நந்து: எனக்கு எல்லா விஷயமும் நல்லா ஞாபகம் இருக்குது.
வினோத்: அது.. அதுதான் உன்னோட பிரச்சினை நந்து.. உன்னோட நோயும் அதுதான்.
இது ஆளவந்தான் திரைப்படத்தில் மனநலன் பாதிக்கப்பட்ட கமல் (நந்து), அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்த கமல் (வினோத்) இடையே மருத்துவமனையில் நடைபெறும் உரையாடல்.
பெரும்பாலான மனநோய்களுக்கு, மனதில் அழுத்திவைக்கப்படும் மோசமான நினைவுகளே காரணமாக அமைந்துவிடுகின்றன.
அதனால் தான், "மனம் எப்போதும் தெளிந்த நீரோடை போல் இருக்க வேண்டும். அதற்கு பழைய நினைவுகளை அவ்வப்போது அழித்துவிட வேண்டும்" என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.
» மனமே நலமா: 5- கருணை பொருளாதாரம் சார்ந்ததா?
» மனமே நலமா: 4: தற்கொலை என்பது தடுக்கக்கூடிய பொது சுகாதாரப் பிரச்சினை
ஒரு நிஜக் கதை..
ஃபேஸ்புக்கில், ஹூயமன்ஸ் ஆஃப் மும்பை (Humans of Bombay) என்ற பக்கம் மிகவும் பிரபலமானது. அங்கே பலரும் தங்களின் வாழ்க்கைப் பயணம் சார்ந்த பல சுவாரஸ்யக் கதைகளைப் பகிர்வதும் உண்டு.
சர்வதேச மனநல நாளை ஒட்டி பதியப்பட்ட அப்படியொரு உண்மைக் கதையின் சுருக்கம் வருமாறு:
என் அம்மா தற்கொலையால் இறந்தபோது எனக்கு வயது 2. அன்றிலிருந்து அம்மா, பாட்டியுடன் வாழ்க்கை தொடங்கியது. எனக்கு 4 வயதிருக்கும்போது என் அப்பா மறுமணம் செய்தார். அந்தப் புதிய குடும்பத்திற்கும் நான் வேண்டாதவளாகவே இருந்தேன்.
என் பாட்டி என்னை அரவணைத்தார். இருந்தாலும் கூட அவ்வப்போது வெறுமை என்னை ஆட்கொள்ளும். காரணமே இல்லாமல் பயம் தொற்றிக் கொள்ளும். எல்லோரிடமும் எரிச்சலை வெளிப்படுத்துவேன். நான் எத்தனை கோபப்பட்டாலும் என் பாட்டி என்னைக் கட்டி அரவணைத்துத் தேற்றுவார். ஒருமுறை என்னை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்.
பட உதவி: ஹூயமன்ஸ் ஆஃப் பாம்பே ஃபேஸ்புக் பக்கம்
மருத்துவர் எனக்கு மன அழுத்தமும், மனப்பதற்றமும் ஏற்பட்டிருப்பதாகச் சொன்னார். மருந்துகளைப் பரிந்துரைத்தார். என்னை நானே நெறிப்படுத்திக் கொள்ள மண்டலா ஓவியங்களில் கவனம் செலுத்தினேன். தனிமையில் இருப்பதைத் தவிர்த்தேன். வேலையில் சேர்ந்தேன். தேறிவிடுவேன் என நினைத்தபோது அப்பாவுக்கு கேன்சர் ஏற்பட்டது தெரிந்தது. அவர் குரல் கேட்டு மீண்டும் நொறுங்கினேன்.
அவருடைய மரணம் என்னை அனாதையாக்கியதாக உணர்ந்தேன். நான் ஓர் அனாதை என்று என்னிடமே திரும்பத் திரும்பச் சொல்லலானேன். சில நேரங்களில் அதிகமாக தூக்க மாத்திரைகளை உட்கொண்டேன். வேலையிடத்தில் எனக்கு அவப்பெயர் ஏற்பட்டது. டெட்லைன்களை மிஸ் செய்தேன். பணியிடத்தில் என் திறமை குறைந்தபோது பொறுக்க முடியாமல் கைகளைக் கீறிக் கொண்டேன்.
மீண்டும் என் பாட்டி என்னை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். இப்போது குழந்தைபோல் அமைதியின் பாதையில் தத்தி தத்தி நடக்கிறேன். பாட்டியுடன் நிறைய நேரம் செலவிடுகிறேன். பழைய நினைவுகள் நெருங்கவிடாமால் விலகிச் செல்கிறேன். அப்படித் தோன்றினால் எனக்குப் பிடித்த உணவை ஆர்டர் செய்து பாட்டியுடன் சேர்ந்து சாப்பிடுகிறேன். பழைய நினைவுகள் நெருங்கினால், திரும்பிப் பார்க்காமல் முன்னால் பார்க்க நிறைய இருப்பதாக சமாதானம் கூறி முன்னேறுகிறேன். நான் எதை நோக்கி முன்னேற வேண்டும் என்பதைத் தேடுகிறேன், என்னைப் பின்னோக்கி இழுக்கக்கூடியதைத் தவிர்க்கிறேன் #WorldMentalHealthDay
இவ்வாறு அந்த இளம்பெண் பதிவிட்டிருந்தார்.
மன அழுத்தம், மனச் சோர்வு, பதற்றம், தற்கொலை முயற்சி என பல்வேறு மனச்சிக்கல்களாலும் இப்பெண் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீள முறையான மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். ஆனால், நம்மில் பலரும் இதையெல்லாம் அனுபவித்துக் கொண்டே வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டிருக்கிறோம்.
ஏன் இந்த நிலை?
மனநலம் சார்ந்த பாதிப்புகளுக்கு மட்டும் ஏன் இந்த நிலை என்று ஆராய்ந்தால் 4 முக்கியக் காரணங்கள் விடையாகக் கிடைக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை 1. மனநோய்கள் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லை, 2. மனநல மருத்துவமனைகள் அருகில் இல்லை, 3. சிகிச்சைக்கான செலவு அதிகமாக இருக்கிறது 4. சமூக பேதம்.
மனநோய்களைச் சரி செய்யக்கூடியது, சிகிச்சையால் முற்றாமல் தடுக்கக் கூடியது என இரண்டு வகையாகப் பிரித்துக் கொள்ளலாம். ஆனால், மேலே கூறிய 4 காரணங்களால் இந்தியாவில் பல மனநோய்கள் தீரா நோய்களாக மாறிவிடுகின்றன.
இந்தியாவில் 6000 மனநல மருத்துவர்களே இருக்கின்றனர். மனநல ஆலோசகர்களை எடுத்துக் கொண்டால் 2500 பேர் இருக்கின்றனர். மனநலத் துறையில் பணியாற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களைக் கணக்கிட்டால் அது இன்னும் குறைவு. நாடு முழுவதும் அரசாங்கத்தால் நடத்தப்படும் மனநல மருத்துவமனைகள் 43.
இத்தகைய சூழலில் மனநலன் சார்ந்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவது மிகமிக அவசரமானதாகவும், அவசியமானதாகவும் ஆகிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டே ஆண்டுதோறும் அக்டோபர் 10-ம் தேதி சர்வதேச மனநல நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, Mental Health for all- Greater Investment and Access என்ற கருத்தாக்கத்துடன் அனுசரிக்கப்பட்டது.
தமிழக நிலவரம் என்ன?
மனநல சிகிச்சையைப் பொறுத்தவரையில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது. மனநல சிகிச்சையில், மனநோயாளிகளுக்கான வசதிகளில், சமூக பேதங்களை உடைப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருக்கிறது. No health without mental health, மனநலம் இல்லாவிட்டால் உடல் நலம் இல்லை என்பதை தமிழக மக்கள் உணர்ந்து கொண்டிருக்கின்றனர்.
இங்கே மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெறுகிறேன் என்பதை வெளியே சொல்வதில் மக்கள் மத்தியில் பெரிய அளவில் தயக்கம் இல்லை. மனநோயாளிகள் மீதான சமூக பேதமும் சுட்டிக்காட்டும் அளவுக்கு மாறிவருகிறது என்கிறார் மதுரையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சி.ராமசுப்ரமணியன்.
அவருடனான பேட்டியிலிருந்து..
"ஒரு மனநோயாளியை நாம் குணப்படுத்தி அவரைப் பழைய நிலைக்கு மீட்கத் தவறினால் குடும்பத்திற்கு பொருளாதாரப் பங்களிப்பைக் கொடுத்துக் கொண்டிருந்த நபர், பொருளாதாரச் சுமையாக மாறுகிறார். இதேபோல் நிறையப் பேர் பாதிக்கப்படும்போது நாட்டின் தனிநபர் வருமானக் குறியீடும் பாதிக்கப்படும். அதனால் தான் மதுரையில் எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை மூலம் நாங்கள் மனநோய் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். விழிப்புணர்வுக்கு அடுத்தகட்டமாக சிகிச்சை வசதியையும் ஏற்படுத்தி வருகிறோம். அதுவும் வசதி இல்லாதவர்களும் மனநல சிகிச்சையைப் பெற வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசின் பங்களிப்போடு சிறப்பான முறையில் சிகிச்சையை உறுதி செய்கிறோம்.
நகரங்களில் இருக்கும் மக்கள் விழிப்புணர்வு பெற்றிருந்தாலும் கிராமப்புறங்களில் மனநோய்கள் பற்றி தயக்கம் நிலவுவதால், கிராமிய மனநலத் திட்டத்தைச் செயல்படுத்துகிறோம். மதுரை நத்தம் முதல் சிவகாசி பகுதி வரையிலான கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இப்போதெல்லாம், பள்ளி, கல்லூரி பருவத்திலேயே மன அழுத்தம் ஏற்படுகிறது. தேர்வு பயம், இளம் பருவத்தில் ஏற்படும் எதிர்பாலின ஈர்ப்பு, போதைப் பழக்கம் என பிரச்சினைகள் நிறைய இருக்கின்றன. இளம் பருவத்திலேயே மனப்பக்குவத்தை ஏற்படுத்தினால் வளமான இளைய சமூகத்தை உருவாக்கலாம். அதனால், மதுரை மாநகராட்சியுடன் இணைந்து ஹெச்சிஎல் நிறுவனத்தின் பங்களிப்புடன் ஹேப்பி ஸ்கூலிங் (Happy Schooling) என்ற திட்டத்தைச் செயல்படுத்துகிறோம். மாநகராட்சிப் பள்ளிகளில் இத்திட்டம் அமலில் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இளம் பிராயத்தில் போதைக்கு அடிமையாவது, பாலின ஈர்ப்பால் பிரச்சினைகளில் சிக்குவது போன்ற சம்பவங்கள் மதுரையில் குறைந்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கரோனாவுக்குப் பின், மக்கள் மத்தியில் கரோனா அச்சத்தால் அழுத்தம், பொருளாதாரப் பாதிப்பால் மன அழுத்தம் என நெருக்கடிகள் அதிகமாகியிருப்பதை ஒரு மருத்துவராக நான் உணர்கிறேன். ஊரடங்கு காலத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு மனநல ஆலோசகர்கள் பயிற்சியளித்து டெலிமெடிசின் முறையில் அவர்களை ஆலோசகர்களாக நியமித்திருக்கிறோம். கரோனாவுக்குப் பின் ஏற்பட்ட மன அழுத்தங்கள் தொடர்பாக மக்கள் மனம்விட்டுப் பேச இந்தத் திட்டம் உதவுகிறது. தனிநபரின் தேவையைப் பொறுத்து அவர்களுக்கான ஆலோசனையையும் தேவைப்படுவோர்க்கு மனநல மருத்துவர்களின் தொடர்பையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றனர்"
இவ்வாறு மனநல மருத்துவர் சி.ராமசுப்ரமணியன் கூறினார்.
இதற்காக கட்டணமில்லா தொடர்பு எண் இருக்கிறது. 93754 93754 என்ற எண்ணில் 24 மணி நேரமும் இலவசமாகத் தொடர்பு கொள்ளலாம். மனநோயில் இருந்து விடுபட தயக்கத்தைக் களைவதே முதற்படி. அதற்காகவே இந்தக் கட்டணமில்லா தொலைபேசி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மனதைப் பாதுகாப்பது எப்படி?
உடல் சார்ந்த நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள ஏராளமான ஆலோசனைகள் எளிதில் கிடைக்கின்றன. அதுபோல் மனதை நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என மருத்துவர் ராமசுப்ரமணியத்திடம் கேட்டோம்.
"மனதில் எதையும் புதைத்து வைக்கக் கூடாது. ஓடும் தண்ணீர் தெளிவாக இருக்கும். தேங்கும் நீர் மாசுபடும். மனதும் அப்படித்தான். மனதில் பழைய நினைவுகளை, மோசமான ஞாபகங்களை அழிக்காமல் தேக்கிவைத்தால் அதுவே நோய்க்கான காரணியாக அமைந்துவிடும். உடலையும், உள்ளத்தையும் பாதுகாக்க சிலர் ஆன்மிகத்தை நாடலாம், இன்னும் சிலர் ஏதேனும் கொள்கைகளில் பிடித்தம் வைத்துக் கொள்ளலாம். மனநோய்களைக் கவனிக்காமல் விட்டால் அது பல்வேறு உள் உறுப்புகளையும் பாதிக்கும். எனவே எப்போதுமே, டெலீட் மோடுக்குத் தயாராக இருங்கள். கோபம், விரோதம், பகைமை, துக்கம், ஏக்கம் இன்னும் பிற உணர்வுகளை அவ்வப்போது டெலீட் செய்துவிடுங்கள்.
ஆங்கிலத்தில் There is a method in madness என்பார்கள். தூக்கமின்மை, உரையாடுதல் குறைவது, கோபம், சந்தேகம், மன அமைதி குறைதல், தேவையற்ற கற்பனைகள் மிகுதல் என மனநோயில் படிநிலைகள் உள்ளன. இவற்றில் ஒன்றிரண்டாவது அதீதமாகும்போதே மருத்துவரைப் பார்த்துவிடுங்கள். அதற்கும் முன்னதாக செய்யக்கூடிய நற்செயல் ஒன்றுள்ளது. அது உங்கள் மனதில் இருக்கும் உணர்வுகளை எப்போதும் யாரிடமாவது பகிர்ந்துகொள்ளுங்கள்" என்றார்.
உணர்வுகள் பலவிதம். கோபம், பொறாமை, குற்ற உணர்ச்சி, பழி சுமத்துதல் என அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், அவற்றைப் பார்த்து அஞ்சும் போது அது நம்மை ஆட்கொண்டு நோயாகிறது.
முதலில், அவை ஏற்படுவதற்கான காரணத்தை நாமே ஆராய்வோம். அப்போது அமைதியான மனநிலை கிடைக்கும். அந்த அமைதியில் உணர்வுகளை அடக்குவோம். அது இயல்பாக நடக்காவிட்டால் உதவியை உடனே நாடிவிடுவோம். மனநலம் இல்லாமல் உடல் நலமில்லை என்பதை உணர்ந்து செயல்படுவோம்.
தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
28 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago