டிசம்பர் 2 - சர்வதேச அடிமை முறை ஒழிப்பு தினம்
அடிமை ஒழிப்பிற்கான சர்வதேச தினம் (International Day for Abolition of Slavery) டிசம்பர் 2ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. சுரண்டும் எண்ணத்துடன் வேலைக்காக அல்லது வேறு காரணங்களுக்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தப்பட்டு அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில், கடந்த ஜூன் மாதம் அமெரிக்க அரசால் வெளியிடப்பட்ட மனிதக் கடத்தல் குறித்த அறிக்கை (Trafficking in Persons Report), “இந்திய அரசு, மனிதக் கடத்தலைத் தடுக்கக் குறைந்தபட்சத் தரங்களை முழுமையாகப் பூர்த்தி செய்யவில்லை என்ற அதிர்ச்சிகரமானத் தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த 2001ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 20 ஆண்டுகளாக மனிதக் கடத்தல் குறித்த அறிக்கையை ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா வெளியிட்டு வருகிறது. இந்த அறிக்கையில் உள்ள தரவுகள், கடத்தல் குற்றத்தை முற்றிலும் தடுக்கவும், கடத்துபவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அதிகப்படுத்தவும், கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்திய நடவடிக்கைகளை எடுத்து அவர்களைப் பாதுகாக்கவும், உலக நாட்டில் உள்ள அனைத்து அரசாங்கங்களுக்கும் போதிய தகவல்களையும் மற்றும் எடுக்க வேண்டிய முயற்சிகள் குறித்தும் விரிவாக விளக்கிச் சொல்கின்றன.
தற்போது வெளியிடப்பட்ட இருபதாவது ஆண்டு அறிக்கையில் இந்தியா போதுமான குறைந்தபட்சத் தரங்களை முழுமையாகப் பூர்த்தி செய்யவில்லை என்று கூறியுள்ளது. ஆனால் குறைந்தபட்சத் தரங்களை பூர்த்தி செய்யக் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது எனவும் சுட்டிக் காட்டியுள்ளது.
உதாரணமாக, பிஹாரின் அரசு உதவி பெறும் இல்லங்கள் மீது நடவடிக்கை எடுத்து 19 நபர்களுக்கு (மாநில அளவிலான மூன்று அரசு அலுவலர்கள் உள்பட) தண்டனை பெற்றுத் தந்தது; இதில் 12 நபர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது; மாநிலங்களுக்கு இடையில் நடைபெறும் கடத்தலைக் குறித்து விசாரிக்கும் பொறுப்பை நாட்டின் பிரதான புலனாய்வு அமைப்பான தேசியப் புலனாய்வு அமைப்பிடம் (National Investigation Agency) கொடுத்தது மற்றும் ஆட்கடத்தல் தடுப்புப் பிரிவை 732 மாவட்டங்களிலும் உருவாக்க உறுதி பூண்டது போன்ற செயல்பாடுகளை அரசு செய்துள்ளது. இருப்பினும் கடத்தல் பிரச்சினைகளைத் தீர்க்க அரசு தொடர்ச்சியாக நீடித்த முயற்சிகளை எடுக்கவில்லை. இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள இடைவெளிகள் மிகவும் அதிர்ச்சி தரத்தக்கதாக இருக்கின்றன.
ஒட்டுமொத்தக் கடத்தலுக்கு எதிராக எடுக்கப்பட்ட முயற்சிகள் - குறிப்பாக கொத்தடிமைத் தொழிலாளர் முறைக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. விசாரணைகள், வழக்குத் தொடர்தல், தண்டனை பெற்றுத் தருதல் போன்றவை அரசால் குறைக்கப்பட்டுள்ளன. சட்ட அமலாக்கம் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண தேவையான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. 1976 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை சுமார் 3,13,000 கொத்தடிமைத் தொழிலாளர்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் தொண்டு நிறுவனங்கள் சுமார் 8 மில்லியன் பேர் கடத்தலில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.
அரசு கூறும் மதிப்பீடு, தொண்டு நிறுவனங்கள் கூறும் மதிப்பீட்டில் 4 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கிறது. தொண்டு நிறுவனங்களின் கூற்றுப்படி கொத்தடிமை வழக்குகளில் குறைந்தபட்சம் பாதி வழக்குகள் கூட காவல்துறையால் முறையாகப் பதியப்படவில்லை. 36 மாநிலங்களில் / யூனியன் பிரதேசங்களில், 17-ல், 2017 அல்லது 2018இல் ஒரு கொத்தடிமைத் தொழிலாளர்கூட இனம் காணப்படவில்லை. அரசு அலுவலர்கள் கொத்தடிமைத் தொழிலாளர்களை இனம்காண குறைந்தபட்ச முயற்சி கூட எடுக்கவில்லை என்று இந்த அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
கொத்தடிமையாக இனம் காணப்பட்டவர்களில், 43 சதவீதம் பேருக்கு மட்டுமே மீட்புச் சான்றிதழ் (Release certificate) வழங்கப்பட்டுள்ளது மற்றும் 26 சதவீதம் பேருக்கு மட்டுமே இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்றும் 10 மாநிலங்களில் உள்ள 3 தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப் பல சட்டங்கள் நீதிபதிகளுக்கு அதிகாரம் அளித்த போதிலும், மாநில மற்றும் மாவட்டச் சட்டப் பணிகள் ஆணையங்கள் (State and District Legal Services Authority), பாதிக்கப்பட்டவர்கள் விண்ணப்பிக்கவும், அதைப் பெறவும் உதவி செய்யவில்லை.
கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை, மனிதக் கடத்தலால் பாதிக்கப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டவர்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கே இழப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது. கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்கு ஒரு மாஜிஸ்திரேட் உத்தரவு வரும் வரை, அரசாங்கம் அவர்களைக் கட்டாயப்படுத்தி, தடுத்து இல்லங்களில் (Shelter) வைத்திருந்தனர். கடத்தியவர்கள் செய்த வற்புறுத்தலின் பேரில், கடத்தப்பட்டவர்கள் செய்த சில குற்றங்களுக்கு, அவர்களைப் பாதிக்கப்பட்டவர்களாகக் கருதாமல் அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். பெரும்பாலும் கடத்தலில் அதிகாரிகள் உடந்தையாக இருப்பது கவனத்தில் கொள்ளப்படவில்லை.
உள்ளூர் மற்றும் மாநில அரசியல்வாதிகள் கட்டாயப்படுத்தி கொத்தடிமைத் தொழிலாளர்களாக வைத்திருந்தாலும், அவர்கள் மீது வழக்குத் தொடுக்காமல் பாதுகாக்கப்பட்டுள்ளனர் எனத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பீகார் வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளைப் பாலியல் தொழிலுக்காகக் கடத்தியவர்கள் என அடையாளம் காட்டியும் கூட அவர்கள் விசாரிக்கப்படவில்லை.
தற்போது செயல்பட்டு வரும் 332 ஆட்கடத்தல் தடுப்புப் பிரிவுகளில் பெரும்பாலானவை போதிய நிதி ஒதுக்கீடு மற்றும் பயிற்சி பெறாமல் சரியாகச் செயல்படவில்லை. மேலும் பெரும்பாலான மாநிலங்கள் ஆட்கடத்தல் தடுப்புப் பிரிவுக்குப் போதுமான ஆதாரத்தையும், முன்னுரிமையும் வழங்கத் தவறிவிட்டன. இதன் விளைவாக, இப்பிரிவு தங்கள் நேரத்தையும், வளத்தையும் மற்ற குற்றங்களுக்காகச் செலவிட்டன. 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அரசுசாரா ஆயுதக் குழுக்களில் சேர்ப்பது குற்றவியல் முறையில் தடை செய்யப்படவில்லை. மனிதக் கடத்தலைத் தடுக்க எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. இந்த அறிக்கைக்கான ஆண்டில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் (Ministry of Women and Child Development) தலைமையில் நடைபெறும் அமைச்சரவைகளுக்கு இடையிலான குழுக்கூட்டம் (Inter-ministerial Committee) ஒருமுறைகூட நடத்தப்படவில்லை. கடத்தலைத் தடுக்க தேசிய அளவிலான செயல் திட்டம் இல்லை.
