1957-ல் நான் சூலூர் பள்ளிக்கூடத்துல படிச்சிட்டிருந்தப்ப முதல்வர் காமராஜ் கோவை மாவட்டத்துக்குச் சுற்றுப்பயணம் வந்தாரு.
சூலூர் சந்தைப் பேட்டை பக்கத்தில மேடை. அதுல ஏறி பொதுமக்கள்கிட்ட பத்து நிமிஷம் பேசினாரு. அப்ப நான் வரைஞ்ச ஓவியத்தில் கையெழுத்து வாங்க மேடைக்குப் பக்கமா போனேன். ரிசர்வ் போலீஸ்காரங்க தடுத்தாங்க. காமராஜர் அதைப் பார்த்துட்டாரு. ஜாடை காட்டி என்னை விடச் சொன்னார்.
மேடைக்குப் போய் படத்தைக் காட்டியதும் கையெழுத்துப் போட்டுக் குடுத்தாரு. ரெண்டு ஓவியப்பிரதியில ஒரு பிரதியை அவரு கையில குடுத்திட்டு எறங்கி வந்துட்டேன். ஒரு சாதாரணக் குடிமகன். அதுவும் பள்ளிக்கூடத்தில படிக்கிற பையன் திடீர்னு ஒரு நாட்டோட முதல்வரை அவ்வளவு சுலபமா நெருங்க முடியாது. எங்கையில இருந்த ஓவியம்தான் அதுக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் குடுத்துச்சு.
காமராஜரின் தோற்றம் மிரட்டும் தோற்றம்தான். ஓங்கி உயர்ந்த உருவம். காந்தி, லிங்கன் இருவருக்கும் நீண்ட கைகள். காமராஜருக்கும் முழங்காலைத் தாண்டி நீண்ட கைகள். காமராஜரின் கண்கள் தீட்சண்யமான பெரிய கண்கள். கோபமாகப் பார்த்தால் பயமாக இருக்கும். பார்ப்போரை எரித்து விடும் வல்லமை உள்ள கண்கள். ஏறி இறங்கும் புருவம். காமராஜருக்கு அகன்ற மூக்கு. அதன் மடல்கள் விரிந்து இருக்கும். தடித்த உதடுகள். வேலியிலுள்ள முள்கம்பி போன்று மீசை. பின் தலை தட்டையாக இருக்கும். கழுத்து நீளம் குறைவு.
விருதுநகர் பள்ளிக்கூடத்தில 6-ங்கிளாஸ்தான் படிச்சாரு. 16 வயசில காங்கிரஸ் கட்சியின் கடைக்கோடி தொண்டனா சேர்ந்தாரு. 36 வயசு முடியறதுக்குள்ளே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு தலைவராயிட்டாரு.
9 வருஷம் ஜெயில்ல இருந்தாரு. 9 வருஷம் நாடாண்டாரு. அந்தக் காலத்திலயே காமராஜ் அணி -ராஜாஜி அணின்னு காங்கிரஸுக்குள்ளேயே 2 அணி இருந்திச்சு.
சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு -முதல்வர் பதவிக்கு காமராஜர் நின்னாரு. ராஜாஜி அணியைச் சேர்ந்த சி. சுப்ரமணியம் அவரை எதிர்த்து நின்னாரு. ஆனா, காமராஜர்தான் ஜெயிச்சாரு.
தனக்குப் போட்டியா நின்ன சி. சுப்பிரமணியத்தையும் கூப்பிட்டு மந்திரி பதவி குடுத்தாரு. அவருக்கு சப்போர்ட் பண்ணின பக்தவத்சலத்துக்கும் மந்திரி பதவி குடுத்தாரு.
ஆறுகளுக்கு குறுக்கே அணை கட்டினாரு. ஏரி, குளங்களை தூர்வாரி விவசாயத்தைப் பெருக்கினாரு. தொழில்துறையில தமிழ்நாட்டை இந்தியாவில் 2-வது மாநிலமாக உயர்த்தினாரு. ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு பள்ளிக்கூடம் இருக்கணும்னு உத்தரவு போட்டு சின்ன கிராமமான எங்க ஊர்லயும் ஓராசிரியர் பள்ளி தொடங்கினாரு.
பள்ளிக்கூடத்தில மத்தியான நேரத்துக்கு மேல கூட்டம் குறைவு இருக்கற காரணத்தை தெரிஞ்சுகிட்டு பகல் உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினாரு. எஸ்.எஸ்.எல்.சி வரைக்கும் இலவசக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தாரு. அதுவரைக்கும் நான் 6, 7, 8, வகுப்புக்கு ரூ. 2.75 பைசாவும், 9, 10, 11 வகுப்புகளுக்கு ரூ. 5.25 பைசா கட்டணம் கட்டித்தான் படிச்சேன்.
காமராஜர், தன் வீட்டுக்கு - தன் உறவுகளுக்கு என்ன செய்தார் தெரியுமா?
முதல்வர் பதவி ஏற்பு விழாவுக்கு விருதுநகர்லருந்து தாயார் சிவகாமி அம்மா வந்தாங்க. பதவி ஏற்பு விழா முடிஞ்சதும், ‘உனக்கு என்ன வேணும்?’ன்னு கேட்டாரு.. திருப்பதி கோயிலைப் பாக்கணும்னு ஆசையா இருக்குன்னாங்க. கார் ஏற்பாடு செஞ்சு, அவங்க திருப்பதியிலிருந்து திரும்பி வந்ததும் ஊருக்குப் போக ரயில் டிக்கட்டை அம்மா கையில குடுத்தாரு.
‘தம்பி ! நீ தனியா இருக்கியே! நான் சமச்சுப் போட்டுட்டு இங்கயே உன்கூடவே இருந்துக்கறேன்!’னு கேட்டாங்க.
‘‘நீ இங்கே இருந்தீன்னா, உங்கண்ணன் பசங்க, உறவுக்காரங்க எல்லாம் வந்து குடைச்சல் குடுப்பாங்க. கோட்டையில என் வேலையை நிம்மதியாப் பார்க்க முடியாது. கிளம்பு!’’ன்னு அன்னிக்கே விருதுநகருக்கு துரத்தி விட்டுட்டாரு.
காமராஜர் தாயார் வீதில வந்து குழாய்ல தண்ணி பிடிக்க வேண்டாம்னு முனிசிபாலிடி ஆட்கள், தெருக்குழாய்லருந்து வீட்டுக்குள்ள ஒரு தனி கனெக்ஷன் குடுத்தாங்க. செய்தி காமராஜருக்குத் தெரிஞ்சதும், ‘உடனே அதை ‘கட்’ பண்ணு, எங்கம்மா எல்லாரோடயும் தெருக்குழாய்லயே தண்ணி புடிக்கட்டும்!’னு அதிகாரிய மெரட்டிட்டாரு.
நாகம்மைன்னு அவருக்கு ஒரு சகோதரி. அவரோட மகன் பேரு ஜவகர். விருதுநகர்ல அந்த இளைஞனுக்கு கல்யாணம் நடந்திச்சு. 1950-களில் நான் விருதுநகர் போயிருக்கிறேன். ஊர் எல்லையில பொதுக்கழிப்பிடம் ஒன்று. உள்ளேயே தண்ணீர் தொட்டி. கம்பியால் இணைக்கப்பட்ட டால்டா டின் தண்ணீர் மொண்டு பயன்படுத்த சுவரில் ஆணி வைச்சுப் பொருத்தி இருந்தார்கள்.
கல்யாணமான புதுப்பெண். அவசரத்துக்கு உபயோகமாக இருக்கும் என்று 4 அடிக்கு 4 அடி ‘டாய்லட்’ வீட்டில் கட்டிக் கொள்கிறோம் என்று சென்னையில் இருந்த காமராஜருக்கு போன் செய்து கேட்டனர்.
‘முடியாது. காமராஜர் பங்களா கட்ட பர்மிஷன் குடுத்திட்டான்னு ஊர் பேசும்- அனுமதிக்க மாட்டேன்!’னு சொல்லிட்டாரு.
எழுத்தாளர் சாவி ஒருநாள் புறப்பட்டு விருதுநகர் போனார். கிராமத்து வயசான பாட்டிகள் மாதிரி ஜாக்கட் போடாம சிவகாமி அம்மா வெள்ளைப் புடவையை உடம்பில சுத்திட்டு, வெயில் தாங்காம பனை மட்டை விசிறி ஒண்ணை எடுத்து விசிறிக்கிட்டிருந்தாங்க.
சாவி போனதும், ‘தம்பி எங்கிருந்து வர்றே?’ன்னு கேட்டாங்க.
‘மெட்ராசிலருந்தும்மா!’’
‘‘காமராசை அங்கே பாப்பியா?’’
‘‘பாப்பேம்மா!’
‘‘காமராசு மாதம் 120 ரூபா என் செலவுக்கு அனுப்பி வைக்குது. வடநாடு கட்டி, மைசூர், ஆந்திராவுல இருந்தெல்லாம் என்னைப் பாக்க சனங்க வர்றாங்க. அவங்களுக்கு சோடா கலர் வாங்கிக் குடுக்கறதுக்கு இந்தப் பணம் பத்த மாட்டேங்குதப்பா. ஒரு 20 ரூபாய் சேர்த்து அனுப்பச் சொல்லுப்பா. உனக்கு புண்ணியம் கிடைக்கும்!’-ன்னாங்க.
முதல்வர் காமராஜர் தன் தாயாரின் மாத செலவுக்கு வெறும் ரூபாய் 120தான் அனுப்புகிறார் என்று தெரிந்தது.
‘‘சரிம்மா!’’ என்று சொன்ன சாவி சென்னை வந்து காமராஜர் வீட்டுக்குப் போனார்.
‘‘என்னய்யா விசேஷம்? இந்தப் பக்கம் வந்திருக்கே?’’
‘‘விருதுநகர் போயிருந்தேன்!’’
‘‘சரின்னேன்!’’
‘‘அம்மாவைப் பார்த்தேன்!’’
‘‘அதுக்கு என்னண்னேன்?’’
‘‘வந்து..!’’
‘‘சும்மா சொல்லுண்னேன்!’’
‘‘இல்லே, மாசா மாசம் அம்மாவுக்கு நீங்க 120 ரூபாய் அனுப்பறீங்களாம். அது பத்தலயாம். வடநாட்டிலிருந்து அவங்களைப் பாக்க வர்றவங்களுக்கு சோடா கலர் வாங்கித்தரவே அந்தப் பணம் போத மாட்டேங்குதாம். ஒரு 20 ரூபா சேர்த்து அனுப்பச் சொன்னாங்க...!’’
‘‘போதும்ன்னேன். வடநாட்டிலருந்து வர்றவங்கல்லாம் அம்மாவைப் பார்க்கத்தான் வர்றாங்க. சோடா கலர் குடிக்க இல்லை. மேற்கொண்டு காசு அனுப்பினா, கோயில் குளம் போறேன்னு போயி விழுந்து செத்துப் போகும். எனக்கு எங்கம்மா வேணும் போய்யா!’’ன்னாரு.
ஜப்பானுக்குப் போறாரு. மெஷினரீஸ் நிறைய ஆர்டர் பண்ணி வாங்கறாரு.
ஒரு 10, 20 கோடி ரூபாய்க்கு வாங்கறாருன்னு வச்சுக்குவோம். ‘என்னய்யா? இவ்வளவு கோடிக்கு மெஷின் வாங்கியிருக்கேன். விலைய குறைப்பா!’ன்னு பிடிவாதம் பிடிக்கிறாரு. அவன் ரூபாய் 20 கோடியிலிருந்து கொஞ்சம்,கொஞ்சமா குறைச்சு 18 கோடி ரூபாய்க்கு கீழே குறைக்க முடியாதுங்கறான்.
‘‘சரி, இவ்வளவு வாங்கினதுக்கு கமிஷன் தரமாட்டீங்களா?’’ கேட்கிறாரு.
‘‘ஆமா, குடுக்கணும்!’’
‘‘எவ்வளவு தருவீங்க?’’
அவன் கமிஷன் தொகை சொல்ல, என்ன இவ்வளவு கம்மியா தர்றே? ஏத்து, ஏத்துன்னு சண்டை போட்டு அந்தக்கமிஷன் தொகைக்கும் சேர்த்து தமிழ்நாட்டுக்கு மிஷினரீஸ் வாங்கின மகாமனிதன்.
1964-ல் நேருஜி இறந்திட்டாரு.
அவருக்கு பதிலா லால்பகதூர் சாஸ்திரிய பிரதமரா கொண்டு வந்தாரு. ஒண்ணரை வருஷத்துக்குள்ளே சாஸ்திரி செத்தப்போ, பழையபடி இந்திரா காந்திய பிரதமர் ஆக்கினாரு.
‘சார்! நீங்களே பிரதமரா உட்காருங்க!’ன்னாங்க. ‘என் உயரம் எனக்குத் தெரியும்!’னு அந்தப் பதவியை வேண்டாம்னுட்டாரு.
9 ஆண்டு சிறைவாசம் -9 ஆண்டு நாடாண்ட மனிதனை ஒரு சட்டக்கல்லூரி மாணவனை வச்சு தோற்கடிச்சிட்டோம். சாகும்போது என்ன வைத்திருந்தார் தெரியுமா? 4 ஜோடி வேட்டி, சட்டை, 5, 6 புத்தகங்கள். 2 ஜோடி செருப்பு. தலையணை அடியில 140 ரூபாய் சில்லரை. நாடாண்ட மன்னனின் சொத்தைப் பாத்தீங்களா?
அவர் வாழ்ந்த வீட்டை வீட்டுக்காரன் எடுத்துக் கொண்டான். அவர் பயன்படுத்திய காரை காங்கிரஸ் அலுவலகம் எடுத்துக் கொண்டது. அவர் பூத உடலை நெருப்பு எடுத்துக் கொண்டது. அவர் மகத்தான வாழ்வை வரலாறு எடுத்துக் கொண்டது.
காமராஜ் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்ததால் முனிவர்கள் போல முணுக்கென்றால் கோபம் வந்து விடும். பாராட்டி 4 வார்த்தை பேசினாலோ பொன்னாடை போர்த்தினாலோ அவை காற்றில் பறந்து விடும். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு, தெய்வச்சிலைகளின் மேல் கொட்டும் பாலை தெருவிலே பசியால் வாடும் குழந்தைகளுக்குக் கொடுங்கள். புண்ணியம் கிடைக்கும். வழிபடு தெய்வம் மக்களே என்று திடமாக நம்பியவர். எளிமை, நேர்மை, எல்லோரும் சமம் என்ற மனோபாவங்கள் காந்தியிடமிருந்து அவர் சுவீகரித்துக் கொண்டவை.
அதனால்தான் கண்ணதாசன், ‘தங்கமே, தென் பொதிகைச் சாரலே! தண்ணிலவே! சிங்கமே! என்றழைத்துச் சீராட்டும் தாய் தவிர சொந்தம் என்று ஏதுமில்லை, துணையிருக்க மங்கை இல்லை; தூய மணி மண்டபங்கள் தோட்டங்கள் ஏதுமில்லை, ஆண்டி கையில் ஓடிருக்கும் அதுவும் உனக்கில்லையே காமராசா!’ என்று பாடினார்.
---
தரிசிப்போம்..
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
10 hours ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago