திரைப்படச்சோலை 4: எம்ஜிஆர் கழுத்து எலும்பில் ஒரு குண்டு

By செய்திப்பிரிவு

1966-நவம்பர் 14 -காவல்காரன் படப்பிடிப்பில் முதன் முதல் எம்.ஜி.ஆரை சந்தித்தேன்.

அந்தப்படத்தில் அவருக்கு தம்பியாக நடிக்க நடிகர்கள் தேர்வு நடந்தது. சத்யா மூவிஸ் அலுவலகம் கோபாலபுரம் ராமசாமி தெருவில் இருந்தது. எம்.ஜி. நாயுடு என்ற பெரியவர் ஆடையலங்கார நிபுணராக 50 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர்.

நான் சென்றதும் உயரம் எவ்வளவு என்று கேட்டார். 5 அடி 6 அங்குலம் என்றேன். சுவற்றில் பென்சிலால் ‘மார்க்’ செய்த பகுதியில் நிற்க வைத்து தலை மட்டத்தில் ஸ்கேல் வைத்து பார்த்து சரி என்று ஒப்புக் கொண்டார்.

ஸ்லேக்-ஃபேண்ட் அளவு எடுத்துக் கொண்ட பின் உதவி இயக்குனர், ‘சார் நீங்க 24, 35, 47 -சீன்கள்ள மட்டும் செருப்பு போட்டுக்குங்க. மத்த சீன்ல ஷூ போட்டுக்கலாம்’ என்றார்.

அந்த 3 சீன்களில் நான் எம்ஜிஆருடன் நடித்தேன். இருவரும் சம உயரம் என்பதால், தம்பி கொஞ்சம் குறைந்த உயரம் இருக்க வேண்டும் என்பதற்காக எம்ஜிஆருக்கு ஷூவும், நான் செருப்பும் அணிந்து கொள்ள வேண்டும் என்பது வரை எல்லாம் உன்னிப்பாக கவனித்து படம் எடுத்தார்கள்.

குறிப்பிட்ட நவம்பர் -14 வாகினி ஸ்டுடியோவில் மத்தியானம் எம்ஜிஆர் படப்பிடிப்பு. ஏற்கனவே நம்பியார், விகேஆர், அசோகனுடன் இரண்டு நாட்கள் நடித்து விட்டேன்.

காவல்காரன் படத்தில்...

பிற்பகல் 2.30-க்கு எம்ஜிஆர் வந்தவுடனே, செட்டுக்குள் லைட்பாய்ஸ் கொடுத்த குரல்கள், காமிரா உதவியாளர்கள் பேச்சு, புரொடக்ஷன் ஆட்கள், டீ, காபி கொடுக்கும்போது பேசும் குரல்கள் எல்லாம் ‘கப்-சிப்’. அசாத்திய மெளனம் நிலவியது.

உள்ளே வந்தவர் நம்பியார், விகேஆர் போன்றோரை வணங்கி விட்டு பக்கத்தில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தார். நான் மெதுவாக சென்று குனிந்து வணக்கம் சொன்னேன்.

‘மடார்’ என்று எழுந்து, ‘ஏய்’ என்று ஒரு குரல் கொடுத்தார். அடுத்த நொடியில் ஒரு நாற்காலி பறந்து வந்தது. நாற்காலியை எனக்குப் போட்டு நான் அமரும் வரை அவர் நின்று கொண்டே இருந்த பண்பு ஆச்சர்யப்படுத்தியது.

முதல்நாள் படப்பிடிப்பிலேயே, அவருக்கு எதிராக சோபாவில் உட்கார்ந்து, சகஜமாக பேச அனுமதித்தார்.

என்னிடம் பேச்சை துவங்கும் முன்பே -என் தந்தையார் சிறு வயதில் இறந்து போனதும், விதவைத் தாயால் வளர்க்கப்பட்ட பிள்ளை என்பதும், ஓவியக்கல்லூரியில் முறையாகப் படித்த ஓவியன் என்பதும் தனக்குத் தெரியும் என்று எனக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

தன் தாயாரைப் பற்றி பல சம்பவங்கள் அவர் கூறியபோது நான் எனது தாயாரின் மனோ வலிமை பற்றி வலுவான வாதங்கள் வைத்தேன்.

56 வயதில் வலது கை, மணிக்கட்டுக்கு மேல் உடைந்து போய், 6 மாதம் கட்டுப் போட்டு, பாலக்காட்டில் மீன் எண்ணெய் வாங்கி வந்து பாக்கு மட்டையில் ஊற்றி கையை அதில் ஊற வைத்து -சொந்தக்காரர்கள், விடிய, விடிய தொட்டிலாட்டி குணப்படுத்தியதை -சென்னையில் படிக்கும் என் படிப்பு கெட்டுப் போகக்கூடாதென்று -எனக்கு தெரிவிக்காமலே இருந்தார் என்று சொன்னபோது எம்ஜிஆர் அதிர்ந்து விட்டார்.

கணவரை பறிகொடுத்து 3 குழந்தைகளைப் பறிகொடுத்து, இருக்கும் ஒரே மகன் இந்தத் துன்பச்சேதி கேட்டு ஓடி வரவேண்டாம் என்று- நண்பர்கள் யாரும் கடிதம் போடக்கூடாது என்று என் தாயார் கண்டித்தது அவர் மனதில் ஆழமாய் பதிந்து விட்டது.

1967- ஜனவரி -12-ந்தேதி ராமாவரம் தோட்டத்தில் எம்ஜிஆர்- எம்.ஆர், ராதா சந்திப்பில் துப்பாக்கி சூடு நடந்து எம்ஜிஆரை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு ரத்தம் சொட்ட சொட்ட காரில் எடுத்து வந்த போதும் -எனக்கு ஒண்ணுமில்லை, ராதா அண்ணனைக் காப்பாத்துங்க என்று அவரால் எப்படி சொல்ல முடிந்தது என்று இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கிறது.

எம்.ஜி.ஆர் மருத்துவமனையில்..

பொங்கல் பண்டிகை கொண்டாட நீலகிரி எக்ஸ்பிரசில் நான் கோவை நோக்கி பயணமானபோது காட்பாடியில்தான் துப்பாக்கிச் சூடு செய்தி கிட்டியது.

கோவையில் குடும்பத்தோடு ராயல் தியேட்டரில் ‘கந்தன் கருணை’ படம் பார்த்தேன். அந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. படம் பார்த்து விட்டு ஊருக்கு டாக்ஸியில் செல்லும் போது - ‘கந்தன் கருணை’- போஸ்டர் எங்கெல்லாம் ஒட்டப்பட்டிருந்ததோ அதன் மீது சாணி அடிக்கப்பட்டிருந்தது.

அந்த நாட்களில் எம்ஜிஆர்-சிவாஜி ரசிகர்களுக்கிடையே கடும் பகை இருந்த நேரம். எம்ஜிஆர் ரசிகன் உயிரே போனாலும் சிவாஜி படம் பார்க்க மாட்டான். சிவாஜி ரசிகன் எம்ஜிஆர் படம் ஓடும் தியேட்டர் பக்கமே போக மாட்டான்.

சிவாஜி படத்தில் நான் நடித்திருந்ததால் -எம்ஜிஆர் குண்டடிபட்ட ஆத்திரத்தில், சிவாஜி உருவத்தின் மீது சாணி அடித்தும் கோபம் தீராமல் இந்த சிவகுமாரும் சிவாஜி ஆள்தாண்டா- என்று முருகன் வேடத்திலிருந்த எனது முகத்திலும் (போஸ்டர்) சாணி அடித்திருந்தார்கள்.

அப்போதுதான், வாழ்நாள் முழுதும், ரசிகர் மன்றம் என்ற ஒன்றை வைத்து, அப்பாவி ரசிகர்களிடையே பகை உணர்வை வளர்க்கக் கூடாது என்று முடிவெடுத்து 40 ஆண்டுகள் திரையுலக வாழ்க்கையில் ரசிகர் மன்றம் அதிகாரப்பூர்வமாக வைத்துக் கொள்ளாத நடிகனாகவே இருந்து விட்டேன்.

ஏழைத்தாய்க்கு ஆறுதல்

சென்னை திரும்பியதும் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்ஜிஆரைப் பார்க்க 2, 3 முறைகள் சென்றேன். திருவிழா கூட்டம் போல், படை, படையாக தமிழகமெங்கும் இருந்து எம்ஜிஆர் ரசிகர்கள் வந்து கொண்டே இருந்தனர். பாதிப் பேர் பழனி, திருப்பதி சென்று தலைவன் குணமாக வேண்டும் என்று மொட்டை போட்டிருந்தனர்.

‘விசிட்டர் நோட்டு’ ஒன்று மாடிக்கு செல்லும் வழியில் வைக்கப்பட்டிருந்தது. மேலே செல்ல யாருக்கும் அனுமதியில்லை. ‘பூரண குணமடைய பிரார்த்திக்கிறோம்!’ என்று எழுதி கையெழுத்திட்டு செல்லும் கூட்டம் க்யூவில் நின்றது. இரண்டு முறை நானும் அதில் எழுதி கையெழுத்திட்டுப் போய் விட்டேன்.

பிப்ரவரி 4-ந்தேதி மனசு கேட்காமல், இம்முறை தூரத்திலிருந்தாவது பார்த்து விடவேண்டும் என்று போனேன்.

சத்யா மூவிஸ் ஆர்.எம்.வீரப்பன் சார் வழியில் அமர்ந்திருந்தார். ‘சிவகுமார் கழுத்தில் கட்டுப் போட்டிருக்காங்க. நீங்க போனா, அவர் பேச முயற்சிப்பார். சிரமமா இருக்கும்!’ என்றார்.

‘பரவாயில்லை சார்! அவர் சீக்கிரம் குணமடைஞ்சா போதும். நான் வர்றேன்!’ என்று கிளம்பினேன்.

‘நீங்க ரெண்டு மூணு தடவை வந்திட்டுப் போனீங்க. எனக்குத் தெரியும். தூரத்திலிருந்து பார்த்துட்டு போயிருங்க!’ என்று வழி விட்டார். 2-வது மாடியில் அவர் அறைக்கு முன்னால் திறந்த கதவுக்கு குறுக்கே- ஒரு பெஞ்ச் தடுப்பாக வைக்கப்பட்டிருந்தது. யாரும் அதைத் தாண்டிப் போகக் கூடாது என்பதற்கான தடுப்பு அது.

அறைக்குள்- கழுத்தில் வெள்ளை பேண்டேஜ் உடன், சிவந்த உடம்பில் கருவழிந்த -குழி விழுந்த கண்களுடன், கலைந்து போன தலைமுடியுடன் வந்திருந்தவர்களுக்கு ஏதோ கையெழுத்துப் போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அவர்கள் போனதும், அங்கிருந்து என்னைப் பார்த்தார். எங்கோ பார்த்த முகம் போல் அவருக்குத் தோன்றியதை அந்த பார்வையில் கண்டு கொண்டேன்.

இதயவீணை -படத்தில்

மெதுவாக எழுந்து என்னை நோக்கி வந்து என் முகத்தை கூர்ந்து கவனித்தார். 2 மாதங்களுக்கு முன் -ஒப்பனையில் ஒரே ஒரு நாள் காவல்காரனில் உடன் நடித்த இளைஞன். இப்போது ஒப்பனையில்லாத முகம் -எப்படியோ கண்டு பிடித்து, ‘தம்பி, நீ சிவகுமார் இல்லே?’ என்று குரல் வராமல், காற்றின் வழி விசாரித்தார். ‘ஆமாம்!’ என்று தலையாட்டினேன்.

ஸ்டண்ட் ஆட்களை முறைத்துப் பார்த்து- இந்த பெஞ்சை அகற்றுங்கள் என்று ஜாடை செய்தார். தரதரவென்று என்னை -வலிமையான தன் கரங்களால் இழுத்துப் போய் படுக்கை மீது அமரச் செய்தார்.

‘நீ யாருன்னு அவங்களுக்குத் தெரியாது. அதான் அங்கே நிக்க வச்சுட்டாங்க. பாவம்! அவங்களை மன்னிச்சிடு!’ என்றார். ‘இந்த சம்பவம் நடந்தன்னிக்கு நான் ஊருக்குப் போயிருந்தேன் அண்ணே!’ என்றேன்.

கண்களை அகல விரித்து ஆச்சர்யமாக, ‘ஊருக்குப் போனியா? அம்மா... கை ஒடிந்த அம்மா... செளக்கியமா?’ என்று தன் கையை தொட்டுக்காட்டி காற்றை குரலாக்கி கேட்டார்.

என் கண்களில் தாரை, தாரையாய் கண்ணீர்- மரணத்தை தொட்டு வந்த மனிதன், இந்த 20 நாளில் எத்தனை ஆயிரம் பேர் வந்து போயிருப்பார்கள். என்னவெல்லாம் மனதில் ஓடியிருக்கும்? 2 குண்டுகளை அறுவை சிகிச்சையில் டாக்டர்கள் எடுத்து விட்டனர்.

ஒரு குண்டு கழுத்து எலும்பில் சிக்கிக் கொண்டுள்ளது. அதை அகற்ற அறுவை சிகிச்சை செய்தால் உடலிலுள்ள நரம்பு மண்டலமே செயலிழக்க வாய்ப்பு உண்டு என்று டாக்டர்கள் தீர்மானித்து அது அப்படியே இருந்து விடட்டும் என்று விட்டிருக்கிறார்கள்.

இத்தனை குழப்பத்திலும், படப்பிடிப்பில் என் தாயைப் பற்றி நான் பேசியது -அவர் கையெலும்பு முறிந்த சம்பவம் -அவர் ஆழ் மனதில் பதிந்திருந்தது ஆச்சர்யமாக இருந்தது.

கோட்டையில் நன்கொடை

‘கவலைப்படாதே தம்பி. உங்க மாதிரி லட்சக்கணக்கான மக்கள் பிரார்த்தனையில் நான் சீக்கிரம் குணமாகி விடுவேன்!’ என்று எனக்கு தைரியம் சொல்லி அனுப்பினார்.

தர்மம் தலைகாக்கும் என்று அவர் படத்தில் அவரே பாடியுள்ளார். எம்ஜிஆர் நடிப்பைப் பற்றி, அரசியல் கொள்கை பற்றி யாரும் விமர்சனம் வைக்கலாம். ஆனால் அவரது கொடையுள்ளத்தை யாரும் விமர்சிக்க முடியாது.

ஒரு முறை கண்ணதாசனிடம், ஒரு நண்பர் -எம்ஜிஆர் நன்கொடை தருவதாக சொல்லி, சில பேருக்கு தரவில்லை என்று புகார் சொன்னார்.

திருமண வரவேற்பு

அதற்கு கண்ணதாசன், ‘ஆமாம்யா! அவர் சொல்லி குடுக்காமப் போன தொகையை கூட்டிச் சொல்லிடலாம். ஆனா சொல்லாம குடுத்த பல லட்சங்களுக்கு நாம கணக்கு காட்ட முடியாது!’ என்றார்.

அவர் செய்த தருமத்தின் பலனாக, ஆஸ்பத்திரியில் ஒரு நாள் இருமலும், வாந்தியும் வர, ‘பேசின்’ அருகே சென்று வாந்தி எடுக்க காது வழியே அந்த துப்பாக்கி குண்டு தானே வெளியே வந்து விட்டது.

---

அனுபவிப்போம்...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்