திரைப்படச்சோலை 3: கல்யாண முருகன்

By செய்திப்பிரிவு

‘‘ஏன்யா! உங்கதையைத்தானே படமா எடுக்கறேன். என்னை ஏன் இப்படி சோதிக்கறே? இதுவரைக்கும் 30 பேருக்கு மேல பார்த்தாச்சு. ஒரு பையன் கூட தேறலை. இன்னும் ஒரு பத்து நாள் பார்ப்பேன். யாரும் கிடைக்கலேன்னா, இதுவரைக்கும் படமாக்கின 7 ஆயிரம் அடியை தூக்கிப் போட்டுட்டு வேற படம் எடுக்கப் போயிருவேன். பாத்துக்க...!’’

முருகக் கடவுள் முன்னாடி சண்டை போட்டுட்டு வந்தாரு ஏபிஎன். ஒரு கல்யாண வீட்டில் ஏவிஎம் செட்டியார், ‘‘என்ன ஏபிஎன்? ‘கந்தன் கருணை’ -படம் முடிச்சாச்சா? எந்த அளவுக்கு வந்திருக்கு?’ன்னு கேட்டாரு.

குழந்தை முருகன், சிறுவன் முருகன் பகுதி எல்லாம் படமாக்கி முடிச்சிட்டேங்க. கல்யாண முருகனுக்குத்தான் சரியான பையன் கிடைக்க மாட்டேங்கிறான். ஒண்ணு கண்ணுக சிறுசா இருக்கு. இல்லே மூக்கு சப்பையா இருக்கு. ஒருத்தனுக்கு ஒதடு தடிமனா இருக்கு. இதெல்லாம் பரவாயில்லேன்னா கீச்சுக்குரல்ல பேசறான். ஒரு பையனுக்கு தமிழே சுட்டுப் போட்டாலும் வர மாட்டேங்கறது. 30 பேருக்கு மேல ‘டெஸ்ட்’ எடுத்துப் பார்த்து சலிச்சுப் போயிட்டேன்!’’ என்றார் ஏபிஎன்.

‘காக்கும் கரங்கள்’னு எங்க படத்தில ஒரு பையன் நடிச்சிருக்கான். வயசு சிறிசு. மூக்கும் முழியுமா லட்சணமா இருப்பான். நீங்க அவனை வரவழைச்சுப் பாருங்க!’ என்று யோசனை கூறினார் செட்டியார்.

ஜெமினி ஸ்டுடியோவில் ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ படப்பிடிப்பில் இருந்த என்னைத் தேடி ஏஎல்எஸ் புரொடக்ஷன் கார் வந்தது. கவிஞர் கண்ணதாசனின் அண்ணா ஏ.எல்.சீனிவாசன்தான் 'கந்தன் கருணை' படத் தயாரிப்பாளர்.

சாரதா ஸ்டுடியோ போனேன். ஏ.பி.நாகராஜன் நடுநாயகமாக கம்பீரமாக கதர் சட்டை வேட்டி, பரந்த நெற்றி, வியர்வையில் நனைந்த விபூதி, நடுவில் குங்குமம், கனிவும் காந்தமும் இணைந்த கண்கள். ஒரு பக்கம் எஸ்.வரலட்சுமி அம்மா, இன்னொரு பக்கம் ஈ.ஆர். சகாதேவன் மற்றும் சிலர் அமர்ந்திருந்தனர்.

'கந்தன் கருணை'-முருகன்

என்னைப் பார்த்த அருட்செல்வர், ‘ஒரு அமாவாசை நாள் சொல்லி அனுப்புகிறோம்!’ என்றார். அமாவாசை நாளன்று சாரதா ஸ்டுடியோவுக்கு வந்தேன். மீசையை எடுக்கச் சொல்லி ரேசர், பிளேடு கொடுத்தனர். சிவாஜியின் ஒப்பனையாளர் ரங்கசாமி ஒப்பனை செய்தார். நெற்றியில் 3 விபூதிப் பட்டை, கீழே அழகாக சந்தனப் பொட்டு, லிப்ஸ்டிக் எல்லாம் பூசி, நகைகள், முத்து மாலைகளை அணிவித்தனர். பஞ்சகச்சம் கட்டி அதன் மீது முத்துக்கள் பதித்த ஒட்டியாணம் மாட்டிவிட்டனர். தலையில் கிரீடம் பொருத்தி எதிரே இருந்த 6 அடி உயர கண்ணாடி முன் நிறுத்தினர்.

எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. அது நான்தானா? கையில் வேலைக் கொடுத்து படப்பிடிப்பு தளத்துக்கு அழைத்துக் கொண்டு போனார்கள். பின்னணியில் மலையும், மயிலும் ஓவியமாக வரையப்பட்டிருந்தது. 6 அடி தாண்டிய உயரம் சிவந்த மேனி, வெள்ளையும் கருப்புமாக அலை, அலையாக சுருள் முடி, சந்துப்பல். முழுக்கை சட்டை. பேண்ட் - கருப்பு பெல்ட் அணிந்து கேமராமேன்.

அருட்செல்வர் என்னருகே வந்தார். நாலு வரி வசனம் தர்றேன். நிதானமாப் படிச்சு மனப்பாடம் பண்ணிட்டுச் சொல்லுங்க. அப்புறம் ஷூட் பண்ணலாம்..!’’ என்றார்.

‘வீரபாகு‘ தூது செல். தூய வழியில் நடக்கச் சொல், வானவரை விடுதலை செய்து வழி தெரிந்து நடக்கச் சொல்!’ இதை மீறி வில்லுண்டு. வாளுண்டு என்று வீணாக வாதித்தால் எம்மிடம் வேலுண்டு என்று கூறி வா!’ -தாளை வாங்கி 5 நிமிடத்தில் மனப்பாடம் செய்து விட்டேன். கேமரா முன் நிறுத்தினார்கள்.

முகத்தை இடது புரொஃபைலில் திருப்பி அங்கிருந்து வசனத்தைச் சொல்லிக் கொண்டே நேராக வந்து அப்படியே வலது பக்கம் திரும்பி, வலது புரொஃபைலில் முடிக்க வேண்டும்.

வீரபாகுவாக நடித்த சிவாஜியுடன்...

அதாவது 180 டிகிரி முகம் கேமராவில் பதிவாகும். வலது பக்கவாட்டு முகத்தோற்றம், நேரான முகம், இடது பக்கவாட்டு முகம் - என்று ஒரே ஷாட்டில் இவன் தேறுவானா மாட்டானா என்று முடிவெடுக்கும் ஷாட்.

அவர் சொன்ன மாதிரி பேசிக் காட்டியபோது -‘கடைசி வரியை மீண்டும் சொல்லுங்கள்!’ என்றார்.

‘‘இதை மீறி வில்லுண்டு; வாளுண்டு என்று வீணாக வாதித்தால் எம்மிடம் வேலுண்டு என்று கூறிவா!’’ என்று சொன்னபோது ‘‘எம்மிடம் என்பதைத் தலையை மேலும் கீழுமாக அசைத்துச் சொல்லுகிறீர்கள். அது முருகனுக்கு திமிர் உள்ளது போல் அர்த்தப்படுத்தி விடும்’’ என்றார்.

‘வேறு எப்படிங்க சொல்வது?’

பக்கவாட்டில் தலையை அசைத்தவாறு, ‘எம்மிடம் வேலுண்டு என்று கூறி வா!’ என்று அவர் செய்து காட்டியபோது இவ்வளவு நுணுக்கமாக கவனிக்கிறார்களே என்று ஆச்சர்யப்பட்டேன்.

நான்கு நாள் கழித்து புரொடக்ஷன் மேனேஜர் வீரய்யா அண்ணனைச் சந்தித்து, ‘என்ன முடிவு?’ என்று கேட்டேன். முகமெல்லாம் நல்லாவே இருக்கு. ஆனா, முருகனுக்கு பல்லழகுன்னு சொல்லுவாங்க. இவருக்கு ஒரு ‘தெத்திப்பல்’ இருக்கு. அதுதான் யோசிக்கிறோம்!’ என்று டைரக்டர் சொன்னதாகச் சொன்னார்.

வள்ளி - தெய்வானை, வீரபாகுவுடன்...

உடனே 1952-ல் ‘பராசக்தி’ -படத்திற்கு சிவாஜிக்குப் பல் வரிசை சரி செய்த ஃபெர்னாண்டஸ் - என்ற பல் வைத்தியரை பெரம்பூர் பேரக்ஸ் ரோட்டில் சந்தித்து அந்த சிங்கப்பல்லை எடுத்து விட்டு ஸ்டுடியோ போய் காட்டினேன். அவ்வளவு சீக்கிரம் இதைச் செய்வேன் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

படத்தில் வீரபாகு சூரனிடம் தூது செல்ல முருகன் ஆணை இடும் காட்சி. சூரபத்மன் -வீரபாகு சந்திப்பு - போர் - முடிந்ததும் தெய்வானை முருகன் திருமணம், தினைபுனத்தில் முருகன் வள்ளியைச் சந்திப்பது, கிளைமாக்ஸில் நக்கீரன் திருமுருகாற்றுப்படை எழுதி முருகன் முன் பாடுவது எல்லாம் படமாயிற்று. வெண்கலக் குரலில் சீர்காழி கோவிந்தராஜன் ‘அறுபடை வீடு கொண்ட திருமுருகா!’ என்று பாடியது படத்தின் உச்சபட்ச காட்சி.

புராணப் படத்தில் நடிப்பது என்னய்யா சிரமம்? ஆடாமல் அசையாமல் நின்று ஆசீர்வாதம் பண்ணிட்டுப் போறதுதானே- என்று பொதுவாக பலர் கிண்டலாகப் பேசுவார்கள்.

‘சரஸ்வதி சபத’த்தில் மகாவிஷ்ணு வேஷம் தந்தார் ஏபிஎன். ஒப்பனை சாதனங்கள் எல்லாம் ஹாலிவுட் மேக்ஸ் ஃபேக்டர் கம்பெனியின் தயாரிப்புதான்.

ஆனால், மகாவிஷ்ணு வேஷத்திற்கு நீல மேக்கப் போட வேண்டும். மேக்ஸ் ஃபேக்டர், பேன் கேக் -வயலட் வண்ணத்தில்தான் கிடைத்தது. ஒப்பனை செய்தால் சனீஸ்வரன் மாதிரி கருப்பாகி விடும் முகம்.

என்ன செய்வது என்று யோசித்து என் மேக்கப் மேன் சேதுபதி எல்டாம்ஸ் ரோட்டில், நீலப் பொடி ஒன்று வாங்கி வந்து, ஏதோ கிளிசரின் மாதிரி ஒரு திரவத்தை விட்டு அரைத்து தயார் செய்து வந்து மேக்கப் போட்டார்.

மயில் மேல் மூவர்...

டைரக்டருக்கு அளவில்லாத சந்தோஷம். நாம நெனைச்ச நீல வண்ணம் இதுதான்னு ஓகே செய்தார். ஒரே சிக்கல் -வியர்வை வந்தால் அந்த நீலக்கலர் கரைந்து ஒழுகிவிடும். ஆகவே ஷாட் முடிந்ததும் ஒரு பெரிய ஃபேன் முன் நான் ஓடிப்போய் நின்றுகொள்ள வேண்டும். தப்பித்தவறி முகத்தில் - அல்லது மூக்கில் அரிப்பு எடுத்து விரலால் சொறிந்தால் ஒப்பனை கையோடு வந்துவிடும். பிறகு அந்தப் பகுதிக்கு மட்டும் நீலக்கலர் ‘மேட்ச்’ பண்ணுவது கஷ்டம். மீண்டும் மொத்தமாகக் கழுவிவிட்டு புதிதாக ஒப்பனை செய்ய வேண்டும். கால விரயம் ஆகும்.

ஸ்டுடியோவில் புராணப் படப்பிடிப்புத் தளத்தில் தேவலோகம் போல செட் காட்சியளிக்க, 10 ஆயிரம் வாட்ஸ் பல்ப் இரண்டு எதிரெதிரில் எரியும். அடுத்து 5 ஆயிரம் வாட்ஸ் பல்பு 4 எரியும். அவற்றிற்கிடையில் 2 ஆயிரம் வாட்ஸ் 8 பல்பு எரியும். மீதியுள்ள இடைவெளியில் ஆயிரம் வாட்ஸ் பல்புகள்.