தமிழகத்தைப் பொறுத்தவரை, ஏப்ரல் மாதம் 2019 ஆம் ஆண்டில் 7000 ஆயத்த ஆடைகள் மற்றும் நூற்பாலைகளில் கடத்தலுக்கான அறிகுறிகள் உட்பட சுரண்டலுக்கான சூழல்கள் இருப்பதாக வந்த அறிக்கைக்குப் பின், தேசிய மனித உரிமை ஆணையம் அனைத்து நிறுவனங்களையும் ஆய்வு செய்ய மாநில அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசு, மறு ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்த போதிலும், கடந்த மார்ச் 2020 வரை எந்த ஆய்வுகளும் செய்யவில்லை. சில உள்ளூர் அரசியல்வாதிகள், குழந்தைகளைப் பாலியல் தொழில் மற்றும் பிச்சை எடுக்க வைக்க கடத்தப்பட்டதன் மூலம் பயன் அடைந்ததாக தமிழக அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
ஆந்திரா மற்றும் தமிழகம் உட்பட குழந்தைப் பாலியல் சுற்றுலாவிற்கு (Chidl Sex Tourism) இந்தியா ஒரு முக்கிய இடமாக இருந்தபோதிலும், குழந்தைப் பாலியல் சுற்றுலாவிற்கானத் தேவையைக் குறைக்க, குறிப்பிடத்தக்க வகையில் எடுக்கப்பட்ட எந்த நடவடிக்கைகளையும் அரசு தெரிவிக்கவில்லை. சில சந்தர்ப்பங்களில், தமிழக நூற்பாலைகளில் முதலாளிகள் பணிபுரியும் இளம்பெண்களுக்கு சில ஆண்டுகால ஒப்பந்த முடிவில், வருங்கால வைப்பு நிதி போல் மொத்தமாக ஒரு தொகையை, கல்வி அல்லது வரதட்சணைக்காகக் கொடுப்பது வழக்கமான நடைமுறையாக இருக்கிறது. இது கிட்டத்தட்ட கொத்தடிமைத் தொழில்முறைக்குச் சமமாக இருக்கலாம் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.
தற்போது அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள இடைவெளிகள் அதிர்ச்சி தரக்கூடியவை. மேலும், இதைச் சரி செய்ய உரிய பரிந்துரைகளையும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். இந்திய அரசு உடனடியாக இந்த இடைவெளியைச் சரி செய்ய முழு முயற்சி எடுத்தால் மட்டுமே கடத்தலைத் தடுக்க முடியும். இதைக் குற்றம் காண்பதாக எடுத்துக்கொண்டு நியாயங்கள் கற்பிப்பதை விட கற்றலாக எடுத்துக்கொண்டு போதிய நடவடிக்கைகளை எடுத்தால் மனிதக் கடத்தலைப் பெருமளவில் தடுக்க முடியும்.
அனைத்து வகையான கடத்தல்களின் (கொத்தடிமைத் தொழிலாளர் உள்பட) விசாரணைகள், வழக்குத் தொடர்தல் மற்றும் தண்டனை பெற்றுத் தருவதை அதிகரித்தல்; கடத்தலுக்கு உடந்தையாக இருப்பதாகக் குற்றம் சாட்டப்படும் அரசு அலுவலர்கள் மீது தீவிர விசாரணை நடத்துதல் மற்றும் குறிப்பிடத்தக்க அளவில் சிறை தண்டனை பெற்றுத் தருதல்; கொத்தடிமைத் தொழிலாளர் தொடர்பான அனைத்து வழக்குகளையும் குற்றவியல் முறையில் விசாரித்தல்; தங்குமிடங்களில் (Shelter) நிதி சரியான நேரத்தில் கொடுக்கப்படுவது மற்றும் குறைந்தபட்சத் தரம் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும் வழிமுறைகளை உருவாக்கிச் செயல்படுத்துதல். பாதிக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் இழப்பீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொறுப்பு மற்றும் பங்கைத் தெளிவுபடுத்தி, அனைவருக்கும் உடனடியாக மீட்புச் சான்று, இழப்பீட்டு தொகை மற்றும் மற்ற சலுகைகள் வழங்குவதை உறுதி செய்தல்; அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கோருவதை வழக்கமாக்குதல்; நீதிபதிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கேற்ற இழப்பீட்டை வழங்குதல் மற்றும் பாதிக்கப்பட்டவர் வழக்கமாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தை அணுக ஊக்குவித்தல்; உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையின்படி அரசு மற்றும் அரசு உதவியுடன் நடத்தப்படும் இல்லங்களைத் தணிக்கை செய்து குறைந்தபட்ச தரத்தை உறுதி செய்ய மாநில அரசுகளை ஊக்குவித்தல்; பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுக்கப்படும் பொருத்தமற்ற தண்டனையை நிறுத்துதல் போன்ற பரிந்துரைகளை இந்திய அரசு செயல்படுத்தும்படி இந்த அறிக்கையில் கூறியுள்ளார்கள்.
