மான்டேஜ் மனசு 10: சுற்றிச் சுழலும் ரொமான்ஸ்கள்!

By க.நாகப்பன்

தற்கொலைக்கு முயல மாட்டேன்

ஒருபோதும் - நான்.

அது கோழைகளின் பேராயுதம்.

நான் ஓட்டிச்செல்லும்

இருசக்கர வாகனத்தின் மீது

எதிர்வாகனம்

எதுவும் வந்து மோதி எனை

கொல்லட்டும்.

*

என் பேருந்துப்பயணத்தில்...

அதிவேக ஓட்டுநரின்

அலட்சியத்தால்

அந்த பாலம் பிளந்து

பேருந்து சுக்குநூறாகி சிதைந்து

அழியட்டும்

என்னையும் பலியாக்கி.

*

நீண்டதூர ரயில் பயணத்தில்

நியாயமான கோரிக்கையின்பால்

ஒரு புரட்சியாளனின்

வெடிகுண்டுவீச்சில்

தடம்புரண்டு கவிழ்ந்துவிழும் விபத்தில்

பலரோடு சேர்ந்து நிகழட்டும்

என் சாவும்.

*

எதேச்சையான விபத்துச்சாவுகளில்

செத்துப்போகிற மனமும் வாய்ப்பும்

வேண்டி நிற்கிற நான்

ஒருபோதும்

தற்கொலைக்கு முயலமாட்டேன்.

தற்கொலையென்பது

கோழைகளின் பேராயுதம்.

பாரதிவாசனின் முகநூல் பக்கத்தில் இக்கவிதையை படித்தபோது மனசு பதறியது.

இந்த நேரத்தில் பகவதியை ஏன் நினைத்துக்கொண்டேன் என்பதை இப்போதுகூட என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை.

பகவதி - என் நண்பர்களில் அதிமுக்கியமானவன். என் ஆளுமையை எனக்கே அடையாளப்படுத்தியவன்.

நிறைய வருத்தங்களோடும், வடுக்களோடும் காதலைக் கடந்துவந்தவன்.

இரண்டு காதல்கள் அவனை புரட்டிப் போட்டன. சமயங்களில் இரண்டாவது காதல் குறித்து நானே பகவதியை பகடி செய்திருக்கிறேன்.

''காதல் ஒரு ஃபீலிங். அது ஒரு தடவை வந்துடுச்சுன்னா மறுபடியும் மறுபடியும் அதை மாத்திக்கிட்டு இருக்கமுடியாதுனு விஜய்ணா 'பூவே உனக்காக' படத்துல சொன்னாருல்ல... கேட்கமாட்டியா நீ.''

''அதே விஜய்ணா அடுத்து என்ன சொன்னாரு தெரியுமா?''

''நீயே சொல்லு?''

''காதல் சில பேருக்கு செடி மாதிரி. ஒண்ணு போச்சுன்னா இன்னொண்ணு. சிலபேருக்கு அது பூ மாதிரி, ஒரு தடவை பூத்து உதிர்ந்ததுன்னா மறுபடி எடுத்து ஒட்டவைக்கமுடியாது.''

''அதனால..''

''விஜய்ணாவுக்கு வேணும்னா காதல் பூ மாதிரி இருக்கலாம். ஆனா, எனக்கு செடி மாதிரி. ஒண்ணு போச்சுன்னா இன்னொண்ணு''

''புரியலையே...''

''உனக்கு இன்னொரு முறை நான் விளக்கி சொல்லணுமா? சரி. சுருக்கமா சொல்லவா..''

''சொல்லித் தொலை.''

''நான் தல ரசிகன்ங்கிறதை இந்த இடத்துல உனக்கு ஞாபகப்படுத்த விரும்புறேன்...'' விளையாட்டாக சொல்லிவிட்டு ஓடினான்.

'பூவே உனக்காக' படத்தில் காதலை நெகிழ்ந்து சொன்ன விக்ரமன் அடுத்தடுத்து வந்த 'உன்னை நினைத்து', 'சூர்ய வம்சம்' படங்களில் இன்னொரு காதலுக்கு இடம் கொடுக்கிறார். இரண்டாவது காதலுக்கு வழிவிடுகிறார்.

பகவதியின் காதலும் அப்படிப்பட்டதுதான். ஆனால், அதிலும் ஒரு ட்விஸ்ட்.

காதலியின் உதட்டுச் சிவப்பில் கம்யூனிஸ்ட் கொடியின் நிறத்தைப் பார்த்தார் ரஷ்ய எழுத்தாளர் மாயகோவ்ஸ்கி என்று எங்கேயோ படித்ததாக ஞாபகம்.

ஆனால், பகவதி ஒரு புரட்சிப் போராட்டத்தில் தன் காதலியை சந்தித்தான்.

நெல்லையில் பிரபலமான கல்லூரியில் பகவதி விஷூவல் கம்யூனிகேஷன் ஸ்டூடன்ட். கல்லூரியின் அடிப்படை வசதிகளுக்காக ஒரு முறை போராட்டம் நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டது.

பகவதி தலைமையில் மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். அடிப்படை வசதிகள் இல்லாதது, கட்டணக் குறைப்பு செய்ய வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன் வைப்பது என போஸ்டர் ஒட்டியும், நோட்டீஸ் கொடுத்தும், தொடர் முழக்கமிட்டும் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

நிர்வாகம் எதற்கும் அடிபணியவில்லை. மாணவர்கள் உச்ச கட்டமாக உண்ணாவிரதம் இருக்க முடிவுசெய்தனர்.

கல்லூரி வளாகத்தில் 6 பேர் உண்ணாவிரதம் இருப்பது என முடிவானது. மாணவர்களின் இந்தப் போராட்டத்துக்கு மாணவிகள் யாருமே குரல் கொடுக்க முன்வரவில்லை.

பகவதி எத்தனையோ பேரை அழைத்துப் பார்த்தும் ஏமாற்றமே மிஞ்சியது. கடைசி நம்பிக்கையும் பொய்த்துப்போன அந்த தருணத்தில்தான் பத்மினி வந்தாள். முதல் பெண்ணாக வந்து உண்ணாவிரதப் பந்தலில் அமர்ந்தாள்.

பத்மினியை எங்கேயோ பார்த்த ஞாபகம் வந்தது பகவதிக்கு.

தன் ஞாபகக் கிடங்கில் இருக்கிறாளா? என்று அவசர அவசரமாகத் தேடிப் பார்த்தான். சில நிமிடங்களிலேயே அவளை நினைவுகளால் மீட்டெடுத்தான்.

கல்லூரியில் பெரியார் கட்டுரைப் போட்டி நடந்தது. போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு எழுத தேவைப்படும் தாள்களை கொடுக்கும் பொறுப்பு பத்மினிக்கு வழங்கப்பட்டிருந்தது. போட்டி ஆரம்பித்த 20 நிமிடங்களிலேயே இன்னொரு தாள் வேண்டும் என்று கேட்டான் பகவதி.

ஒரு சந்தேகத்துடனேயே பத்மினி தாளைக் கொடுத்தாள்.

அடிக்கடி போனைப் பார்த்தபடியே எழுதிய பகவதியைக் கண்டு பத்மினி முறைத்தாள். பேராசிரியையிடம் பிட்டு அடிப்பதாக சொன்னாள்.

பேராசிரியை பகவதியைக் கண்டதும், ''என்னப்பா பிட்டா அடிக்கிற? அப்படி பண்ற ஆள் இல்லையே'' என்றார்.

''மேம். நாளைக்கு ஒரு கருத்தரங்கம் வெச்சிருக்கோம். அதுக்கு மற்ற கல்லூரிகளை ஒருங்கிணைக்குற பொறுப்பு எனக்கு. அது சம்பந்தமான மெசேஜ் அதிகம் வர்றதால செல்போன் பார்த்தேன்.''

தப்பா போட்டுக் கொடுத்துட்டோமோ என்ற மிரட்சியுடன் பத்மினி நைஸாக நழுவினாள்.

பார்த்தியா என் கெத்த என்று சின்னதாய் சிர்த்தபடி பகவதி சென்றான்.

அந்த பத்மினியா இது? என்று நொடிக்கொருமுறை பத்மினியை நோக்கினான். அவளும் நோக்கினாள்.

அடுத்தடுத்த போராட்டங்களில் பத்மினி ஆஜாரானாள்.

இலங்கை பிரச்சினை குறித்து கல்லூரி மாணவர்கள் போராடத் தொடங்கி இருந்த சமயம் அது. நெல்லையில் முதல் பெண்ணாக கல்லூரிக்கு வெளியே வந்து உண்ணாவிரதம் இருந்தாள் பத்மினி.

டி.சி கொடுத்திடுவோம். வீட்ல சொல்லிடுவோம். என்று பேச்சுவார்த்தையில் மென்மையாக ஆரம்பித்த கண்டனங்கள் மிரட்டலாக உருவெடுத்த போதும் பத்மினி மாணவர்களுடன் போராடினாள்.

''நீ இவ்ளோ தீவிரமா போராட என்ன காரணம்? பத்மினி'' என்று பகவதி கேட்டான்.

''தாத்தா, பாட்டி பிறந்து வளர்ந்தது யாழ்ப்பாணத்துலதான். அப்புறம் எப்படியோ தமிழ்நாடு வந்துட்டாங்க. ஆனா, என் பூர்விகத்தை மறக்க முடியுமா?'' என்று தன் வரலாறை ஒற்றை வரியில் சொல்லி முடித்தாள்.

பத்மினியும், பகவதியும் சினேகம் வளர்த்தார்கள். போன் நம்பர்கள் பரிமாற்றம் செய்யப்பட்டது. தினமும் 750 மெசேஜ், நள்ளிரவு செல்போன் பேச்சு என வழக்கமான காதலர்களின் கொஞ்சல் மொழிக்கு தங்களை ஒப்புக்கொடுத்தார்கள்.

கமல், நயன்தாரா என்று ரசனையைப் பகிர்ந்தனர்.

ஐ ஹேட் ஆன் ய க்ரஷ் வித் யூ என்று பத்மினி மெசேஜ் தட்டினாள்.

பகவதியின் ரிப்ளைக்காக காத்துக் கிடந்தாள்.

தாமதமாகும் ஒவ்வொரு நொடியையும் கடக்க முடியாமல் திணறினாள்.

இதுக்கு மேல காத்திருக்க முடியாதென்று போன் செய்தாள்.



''மெசேஜ் வந்ததா பகவதி?''

''வந்துச்சு பத்மினி.''

''ஒண்ணுமே சொல்லலை?''

''எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை.''

''எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லு.''

''தப்பா நினைக்க மாட்டியே.''

''மாட்டேன்.''

''க்ரஷ்னா என்ன? நான் டிக்‌ஷ்னரியில தேடிக்கிட்டு இருக்கேன்.''

''நிஜமா தெரியாதா? விளையாடுறியா?''

''தெரியாது.''

''கிண்டல் பண்றியா.''

''அந்த அளவுக்கு இங்கிலீஷ்லாம் எனக்கு வராது.''

பதற்றம் விலகி, இதழ் விரித்து ஐ லவ் யூ சொன்னாள்.

பகவதியும் காதலைச் சொன்னான்.

அதற்கடுத்த 5 நிமிடங்கள் மௌனம் ஆட்கொண்டது.

''ஒண்ணுமே பேசலையே பத்மினி.''

''இவ்ளோ நேரம் மௌனத்தால பேசிக்கிட்டு இருந்தோமே.''

ஆமாம்ல என்பதுபோல தலையசைத்தான்.

பெயர் பத்மினி என்று இருந்தாலும் அவள் கிறித்தவப் பெண். அதனால் என்ன? இருட்டு கடை அல்வா கடைக்கு அருகில் உள்ள நெல்லையப்பர் கோயிலுக்கு அழைத்துச் சென்று அவள் நெற்றியில் குங்குமம் இட்டான்.

''மறக்க முடியாத நாள் இது. இந்த நாளை எனக்காக ஏற்படுத்திக் கொடுத்ததுக்கு நன்றி'' என்று அழுத்தமாய் முத்தம் பதித்தாள்.

பத்மினி பகவதிக்கு பீட்ஸாவை அறிமுகப்படுத்தினாள். சூப்பர் மார்க்கெட்டில் காய்கறி வாங்குவது எப்படி? என கற்றுக்கொடுத்தாள்.

படம் பார்க்க தியேட்டருக்கு சென்றார்கள். படம் முடிந்ததும் நடந்த அந்த உரையாடல் பெரிய ஆச்சர்யம்.

''உனக்கு ரொமான்ஸ் பண்ணத் தெரியாதா பகவதி?''

''ஏன்?''

''படம் பார்க்கும்போது என் கையைக் கூட தொடலையே.''

''அதுவா?''

''சமாளிக்காதேடா...''

''விடு..''.

''இல்லை... பத்மினி... முரட்டுப்பையனாவே வளர்ந்துட்டேனா... அதெல்லாம் தெரியாது. அட்ஜஸ்ட் பண்ணிக்கோ...''

''இதான்டா எனக்கு பிடிச்சிருக்கு. இதுக்காகவே உன்னை காதலிக்கலாம்.''

கல்லூரி படிப்புக்குப் பிறகும் இந்தக் காதல் தொடர்ந்தது. பத்மினியின் மாமா பையன் ஒரு பேருந்து நிறுத்தத்தில் பகவதியுடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து விட்டார்.

போட்டுக்கொடுப்பதுதானே பார்த்ததற்கான அடையாளம். அச்சரம் பிசகாமல் ஓதினார் அந்த நபர்.

பத்மினிக்கு அவசரமாக கல்யாண ஏற்பாடுகள் நடந்தன. போட்டுக்கொடுத்த அந்த ஆசாமிதான் மாப்பிள்ளை. திருமணத்துக்குப் பிறகு துபாய் செல்வதாக திட்டம்.

பத்மினி பதறினாள். அம்மாவிடம் மன்றாடினாள்.

அப்பா இல்லாத பொண்ணு. தப்பா வளர்த்துட்டேன்னு சொல்லாத அளவுக்கு பார்த்துக்கோன்னு எமோஷனலாய் சொன்னார்.

பத்மினியின் இரு தங்கைகளும் கண்ணீர் வடித்தார்கள். நீ அம்மா சொல்பேச்சை கேட்கலைன்னா அம்மா எதாச்சும் பண்ணிப்பாங்க என்று கல்யாண சம்மதத்துக்காய் பாசத்தை நெய்யூற்றி வளர்த்தார்கள்.

சூழ்நிலைக் கைதியான பத்மினி குடும்பமே முக்கியம் என்று முடிவெடுத்தாள்.

என்னை விட்டுடு. மறந்திடு. என்றாள்.

தன் அப்பாவின் மறைவுக்குப் பிறகு பகவதி அதிகம் துடித்ததும், அழுததும் பத்மினியின் பிரிவுக்குதான்.

''என்னை விட்டுப் போகாதே பத்மினி.''

''எந்த கேள்வியும் கேட்காம உடனே கல்யாணம் பண்ணிக்கோ.''

''ஒரு வருஷம் மட்டும் வெயிட் பண்ணு. ஐஏஎஸ் பாஸ் பண்ணிடுவேன். அப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம்.''

''செட்டாகாது பகவதி. இதை இத்தோட விட்டுடலாம்.''

பத்மினி தீர்க்கமாக இருந்தாள். பேச்சை குறைத்தாள். மெசேஜ் பண்ணுவதை நிறுத்தினாள்.

பகவதி கொஞ்சம் கொஞ்சமாக தன்னை இழந்துகொண்டிருந்தான். மதுவுக்கு அடிமையானான். விரக்தியில் புலம்பினான். நண்பர்கள் உடன் இருந்தனர்.

அவனை அவனுக்கே பிடிக்காமல் போனது. ஐஏஎஸ் கனவையெல்லாம் உதறிவிட்டு பொருளாதார நிலையை சரி செய்ய வேலை தேடினான்.

சென்னையில் வேலை கிடைத்தது. ஆர்வமாய் செய்தான். ஆனால், பத்மினியை மட்டும் மறக்கவே இல்லை.

அந்த தருணத்தில் ஹேமா வந்தாள். சாட்டிங் செய்தாள்.

''ஹாய் பகவதி. நல்லா இருக்கீங்களா?''

''யாரு?''

''உங்க காலேஜ் தான்.''

''ஞாபகம் இல்லையே.''

''என் பேரு ஹேமா. பத்மினியோட ஜூனியர்.''

''என்ன இப்போ?''

''உங்க காதல் எனக்கு தெரியும்.''

''ஹ்ம்ம்ம்.''

''உங்க ரெண்டு பேரையும் நினைச்சா பெருமையா இருக்கும்.''

''விஷயத்தை சொல்லு.''

''சும்மா தான் ...''

இப்படி ஆரம்பித்த ஹேமாவை போகப் போக பகவதிக்குப் பிடித்திருந்தது. அதுவும் ஹேமா பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் பத்மினி இருப்பாள். பத்மினியைப் பேசாமல் ஹேமா இருந்ததே இல்லை. எந்த விஷயத்திலும் பத்மினிதான் டாபிக்.

அதனாலேயே ஹேமாவிடம் பேசினான்.

''என்னை கல்யாணம் பண்ணிக்குறீங்களா?'' சட்டென்று கேட்டாள்.

''டைம் கொடும்மா'' என்றான்.

அதையே சம்மதமாக எடுத்துக்கொண்டாள்.

''எப்போ பார்த்தாலும் ஃபேஸ்புக்லயே இருக்கே? யார் கூட பேசிக்கிட்டு இருந்த? இன்னொருத்தி கேட்குதா உனக்கு? அப்போ யார்கூட கடைசியா பேசுனன்னு ஸ்க்ரீன் ஷாட் அனுப்பி வை. வாட்ஸ் ஆப் ல என்ன அது புரொஃபைல் பிக்சர். உடனே மாத்து''

ஹேமாவை சமாளிக்கத் தெரியாமல் பகவதி திணறினான்.

இந்த இடைவெளியில்தான் நான் சுத்தேசி ரொமான்ஸ் படம் பார்த்திருந்தேன். மேலோட்டமாக பார்த்தால் கிட்டத்தட்ட இதே கதைதான்.

மணீஷ் ஷர்மா இயக்கத்தில் சுஷாந்த் சிங், பரினீத்தி சோப்ரா, வாணி கபூர் நடிப்பில் 2013-ல் வெளியான படம். அந்த ஆண்டில் டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

சுஷாந்த் சிங் ஜெய்ப்பூரில் வசிக்கும் டூரிஸ்ட் கைடு. வெட்டிங் பிளானர் ரிஷி கபூரிடம் வேலை செய்கிறார். சுஷாந்துக்கு விடிந்தால் திருமணம். ரிஷிகபூர் ஏற்பாடு செய்யும் பேருந்தில் கூட்டத்தோடு பயணிக்கிறார். அதில் பரினீத்தி சோப்ராவும் ஒருவர். நிச்சயிக்கப்பட்ட திருமணம் தனக்கு ஒத்துவருமா? என்ற சந்தேகத்தோடு இருக்கும் சுஷாந்த் சிங் பரினீத்தி சோப்ராவிடம் பேச்சு கொடுக்கிறார். பரினீத்தியின் வெளிப்படையான பேச்சும், சுதந்திரத்தன்மையும் சுஷாந்துக்குப் பிடித்துவிடுகிறது. தம் அடிக்கும் பரினீத்தி சோப்ரா இருக்கை மாறும்போது சுஷாந்த் அவர் கன்னத்தில் பட்டென்று முத்தம் கொடுக்கிறார். பரினீத்தி இங்கிலீஷ் முத்தத்துக்கே இசைகிறார்.

மறுநாள் காலை திருமணம் நடக்கும் சூழலில் பாத்ரூம் போகணும் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகிறார் சுஷாந்த். திருமணம் நின்று போகிறது.

பரினீத்தியை சந்தித்து நீதான் நான் தப்பித்து வரக் காரணம் என்கிறார். இருவரும் சேர்ந்து லிவிங் டூ கெதர் வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள். நாளை திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுக்கும் நேரத்தில் பரினீத்தி எஸ்கேப் ஆகிறார்.

வருத்தத்தில் ரிஷிகபூரிடம் வருகிறார். அங்கு கல்யாணம் செய்யப் போன சமயத்தில் கழட்டி விட்டு வந்த அந்த மணப்பெண் வாணிகபூரை சந்திக்கிறார். ஆரம்பத்தில் வாணிகபூர் கண்டுகொள்ளாமல் வசை பாடுகிறார். பிறகு நண்பராக பழகுகிறார். அவரிடம் காதலை சொல்ல முயற்சிக்கிறார். ஒரு திருமண விழாவுக்கு வாணிகபூரும், சுஷாந்த் சிங்கும் செல்கிறார்கள். எதிர்பாராவிதமாக பரினீத்தி சோப்ரா அங்கே வருகிறார்.

கல்யாண வீட்டில் மணமகள் அம்மா ஒரு முக்கிய விருந்தினரை அழைத்துவர சுஷாந்த் சிங்கையும், பரினீத்தி சோப்ராவையும் அனுப்புகிறார். ஒரே காரில் இருவரும் பயணிக்கிறார்கள். அதற்குப் பிறகு வாணிகபூரும், பரினீத்தி சோப்ராவும் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை சாப்பிடுவதை சுஷாந்த் திடுக்கிட்டுப் பார்க்கிறான்.

சுஷாந்த் பாத்ரூம் செல்கிறான். பரினீத்தியும் பாத்ரூம் சென்று வர இருவரும் சந்தித்துக் கொள்வதை வாணிகபூர் பார்த்து விடுகிறார். இனியும் சுஷாந்த் வாழ்க்கையில் இருக்க வேண்டாம் என வாணிகபூர் விலகி செல்கிறார்.

பரினீத்தியும், சுஷாந்தும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார்கள். ஆனால், இந்த முறை இருவருமே எஸ்கேப் ஆக திட்டமிடுகிறார்கள். காரணம், அவர்களுக்கு லிவிங் டூ கெதர் வாழ்க்கையே பிடித்திருக்கிறது. வழக்கம்போல் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்கிறார்கள்.

'கை போச்சே' படத்தில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புட்டுக்கு இது இரண்டாவது படம். ஜாலியான, குழப்பமான பேர்வழியாகவும், ரொமான்ஸில் பின்னி எடுக்கும் இளைஞர் கதாபாத்திரத்துக்கும் சுஷாந்த் சரியான தேர்வு.

பரினீத்தி சோப்ராவின் தைரியமும், துணிச்சலும், தம் அடிக்கும் ஸ்டைலும் ரசிக்க வைத்தது.

எந்த பிரச்சினை என்றாலும் கூல்டிரிங்ஸ் குடித்து கூலாவது, சிரிப்போடு பிரச்சினையை எதிர்கொள்வது என்று வாணிகபூர் அறிமுகப்படத்திலேயே அசத்தி இருப்பார்.

பகவதி வாழ்வில் இதுவேதான் கொஞ்சம் மாறி நடந்தது.

ஒரு கட்டத்தில் ஹேமாவே இவன் தனக்கு செட்டாகமாட்டான் என்று பிரிந்து சென்றாள்.

எதிர்பாராவிதமாக மீண்டும் பத்மினி வந்தாள்.

"மாமா பையன் சொத்துக்கு ஆசைப்பட்டுதாண்டா என்னை கல்யாணம் பண்ணிக்க பார்த்தான். வீட்ல தெரிஞ்சதும் அப்பவே கல்யாணத்தை வேணாம்னு நிறுத்திட்டாங்க. அப்படி நடந்த உடனே எல்லோரும் உன் விருப்பப்படியே இரும்மான்னு அழுதுகிட்டே சொன்னாங்க. ஆனா, நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன்.

மறுபடியும் உன்னை பார்க்க போறேன். பேசப்போறேன்ங்கிற சந்தோஷம்தான். உனக்கு போன் பண்ணேன். நீதான் வேண்டா வெறுப்பா பேசின. நீ அப்படி பேசினன்னு நான் விட்டுப் போக விரும்பலை. நீயே போன்னு சொன்னாலும் போகாம உன் கூடவே இருக்குறதுதான் நம்ம காதலுக்கு அழகுன்னு இப்போ புரிஞ்சுகிட்டேன்.''

கண்களில் நீர் திரண்டது பகவதிக்கு...

''இப்பவாச்சும் என்னை கல்யாணம் பண்ணிக்கோயேன்.''

''நான் உனக்குதான்டா. வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் இனி உன்னோடுதான்.''

ஹேமாவைப் பற்றியும் சொன்னான்.

''இனிமே என்னைத் தவிர யாரையாவது நினைச்ச அவ்ளோதான்.''

பத்மினி எம்பிஏ முடித்துவிட்டாள். பகவதி சென்னையில் பிரபலமான பத்திரிகை நிறுவனத்தில் நிருபராக இருக்கிறான்.

இருவரும் கல்யாணத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

மான்டேஜ் மனசு இன்னும் சுழலும்...

க.நாகப்பன் - தொடர்புக்கு nagappan.k@thehindutamil.co.in

முந்தைய அத்தியாயம்: >மான்டேஜ் மனசு 9 - காதலுக்கு மரியாதை செய்தவர்கள்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்