அதாவது தீமிதி உற்சவம் பார்த்திருக்கிறீர்களா? வெறுங்காலில் நெருப்புத் துண்டுகளுக்கு இடையே நடப்பவன் உடம்பில் என்ன உஷ்ணம் ஏறும். அது நடிகர்கள் மீது இருக்கும்.

மே மாத வெயில் மேற்கொண்டு சூடேற்றும். படப்பிடிப்பு பார்க்க வருபவர்கள் தூரத்தில் நின்று விளக்கொளியில் பார்த்தால், மகாவிஷ்ணு இவர் மாதிரிதான் இருப்பார்; என்ன அழகு? என்ன ஒரு முத்துப் பல் சிரிப்புன்னு பிரம்மிச்சு என்னைப் பார்ப்பாங்க. எனக்குள்ளே நான் படற வேதனை யாருக்கும் தெரியாது.

முதல் இரவு - தெய்வானையுடன்

ராத்திரி கண் அசந்து தூங்கும்போது வீட்டு வாசலில் காலிங் பெல் அடிக்கும். ஏபிஎன் ஆபீஸ்லயிருந்து வர்றேம். டைலாக் பேப்பர் -வசனப்பிரதி கொண்டு வந்திருக்கேன். இந்தாங்கன்னு ஒரு அசிஸ்டன்ட் டைரக்டர் கொடுத்துட்டுப் போவார். ராத்திரி 11 மணி வாங்கி விரிச்சுப் பார்த்தால், ‘திருவே! திருவின் உருவே! திருவை உலகிற்களிக்கும் திருமகளே! தினம் துதிக்கும் தொண்டருக்கு திரவியத்தை அள்ளி வழங்கும் திருவருளே! தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து திக்கெட்டும் செல்வச் சிறப்போடு செழிக்க வைக்கும் திருப்பெரும் வடிவே! திருப்பாற்கடலில் தோன்றிய திவ்யப் பொருளே. நின் திரு மலரடி வணங்குகிறேன்’ -இப்படி வசனம் இருக்கும்.

அவ்வளவுதான் தூக்கம் போச்சு. முக்கி முக்கி மனப்பாடம் பண்ணி விட்டுப் போய் படுத்தால் 1 மணிக்கு 3 வது வரி மறந்து போனது போல் தோன்றும். மீண்டும் எழுந்து விளக்குப் போட்டு அந்த வரியை மனதில் பதிய வைக்க வேண்டும்.

காலை சரியாக 7 மணிக்கு படப்பிடிப்பு தொடங்கிவிடும். அதனால் மூன்றரை மணிக்கு வீட்டுக்கு கார் வரும். நான் இரண்டறைக்கே எழுந்து குளித்து தயராகி நிற்க வேண்டும்.

முகத்துக்கு நீலச்சாயம் பூசுவதோடு முடியாது. உடம்பு முழுவதும் நீலச்சாயம் பூசி, கைவிரல்களில் ‘க்யூடக்ஸ்’ என்கிற நகச்சாயம் நானே ஒவ்வொரு விரலுக்கும் பூசி அழகுபடுத்திக் கொள்வேன்.

சிவன் -பார்வதியுடன்

பரதம் ஆடும் பெண்களின் கால் விரலில், அடர் சிவப்பு நிறத்தில் சாயம் பூசி விரல்களுக்கு மேலே வரிக்குதிரை கோடு மாதிரி அதே ‘அல்டா’ பெயிண்ட்டில் கோடு. நானே போட்டுக் கொள்வேன்.

ஆச்சு. ஆறரை மணி ஆகிவிட்டது. .உடை அலங்காரம், நகை அலங்காரம் ஆரம்பிக்கும். ‘தம்பி, டாய்லட் போயிட்டு வந்திடு. சுருவாள் என்று ஒரு உடை -உடம்பை ஒட்டி ஃபுல் ஃபேண்ட் போல அணிந்து இடுப்பிலே நாடாவைக் கட்டி விடுவார்கள். அதற்கு மேல் பஞ்சகச்சம் பட்டு உடை, நவரசக்கற்கள் பதித்த ‘பெல்ட்’ அதற்கு மேலே இறுக்கிக் கட்டி விடுவார்கள்.

கொதிக்கும் வெயில் 10 மணிக்குத் தாகம் எடுத்தாலும் உதட்டை நனைத்துக் கொள்ளலாமே தவிர ஒரு டம்ளர் தண்ணீர் முழுசாகக் குடிக்க முடியாது. குடித்தால் பதினோரு மணிக்கு ஒண்ணுக்குப் போக- எல்லா உடையையும் கழட்ட வேண்டி வரும்.

கிரீடம் 3 கிலோ எடை இருக்கும். வைத்தவுடன் பார்த்தால் அட்டகாசமா இருக்கும். அரை மணி நேரம் சென்றால் உன் அம்மா அப்பா பெயரே மறந்துவிடும் அளவுக்கு நெற்றியின் நடுப்பகுதியில் கிரீடம் போட்டு அமுக்கும்.

சரஸ்வதி சபதத்தில் நான் மகா விஷ்ணு. எனக்கு ஜோடி சீனியர் நடிகை. 'முதலாளி' படத்தில் முதல் கதாநாயகி. அப்படம் வெளிவரும்போது நான் 8-வது படிக்கிறேன். பள்ளியில் 4 வருடம், ஓவியக்கல்லூரி 6 வருடம் -10 வருடத்திற்கு முந்தைய சீனியர் ஹீரோயின் என் ஜோடி.

செட்டுக்குள் வந்ததும், ‘இந்தப் பையன்தானா என் ஜோடி?’ என்றார். சப்த நாடியும் எனக்குள் அடங்கிவிட்டது.

சரஸ்வதி சபதம்..

மகாலட்சுமி: எங்கும் நிறைந்து, எல்லோருக்கும் நல்லின்பம் அளிக்கும் பரம்பொருளே! வாயினால் பாடி, மனதினால் சிந்திப்பவர்க்கு வேண்டும் வரத்தையெல்லாம் அளிக்கும் வையகமே! அன்பை விளக்காக்கி, ஆர்வத்தை நெய்யாக்கி, இதயத்தைத் திரியாக்கி, நட்பைக் கொண்டு சுடர் விளக்கேற்றும் பக்தர்களுக்கு வேடிக்கை காட்டி, தீராத விளையாட்டுப் பிள்ளை என்று பட்டம் பெற்ற திருமாலே! என்ன இன்று ஏதோ தீவிர சிந்தனையில் ஈடுபட்டு விட்டாற் போல் தெரிகிறது.

மகாவிஷ்ணு: லட்சுமி! சிந்தனையும் நான். சிந்திக்க வைப்பதும் நான். ஆதியும், அந்தமும் இல்லாத எனக்குச் சிந்தனை என்று தனியாக ஒன்றிருக்கிறதா?

இது முழு ஷாட்டின் வசனம். பொடிப் பையன் என்று என்னை நினைத்து நடிக்க ஆரம்பித்த கதாநாயகி மனதினால் சிந்திப்பவர்க்கு என்று சொல்வதற்குப் பதில், மனதினால் நிந்திப்பவர்க்கு (திட்டுபவர்க்கு) என்று தவறாக 7 முறையும் சொல்ல நான் தவித்துப் போய் விட்டேன்.

8-வது முறை, அவர் சரியாக அதைச் சொல்லி முழு வசனத்தையும் சொல்லி முடிக்கையில், அடுத்து என் வசனம். நான் உளறாமல் இதைச் சொல்ல வேண்டும். ‘இறைவா என்னைக் காப்பாற்று என்று அத்தனை இஷ்ட தெய்வங்களையும் வேண்டி ஒரு வழியாகச் சொல்லி முடித்தபோது நான் அடைந்த நிம்மதியை வார்த்தைகளால் விளக்க முடியாது..

----

அனுபவிப்போம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

17 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

4 months ago

மேலும்