இப்பரிந்துரைகளைச் செயல்படுத்துவது குறைந்தபட்சத் தரமேயொழிய முழுமையான செயல்பாடாகாது. மனிதக் கடத்தலுக்கு எதிராக இந்தியா உடனடியாக விரிவான சட்டத்தை இயற்ற வேண்டும். குற்றத்தில் யார் ஈடுபட்டிருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆட்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு உரிய நிதி மற்றும் தேவைப்படும் காவலர்களை நியமித்து முழுமையாகச் செயல்படும் அமைப்பாக மாற்ற வேண்டும். பொதுவாக கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்பதில் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லை. தொண்டு நிறுவனங்கள் ஆதாரத்துடன் சென்றாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. மேலும் அது கடத்தல் கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவதும் இல்லை.
மத்திய அரசின் கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கான திட்டத்தில் (Central Sector Scheme on Bonded Labour) ஒவ்வொரு மாவட்டத்திலும் கொத்தடிமைத் தொழிலாளர்களை இனம் காண நிதி இருக்கிறது. இந்த நிதி பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை. ஆகவே இந்த ஆய்வை நடத்தி கொத்தடிமைத் தொழிலாளர்களை இனம்காண வேண்டும். இவர்களில் கடத்தப்பட்டவர்கள் இருந்தால் உரிய விசாரணை செய்து வழக்குப் பதியப்பட வேண்டும். கடத்தல் வழக்குகளில் உரிய நடவடிக்கைகள் எடுக்கத் தவறும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலங்களுக்கு இடையில் நடைபெறும் கடத்தலைக் குறித்து விசாரிக்கும் பொறுப்பை நாட்டின் பிரதான புலனாய்வு அமைப்பானத் தேசியப் புலனாய்வு அமைப்பிடம் (National Investigation Agency) கொடுத்திருந்தாலுங்கூட இந்த அமைப்பு இதுவரை மாநிலங்களுக்கு இடையில் நடைபெறும் மனிதக் கடத்தலைத் தடுப்பதற்கு எந்த முயற்சியும் எடுத்தது போல் தெரியவில்லை. எனவே, தேசிய அளவில், மாநிலங்களுக்கிடையில் மற்றும் மற்ற நாடுகளுக்கிடையில் நடைபெறும் மனிதக் கடத்தலை தடுப்பதற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, கடத்தல்காரர்கள் பொதுவாக ரயில் போக்குவரத்தை, சுலபமாக, செலவு குறைவாக மற்றும் பாதுகாப்பாக இருப்பதால் அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால், தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரப்படி, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டு ஒரு கடத்தல் வழக்குகூட ரயில்வே காவல் துறையால் (Government Railway Police -GRP) பதியப்படவில்லை. ஆகவே ரயில்வே காவல்துறையினர் (GRP) மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு (Railway Protection Force – RPF) கடத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுப்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
தமிழ்நாடு பெண்கள் மற்றும் விடுதிகளில் ஒழுங்குபடுத்துதல் சட்டம் 2014-இன் படி அனைத்து விடுதிகளும், விதிகள் இயற்றப்பட்ட 6 மாதங்களுக்குள் (ஆகஸ்ட் மாதம் 2015-க்குள்) பதியப்பட்டிருக்க வேண்டும். இது விடுதிகளில் தங்கி இருக்கும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டச் சட்டம். ஆனால், இந்தச் சட்டம் தமிழகத்தில் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை. கடந்த ஜனவரி மாதம் 2019 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் (மதுரைக் கிளை) அனைத்து விடுதிகளும் பிப்ரவரி 28-க்குள் பதியப்பட வேண்டும் என்றும் மார்ச் 1ஆம் தேதியிலிருந்து பதியப்படாத விடுதிகள் செயல்படக்கூடாது என்றும் உத்தரவிட்டு இருந்தது.
உத்தரவைப் பின்பற்றாதது நீதிமன்ற அவமதிப்பு என்று தெரிந்த பின்னரும் கூட, உரிய முயற்சிகள் எடுத்து விடுதிகள் பதியப்படவில்லை.
இந்தந் தகவலைத் தெரிந்துகொண்ட மாநில மகளிர் ஆணையம் (State Commission for Women), அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் உடனடியாக விடுதிகளைப் பதிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியது. மேலும் சமூக நலத்துறை மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பல மாவட்டங்களில் விடுதி நடத்துபவர்களுக்கான பயிற்சிகளையும் நடத்தியது. அதன் விளைவாக பல மாவட்டங்களில் பெரும்பாலான விடுதிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், பதிவு செய்யப்பட்ட விடுதிகளைத் தொடர்ந்து கண்காணிக்கும் வழிமுறைகள் எதுவும் இல்லை.
இதைக் கருத்தில் கொண்டு, மாநில மகளிர் ஆணையத் தலைவர் முனைவர் கண்ணகி பாக்கியநாதன், முன்முயற்சி எடுத்து கடந்த 2020, மார்ச் மாதம் ஈரோடு மாவட்டத்தில் இதற்கான ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் குழு அமைத்து, அனைவருக்கும் பயிற்சி கொடுத்து விடுதிகளைக் கண்காணிக்க இருப்பதாக பத்திரிக்கைச் செய்திகள் வந்துள்ளன. இது பாராட்டத்தகுந்த ஒரு அம்சம். ஆனால் இந்தச் செயல்பாடு எந்த அளவில் தற்போது இருக்கிறது என்று தெரியாது. ஆகவே அரசு உடனடியாக வட்டார அளவிலான குழுக்களை அமைத்து விடுதிகளைக் கண்காணிப்பதன் மூலம் அங்கு தங்கியிருக்கும் பெண்களும் குழந்தைகளும் கடத்தப்பட்டு வந்தார்களா; கொத்தடிமைத் தொழிலில் இருக்கிறார்களா; கட்டாய வேலைக்கு அமர்த்தப்படுகிறார்களா; பாலியல் ரீதியான துன்புறுத்தல் இருக்கிறதா என்ற விஷயங்களைப் புரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும்.
கொத்தடிமைத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வு செய்து கொத்தடிமைத் தொழிலாளர்களை இனம் காணவேண்டும். மேலும் தொண்டு நிறுவனங்கள் கொண்டு வரும் வழக்குகளை முறையாகப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க மறுக்கும் அரசு அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிமக்களைப் பாதுகாத்துத் துணை நிற்பதும் குற்றம் செய்தவர்கள் யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும் அரசின் கடமையாகும் என்பது வள்ளுவர் வாக்கு.
“குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்”
ஆகவே, அமெரிக்க அறிக்கை தந்துள்ள இந்தத் தகவல்களைப் புரிந்துகொண்டு, மனிதக் கடத்தலைத் தடுக்க அரசு அனைத்து துறைகளுடன் இணைந்து மாநில அளவிலான ஒரு அமைப்பை உருவாக்கிக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு உடனடி தண்டனையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளையும், சலுகைகளையும் வழங்குவதன் மூலமாக ஒரு பாதுகாப்பான மனிதக் கடத்தலற்ற சமூகத்தை உருவாக்க முடியும்.
- ப.இளவழகன், சமூகச் செயற்பாட்டாளர்
தொடர்புக்கு: ilavazhagan2020@gmail.com
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago