சித்திரச்சோலை 6: ‘செஞ்சி’ சொல்லும் சேதி

By செய்திப்பிரிவு

ஓவியக்கல்லூரி லைப்ரரில உள்ள வெளிநாட்டு புத்தகங்களை புரட்டினால் 14, 16- ம் நூற்றாண்டில் -மறுமலர்ச்சி காலத்தில் போர்ட்ரெயிட் ஓவியங்களில் மன்னர்களான ரெம்ப்ரண்ட் படைப்புகள் -குரூப் பெயிண்டிங்கில் கில்லாடியான ரூபன்ஸ் ஓவியங்கள், மைக்கேல் ஏஞ்சிலோ, சிஸ்டைன் சாப்பல், பெயிண்டிங்ஸ் சிற்பங்கள், எட்கர்டெகாஸ், கிளாடி மோனே -பால் செஸான், வின்சென்ட் வேன்கோ -என பார்க்கப் பார்க்க பிரமிப்பூட்டும் ஓவியங்கள் அதில் உள்ளன.

ஒரு இயற்கைக் காட்சியை அங்கேயே உட்கார்ந்து 4 மாதம், 5 மாதம் கூட ஆயில் பெயிண்டிங் செய்திருக்கிறார்கள்.

ஒரே இடத்தில் மாதக்கணக்கில உட்கார்ந்து அவர்கள் தீட்டிய ஆயில் பெயிண்டிங்ஸ் போல நாமும் ஸ்பாட் பெயிண்டிங் செய்ய வேண்டும் என்று கல்லூரியில் சேர்ந்த போதே ஆர்வம் மிகுந்திருந்தது.

எனக்கு ஓவியக்கல்லூரியில் 4 ஆண்டு சீனியர் -பின்னாளில் கல்லூரி முதல்வரான ஓவியர் அல்ஃபான்சோ, ‘ஸ்பாட் பெயிண்டிங் வரைவது ரொம்ப சுலபம்’ என்று பிரின்சிபல் பங்களாவை ஒட்டியுள்ள ஓட்டு வீடு சின்னமரம் இணைந்த பகுதியை வண்ணத்தில் வாட்டர்கலரில் வரையச் சொல்லிக் கொடுத்தார்.

அல்ஃபான்ஸ் வழிகாட்டலில் முதல் ஸ்பாட் பெயிண்டிங்

ஆனால், அவர் என்னைப் போல, வெறி பிடித்து கோயில் கோயிலா சுற்றி ஓவியம் வரையவில்லை. முதன் முதல் ஸ்பாட் பெயிண்டிங் வரைய 24.09.1960-ல் செஞ்சிக்குப் போனேன். உடன் இரண்டு பள்ளித்தோழர்கள் வந்தனர். சென்னையிலிருந்து திண்டிவனம் சென்று வடக்காக பயணம் செய்தால் திருவண்ணாமலைக்கு முன் செஞ்சிக் கோட்டை வருகிறது. சென்னையிலிருந்து 160 கிலோமீட்டர் தூரம்.

இந்த கோட்டை கி.பி.ஒண்ணாம் நூற்றாண்டில் கோனார் வம்சத்தைச் சேர்ந்த ஆனந்த கோன் மூலம் துவக்கத்தில் வடிவமைக்கப்பட்டது. அடுத்து சோழர்கள் காலத்தில் 13-ம் நூற்றாண்டில் கொஞ்சம் விரிவாக்கப்பட்டது. விஜயநகர சாம்ராஜ்யம் காலத்தில் முழுமை பெற்றது.

காலத்தால் அழிக்க முடியாத தமிழ்நாட்டு நினைவுச் சின்னங்களில் இதுவும் ஒன்று.

மராட்டிய மன்னன் சிவாஜி பார்த்து பிரமித்த கோட்டை. சரித்திர கால கிரேக்க நாட்டு கோட்டை டிராய் - இப்போது துருக்கியில் அது உள்ளது. இந்த செஞ்சிக் கோட்டை கீழை நாட்டு ட்ராய் என்று ஆங்கிலேயர்களால் பெயர் சூட்டப்பட்டது.

செஞ்சி ராஜகிரி -படம்

மராட்டிய சிவாஜி, பீஜபூர் சுல்தான், மொகலாயர்கள், நவாப், பிரெஞ்சு, பிரிட்டீஷ் - என பல ஆட்சியாளர்கள் கீழ் இருந்தாலும் தேசிங்குராஜன் கோட்டை என்றே மக்களால் இது நினைவு கூரப்படுகிறது.;

ஆற்காடு நவாப்புடன் போரிட்டு தேசிங்குராஜன் மாண்டபோது நவாப் கைக்குப் போனது இந்தக் கோட்டை.; இங்கு மூன்று குன்றுகள் உள்ளன. கிருஷ்ணகிரி-ராஜகிரி, சந்திராயன் துர்க்கம்- என்று அவற்றிற்கு பெயர். கோட்டை மதிலின் நீளம் 13 கிலோமீட்டர்.

7 அடுக்கு கல்யாண மண்டபம், சிறைக்கூடம், செஞ்சியம்மன் கோயில் -தடாகம் சுற்றுலா பயணிகளை கவரும்.

சென்னை- திண்டிவனம் பஸ் பிடித்து அதிகாலை புறப்பட்டுப் போய் அங்கு திருவண்ணாமலை பஸ்ஸில் ஏறி செஞ்சியில் இறங்கினோம்.

ஒரே வெண்புழுதி பறக்கும் கிராமம் - பஸ் ஸ்டேண்டை ஒட்டி அங்கொன்றும், இங்கொன்றுமாக சிறு, சிறு கடைகள். கிழிந்த சாக்குகளை விரித்துப் போட்டு, தலைக்கு மேலே ஒப்புக்கு ஒரு பந்தல் -மூங்கில் தட்டியில் பெஞ்ச் - நாலுகால் மேஜையில் ஒரு கால் ஒரு பக்கம் ஆடிக் கொண்டிருந்தது. இட்லி 6 பைசா, வடை 6 பைசா. பொதுவாக மெதுவடையில் நடுப்பக்கம் சின்ன ஓட்டை இருக்கும். இந்த வடையில் வளையல் மாதிரி நடுவில் பெரிய துவாரம் ஓரத்தில் வளையல் போல கொஞ்சம் மாவில் வடை. ‘என்னப்பா வளையல் வடையா?’ என்று கேட்டேன். ‘6 பைசாவுக்கு வடைன்னா இவ்வளவுதான்!’ - என்றார் கடைக்காரர். தண்ணீர் ரொம்பவும் கனமாக இருந்தது - அதாவது எவ்வளவு குடித்தாலும் தாகம் தீராது.

ராஜகிரி கோட்டை வாயில்

முதலில் ராஜகிரிமலைக்கு பயணமானோம். நிரந்தரமான, வசதியான படிக்கட்டுகள் கிடையாது. மலைப் பிரதேசத்தில் கால் வைக்கப்போதுமான அளவு ஆங்காங்கே படி போல சீவி விட்டிருப்பார்கள். கைத்தடி ஊன்றாமல் மேலே செல்வது கடினம். ஒரு வழியாக, 8.30-க்கு புறப்பட்டு 11.30-க்கு ராஜகிரி உச்சியை அடைந்தோம். மேலே கோட்டைக்கு செல்வதற்கு மரப்பாலம் ஒன்று பொருத்தியிருந்தார்கள். அதை வாட்டர் கலரில் 2 கோணங்களில் வரைந்தோம்.

மறுநாள் தூரத்திலிருந்து ராஜகிரி மலையின் முழு தோற்றத்தை பென்சில் ஸ்கெட் 2 கோணங்களில் செய்தோம். ஊரில் தங்குவதற்கு சிறிய ஓட்டல் வசதி கூடகிடையாது. சாப்பாடும் முறையாக வழங்கும் ஓட்டல் கிடையாது. போண்டா, பஜ்ஜி ரகம்தான்.

கோட்டை வாயில் மறுகோணம்

அன்றிரவு வேறு எங்கும் இடம் கிடைக்காமல் ஃபோர்மேன் (FORE MAN) - கோட்டைகளுக்கு காவல் இருக்கும் காவலாளி குடிசையில் தங்கினோம்.

மறுநாள் காலையில் ஒரு அதிர்ச்சியான செய்தியை காவலாளி சொன்னார். சுற்றுலா பயணிகளில் ஒருவரை கருநாகம் கடித்து பக்கத்தில் மருத்துவமனை ஏதும் இல்லாததால் திருவண்ணாமலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து விட்டார் என்று.

நாங்கள் அங்கு போக மாட்டோம். இன்று ராணி மலைக்குப் போகிறோம் என்று தர்பார் ஹாலை மாறுபட்ட கோணத்தில் ஸ்கெட்ச் செய்தோம்.

மொட்டை வெயில், சுட்டுப் பொசுக்குகிறது. தாகமெடுத்தால் இந்த ஊர்த் தண்ணீர் எவ்வளவு குடித்தாலும் தாகம் அடங்குவதில்லை. பக்கத்து வீட்டு குடித்தனக்காரர் - இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காஷியராக பணிபுரிந்த பெர்னாட் ரோச்சிடம் ஃப்ளாஸ்க் கேட்டு வாங்கி வந்திருந்தோம். இளநீர் வாங்கி அதில் ஊற்றி வைத்து தாகசாந்தி லேசாக செய்து கொண்டோம்.

ராஜகிரி வண்ணத்தில்

ராணிமலை படிகளில் இறங்கி வந்தபோது, என் நண்பர் தோளிலிருந்த பிளாஸ்க், வழுக்கி கீழே விழுந்து உள்ளே சல,சல என்று சத்தம் கேட்டது. ‘தர்மாஸ்டேட்’ என்ற உள்பகுதி நொறுங்கி அஸ்கா சர்க்கரை போல் ஆகி விட்டது. அதை வெளியே கொட்டி விட்டு, காலி ஃபிளாஸ்கை எடுத்துப் போனோம்.

காசு வாங்காமல் தன்னுடைய குடிசையில் தங்க வைத்த காவலாளி மனதை நினைத்துப் பார்த்தேன். ராணுவத்தில் எல்லையை காக்க போராடிய மாவீரன், ஓய்வு பெற்றதும் வீடுகளில் செக்யூரிட்டி வேலையில் சேரும் அவலத்தைப் போல, இந்த மனிதர் செஞ்சிக் கோட்டை காவலாளியாக வேலை பார்த்தார்.

பொட்டல் வெளியில் புல்தரை மீது 3 கம்புகளை நட்டு அதன் மேல் பகுதிகளை இணைக்க ஒரு கம்பு கட்டி இருபுறமும் தாழ்வாக காய்ந்து போன தென்னை ஓலையில் கூரை போட்டு, அடியில் சுவர் எல்லாம் கிடையாது; மறைப்பு தட்டி சுற்றிலும் வைத்து அதனுள் படுத்துக் கொள்வார். அந்த தற்காலிக குடிலுக்குள் படம் வரையப்போன எங்களுக்கும் அடைக்கலம் கொடுத்தார்.

தெருக்கடையில் கிடைத்ததை தின்று விட்டு இருட்டியதும் மின் விளக்கு இல்லாத அந்த கும்மிருட்டில், தடவிக் கொண்டே குடிசையை அடைந்தோம்.

உள்ளே ஒரு புறத்தில் காவலாளி, மறுபுறத்தில் நாங்கள் மூன்று பேர் படுத்துக் கொண்டோம். இரவு அசந்து தூங்கும் போது தேவதைகள் வந்து கட்டி அணைத்து கனவில் முத்தம் கொடுத்தனர். சிலிர்ப்பாக இருந்தது. மீண்டும், மீண்டும் முத்தம். இன்ப அதிர்ச்சியில் விழிப்பு வந்து விட்டது. பார்த்தால் பச்சை வண்ணத்தில் பெரிய தவளை, காடா வெளிச்சத்தில் என் கன்னத்தை நாக்கால் தடவிக் கொண்டிருந்தது. இந்த காதலி கொடுத்த முத்தம்தான் அது!

ராணி மலை உச்சியில் ஹால்

அவ்வளவு கஷ்டப்பட்டு வரைந்த ஓவியத்திற்கு போக வர 350 கிலோமீட்டருக்கும் அதிகமாக பயணம் செய்திருக்கிறேன். தங்கியது சாப்பாடு, பஸ் கட்டணம் எல்லாமுக்குமா ரூ. 20 செலவாயிற்று. இந்த ஓவியத்தின் கீழ் ‘செஞ்சி 26-9-1960’ என்று குறிப்பிட்டிருந்தேன். கண்காட்சியில் அந்த ஓவியத்தைப் பார்த்த நண்பர் இன்ப அதிர்ச்சியாக ஒரு செய்தி சொன்னார்:

‘'அன்னிக்குத்தான் அண்ணா நான் பிறந்தேன்'’

அந்த நண்பர் 'ராம்ராஜ்’ காட்டன் நாகராஜ். ஆம், ஒவ்வொரு ஓவியத்திற்குள்ளும் ஒவ்வொருவருக்கும் சொல்ல ஏதேனும் செய்தி இருக்கத்தான் செய்கிறது.

தரிசிப்போம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்