சித்திரச்சோலை 8: புதுப்பேட்டை முதல் தெரு 47-ம் நம்பர் வீடு

By செய்திப்பிரிவு

1958, ஜூன் 8-ல் சென்னை புறப்பட்டு வந்த நானும் மாமா மகன் ரத்தினமும் முதல் ஒரு மாதம் வடக்கு கோபாலபுரம் வீட்டில் வாடகைக்குத் தங்கினோம்.

மூன்றாவது நாள் ஊர் நினைப்பு வந்து, ‘காடுகரையில் அம்மா வேகாத வெயிலில் பாடுபடுகிறாள்; நாம் சென்னை வந்துவிட்டோம். என்று நமக்கு விடியும். அம்மாவை எப்போது சந்தோஷமாக வைத்திருக்கப் போகிறேன்?’ என்று நினைத்ததும், கன்னத்தில் கண்ணீர் தாரை தாரையாக ஓடியது.

இதுக்குப் பேர்தான் ஹோம் சிக் (HOME SICK). நான் சின்ன வயசில ரொம்பவும் குறும்பு பண்ணுவேன். தாக்குப் பிடிக்க முடியாம தஞ்சாவூர், திருக்காட்டு பள்ளி போர்டிங் ஸ்கூல்ல போட்டுட்டாங்க. 10, 12 வயசு இருக்கும் எனக்கு. இதே மாதிரி வீட்டை நினைச்சுட்டு அழுவேன். அப்ப கூட இருந்த பசங்க ஆதரவா பேசினாங்க. போகப்போக சரியாப் போயிடும்னு ரத்தினம் சொன்னார்.

செப்டம்பர் மாதம் நடுவில் அந்த ரத்தினமே உடைஞ்சு போயிட்டார். ‘எனக்கு ஹோம் சிக். ஊட்டு ஞாபகம் வந்திருச்சு. நான் ஊருக்கே போறேன். நீ எப்படியோ சமாளிச்சுக்க!’ன்னு சொல்லிட்டு ரயில் ஏறிட்டாரு. பிளாட்பாரத்தில நான் வழியனுப்ப நின்னுட்டிருக்கேன். என் முகத்தை பார்த்துப் பேசினா அழுகை வந்திடும்னு, ரத்தினம் தலையக் குத்தி உக்காந்திட்டிருக்காரு.

ரயில் புறப்பட்டுடுச்சு. 16 வயசு முடியற கட்டம் எனக்கு. திடீர்னு உலகமே இருண்டு போன மாதிரி இருந்தது. இந்த சென்னை மக்கள் வெள்ளத்தில நான் ஒரு துரும்பு. இருந்தாலும், செத்தாலும் யாருக்கும் தெரியாது.

நாம யாரையும் பகைச்சுக்க கூடாது. சாதி, மதம் பாக்கக் கூடாது. கண்ணில படற சனங்க அத்தனை பேரும் நம்ம சொந்தக்காரங்க அப்படிங்கற மனோபாவத்தை வளர்த்துக்கணும்னு முடிவு பண்ணினேன்.

பிளாட்பாரத்தில ரயில் ஏற வந்தவங்க கூட்டம், வழியனுப்ப வந்தவங்க கூட்டம்னு நிரம்பி வழிஞ்சாலும் என் மனதளவில், ‘கல்யாணப்பரிசு’ -படத்தின் கிளைமாக்ஸ் காட்சில ஜெமினி கணேசன், ‘காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன்’ - ஏ.எம்.ராஜா பாட்டு பின்னணியில் தன்னந்தனியா சென்ட்ரல் பிளாட்பாரத்தில் நடந்து போனாரே அந்த மனோநிலையில இருந்தேன்.

மோகன் ஆர்ட்ஸில் என்னோடு வேலை பார்த்த பிச்சையா, அவர் குடியிருக்கற புதுப்பேட்டையில ஒரு சிங்கிள் ரூம் ஏற்பாடு பண்றேன்னு சொன்னாரு.

இது கத்தோலிக்க கிறித்தவர்கள் 95 சதவீதம் வசிக்கிற ஏரியா. வெளியாளை லேசில சேர்த்துக்க மாட்டாங்க. வீட்டுக்குச் சொந்தக்கார அம்மா, 10 வீடு தள்ளி சொந்த வீட்ல குடியிருந்தாங்க. அவங்ககிட்ட பிச்சையா என்னைக் கூட்டிட்டுப் போனாரு.

‘இத பாருப்பா. இது கேத்தலிக் ஏரியா. இங்க சர்ச்சுக்கு வீட்ல உள்ளவங்க போவாங்க. வீட்லயும் பிரேயர் எல்லாம் பண்ணுவாங்க. நீ அதிகாலை 6 மணிக்குள்ள பாத்ரூம் போய் எல்லா வேலையும் முடிச்சிட்டு வந்திரணும். அதுக்கப்புறம் குடும்பஸ்தர்கள் யாருக்கும் சிரமம் குடுக்காம உன் ரூம்லயே இருந்துக்கணும். சுவத்தில ஆணி அடிக்கக்கூடாது. ப்ரண்ட்ஸைக் கூட்டிட்டு வந்த தாளம் போட்டு பாட்டுப்பாடி கூப்பாடெல்லாம் போடக்கூடாது. குடியிருக்கற பெண்களோட அனாவசியமா பேசக்கூடாது. சிகரெட், டிரிங்ஸ் எல்லாம் வீட்டுக்குள்ளே செய்யக்கூடாது. பிரண்ட்ஸ் யாரும் இங்க வரக்கூடாது. செகண்ட் ஷோ படம் பார்க்கக்கூடாது!’ன்னு ஏகப்பட்ட கண்டிஷன்கள் போட்டுத்தான் ரூம் குடுத்தாங்க.

இரண்டே கழிப்பறைகள் இருந்ததால, அதிகாலை 4.30க்கே எழுந்து என்னுடைய கடமைகளை முடிச்சுட்டு யோகா செஞ்சு குளிச்சிருவேன். ஞாயிற்றுக்கிழமை ‘ஃபர்ஸ்ட் மாஸ்’ 5.30 மணிக்கு காலையில இருக்கும். 6.30 மணிக்கு இரண்டாவது மாஸ். பிரேயர் சர்ச்சில இருக்கும்.

எங்க வீட்ல உள்ளவங்க முதல் மாஸ்க்கு புறப்பட்டவுடனே, முந்தின நாள் இரவு பாத்ரூம்ல ஊற வச்சிருந்த 5 சட்டை, 3 பேண்ட்டை அவங்க சர்ச்சிலருந்து வர்றதுக்குள்ளே துவச்சு கம்பில காயப் போட்டிருவேன்.

புதுப்பேட்டை மார்க்கெட் பக்கத்தில இருந்த லாண்டரில பேண்ட் இஸ்திரி போட 15 பைசா, சட்டைக்கு 10 பைசா குடுத்து இஸ்திரி போட்டு வாங்கி வந்து பத்திரமா வச்சுக்குவேன்.

சினிமா பட்ஜெட் மாசத்துக்கு 3.50 பைசா. அதாவது 80 பைசா டிக்கட்ல போனா 4 படம் பார்க்கலாம். கைவசம் சைக்கிள் இருக்கறதனால பஸ், ஆட்டோ செலவு மிச்சம். நாம் ரொம்பவும் எச்சரிக்கையா இருந்தா, சோதனை அதுக்கு மேல வரும்.

மினர்வா தியேட்டர் புதுப்பேட்டையிலிருந்து 6, 7 கிலோ மீட்டர் தூரம். பிராட்வே போய், தையப்ப முதலி தெருவுக்குள்ளே நுழைஞ்சா 100 பேர் உட்கார்ற மாதிரி மினி தியேட்டர். ‘அடல்ஸ் ஒன்லி’ படங்கள் ‘சைக்கோ’ மாதிரி ஹிட்ச்சாக் திரில்லர் படங்கள் போடுவாங்க.

80 பைசா க்யூவில போய் நிப்பேன். நமக்கு முன்னாடி பத்துப் பேர் இருப்பாங்க. நமக்கு முன்னால உள்ளவன் டிக்கெட் வாங்கிட்டு நகருவான். ரொம்ப நம்பிக்கையோட, நம்ம கையை நீட்டினா -‘பட்’டுன்னு ’கவுண்ட்டரை’ குளோஸ் பண்ணிடுவான். 80 பைசா டிக்கெட் தீர்ந்திடுச்சு

17, 18 வயசுக்கு எவ்வளவு ‘ஈகோ’ - என்ன மாதிரி வேகம் நமக்குள்ளே இருக்கும். இந்தப் படத்தை பாக்காம போகக்கூடாதுன்னு ரூ.1.33 டிக்கட் வாங்கி படம் பார்த்துரணும்னு தோணுமல்லவா?

எனக்குத் தோணாது. ரூ.1.33 ஒரு படத்துக்கு செலவு பண்ணினா, இதே மாதிரி இன்னும் ஒரு படம்தானே பார்க்க முடியும். நாம 4 படம் பார்த்தாகணுமே. கோபம், ரோஷம் எதுவும் இருக்காது. பேசாமல் திரும்பி 6 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள வீட்டுக்கு வந்திடுவேன்.

மறுநாள் 1 மணி நேரம் முன்னால் கிளம்பி அதே 80 பைசா கவுண்ட்டரில் டிக்கெட் வாங்கி படம் பார்த்து விடுவேன்.

‘டாய்லட்’டை பினாயில் ஊத்தி நானே கழுவி விடுவேன். குளியல் அறை சுவர்களை பிரஷ் வைத்து தேய்த்துக் கழுவுவேன். வேஷ்டியில் நீளமாக கிழிந்தால் அதை வேறு மாதிரி தைக்க வேண்டும். பெருவிரல் நுழையும் அளவு ஓட்டை விழுந்து விட்டால் எப்படி ‘எம்மிங்’ (EMMING) செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். துணிக்கு காஜா எடுத்து பட்டன் வைத்து தைக்கத் தெரியும்.

செருப்புக்கு கூட்டுவார் அறுந்து விட்டால் அதை பக்குவமாக சீவி ஆஸில் சொருகி ஆணி அடித்து பாலீஷ் போடத்தெரியும்.

20-வயதில் நான் வரைந்த ஓவியம்

ஒரு நாள் கல்லூரியிலிருந்து களைப்பாக வந்து பேண்ட்டைக் கழட்டியபோது ஒரு கால் விரல் ‘பாண்ட்டி’ல் சிக்கி ‘பாலன்ஸ்’ தவறி கீழே விழுந்து விட்டேன். டென்னிஸ் பேட் வளையாமல் இருக்க முக்கோண ஃபிரேம் ஒன்றில் மாட்டி மூன்று ஸ்குரூக்களையும் ‘டைட்’ செய்து வைத்திருந்தேன். தடுமாறி விழுந்ததில் ஃபிரேமில் துருத்திக் கொண்டிருந்த ஸ்குரூ உள்ளங்கையில் ஆள்காட்டி விரல், கட்டை விரல் இணையும் பகுதிக்குக் கீழே நுழைந்து மேலே எட்டிப் பார்த்தது.

மயக்கமாகி விட்டேன். வேகமாக ஸ்குரூவை இழுத்தபோது உள்ளங்கைக்குள் இருந்து லேசாக சதையும் வந்து விட்டது. 6 மாதத்திற்கு அந்தக் கையை பயன்படுத்தக்கூடாது என்றார் டாக்டர். ஒரு வாரம் பொறுத்துப் பார்த்தேன். சிறுவயதில் எனக்கு இடது கை பழக்கம் இருந்தது. 7 வயதில் அடித்து மிரட்டி வலது கையால சாப்பிட வைத்தார்கள். அப்படியே எழுதவும் வலது கை பழகி விட்டது.

இப்போது சும்மா இருப்பதற்கு இடது கையால் வரையலாமே என்று வகுப்பில் ஆரம்பித்தேன். ஒரு வாரத்தில் லாவகமாக க்ரயான், பிரஷ்களை வைத்து ஆயில் பெயிண்டிங் கூட செய்ய ஆரம்பித்தேன். ஆசிரியர் சந்தானராஜ், இடது கை ஓவியங்கள் பிரமாதமாக, ‘டேரிங்’ ஆக உள்ளன, ‘கண்டினியூ’ என்றார்.

இடது கையால் வரைந்த ஓவியம்.

இப்படி இந்தியா முழுக்கச் சுற்றி நான் வரைந்த ஓவியங்கள் புதுப்பேட்டை முதல் தெரு 47-ம் நம்பர் வீட்டிலிருந்த ஆறடிக்கு அஞ்சரை அடி அளவுள்ள குருவிக்கூட்டில் வாழ்ந்த காலத்தில் உருவானதுதான். குடி வரும்போது எதெல்லாம் செய்யக்கூடாது என்று வீட்டுக்கார அம்மா சொன்னார்களோ அதையெல்லாம், அந்த 7 வருடங்களில் அந்த வீட்டில் செய்தேன். சுவரில் ஆணி அடித்தேன். பகல் நேரம் எல்லா குடும்பத்து அறைகளிலும் புகுந்து புறப்பட்டேன். 10, 12 வயதிருந்த சின்னப் பெண்கள் வளர்ந்து ஆளாகி, திருமணம் செய்து கொடுக்கும் வரை அதே வீட்டில் இருந்தேன். ‘கடைசி ‘பேச்சிலர்’ நீதான், இனி யாரையும் வைக்க மாட்டோம்’ என்றனர்.

அப்படி தாயும் பிள்ளையுமாக, சாதி கடந்து, மத உணர்வு கடந்து பழகிய அந்த வீட்டிலும் மறக்க முடியாத ஒரு சம்பவம் நடந்துவிட்டது.

நான் தங்கியிருந்த அறைக்கு எதிர் அறையில் வழக்கறிஞர் பாலா பழனூர் தங்கியிருந்தார். இருவரும் ஓட்டலில் சாப்பிட்டு வந்து அறையில் தங்கியிருந்தோம். என் அறைக்கு முன்னால் 2 சைக்கிள் வைக்கும் அளவுக்கு போர்ட்டிகோ இருந்தது. காம்பவுண்ட் சுவரை ஒட்டி 2 அடி அகலம், 4 அடி நீளம் கடப்பைக் கல் திண்ணை சைக்கிள் ஸ்டேண்டுக்கு முன்னால் இருந்தது.

சனி, ஞாயிறுகளில் அந்த கடப்பைக்கல் மீது அமர்ந்துதான் நான் ஓவியம் தீட்டுவேன். கைரேகை அளவு சிறிதாக உள்ள சிறுமி முகத்தில் 2 கண்கள், மூக்கு வாய், காது வரைய வேண்டும். கண்களில் கருவிழியில், வெளியே தெரியும் வெளிச்சத்தின் ரிஃப்ளக்ஷன் வெள்ளைப் புள்ளியாகத் தெரியும். அதையெல்லாம் ரொம்பவும் கூர்ந்து கவனித்து வரைய வேண்டும்.

60 மணி நேரம் தீட்டிய ஓவியம்

இந்த வீட்டில் 12 வயதுக்குள் 2 பையன்கள். 10 வயதில் ஒரு பெண். 7 வயதில் ஒரு குட்டிப் பையன்- பெண். எல்லோருக்கும் விளையாட இருக்கும் ஒரே பகுதி தலைவாசல், இந்த போர்ட்டிகோ மட்டுமே. தெருவில் போய் விளையாடும் அளவு பரந்த தெரு அல்ல அது. ஒரு லாரி வந்தால் எதிரில் சைக்கிள்காரன் இறங்கி பிளாட்பாரத்தில் சைக்கிளை தூக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவு குறுகிய தெரு.

எனக்கு அமைதியான சூழ்நிலை வேண்டும். குழந்தைகளால் ஆரவாரமில்லாமல், சிரிப்பொலி இல்லாமல் விளையாட முடியாது. இரண்டு தடவை ‘கண்ணுகளா! சத்தம் போடாம விளையாடுங்க’ன்னு சொல்லிப் பார்த்தேன். யாரும் கேட்கவில்லை. கோபத்தில் மோகன் என்ற 12 வயசுப் பையனை கழுத்தைப் பிடித்து தெருவில் தள்ளிவிட்டேன். 4 படிகளில் இறங்கி, தடுமாறி அவன் தெருவிலே விழுந்தான். முழங்காலில் அடிபட்டு ரத்தம்.

அழுகுரல் கேட்டு அவன் அம்மா வந்தார். பெற்றவள் மனம் பதைபதைக்கும்தானே? ரத்தத்தைப் பஞ்சை வைத்து துடைத்தவாறு, ‘‘ஒண்டிக்குடித்தனம்னா, குழந்தைங்க இரைச்சல் போடத்தான் செய்வாங்க. சின்னப் புள்ளைங்க வேற எங்கே போவாங்க? நிம்மதியா படம் வரையணும்னா ‘போட்கிளப்’ ஏரியாவுல வீடு வாங்கி அங்க போயிடு’’ என்று நெருப்பைக் கக்கினார்.

15 ரூபாய் வாடகை கொடுக்கவே மூச்சு முட்டும் நம்மை, போட்கிளப் ஏரியாவுல கோடி ரூபாய்க்கு வீடு வாங்கி , அங்க போய்படம் வரைன்னு சொல்லிட்டாங்களேன்னு பொங்கிப் பொங்கி ஆக்ரோஷம் வந்தது. அப்படியே எச்சில் முழுங்கி அதை அடக்கிக் கொண்டு மெளனியாகி விட்டேன்.

அடுத்த நாள் அந்த அம்மையார் மகள் பிலோமினாவுக்குப் பிறந்த நாள்.

பிலோமினா

அந்த வீட்டில் இருக்கும் கத்தோலிக்கக் குடும்பத்தினரிடம் ஒரு நல்ல பழக்கம் இருந்தது. வீட்டில் யாருக்குப் பிறந்த நாள் என்றாலும், பக்கத்து போர்ஷனில் குடியிருக்கும் அத்தனை பேருக்கும் ஒரு ‘கேக்’, ஒரு வடை தட்டில் வைத்துக் கொடுப்பார்கள். எங்கள் வீட்டுக்குள் வேலையாளைச் சேர்ந்து 20 பேர் இருப்பார்கள்.

மறுநாள் விடிந்துவிட்டது. மெளனமாக மொட்டை மாடி சென்று யோகா முடித்து பூனை மாதிரி பாத்ரூமுக்குள் நுழைந்து ஓசைப்படாமல் குளித்துத் தயாராகி, அரை மணி நேரம் முன்னதாகவே கல்லூரிக்குக் கிளம்பி விட்டேன்.

மானம், ரோஷம் உள்ளவனா இருந்தா இன்னிக்கு அவங்க தர்ற கேக் - வடைய வாங்கித் திங்கக்கூடாதுன்னு தீர்மானத்தோட கிளாசுக்குப் போனேன்.

எந்தவித சிந்தனையுமில்லாம மெஷின் மாதிரி படங்களை வரைஞ்சேன். சாயங்காலம் வேணும்னே வீட்டுக்குப் போகாம, ரெண்டு ரவுண்டு ஊரைச் சுத்திட்டு, கீதா கேஃப் போய் இரவு உணவை முடிச்சேன்.

சைக்கிளை எடுத்துகிட்டு வாலாஜா ரோடு, உழைப்பாளர் சிலை, மெரினா பீச், விவேகானந்தர் மண்டபம், ராணிமேரி கல்லூரி தாண்டி காந்தி சிலைப் பக்கம் போய், மணலுக்குள்ளே இறங்கினேன்.

பெளர்ணமி நிலா கடலுக்கு மேலே 8 மணிக்கு வந்து அலைகள்ள பளபளன்னு மின்னி சிரிப்புக் காட்டுச்சு. இறுக்கம் குறையல. அப்படியே சைக்கிளை பூட்டீட்டு மணல்ல மல்லாக்க படுத்திட்டேன். எவ்வளவு டென்ஷனோட வந்தாலும் கடலும், அதிலருந்து வந்து நெஞ்சை வருடுகிற காத்தும், அம்மா தலையை கோதிக்குடுத்து ஆறுதல் சொல்ற மாதிரி மனசை எளக்கிடும். அப்படியே படுத்து கண்ணசந்து தூங்கிட்டேன்.

நிலா உச்சிக்கு வந்திருச்சு. லேசா ஈரக்காத்து சிலு, சிலுன்னு அடிச்சுது. தூரத்தில ‘டுட்டிஃரூட்டி’ -வண்டி - டப், டப்னு சத்தம் போட்டுட்டுப் போகுது. கடற்கரையில் அங்கொருத்தன், இங்கொருத்தன்னு சுத்தமா கூட்டம் கரைஞ்சிருச்சு.

ஒரு போலீஸ் வந்திச்சு. சைக்கிள் மட்காடு மேல லத்தில 2 தட்டு தட்டினாரு. ‘ஏய்! என்ன இங்க படுத்திருக்கே? வீடு வாசல் இல்லையா? எழுந்து போ’ன்னு அதிகாரமா விரட்டினாரு.

வேண்டாத வீட்டுக்குள்ள நுழையும்போது வீட்டுக்காரன் கத்தினா, வாலைப் பின்னால இடுக்கிட்டு போகுமே நாட்டு நாய். அது மாதிரி பவ்யமா எழுந்து சைக்கிளை எடுத்துப் புறப்பட்டேன். வீட்டுக்குப் போகவே இஷ்டமில்லே. தலைக்கு மேல நிலா வெளிச்சம். மெதுவா உட்லண்ட்ஸ் ஓட்டல், ஸ்டெல்லா மேரி காலேஜ், ஜெமினி ரவுண்டானா -சேத்துப்பட்டு பாலம் பக்கத்தில் ஸ்பர்டாங் ரோடு, எழும்பூர் சிக்னல், அசோகா ஓட்டல் வழியா ஊறிட்டே போனேன். திறந்த வெளி சாக்கடைகள் வீட்டு முன்னாடி.. பெருச்சாளிகள் பொந்துக்குள்ளருந்து புதுக்குன்னு வெளியே ஓடி வந்து எனக்குச் சமமா சுவத்தோரம் ஓடுது.

எங்க வீட்டு வாசப்படியில கருப்பா ஏதோ ஒரு உருவம். கிட்டப் போனேன். எழுந்து நின்னுச்சு.

அந்த அம்மா- பிலோமினாவோட அம்மா -நேத்து நெருப்பு வார்த்தைகளை உமிழ்ந்த அதே அம்மா!

‘‘என்ன மோனே! இவ்வளவு நேரம் எங்கே போயிட்டே? ஃபிலோவுக்கு இன்னிக்கு பொறந்த நாளல்லோ. அண்ணனுக்கு கேக் தரணும்னு குழந்தை 10 மணி வரைக்கும் வெயிட் பண்ணிட்டிருந்தது. நாளைக்கு அவளுக்கு ஸ்கூல். அதுதான் போய் படுத்திருச்சு. இந்தா கேக் -வடை சாப்பிடு!’’

பிலோமினா தாயார்

செத்துப் போய்விட்டேன். ‘நீ எந்த ஊரில் பிறந்தாய். அந்த அம்மா கேரளாவில் எந்த ஊரில் பிறந்தார்? உனக்கும் அவருக்கும் என்ன பந்தம். யாரோ பெத்த ஒரு பிள்ளை. தன் மகனைக் கீழே தள்ளி காயப்படுத்தியவன். அவனுக்கு இரவு 1 மணி வரை காத்திருந்து கேக் தந்த அந்த அம்மையார் யார்? கருணை வடிவம். பாசத்தின் பிரதிபிம்பம் - உன்னைப் பெற்ற தாய் ரத்த சம்பந்தம் உள்ளவள். எந்த சம்பந்தமுமில்லாத அவள் இறைவனின் கொடை. அறைக்குள் சென்றேன். மூக்கு விடைத்தது. கண்கள் பொங்கின. தொண்டை அடைத்துக் கொண்டது. விக்கிக் கொண்டே கேக்கை கொஞ்சம், கொஞ்சமாக விழுங்கினேன். என் வறட்டு வைராக்கியத்தை தனது வாஞ்சையால் அடித்து வீழ்த்தின அந்தத் தாயை கைகூப்பி வணங்கி, படுக்கையில் விழுந்தேன்.

ஏசு பிறப்பு (நான் வரைந்த ஓவியம்)

ஏசுநாதர் (நான் வரைந்த ஓவியம்)

---

தரிசிப்போம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

28 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்