‘பகுதி-3, ‘திரைப்படச் சோலை’ நுழையும் முன்...
‘முழு மனிதன்’ என்பதற்கு ஆயிரம் தத்துவங்களை உதிர்க்கலாம். ஆனால், ‘முழு கலைஞன்’ என்பதற்கு இயல், இசை கடந்து நாடகத்திற்குள் நுழைந்து, அதிலிருந்து முப்பரிமாணமாகி விஸ்வரூபமெடுத்து நிற்கும் சினிமாவிற்குள் ஜீவிக்க வேண்டும் என்பதுதான் சமகால தியரி.
காலங்காலமாக வாசித்தல், கேட்டல், பார்த்தல் என்ற பொழுதுபோக்கு சுகம் சுரந்து கொண்டிருந்த முத்தமிழின் மூலவராக இன்றைக்கு இந்த அகண்ட திரையே ஆளுகிறது. நம் பன்முகக் கலைஞர் சிவகுமார், ஒரு கிராமத்துச் சிறுவன் தன் மண் மணக்கும் மாந்தர்களின் அன்பு, பாச, நேசத்தை ‘கொங்கு தேன்’ என்ற தொடரில் ஊட்டினார். பிறகு இளைஞனாகி, ஓவியக் கலைஞனாகி தம் ஆத்மார்த்த உலகின் தரிசனத்தை, ‘சித்திரச்சோலை’ தொடரில் விரித்தார். அற்புத எழுத்தாக இருந்தாலும், அவையிரண்டும் அவ்வளவு சுவையாக பெருவாரியான மக்கள் வாசிக்கக் காரணியானதே சினிமாதான்.
இந்தக் கனவுத்தொழிற்சாலையின் ஒளி வெள்ளத்தில் எண்ணிறைந்த கதைகளோடு, கதாநாயகிகளோடு, கதை மாந்தர்களோடு வெள்ளித்திரையில் சிவகுமார் பயணிக்காமல் இருந்திருந்தால் இந்தத் தொடர் இந்த அளவு வெற்றி காண்பதற்கான சாத்தியம் இல்லை. இப்போது இந்த ‘திரைப்படச்சோலை’யில் நேரடியாகவே சினிமாவைப் பற்றிப் பேசுகிறார் என்றால் இதற்கான வரவேற்பைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ?
சினிமா நட்சத்திரங்கள் சினிமாவைப் பற்றி எழுதுவது புதியதல்ல. அதை நம் சிவகுமார் எழுதும்போது சினிமாவின் மூன்று-நான்கு தலைமுறை வரலாறாகவே மாறுகிறது. அந்த வகையில் அவரின் இந்த, ‘திரைப்படச்சோலை’ எளியவரும் சினிமாவைப் புரிந்து, அதற்குள்ளேயே வாழவும் வைக்கும். வாசித்து அனுபவியுங்கள்...
*************************************************
பகுதி-3, திரைப்படச்சோலை: 1 -‘மேக்கப் டெஸ்ட்’
1964 ஜூலை 22-ம் தேதி ஏவிஎம்மில் முதன்முதலாக மேக் அப் டெஸ்ட். ஸ்டுடியோவுக்குள் செல்ல கொஞ்சம் கெளரவமான உடை இருக்க வேண்டும் என்று எழும்பூர் நெடுஞ்சாலை சிக்னலிலிருந்து மேற்காகச் செல்லும் கெங்குரெட்டி ரோடில் GAYLORD என்ற தையல் கடையை வக்கீல் நண்பர் பாலா பழனூர் அறிமுகம் செய்து வைத்தார். ‘லாங்கிளாத்’-தில் வெள்ளை முழுக்கை சட்டை, பேண்ட்டுக்கு அளவு கொடுத்து 2 ஜோடி சட்டைகள் எடுத்துக் கொண்டேன்.
‘மேக்கப்’ டெஸ்ட்டுக்கு 2 நாள் முன்னாடி வந்து வசன ஒத்திகை பார்த்துக் கொள் என்றார்கள். சரியாக காலை 9 மணிக்கு ஏவிஎம் ஸ்டுடியோ சென்றேன்.
உள்ளே கார் நிறுத்தத்தை அடுத்து வரிசையாக 10, 12 காட்டேஜ்கள் இருந்தன. ஜெனரல் மானேஜர், மானேஜர், தயாரிப்பு நிர்வாகி, அசோசியேட் டைரக்டர், உதவி டைரக்டர்கள், ஒப்பனை ஆர்ட் டைரக்டர், உடையலங்கார நிபுணர் என ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி காட்டேஜ்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
முத்துராமன் அசோசியேட் டைரக்டர், லட்சுமி நாராயணன் உதவி டைரக்டர், அவர் அறைக்குப் போனேன்.
‘இந்தாப்பா! இதில் டயலாக் இருக்கு. நல்லா படிச்சு மனப்பாடம் பண்ணிக்க. 2 நாளில் டெஸ்ட் இருக்கு!’ என்றார்.
தாளை வாங்கிப் பார்த்தேன். இரண்டே வரி டயலாக். மிச்சப்பகுதி வெள்ளைத்தாள்.
பத்து நிமிடத்தில், ‘நான் தயார்’ என்றேன். ‘நிதானமாப் படிச்சு உள் வாங்கிக்க. வெத்தலை சீவல் போட்டுட்டு வர்றேன்!’ என்றார் லட்சுமி அண்ணா.
ஒரு மணி நேரத்தில் வந்தார். ‘சொல்லு!’ என்றார்.
‘ராதா! உன் முகத்தை நீ கண்ணாடியில் பாத்ததில்லையா? நீ அழகானவள்னு உங்கண்ணனும், அம்மாவும் உங்கிட்ட ஒரு தடவை கூட சொன்னதில்லையா?’ - சொன்னேன்.
‘இதென்ன வாய்ப்பாடு மாதிரி கடகடன்னு ஒப்பிக்கிறே. பாவத்தோட சொல்லு!’
சொன்னேன்.
‘‘புருவங்களை ஏன் நெறிக்கறே, நெத்திய ஏன் சுருக்கறே? சாதாரணமா சொல்லு!’’
சொன்னேன்.
‘‘ராதான்னு சொன்னதும் தலையை ஏன் வலதுபுறம் சாய்ச்சே? நேரா வச்சு சொல்லு!’’
சொன்னேன்.
‘‘ஒதட்டு நுனியிலிருந்து டயலாக் வருது. நல்லா ஃபீலிங்கோட நாபிக்கமலத்திலிருந்து உணர்ச்சி பொங்கச் சொல்லணும்..!’’
இப்படி ரெண்டு வரி வசனத்துக்கு, காலையில டிபன், மத்தியானம் சாப்பாடு, மாலை போண்டா, பஜ்ஜி கொடுத்து 2 நாள் ஒத்திகை பார்த்து தலை சுற்ற ஆரம்பித்துவிட்டது.
இன்னிக்கு மேக்கப் டெஸ்ட். ஸ்டுடியோவின் ஒரு பகுதியில் இருட்டறைக்குள் கொண்டு போய் நிறுத்தினார்கள்.
‘‘லைட்ஸ்’’ என்று ஒருவர் கத்தினார். ‘பளார்’ என்று கன்னத்தில் அறைந்தது போல நேராக -வலம், இடது புறம் பின்புறம் இருந்து ஒளி உமிழ்ந்தன விளக்குகள்.
ஒரு விநாடியில் முன்னால் இருந்த கேமரா -அதன் பின்னால் இருந்த கேமராமேன் -அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு 6 அடி, 4 அங்குல உயரமிருந்த டைரக்டர் ஏ.சி. திருலோக்சந்தர் -அசிஸ்டன்ட் டைரக்டர் லட்சுமி நாராயணன் எல்லோரும் இருளில் காணாமல் போய் விட்டனர்.
‘ஸ்டார்ட் சவண்ட்’ -கட்டைக்குரல்- இது டைரக்டருடையது.
‘கிர்ர்..கிர்ர்ர்..’ -ஒலி. சவுண்ட் இன்ஜினீயர் சிக்னல்.. ஏதோ ஒரு கருப்புப் பலகையை முன்னால் நீட்டி TEST NO: 1- என்று குரல் கொடுத்து ஒருவர். ‘ஸ்டார்ட் கேமரா!’ என்றவுடன் என் முகத்தை மறைத்து அந்தப் பலகையைத் தட்டிவிட்டு அப்புறம் சென்றார்.
‘ஆக்ஷன்!’ -இது ஏ.சி.டி குரல்.
இந்த ஒலியைக் கேட்டதும் மனதுக்குள் கிலி வந்துவிட்டது.
‘‘ராதா!’’ என்றேன். அதற்கு மேல் வார்த்தை வரவில்லை. நாக்கு ஒட்டிக்கொண்டது. 10 விநாடி பொறுத்துப் பார்த்த டைரக்டர், ‘‘ஏம்பா? என்னாச்சு?’’ என்றார்.
முகமெல்லாம் வேர்த்துவிட்டது. கர்ச்சீப் எடுத்து ஒத்திக் கொண்டேன். ‘ரெடி சார்!’ என்றேன்.
மீண்டும் அதே போல் ‘ஆக்ஷன்’ என்று டைரக்டர் சொன்னபோது, ‘ராதா! உன் முகத்தை நீ கண்ணாடில பார்த்ததில்லையா?’ என்று சொல்ல வேண்டுமா -ராதா நீ உன் முகத்தை கண்ணாடியில் பார்த்ததில்லையான்னு சொல்ல வேண்டுமா?’ மூன்றாவது TAKE. ‘ராதா’வைத் தாண்ட முடியவில்லை. ரெண்டு நாள் மாற்றி மாற்றி, 2 வரி வசனத்தை 1000 முறை 2000 விதங்களில் சொல்லி மண்டை குழம்பிப் போயிருந்தது.
கண்ணீல் நீர்!
‘‘என்னாச்சுப்பா?’’
‘‘சார்... இந்த டயலாக் மட்டும் வர மாட்டேங்குது சார். நான் நாடகத்தில பேசுன டயலாக்கை சொல்லட்டுமா சார்..!’’
‘‘சொல்லு!’’
‘‘ராதா! நீயா இப்படி செய்தாய்? காலமெல்லாம் உனக்காகக் காத்திருப்பேன் என்று சொன்ன சொல்லை இன்று கனவாக்கி விட்டாயே கண்ணே! சிரித்துச் சிரித்து என் சிந்தையை மகிழ்வித்த செம்மலே! இன்று ஊர் சிரித்து உரையாட ஏன் ஒப்புக் கொண்டாய்? என்னைப் பார்; என்னைப் பார் என்று எத்தனை தடவை சொல்லியிருப்பேன். ஏன் என்னைப் பார்க்க மறுத்து மாற்றானைப் பார்த்து மகிழ்ந்தாய். நீ அழகிதான். நான் அழகில்லைதான்!’’ என்று கைத்தறிக் கண்காட்சியில், பார்வை இழந்த பெண்ணுக்குக் கண் பார்வை வரவழைத்த டாக்டர், விபத்தில் கோரமாகி விட்ட தன் முகத்தைப் பார்க்க மறுத்து அவள் உள்ளூர் மைனருடன் ஓடிப்போன சோகத்தை வெளிப்படுத்தும் வசனம் அது.
‘கிளிசரின்’ போட்டால் கண்ணீர் வரும். அது போடாமல் உண்மையாக அழுது நடித்தேன். மேக்கப் டெஸ்ட் ஓகே ஆகி படப்பிடிப்பு நடைபெற்றது. படத்தின் 75 சதவீதம் படப்படிப்பு ஏற்கெனவே முடிந்துவிட்டது. என்னுடைய பகுதி கடைசியாகப் படமாக்கப்பட்டது.
கதாநாயகன் எஸ்.எஸ்.ஆரின் தங்கையாக ரேவதி என்ற புதுமுகம். பிறவியிலேயே போலியோ வியாதியால் பாதிக்கப்பட்டு விந்தி விந்தி நடக்கும் மாற்றுத்திறனாளி வேடம்.
‘என் தோற்றத்தைப் பார்த்து, அனுதாபப்பட்டுத்தானே என்னைக் காதலிக்கிறீர்கள்?’ என்று ரேவதி கேட்க, ‘என் தாயார் உன்னைப் போல உடல் ஊனமுற்றவர். நாம் திருமணம் செய்து கொண்டால் இதுபோன்று ஒரு பெண்ணை மணந்துகொள்ள வேண்டும் என்று சிறுவயதிலேயே முடிவெடுத்திருந்தேன். அதுதான் காரணம்!’ என்று விளக்கும் காட்சி சுமார் 500 அடி நீளம் படத்தில் வரும்.
எனக்கு நடிக்க வருமா என்று சந்தேகப்படுபவர்கள் அந்த ஒரு காட்சியைப் பார்த்தால் புரிந்துவிடும்.
ஊர் ஊராகப் போய் ஓவியம் வரைந்து காலந் தள்ளியவனுக்கு வசன உச்சரிப்போ, இயல்பான முக பாவங்களோ உடனே சிறப்பாக வந்துவிடாது. அதிகாலை 5 மணிக்கு கடற்கரைக்குச் சென்று அலைகளின் ஓசையை மீறி உரக்கக் கத்தி வசனப் பயிற்சி எடுத்து நடித்தேன்.
1965- ஜூன் 19- படம் வெளியீடு. 17-ம் தேதி ‘ஏவிஎம்’மில் பிரிவியூ காட்சி. பாலாப் பழனூர், ஸ்டனிஸ்லாஸ் என்ற வக்கீல் நண்பர்களைப் படம் பார்க்க அழைத்துச் சென்றேன்.
படத்தில் வரும் எனது காட்சிகள் என்ன, வசனங்கள் என்ன என்பதை எல்லாம் அவர்களிடம் பல முறை விளக்கியிருந்தேன்.
படத்தின் இடைவேளைக்குப் பிறகுதான் என் காட்சிகள் வரும். நானும், ரேவதியும் மழையில் சந்திப்பது வந்தது. ஆசிரமத்தில் ரேவதியிடம் அட்ரஸ் கேட்பது வந்தது; நான் ஏன் அவளைக் காதலித்தேன் என்று விளக்கும் 500 அடி காட்சி வரவில்லை. ‘வணக்கம்’ வந்துவிட்டது.
நண்பர்கள் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை. கண்களில் நீர் முட்டிக் கொண்டிக்க, ‘ஏவிஎம் சரவணன் சார் வந்தார். ‘நேற்று காலை வரை அந்தக் காட்சி இருந்தது சிவகுமார். ரேவதி PERFORMANCE ரொம்பவும் MATURED ஆக உள்ளது. சிவகுமார் சின்னப்பையன் மாதிரி தெரியறார் என்றார் அப்பச்சி ஏவிஎம். படம் பூராவும் அனுதாபம் வரும் அளவு நடித்த பெண். இந்தக் காட்சியில் தவறாகத் தெரிந்தால் அவள் எதிர்காலம் பாதிக்கப்படும். அதனால் அக்காட்சியை வெட்டிவிட்டோம். உங்களுக்கு வெறும் அறிமுக வேடம்தான். விரைவில் ஏவிஎம் நிறுவனம் நல்ல வேடம் உங்களுக்குத் தரும்!’ என்றார்.
அன்று ஒரு முடிவு எடுத்தேன். கல்யாண அழைப்பிதழ் வந்தால் சந்தோஷப்படாதே. முகூர்த்தம் முடிந்து விருந்து உண்ண டேபிள் முன் அமர்ந்தால் சந்தோஷப்படாதே. லட்டை எடுத்து வாயில் வைக்கும்போது கூட சந்தோஷப்படாதே. எவனாவது தட்டி விடுவான். அதுபோல படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி, நடித்து முடித்து, படம் ரிலீஸாகி ஒரு வாரம் கழித்தும் உன் காட்சி படத்தில் இருந்தால் அன்றுதான் நீ சந்தோஷப்பட வேண்டும்!’ என்ற எச்சரிக்கை உணர்வை வைராக்கியமாக மனதில் பதிவை வைத்துக் கொண்டேன்.
அனுபவிப்போம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago