சித்திரச்சோலை 14: ‘ஒன்லி’ கோபுலு’

By செய்திப்பிரிவு

1952- ஆனந்த விகடன் தீபாவளி மலர் அட்டைப்படம் கோபுலு வரைஞ்சிருந்தார். கீழே ஒரு ‘ஜோக்’.

மாமி: ‘ஏம்மா, வீட்ல இருந்து வரும்போது 22 சாமான்தானே கொண்டு வந்தோம். இப்ப எண்ணிப் பாத்தா 23 இருக்கே!

மகள்: அம்மா அது சாமான் இல்லே. நம்ம குழந்தை சாமா...

-இதுதான் ஜோக்.

இதுக்கு அந்த மனிதர் ஒரு ஸ்டேஷனை போட்டிருக்கார். பிளாட்பாரம் வரைஞ்சிருக்கார். -அதன் நெடுக தண்டவாளங்கள் போய் ஒரு புள்ளியில் மறையுது. தண்டவாளம் முடிவில் கைகாட்டி. அது எறங்கி இருக்கு.

ஒரு 5 வயசு சிறுவன் தன்னோட 3 வயசுத் தங்கைக்கு பிளாட்பாரம் விளிம்பில் நின்று குனிந்து கையை நீட்டி விளக்குகிறான்.

7 வயசு அக்கா, தாத்தாகிட்ட போய், ‘அவங்க விழுந்திடப்போறாங்க; கூப்பிடுங்க தாத்தா!’ன்னு முறையிடுகிறாள்.

தாத்தா உச்சி குடுமி, சோடா புட்டி கண்ணாடி, பெரிய தொப்பை, நீலக்கலர்ல கோட் போட்டிருக்காரு. தொப்பையிலிருந்து பஞ்சகச்சம். கீழே போகாம இருக்க ஒரு பெல்ட் போட்டிருக்காரு.

பக்கத்தில் அவர் சம்சாரம். இடுப்பில் உல்லன் கேப் தலையில் அணிந்த குழந்தை. அந்தம்மா பக்கத்தில் குழந்தையின் தாய் நிற்கிறாள்.

அவள் கையில் ‘ஹேண்ட் பேக்’ திருகாணிச் சொம்பு, இந்தப் பெண்ணை சைட் அடிக்கும் ஆள். கையில் புத்தகத்தை வைத்துக் கொண்டு பாட்டி பின்னால் நிற்கிறான். இவர்களுக்கு முன்னால் பிளாட்பாரத்தில் வாழைத்தண்டு, வாழை இலை, பலாப்பழம், பச்சை வாழைப்பழம் ஒரு சீப், துருப்பிடித்த தகரப்பெட்டி, அதன் மேல வயலின். பவானி பெட்ஷீட்டால் சுற்றப்பட்ட பெட். ஒரு சாக்குப்பை, முறுக்கு சீடை, மூங்கிலால் பின்னிய கூடை ஒன்று, அந்தப் பக்கம் டிபன் கேரியர், கெரோசின் டின், இவற்றிற்கு பின்னால் தண்டட்டியும், சுங்கிடிப் புடவையுமாக ராமநாதபுரம் பகுதிப் பெண் உட்கார்ந்திருக்கிறார்.

கோபுலுவின் ஆ.வி.. தீபாவளி மலர் ஓவியம்

அவருக்குப் பின்னால் கருப்புக்கண்ணாடி வெள்ளை பிரேம்- பொம்மை சட்டை போட்ட ஒரு ஆண் நிற்கிறார். ஒரு போர்ட்டர் வருகிறார். ஸ்டேஷனில் பெல் அடிக்க ஒரு ஆண் நிற்கிறார். ஒரு பாய், சிவப்புத் தொப்பியும் லுங்கியுமாய் வருகிறார். பச்சை தலைப்பாகை கட்டின ஒரு போர்ட்டர், டிராலி தள்ளிப் போகும் ஒரு ஆசாமி. லாட்டரி சீட் ஒருவன் விற்றுக்கொண்டு வருகிறான். ஒருத்தன் ஆப்பிள் விற்கிறான்.

இத்தனையும் ஒரு மனிதர் 1952-ல் ஒரு வரி ஜோக்குக்காக வரைந்திருக்கிறார். இன்றைக்கு இதுபோன்ற படம் வரைய இந்தியாவில் யாரும் இல்லை. ஒரே கோபுலு... ஒன்லி கோபுலு..

படமே பேசும்ங்கிற தலைப்புல -வெறும் கார்ட்டூன் மட்டும் போட்டு எதையும் எழுதாமல் விளக்குவார்.

ஒரு ஆள் சிமெண்ட் பெஞ்சில் பேப்பரில் தன் முகத்தை முழுசா மறைச்சுட்டு உட்கார்ந்திருக்கிறார்.

போலீஸ்காரங்க பிக் பாக்கெட்டைப் பிடிச்சிட்டுப் போறாங்க. அவர் திரும்பிப் பார்க்கலே.

யானை பின்னால் 2 வாண்டுப் பசங்க சத்தம் போட்டுட்டுப் போறாங்க. அவர் பேப்பரை எடுத்து இதைப் பார்க்கலே.

பிலிம் ஷூட்டிங் -கேமராவை வேன் மேல வச்சு நடத்தறாங்க. அவர் திரும்பிப் பார்க்கலே.

22 வயசுப் பொண்ணு ரோட்ல போச்சு -பேப்பரை மடிச்சிட்டு வாயில ஜொள்ளு விட்டுட்டுப் பார்க்கிறார். இது படம்.

கோபுலுவுடன், மணியம் செல்வம், நான்.

60 வயசுப் பெரியவர், வீட்ல லெட்டர்களெல்லாம் ஒரு நீளக்கம்பியில குத்தி வச்சிருக்காரு. நிறைய சேர்ந்து போச்சும்மா. வேண்டாத லெட்டர்களைப் பிரிச்சு எடுத்து கிழிச்சுப் போட்டுடலாம்னு ஒவ்வொரு லெட்டரா எடுத்துப் படிக்கிறார்.

- இது முனிசிபல் ஆபீஸ்ல இருந்து வந்த லெட்டர். இதை கிழிக்கக்கூடாது. எடுத்து ஓரமா வச்சாரு.

- இது டெல்லிக்குப் போன மருமகன் முதன்முதலா போட்ட லெட்டர். இதையும் கிழிக்கக்கூடாது.

- இது எஸ்.எஸ்.எல்.சி சர்ஃடிபிகேட்.

- இது அவரின் அமெரிக்கா போன பேரன் போட்ட லெட்டர்..

இப்படி ஒவ்வொண்ணா எடுத்து வச்சுப் பார்த்தா -எதையுமே கிழிக்கலே. எல்லா லெட்டர்களும் அப்படியே இருக்கு...

ஒரு வீட்ல தீ பத்திருச்சுன்னு அதை அணைக்க ஃபயர் சர்வீஸ் வேன் வந்திச்சு. திடீர்னு அந்த வேன்ல தீ பத்த இன்னொரு ‘வேன்’ வந்து அந்த தீயை அணைச்சிட்டிருக்கு.

ஒரு பெண் -பக்கத்தில் நிற்கும் செம்மறி ஆட்டிலிருந்து ரோமம் எடுத்து அந்த நூலை வச்சு ஸ்வெட்டர் பின்னிட்டிருக்க, கொஞ்சம் கொஞ்சமா ரோமத்திலருந்து நூல் எடுக்க எடுக்க ஆடு மொட்டை ஆயிட்டு வருது.

கடைசியில அந்த ஸ்வெட்டரை -மொட்டை ஆயிட்ட ஆட்டுக்குட்டிக்கே போட்டு விடறா!

கோபுலு ஓவியங்கள்

ஒரு லைப்ரரியில 1000 புத்தகங்கள் இருக்கு. ஆனா, ரெண்டு பேர் -ஒரே புத்தகத்தை -இது எனக்கு வேணும்னு எடுத்து சண்டை போட்டிட்டிருப்பாங்க.

வீட்டுக்கார அம்மா எலையில் சாதம் கொண்டு வந்து வைக்கிறாங்க. விவரமான ஒரு காக்கா, முதல்ல தன் வயிறு நிறைய கொத்தி சாப்பிட்டுட்டு -கடைசியில கொஞ்சம் சாதம் சாப்பிட ‘காகாகா’ன்னு மத்த காக்கைகளை கூப்பிடுது.

சர்க்கஸ் வேன்ல ஒட்டகச்சிவிங்கிய ஏத்திக் கொண்டு போறாங்க. -ஒரு ரயில்வே பாலம் வருது. அதுக்கு அடியில வேன் போகும்போது அதன் தலை இடிக்கும். அதனால பாலத்துகிட்ட வேன் வரும்போது அவங்க ஆள் ஓடிப் போய் ஒரு கட்டு புல் கொண்டு வந்து நீட்டறான். ஒட்டகச்சிவிங்கி குனிந்து சாப்பிட ஆரம்பிக்கும்போது வேன் சுலபமா பாலத்தடியில போயிருது.

இப்படி வசனம் இல்லாமல் படங்கள் வழியே விளக்கும் கார்ட்டூன்கள் நிறைய போட்டிருக்காரு.

1960-களில் ‘செம்பருத்தி’ என்ற நாவல் தி.ஜானகிராமன் எழுதியது, வார இதழில் தொடராக வந்து கொண்டிருந்தது. கோபுலுதான் படம் போட்டிருந்தாரு.

அந்த நாவல்ல வர்ற சட்டநாதன், புவனேஸ்வரி, சின்ன அண்ணி குஞ்சம்மா, முத்துசாமி, பெரியண்ணன், மாயவரம் கடைவீதி இதெல்லாம், நாம நேர்ல போய் பார்த்த மாதிரி உணர்வுகள் ஏற்படும்படி கோபுலு படங்கள் போட்டிருப்பாரு.

இந்தியாவில் 128 கோடிப் பேர் இருக்காங்க. ஒவ்வொருத்தர் முகமும் ஒரு மாதிரி இருக்கும். அத்தனை வித்தியாசமான முகங்களையும் கார்ட்டூன் பாணி கொஞ்சம் கலந்து படம் போடற ஆசாமியா கோபுலு ஒருத்தர்தான் தமிழ்நாட்டுல முன்னணயில இருந்தாரு.

‘தில்லான மோகனாம்பாள்’-தொடர் கொத்தமங்கலம் சுப்பு விகடன்ல எழுதினாரு. அதில சிக்கல் ஷண்முக சுந்தரம்- மோகனாம்பாள் நாட்டிய கோஷ்டி, வாத்ய கோஷ்டி எல்லா உருவங்களையும் வரைஞ்சு வாசகர்களுக்குச் சுவை கூட்டினாரு.

கோபுலு ஓவியங்கள்

‘வாஷிங்டனில் திருமணம்’ னு மயிலாப்பூர்ல இருக்கற உயர்ந்த சாதி பிராமணர்கள் ‘வாஷிங்டன் தெருவுல’ கல்யாண கோஷ்டியோட வந்தா எப்படி இருக்கும்னு வரைஞ்சு பிரமிக்க வச்சாரு.

எங்க கிராமத்துக்கு பக்கத்து ஊர் கலங்கல். அங்கதான் 4-வது வரைக்கும் படிச்சேன். அந்த ஆசிரியர் வீட்ல ஆனந்த விகடன் தீபாவளி மலர் இருந்திச்சு.

அதிலதான் கோபுலு, மணியம், சில்பி ஓவியங்களை முதல் முதல் பார்த்தேன். ஓவியக்கலை மீது எனக்கு ஈர்ப்பு ஏற்படறதுக்கு அன்று பார்த்த ஓவியங்கள் கூட ஒரு காரணமா இருந்திருக்கும் சென்னை வந்து 6 ஆண்டுகள் ஓவியம் படித்த நாட்களில் கோபுலு சாரைப் பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

நடிகனாகி 14 வருஷங்களுக்குப் பிறகு, ‘ஒரு வி.ஐ.பி.,யை பேட்டி காணணும்னா நீங்க யாரைத் தேர்வு செய்வீங்க?’ன்னு பொம்மை ஆசிரியர் கேட்டாரு. நான் ‘குமுதம்’ ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை பேரைச் சொன்னேன்.

‘குமுதம்’ பத்திரிகைதான் முகம். ஆசிரியர்களுக்கு அடையாளம் வேண்டாம். உங்களுக்கு பேட்டி தர முடியாததற்கு வருத்தம்னு சொல்லிட்டாரு எஸ்.ஏ.பி.

அடுத்ததா யாரை சந்திக்கலாம்னு கேட்க -கோபுலு சார் பெயரைச் சொன்னேன். ஒரு நாள் அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்தார்கள்.

கோபுலு ஓவியங்கள்

நான் ஒரு நடிகன் என்ற அடையாளத்துடன் அவரைச் சந்திக்க விரும்பலே. ஓவியனா அவரைச் சந்திக்கவே விரும்பினேன். டாக்டர் ராதாகிருஷ்ணன் ஓவியம், தஞ்சாவூர் கோயில், சென்னை பாரிஸ் கார்னர் ஓவியங்களை எடுத்துப் போய் அவரிடம் காட்டினேன்.

‘நீங்க நடிகரா, ஓவியரா?’ என்று கேட்டார். ‘ஓவியன்தான் முதலில்... பிறகுதான் நடிகன்!’ என்றேன்.

என் படைப்புகளை கூர்ந்து கவனித்துவிட்டு, ‘கையைக் குடுங்க’ என்று வாங்கி இடது கையில் வைத்து, தனது வலது கையால் என் விரல்களைத் தடவிக் கொடுத்து, ‘ஓ.. வாட் ஏ வொண்டர்ஃபுல் ஹேண்ட்’ -அப்ப்டின்னாரு.

கண்ணிலிருந்து கடகடன்னு கண்ணீர் வடிந்தது. ‘என்னாச்சு?’ன்னு கேட்டாரு. ‘வாழ்வின் கடைசி மூச்சு வரைக்கும் ஓவியனாகவே வாழணும்னு ஆசைப்பட்டு சென்னை வந்தேன். இப்போ நடிகனா மாறிட்டேன். நான் எடுத்த முடிவு சரியா தப்பான்னு அப்பப்ப மனசாட்சி கேட்கும்!’ அப்படின்னேன்.

‘யூ ஹேவ் டேக்கன் ஏ ரைட் டெசிசன்’ அப்படீன்னாரு. ‘தமிழ்நாட்டில ஓவியரா தொழில் செய்ய ஆரம்பிச்சிருந்தீங்கன்னா ஸ்கூட்டருக்கு பெட்ரோல் கூட வாங்கி ஊத்த முடியாது. 40 வருஷம், 50 வருஷம் ஓவியக் கலைக்காகவே வாழ்க்கையை அர்ப்பணிச்ச ஓவியர்கள் ஒரு ‘பிளாட்’ கூட சொந்தமா வாங்க முடியலே. நீங்க விரும்பற வரைக்கும் சினிமாவுல நடிங்க. அப்புறம் கூட ஓவியங்கள் வரையலாம்!’ அப்படின்னாரு.

கோபுலு ஓவியங்கள்

ஓவியர் மணியம் செல்வம் கோபுலுவோட தீவிர ரசிகர். அடிக்கடி ரெண்டு பேரும் போய் அவரைப் பார்ப்போம். திடீர்னு அவருக்கு உடம்பு சரியில்லைன்னு கேள்விப்பட்டு பதறிப் போய் பார்த்தோம்.

‘அது ஒண்ணுமில்லை சிவகுமார். நாம டிராயிங் வரையறப்போ நிறைய ‘ஸ்ட்ரோக்ஸ்’ போடறமோல்லியோ, அதான் எனக்கு ‘STROKES’ வந்திருச்சு!’ன்னு நகைச்சுவையா சொன்னாரு.

படம் வரைஞ்சிட்டிருக்கறப்போ ஃபிட்ஸ் மாதிரி வந்து வலது கை, இடது கால் செயலிழந்து, சேர்லயிருந்து தரையில விழுந்திட்டாராம். ‘குரல் குடுக்க நாக்கு பிறழலே. ஒரு கை, ஒரு காலை வச்சு 5 அடி தவழ்ந்திட்டுப் போய், போராடி எழுந்து நின்னு கதவோட தாளைத் திறந்து விட்டாராம். அரை மணி நேரப் போராட்டம். யாருக்கும் அது நடக்கக்கூடாது!’ என்றார்.

சில மாதங்களில் இடது கையால வரைய ஆரம்பிச்சார். சுமாராக ஓவியம் வடிவம் பெறும்போது, வலது கைக்கு ரோஷம் வந்து நாந்தானே இத்தனை வருஷம் வரைஞ்சிட்டிருந்தேன். எனக்கு நீ போட்டியா?-ன்னு திரும்பவும் வலது கை செயல்பட ஆரம்பிச்சுதாம்.

லண்டன் டாக்டர் ராம் - ராமநாதபுரம் பக்கத்து தமிழர், அவர் மனைவி டாக்டர் வனிதா இருவரும் ஜெயகாந்தனோட கோபுலுவுக்கும் சேர்த்துப் பாராட்டு விழா ஒன்று சென்னையில் நடத்த ஏற்பாடு செய்தார்கள்.

பாராட்டு விழா அன்று காலை கோபுலு சார் மனைவி இறந்துவிட்டார். சடலத்தை வீட்டில் கிடத்திவிட்டு நிகழ்ச்சிக்கு வாருங்கள் என்று வற்புறுத்த மனமில்லை. விருதை நிகழ்ச்சி முடிந்து மறுநாள் கொண்டு போய் வீட்டில் கொடுத்தோம்.

91 ஆண்டுகள் இந்த மண்ணில் வாழ்ந்து ஓவியக் கலையைப் பத்திரிகைகள் வாயிலாக தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்திய அந்த உன்னதக் கலைஞன் 2015 ஏப்ரல் 29-ம் தேதி விண்ணுலகம் சென்றுவிட்டார்.

ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்!’, ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’- பிரளயம், விழுதுகள் -போன்ற குறுநாவல்களுக்கு அவர் ஓவியங்கள் உயிர் கொடுத்தன.

கலைஞரின் ‘சங்கத்தமிழ், குறளோவியம்’- நூல்களை அவரது ஓவியங்கள் அலங்கரிக்கின்றன.

நா.பார்த்தசாரதியின் ‘நித்தியவள்ளி’- ஸ்ரீ வேணுகோபாலனின் ‘திருவரங்கன் உலா’, விக்கிரமனின் ‘கங்காபுரிக் காவலன்’ - இவரது ஓவியங்களால் பெருமை பெற்றவை.

தரிசிப்போம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

3 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்