ளது மற்றும் 26 சதவீதம் பேருக்கு மட்டுமே இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்றும் 10 மாநிலங்களில் உள்ள 3 தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தமிழகத்தில், இதுவரை 65,573 பேர் மீட்கப்பட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மே மாதம் 16 ஆம் ஆண்டிலிருந்து டிசம்பர் 2018 வரை, 217 மீட்பு நடவடிக்கைகள் மூலம், 3090 கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு இதுவரை முழுமையான நிவாரணம் கிடைக்கவில்லை. மேலும் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் கூடத் தண்டிக்கப்படவில்லை.

மேற்கண்ட புள்ளி விவரங்கள் கொத்தடிமை முறை ஒழிப்பிற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்பதை சுட்டிக் காட்டுகின்றன. கொத்தடிமைத் தொழிலாளர்களை இனம் காண்பது, அவர்களை மீட்பது, மீட்புச் சான்றிதழ் வழங்குவது, நிவாரண/மறுவாழ்வு உதவிகள் வழங்குவது, மற்றும் குற்றம் செய்தவருக்கு தண்டனை பெற்றுத் தருவது போன்ற பல்வேறு செயல்பாடுகளில் இடைவெளிகள் இருக்கின்றன. இந்த இடைவெளிகளைச் சரி செய்வதன் மூலம் கொத்தடிமை முறை இல்லாத் தமிழகத்தை உருவாக்க முடியும்.

பரிந்துரைகள்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கொத்தடிமைத் தொழிலாளர் முறை இருக்கும் தொழில்கள் மற்றும் பகுதிகளை இனம் காண வேண்டும். இந்த ஆய்விற்காக மத்திய அரசு 4.5 லட்சம் ரூபாய் வழங்குகிறது. இந்த நிதியை முறையாகப் பயன்படுத்தி கொத்தடிமைத் தொழிலாளர்களை இனம் காணவேண்டும். இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்பதற்கும் அவர்கள் மறுவாழ்விற்கும் பல்துறை இணைந்து, ஒருங்கிணைந்த ஒரு விரிவான செயல் திட்டத்தை வடிவமைத்து முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும்.

விடுவிப்புச் சான்று (Release certificate) வழங்கும் அதிகாரத்திலுள்ள கோட்டாட்சியர்கள் அனைவருக்கும் முறையான பயிற்சி மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதில் அவர்களுக்குள்ள பங்கு குறித்து விளக்கவேண்டும். இனம் காணப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்கள் அனைவருக்கும் விடுவிப்பு சான்று தருவதை உறுதிப்படுத்த வேண்டும். தற்போதுள்ள அதிகாரிகள் கொத்தடிமைத் தொழிலாளர்கள் இருப்பதாகக் கண்டறிந்தால் மாவட்ட நிர்வாகத்திற்கு கெட்ட பெயர் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள்; ஆகவே அதிக வழக்குப் பதிவு செய்பவர்களுக்கு விருது வழங்கி உற்சாகப்படுத்த வேண்டும்.

மீட்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு வசதிகள் மற்றும் திட்டங்கள் (வாழ்வாதார திட்டங்கள், வீட்டு வசதி, ரேஷன் கார்டு மற்றும் அடையாள அட்டைகள் போன்ற அனைத்தும்) ஒரே இடத்தில் கிடைக்கும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். நிவாரணத் தொகை மற்றும் மறுவாழ்வு வசதிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை (Standard Operating Procedures) உருவாக்கிச் செயல்படுத்துவது சாலச்சிறந்தது. இல்லையெனில் அவர்கள் மீண்டும் கொத்தடிமைகளாக வேறு இடங்களுக்குச் செல்லும் நிலை ஏற்படும்.

மீட்கப்படுபவர்கள் குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில், அவர்களை குழந்தை நலக் குழுவிடம் (Child Welfare Committee) ஒப்படைத்து, அவர்களுக்கு வேண்டிய மனநல ஆலோசனைகளும், மருத்துவ / சட்ட உதவிகளும் செய்யப்படவேண்டும். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுடன் இணைந்து செயல்பட வேண்டும். கொத்தடிமை முறை என்பது ஒரு தனிப்பட்ட குற்றமாக இருக்காது; அத்துடன் பாலியல் ரீதியான துன்புறுத்தல் இருந்தாலோ அல்லது மனிதக் கடத்தல் இருந்தாலோ அதையும் இணைத்து விசாரிக்க வேண்டும். செயல்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை மையமாகக் கொண்டும், குழந்தை நேயமாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கோட்ட, மாவட்ட மற்றும் மாநில அளவிலானக் கண்காணிப்புக் குழுக்கள் பெயரளவில் இல்லாமல், முழுமையாக நடைபெற்று சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பு முறைக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போன்றவற்றை ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும். கொத்தடிமையாக வைத்திருப்போருக்கு விரைவாக தண்டனை பெற்றுத் தருவதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் தற்போது குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டால் மட்டுமே மறுவாழ்வு நிவாரணத் தொகை பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும் என்ற நிலை இருக்கிறது. இதை மாற்றி விடுவிப்பு சான்று கொடுக்கப்பட்டாலே மறுவாழ்வுக்கான நிதி கொடுக்கப்பட வேண்டும். கொத்தடிமை முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கண்டறியப்பட்ட பகுதிகளில் தீவிரமான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு கொத்தடிமை முறையை ஒழிப்பதில் மிக முக்கிய பங்கு உள்ளது. அவர்கள் எல்லைகுட்பட்ட பகுதிகளில் பகுதிகளில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை இல்லை என்ற நிலையை உருவாக்க முயற்சி எடுக்க வேண்டும். சிறப்பாகச் செயல்படும் ஊராட்சி மன்றத் தலைவருக்கு விருது வழங்கலாம்.

கோவிட்-20 ஏற்படுத்திய தாக்கத்தால் உருவான பொருளாதாரச் சீரழிவு இன்னும் சரியாகாத இந்த அசாதாரணமான சூழலில், கொத்தடிமை தொழில்முறை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஆகவே கொத்தடிமை முறையை முழுமையாக ஒழிக்க வேண்டுமென்றால் அனைவரும் இணைந்து ஒரு விரிவான செயல் திட்டத்தைச் செயல்படுத்தி, கிராம அளவில் கண்காணிப்பினை மேம்படுத்த வேண்டியது அவசியம். இதற்குப் போதிய நிதி மற்றும் மற்ற உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.

இளவழகன்,

சமூகச் செயற்பாட்டாளர்,

தொடர்புக்கு: ilavazhagan2020@gmail.com

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE