இடம் - பொருள் - இலக்கியம்; தொ.ப. மறைவு: இரு ஆளுமைகளின் புகழஞ்சலி

By மானா பாஸ்கரன்

கடந்த வாரத்தில் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளர் பேராசிரியர் தொ.பரமசிவன் காலமானார். அவரது மறைவையொட்டி ‘தித்திக்குதே’ திரைப்படத்தின் இயக்குநரும், ‘ஆனந்தம்’, ‘பையா’, ‘சண்டக்கோழி 2’ ஆகிய படங்களின் வசனகர்த்தாவும், கவிஞருமான பிருந்தா சாரதியின் அஞ்சலிக் கவிதையையும், தொ.பரமசிவனுடன் நெருங்கிப் பழகிய எழுத்தாளர், ஊடகவியலாளர் துரை.நாகராஜனின் அஞ்சலிப் பதிவினையும் தொ.ப.வுக்குப் புகழஞ்சலியாக இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

****

இது ஒரு மனிதரின் மரணம்தானா?

- பிருந்தா சாரதி

*
'தொ. ப. மறைந்தார்'
இலக்கியம்
தத்துவம்
தொல்லியல்
மானுடவியல்
நாட்டார் மரபு
தமிழக வரலாறு என
எத்தனை துறைகளுக்கு
ஒரே நேரத்தில் இழப்பு?

இது ஒரு மனிதரின் மரணம்தானா?
தொ.பரமசிவன்…
தடம் பதித்த தமிழறிஞர்.
வழிகாட்டிய
அல்ல... அல்ல...
வழி சமைத்த வரலாற்றிஞர்.

வானத்திலிருந்து பார்க்காமல்
மண்ணிலிருந்து வரலாற்றைப் பார்த்தவர்
நம்மையும் பார்க்க வைத்தவர்.

மானுடம் போற்றும் மானுடவியலாளர்.
தொல்லியலும் அறிந்தவர்
தொலைநோக்கும் கொண்டவர்.

நாட்டார் மரபின் வேர் வரை சென்றவர்.
பழக்க வழக்கங்களில்
பண்பாட்டின் அடித்தளம் கண்டவர்.
புதுமை தெரிந்தவர்
மரபை அறிந்தவர்
இரண்டின் இசைவினை அறிந்து உரைத்தவர்.

அவருக்குப் பெரியாரையும் தெரியும்
பெரியாழ்வாரையும் தெரியும்.
சைவம் பவுத்தம் சமணம்
அனைத்திலும் தோய்ந்தவர்.
நாத்திகம் ஆத்திகம்
இரண்டையும் அறிந்து
நடுகல் போற்றும்
நாட்டார் மரபே நம் வழி என்றவர்.

புத்தகங்களைப் படித்தே
புத்தகம் எழுதுவதல்ல ஆய்வு என்று தெளிந்து
மண்ணில் இருந்தும்
மக்கள் வாழ்வில் இருந்தும்
அரிய உண்மைகளை அகழ்ந்தெடுத்தவர்.

அப்படி எங்கள் ஊர்
'அழகர் கோவிலை' ஆய்வு செய்தவர்.
அழகர் எனும் அழகிய தமிழ்ப் பெயர்
நிலைத்தது எப்படி ?
நிலமும் வாழ்வுமே
எதையும் நிலைக்க வைக்கிறது
என்று நிறுவியவர்.
கள்ளழகரும் கருப்பண்ணசாமியும்
கைகோத்ததில்
உழைக்கும் மக்களின்
உணர்வைப் பார்த்தவர்.

மக்கள் நினைத்தால்
துளசி அர்ச்சனைப் பெருமாளும்
கெடாவெட்டுக்
கருப்பண்ண சாமியும்
உறவினர் ஆவர் என்பதை
உலகுக்கு உரைத்தவர்.

'பண்பாட்டு அசைவுகளால்'
பலர் சிந்தையை அசைத்தவர்.
'அறியப்படாத தமிழகத்தை'
அறியச் செய்தவர்.
'சமயங்களின் அரசியலில்'
கடவுளரின் முகவரியைத் தேடியவர்.
'உரை கல்' அவரது ஒரு நூலின் தலைப்பு.
உரசிப் பார்த்தால் தெரியும் -
அவரது ஒவ்வொரு நூலுமே
உண்மைக்கு உரைகல்தான்.

பேராசிரியராய்ப் பணியாற்றி
ஓய்வுபெற்ற பின்பு
பேராசானாய் உயர்ந்தவர்.
ஆய்வரங்குகளில்
தார்மீக வலிமை தந்தது
அவரது இருப்பு.
எந்த இடத்தையும்
வகுப்பறையாக்கியது
அவரது பேச்சு.

மரணத்திலிருந்து
திரும்பி வரும் வாய்ப்பிருந்தால்
மரணம் பற்றிய
ஆய்வுக் கட்டுரையோடுதான்
அவர் திரும்பி வருவார்.

ஓருடல் ஓருயிர் என்பது
ஒவ்வொருவருக்கும்
பொதுவிதிதான் என்றாலும்
சிலர் மட்டுமே செய்து முடிக்கிறார்கள்
பலர் ஆற்ற வேண்டிய பெரும் பணிகளை.

அவர்கள் விடைபெறும்போதுதான் தெரிகிறது
அவர்கள் ஒருவர் அல்ல என்பதும்
ஓர் உருவத்தில்
அவர்களுக்குள் பலர் வாழ்ந்திருப்பதும்.

இந்த உண்மைக்கு
ஓர் உரை கல் ஆகிவிட்டது
தொய்வின்றி உழைத்த தொ.ப. மரணமும்.

அதனால்தான் இந்த ஐயம்
இது ஒரு மனிதரின் மரணம்தானா?

இனி - அவரது நூல்கள் செய்யும்
அவரது பணிகளை.

அவர் விட்டுச்சென்ற வெற்றிடத்தை
விரைந்து நிரப்புவர் அவரது மாணாக்கர்.

விடை தருகிறோம் ஐயா!

தலைமுறைகள் வணங்கும்
உங்கள் நீளமான உழைப்பை.

அறிவுலகம் போற்றும்
உங்கள் ஆழமான அறிவை!

பிருந்தா சாரதி

*****


சிறகாய் விரியும் நினைவுகள்!

– துரை நாகராஜன்

தமிழ்ப் பண்பாட்டியலில் புதியன செய்தவர் பண்பாட்டுப் பகலவன் தொ.பரமசிவன். கடவுள் மறுப்பாளரான அய்யா, அழகர் கோயில் பற்றி ஆராய்ந்தவர். கோயில்களின் கலைச்சிறப்பைக் கொண்டாடியவர். நடுகல் வழிபாட்டுக்கும் கடவுள் வழிபாட்டுக்கும் இடையிலான அரசியலைத் தெளிவுபடுத்தியவர்.

நண்பர் ஆவிச்சி கிருஷ்ணன் மூலம்தான் அய்யா எனக்கு அறிமுகம். திருக்குறள் விழாவுக்காக ஆண்டுக்கு ஒரு முறை திருநெல்வேலி போகிற போதெல்லாம் நானும் நண்பர் கிருஷ்ணனுமாக அவரை வீட்டில் சென்று சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தோம். அய்யாவின் பேச்சும், அம்மாவின் கைப்பக்குவமும் அந்தக் காலைப் பொழுதை அவ்வளவு அழகாக்கிக் கொண்டிருக்கும்.

எட்டு வருடத்துக்கு முன்னால் - முதல் முறை அவரைச் சந்தித்தபோது அவரிடம் ஒரு முரட்டுத்தனம் குடியிருப்பதாக எனக்குப் பட்டது. அந்த முரட்டுத்தனம் அவர் கொண்டிருந்த தமிழ்ப் பண்பாட்டின் மீதானது. தமிழினம் நசுக்கப்படுவதைப் பொறுக்க முடியாததாக இருந்தது. வர்ணம் பிரித்தவர்களின் சர்வாதிகாரத்தோடு சரமரசம் செய்யாத ஒன்றாக இருந்தது.

அருகிலுள்ள கடைக்கு அழைத்துச் சென்று பலகாரம் வாங்கிக் கொடுத்தார். அந்தக் கடைப் பலகாரத்தின் சிறப்புகளைச் சிலாகித்தார். அவரைப் பார்த்ததுமே பல இலக்கிய அன்பர்கள் பலாப் பழத்தை மொய்க்கும் ஈயாக அவரைச் சூழ... அங்கு ஒரு தேநீர் விருந்து நிகழ்ந்தது அய்யாவின் செலவில்.

அடுத்த முறை சந்தித்தபோது என்னைப் பெயர் சொல்லி அழைத்து ஆச்சரியப்படுத்தினார். அய்யாவை அடிக்கடி சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த ஆடிட்டர் கிருஷ்ணன் ஒவ்வொரு சந்திப்பு முடிந்த பின்னும் ”தொலைக்காட்சி நண்பர் எப்படி இருக்கார்னு அய்யா விசாரிச்சார் சார்” என்பார். அய்யா மனதில் நானும் இருக்கிறேன் என்கிற நினைப்பே எனக்குள் சிறகாய் விரியும். அவர் எல்லோரையும் கொண்டாடுகிறவர். விடுபூக்களையும் நூலாக்கியவர் அல்லவா.

அவருடைய ஒவ்வொரு பேச்சும் நம்மை அசத்திப் போடும். அவரிடமிருந்து தெறித்து விழும் கருத்துகளும், சான்றுகளும், எடுத்து ஆளும் மேற்கோள்களும் நம்மை வியப்பில் ஆழ்த்தும். நாம் அவர் எதிரில்தான் சரிக்குச் சமமாக அமர்ந்திருப்போம். அவர் பேசப்பேச அவர் இமயமலையைப்போல உயர்ந்து கொண்டே போவார். நாம் புள்ளியாகக் குறுகிக்கொண்டே இருப்போம். ஒவ்வொரு முறையும் அவர் முன்னால் நான் அப்படித்தான் உணர்ந்திருக்கிறேன்.

ஒருமுறை மக்கள் தொலைக்காட்சிக்காக அய்யாவை நேர்காணல் செய்தேன். கேட்டதுமே ஒப்புக்கொண்ட அய்யா, வீட்டு மொட்டைமாடியில் படப்பிடிப்பை வைத்துக் கொள்ளலாம். இந்த ஊர் அவ்வளவு அழகானது. மொட்டை மாடியில் கேமரா வைத்தால் ஊரின் மொத்த அழகும் தெரியும். நான் தெரிவதைவிடத் திருநெல்வேலியின் அழகு தெரிவது முக்கியம் என்றார். நண்பர் ஆவிச்சி கிருஷ்ணன் கேள்விகள் கேட்டார். திருநெல்வேலி மூதூர் புத்தகம் எழுதுவதற்கு முன்னால் இது நிகழ்ந்தது.

இந்த நேர்காணலைப் பார்த்துவிட்டு கமல், யார் அந்தக் கேள்வி கேட்ட தம்பி, நான் கேட்க நினைத்ததை எல்லாம் கேட்டுவிட்டார் என்று அய்யாவிடம் பாராட்டிப் பேசியதை அடுத்த ஆண்டு சந்திக்கும்போது அய்யா பகிர்ந்து கொண்டார். இன்னொரு நண்பர் அய்யா எப்படி நேர்காணலுக்குச் சம்மதித்தார். அவ்வளவு எளிதில் உடன்பட மாட்டாரே? என்றார். அப்படியா என்றேன்.

அய்யா யாரையும் குறைவாக மதிப்பிட்டதில்லை. ஆனால், சமூக நீதிக்கு எதிரான கருத்து கொண்டவர்களைச் சீறிப் பார்த்திருக்கிறேன். சுஜாதா எழுதிய புறநானூறு உரைக்குக் கொந்தளித்துக் கேட்டிருக்கிறேன். மற்றபடி எல்லோருக்கும் நல்லோனாய் இருக்கும் இயல்பு அய்யாவிடம் இருந்தது.

அவருடைய நினைவாற்றல் அபாரமானது. பேசிக்கொண்டிருக்கும்போதே ஒரு புத்தகத்தைச் சொல்லி, அதில் எத்தனையாவது பக்கத்தில் எத்தனையாவது வரி என்பது வரைக்கும் சொல்லுகிற ஆற்றல் கொண்டவராக இருந்தார். கடைசியாக 2019ஆம் ஆண்டு சந்தித்தபோது அவர் நினைவாற்றலில் கொஞ்சம் பிசகு இருந்தது.

அதற்கு முதுமை மட்டும் காரணமென்று நான் கருதவில்லை. சர்க்கரை வியாதி அவரின் ஒரு காலைக் காவு வாங்கியபின் வாழ்தல் சுமையென்ற கருத்தியலுக்கு ஆட்பட்டவராக இருந்தார். பண்பாட்டு அசைவுகள் மூலம் தமிழ்ப் பண்பாட்டின் வேர்களுக்குப் புது வெளிச்சம் பாய்ச்சியவர், தன் பாட்டைக் கழிப்பதற்கு அடுத்தவர் உதவியை நாடுவதை விரும்பாதவராக இருந்தார்.

துரை நாகராஜன்

நாங்கள் கடைசியாகச் சந்தித்தபோது அதிக நேரம் பேச முடியவில்லை, கொஞ்சம் படுத்துக் கொள்ளட்டுமா கிருஷ்ணன் என்று நண்பரிடம் கேட்டபோது எங்களுக்குக் கண் கலங்கியது. ஒரு மணி நேரத்தில் நூறு புத்தகங்கள் வாசித்தால் கிடைக்கும் அறிவைக் கொட்டிவிடுகிற அவர், பேச முடியவில்லை என்று சொன்னதை மனம் ஏற்க மறுத்தது.

அய்யா, உங்களைப் பற்றிய முழுமையான பதிவு ஒன்று செய்ய வேண்டும் என்று கேட்டேன். செய்திருக்கிறார்கள் என்றார். அய்யா, உங்கள் ஆய்வுகளை அடியொற்றி இவரும் கட்டுரைகள் எழுதுகிறார் என்று கிருஷ்ணன் சொன்னார். ஒரு புன்னகை அவரிடம் இருந்து வெளிப்பட்டது. அதற்கான பொருள் புரியவில்லை. இன்னும் நிறைய செய்ய வேண்டும். இது போதாது என்றார்.
****

தமிழ்ப் பண்பாட்டு ஆய்வை இலக்கியப் பக்கங்களில் இருந்து மீட்டெடுத்து மக்களிடமிருந்து அவர் தொடங்கிவைத்த புதிய ஆய்வு முறை இன்னும் பெரிதாக முன்னெடுக்கப்பட வேண்டும். அதுவே தொ.ப.வுக்கு நாம் செய்யும் நன்றியாக இருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்