பேட்டி யஹர்ஸ்ட் அழகான புத்திசாலித்தனமான பெண். வயது 19. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் பெர்க்லி நகரத்தில் சுதந்திரமாகச் சுற்றி வந்த கால் முளைத்த தென்றல்!
தாத்தா வில்லியம் ரடால்ஃப் யஹர்ஸ்ட் பத்திரிகை உலகில் ஒரு ஜாம்பவான். தவிர ரேடியோ, தொலைக்காட்சி, சினிமா என்று அனைத்து ஊடகங்களிலும் தயாரிப்பாளராக இயங்கிக் கொண்டிருந்தவர்.
1974. பிப்ரவரி 4-ம் தேதி பேட்டி யஹர்ஸ்ட் தனியாக தங்கியிருந்த குடியிருப்பில் போனில் தன் காதலனுடன் “என்ன கலர் சட்டை? மீசை ட்ரிம் பண்ணிவிட்டாயா?’ என்று கடலை போட்டுக் கொண்டிருந்தவள் அழைப்பு மணி கேட்டதும் “அப்புறம் பேசுகிறேன்’’ என்று போனை துண்டித்தாள். சின்ன ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, ஓர் இளைஞன் நின்றிருந்தான். அவன் கையில் ஒரு கவர். ‘‘யார்?’’ என்றாள்.
‘‘உங்கள் தாத்தாவின் பத்திரிகையில் சேர வேண்டும். அது தொடர்பாக உங்களுக்கு எழுதப்பட்ட ஒரு சிபாரிசுக் கடிதத்துடன் வந்திருக்கிறேன்’’ என்றான் அவன்.
கதவைத் திறந்து அவனை உள்ளே அழைத்து அந்தக் கடிதத்தை வாங்கிப் படித்தாள். படித்து முடித்து நிமிர்ந்தபோது அவள் முன்னால் நின்றது அவன் மட்டுமல்ல; இன்னும் ஆறு இளைஞர்கள். ஒரே நேரத்தில் அவர்கள் அவள் மேல் பாய்ந்து, வாயைப் பொத்தி, கை, கால்களைக் கட்டி… அடுத்த மூன்றாவது நிமிடம் அவள் ஒரு கைதியாக அவர்களுடன் ஒரு வேனில் எங்கோ சென்று கொண்டிருந்தாள்.
மறுநாள். பேட்டி யஹர்ஸ்ட்டின் தந்தைக்கு ஒரு போன்.
‘‘வணக்கம். உங்கள் மகள் பேட்டி யஹர்ஸ்ட்டை நாங்கள் கடத்திவிட்டோம். எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிற அவள், இனி கற்போடு இருப்பதும் உயிரோடு இருப்பதும் உங்கள் முடிவில்தான் உள்ளது.’’
‘‘நீங்கள் யார்?’’
‘‘சிம்பியான்ஸி விடுதலைப் படையைச் சேர்ந்தவர்கள். இந்த நாட்டில் வறுமையில் வாடு பவர்களும் எளியவர்களும் மிகவும் துன்பப்படு கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு ஆதரவானவர் கள். அரசாங்கத்துக்கு எதிரானவர்கள்.’’
‘‘என் மகளை சேதமில்லாமல் என்னிடம் ஒப்படைக்க நான் என்ன செய்ய வேண்டும்?’’
‘‘உன் தந்தை முக்கிய அரசியல் புள்ளிகளோடு தொடர்புடையவர். அவர் மூலம் அரசாங்கத்தை அணுகு. எங்கள் இயக்கத் தோழர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்!’’
ஆனால், ‘கைது செய்யப்பட்டவர்கள் பயங்கரவாதிகள்; அவர்களை வெளியே விட்டால் சமூகத்துக்கு ஆபத்து’ என்று சொல்லி விடுதலை செய்ய மறுத்துவிட்டது அரசாங்கம். கடத்திச் செல்லப்பட்ட பேட்டி யஹர்ஸ்ட்டை பத்திரமாக மீட்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டது.
காவல்துறை மாகாணம் முழுவதும் பரபரப்பாக இயங்கி விடுதலைப் படையினரை மடக்க முயற்சிகள் செய்தது. ஆனால் அவர்கள் பதுங்கியிருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
அடுத்து கடத்தல்காரர்களிடம் இருந்து வந்த உத்தரவு: மாகாணத்தில் வறுமையில் வாடும் மக்கள் அனைவருக்கும் ஒரு மனிதருக்கு 70 டாலர் மதிப்பில் உணவளிக்க வேண்டும். அப்படிச் செய்தால் பேட்டி யஹர்ஸ்ட் விடுதலை செய்யப்படுவாள்.
கணக்கு போட்டுப் பார்த்தால் அன்றைய தேதிக்கு இந்தியக் கணக்கில் ரூ.320 கோடி தேவைப்படும். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற, பேட்டி யஹர்ஸ்ட்டின் தந்தை வங்கியில் கடன் வாங்கி ரூ.2 கோடி மதிப்பில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்த வறுமையில் வாடிய மனிதர்களுக்கு உணவளித்தார். கடத்தல்காரர்கள் மனம் மாறவில்லை.
‘‘உங்கள் மகளை விடுவிக்க முடியாது’’ என்று அறிவித்தார்கள்.
குடும்பத்தினரும், காவல்துறையும் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் தவித்தபோது, ஒரு திடீர் திருப்பம் நிகழ்ந்தது. பேட்டி யஹர்ஸ்ட்டின் ஒரு புகைப்படத்தையும், அவளின் செய்தியாக ஒரு குரல் பதிவையும் அனுப்பினார்கள்.
அந்தப் புகைப்படத்தில் பேட்டி யஹர்ஸ்ட் கையில் விடுதலைப் படையினர் பயன்படுத்தும் ஒரு இயந்திரத் துப்பாக்கியை தூக்கிப் பிடித்தபடி இருந்தாள். அவளின் குரல் செய்தி இதுதான்:
‘‘இனி யாரும் என்னை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். இந்த இயக்கத்தின் நோக்கமும், செயல்பாடுகளும் நியாயமானவை என்பதை நான் உணர்ந்ததால், நான் இவர்களின் இயக்கத்தில் ஒருவராக இணைந்துவிட்டேன். இனி, இவர்களின் லட்சியத்துக்காக நானும் இணைந்து போராடப் போகிறேன்!’’
அத்தனை பேரும் ஸ்தம்பித்துப் போனார்கள். கொஞ்ச நாள் கழித்து நகரின் ஒருமுக்கியமான வங்கிக்குள் கொள்ளை நோக்கத்துடன் நுழைந்தது அந்த விடுதலைப் படை. அதில் தளபதியாக துப்பாக்கி ஏந்தியது பேட்டி யஹர்ஸ்ட். வங்கியின் கேமராக்களில் தான் பதிவாவது பற்றி கவலைப்படவில்லை அவள். அனைவரையும் மிரட்டினாள். ‘‘எங்கள் இயக்கத்தை நடத்த எங்களுக்கு ஏராளமான பணம் தேவைப்படுகிறது. அதனால், எங்களுக்குக் கொள்ளையடிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இது தொடரும்…’’ என்று முழங்கினாள். அந்தக் கொள்ளையைத் தடுக்க வந்த இரண்டு பேரை சுட்டும் கொன்றாள்.
இப்போது காவல்துறைக்கு அவள் ஒரு மிகப் பெரிய தலைவலியானாள். யாரை மீட்பதற்காக அலைந்தார்களோ, இப்போது அவளை மடக்கிப் பிடிப்பதற்காக அலைந்தார்கள். அரசாங்கத்தின் தேடப்படும் குற்றவாளியாக பேட்டி யஹர்ஸ்ட் அறிவிக்கப்பட்டாள். சில மாதங்கள் தீவிரமாக போராடி அவளின் கூட்டாளிகள் சிலரை காவல் துறை நெருங்கியது. ஒரு அதிரடி நடவடிக்கையில் விடுதலைப் படையினர் பலர் கொல்லப்பட்டார்கள். பேட்டி யஹர்ஸ்ட் உயிருடன் பிடிக்கப்பட்டாள்.
நீதிமன்றத்தில் பேட்டி யஹர்ஸ்ட்டின் வழக்கறிஞரின் வாதம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. ‘‘பேட்டி யஹர்ஸ்ட் இயல்பில் ஒரு பயங்கரவாதி இல்லை; கடத்திவைக்கப்பட்டு இருந்தபோது அவளை ஓர் அடிமை போல நடத்தினார்கள். இருட்டு அறையில் வைத்திருந்தார்கள். பாலியல் கொடுமைகளைச் செய்தார்கள். சரியாக உணவு கொடுக்காமல் வதைத்தார்கள். தவிர, தங்கள் இயக்கத்தின் கோட்பாடுகளை அவள் மனதில் திணித்து அவளை மூளைச் சலவை செய்தார்கள். உடல்ரீதியாகவும்,மனரீதியாகவும் அவர்கள் கொடுத்த தொல்லைகளின் காரணமாக அவர்களின் இயக்கத்தில் இணைவதாக நாடகமாடினாள் பேட்டி யஹர்ஸ்ட். அதனால் அவளை அவர்கள் சுதந்திரமாக நடத்தினார்கள். அந்த வங்கிக் கொள்ளையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்த்தால் அந்தக் கூட்டத்தினர் வைத்திருக்கும் துப்பாக்கிகளில் சில அவளை குறி பார்த்துக் கொண்டிருக்கும். அதன் பொருள் என்ன? அந்த வங்கிக் கொள்ளையை அவள் நடத்தியாக வேண்டும் என்பது அவர்களின் கட்டளை. அவர்களின் மிரட்டல் காரணமாகவே அவள் ஒரு பயங்கரவாதியாக அங்கே நடந்து கொண்டாள். அவள் ஒரு கருவியே!’’
பேட்டி யஹர்ஸ்ட்டை பல மனநல மருத்துவர்கள் சோதனை செய்தார்கள். தற்சமயம் அவளின் மனநிலையில் எந்தப் பாதிப்பும் இல்லை என்பதால் மூளைச் சலவை கதையை நம்ப மறுத்தார்கள். அவளுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. பிறகு, கருணை மனுக்கள் மூலம் அந்தத் தண்டனை 2 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டு பிறகு அதுவும் விலக்கப்பட்டு மன்னிப்பு வழங்கப்பட்டது.
விடுதலையான பேட்டி யஹர்ஸ்ட் தான் சிறையில் இருந்தபோது தன்னைக் காவல் காத்த அதிகாரியை திருமணம் செய்துகொண்டாள். தன் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதினாள். பிறகு ஒரு பெரிய நாவல் எழுதினாள். பிறகு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தாள். (Cry baby, A dirty shame, serial Mom) மூன்று குழந்தைகளுக்குத் தாயான பேட்டி யஹர்ஸ்ட்டுக்கு இப்போது வயது 61. இன்றுவரை அவள் செய்த குற்றங்கள் சொந்த முடிவுகளா அல்லது மிரட்டல் முனையில் செய்யப்பட்டவையா என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றன.
- வழக்குகள் தொடரும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: pkpchennai@yahoo.co.in
முந்தைய அத்தியாயம்: >எப்படி? இப்படி! 24 - சாத்தானின் திடீர் வருகை!
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago