சித்திரச்சோலை 2: ‘சிவாஜி படுத்த காடாத் துணி’

By செய்திப்பிரிவு

மோகன் ஆர்ட்ஸில் சிவாஜி என்னைச் சேர்த்து விடக்காரணம் ‘பராசக்தி’ படம் ஆரம்பித்த காலத்தில் அவங்களுக்குள்ளே ஏற்பட்ட நட்பு.

பெருமாள் முதலியார் வேலூரில் சிவாஜியை ஒரு நாடகத்தில் பார்த்து இந்தப் பையனை ஹீரோவா போட்டு ஒரு படம் எடுக்கணும்னு முடிவு பண்ணிட்டாரு.

ஏவிஎம் செட்டியாரோடு கூட்டாக இந்தப் படத்தை உருவாக்கலாம்னு நினைச்சாரு. ஆரம்பக் கட்டத்தில சிவாஜி ரொம்பவும் ஒல்லியா இருந்தாரு. தாழ்வு மனப்பான்மையோட இருந்தாரு. அதனால சிவாஜி நடித்த சில சீன்களைப் பார்த்த செட்டியார், ‘பையன் ரொம்ப வீக்கா இருக்கான். பயந்து, பயந்து நடிக்கறான். கே.ஆர். ராமசாமியை போட்டு இந்தப் படத்தை எடுத்தா நல்லா வியாபாரம் ஆகும்னு பெருமாள் முதலியார்கிட்ட சொன்னார். ஆனா, அவரு பிடிவாதமா சிவாஜிதான் நடிக்கணும்னு சொல்லி, மூணு மாசம் ஷூட்டிங்கை நிறுத்தி, நல்லா சாப்பிட வச்சு, உடற்பயிற்சி செய்ய வச்சு தயார் பண்ணி கோர்ட் சீனை ஷூட் பண்ணினாங்க.

அதைப் பார்த்த ஏவிஎம், ‘நம்பவே முடியலேப்பா. அந்தப் பையனா இவன்? பிரமாதமா பண்ணியிருக்கான்’னு ஏற்கெனவே எடுத்த 6000 அடி 8000 அடி படத்தை தூக்கிப் போட்டுட்டு, அந்த காட்சிகளை மறுபடியும் எடுத்து படத்தில சேர்த்தாங்க.

இப்படி நிறைய சோதனைகளை சிவாஜி முதல் படத்தில் தாண்டித்தான் வெற்றி பெற்றாரு.

நாடகக் கம்பெனியிலிருந்து சினிமாவுக்கு வந்தப்போ, கார் வசதி எல்லாம் சிவாஜிக்குக் கிடையாது. மோகன் ஆர்ட்ஸ் முதலாளி தன்னோட கார்லதான் தினம் ஏவிஎம் ஸ்டுடியோவுல சிவாஜியை இறக்கி விடுவாரு.

மோகன்-சிவாஜி-முத்துமாணிக்கம்

பிரபாத் - பிராட்வேன்னு, சைனா பஜார்லருந்து வடக்கே போற பிராட்வே சாலையில 2 தியேட்டர் இருந்துச்சு. வெள்ளைக்காரன் காலத்து தியேட்டர். அந்த 2 தியேட்டருக்கும் மோகனோட அப்பா கண்ணபிரான் முதலியார்தான் ஜெனரல் மேனேஜர். அங்கே அவர் வச்சதுதான் சட்டம்.

வசதியான அவர் தன்னோட மகன் மோகனுக்கு கார் வாங்கி குடுத்திருக்காரு. பாரத் ஸ்டுடியோ நமச்சிவாயம்கிட்ட பேனர் ஓவியம் வரையக் கத்துகிட்டவர் மோகன். தன்னோடு தேர்ந்த ஓவியர்களை கூட வச்சு, உள்ளூர் வெளியூர் சினிமா தியேட்டர்களுக்கு டெகரேஷன் பண்ற தொழிலை செஞ்சிட்டிருந்தாரு.

வெலிங்டன் தியேட்டருக்கு அடுத்த காம்பவுண்ட்ல, பேனர் கம்பெனி இருந்துச்சு. நான் சேர்ந்தப்பவும் அதே இடம்தான். நான் வேலைக்குச் சேர்ந்தப்போ ஓவியர் பிரம்மம் -நாகர்கோவில்காரர்- மெயினா எல்லாப் படமும் வரைவாரு. வஜ்ரவேலு, வேலாயுதம் இரண்டாம் நிலை ஓவியர்கள். ராமச்சந்திரன், தேவராஜ், தட்சிணாமூர்த்தி உதவியாளர்கள். பெயிண்ட்டை ‘மிக்ஸ்’ பண்ணி குடுக்கறது, பிரஷ்களைக் கழுவி வைக்கறது, பேனர்ல நடிகர், நடிகைகள் உருவம் வரைஞ்சதுக்கப்புறம் ‘பேக் ரவுண்ட்’ (BACK GROUND) வண்ணம் பூசறது -இதெல்லாம் செய்வாங்க.

முதன்முதலாக நான் வரைந்த வண்ண ஓவியம்

தியேட்டர் அமைப்பை எங்கிட்ட சொல்லி -அதில வைக்கப்போற பேனர், கட்-அவுட்ல, ஹீரோ, ஹீரோயின், காமெடியன் முகம் எந்த அளவு இருக்கணும்னு என்னை ‘ஸ்கெட்ச்’ போடச் சொல்லுவாங்க. ‘ப்ளூ பிரிண்ட்’ மாதிரி, பேனர் வச்சப்புறம் தியேட்டர் தோற்றம் எப்படி இருக்கும்னு வரைஞ்சு தர்றது என்னோட வேலை.

பெயிண்ட் டப்பாக்கள், பிரேம்கள், காடாத்துணியெல்லாம் ஸ்டாக் வச்சிருக்கிற ரூமுக்குள்ளே வேலாயுதம் ஒரு நாள் என்னைக் கூட்டிட்டுப் போனாரு. காடாத் துணி 30 அடி நீளம் குவியலா கிடந்துச்சு. இந்த மாதிரி காடா துணிமேல சிவாஜி ஷூட்டிங் முடிஞ்சு படுத்திட்டு, ‘டேய், வேலாயுதம்! புகாரி ஓட்டல்ல போய் 4 சம்சா, ஒரு டீ வாங்கிட்டு வாடா!’ன்னு என்னை அனுப்புவாரு. நான்தான் போய் வாங்கியாந்து குடுப்பேன்னாரு. அந்தக் காட்சியை கற்பனை செஞ்சு பார்த்தேன்.

வேலாயுதம் போனதுக்கப்புறம் அந்த காடாத் துணி குவியல் மேல நான் படுத்திட்டு, ‘நாமும் சிவாஜி மாதிரி ஒரு நாள் நடிகரா வந்திருவோமா!’அப்படின்னு ஒரு செகண்ட் நெனச்சுட்டு ‘சீச்சீ- அல்பம், அல்பம்- போயி வேலையப் பாருடா’ன்னு கன்னத்தில போட்டுட்டு எழுந்திட்டேன்.

மோகன் ஆர்ட்ஸில் விளம்பரப் படம்

ஆரம்பத்தில் ஒரு மாதம் -ராயப்பேட்டை வடக்கு கோபாலபுரம் முதல் தெரு 4-ம் நம்பர் வீட்டு மாடியில நானும் மாமா மகன் ரத்தினமும் தங்கியிருந்தோம். ரத்னம் புதுப்பேட்டை ஹாரீஸ் ரோட்ல இருந்த ஜெயந்தி டுடோரியல்ல சேர்ந்து படிச்சாரு.

எங்க வீட்டுக்குக் கீழே உள்ள அறைகளில் நடிகர் ஓ.ஏ.கே.தேவர்- நடிகர், பாடலாசிரியர், கே.டி. சந்தானம் தங்கியிருந்தாங்க.

கோயமுத்தூர்ல இருந்து வந்திருக்கிற பசங்கன்னு எங்ககிட்ட அன்பா பழகினாங்க.

1967-ல 'கண்கண்ட தெய்வம்'னு கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தயாரிக்க, அதில ஓ.ஏ.கே தேவர் தம்பியா நடிப்பேன்னு நினைச்சு கூட பார்த்ததில்லை.

அதே மாதிரி ஏபிஎன் 1971-ல ‘கண்காட்சி’ன்னு ஒரு படம் எடுப்பாரு, அதில ரதி மன்மதன் வேஷத்தில் நாம நடிப்போம். இந்தp பெரியவர் கே.டி.சந்தானம் ‘அனங்கன் அங்கஜன், அன்பன், வசந்தன், மன்மதன் என்றும் வணங்கும் என் உயிர் மன்னவா’ன்னு எனக்குப் பாட்டு எழுதுவாருன்னு கனவு கூட கண்டதில்லை.

காலையில எழுந்து குளிச்சி தயாராகி 9 மணிக்குள்ளே மோகன் ஆர்ட்ஸுக்குள்ள இருக்கணும்.

ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிர்த்தாப்பல இடது பக்கம் ‘கேஃப் அமீன்’னு ஒரு ஓட்டல் இருந்திச்சு. அங்கே போய் பொங்கல், வடை கேட்டேன்.

‘பொங்கல் ஆயிருச்சு’ன்னாரு சர்வர். ‘ஆனா கொண்டு வாங்க!’ன்னேன்.

‘ஐயோ ஆயிப் போயிருச்சு’

‘ஓ, தீர்ந்து போயிட்டுதா?’

‘சரி, வேற என்ன இருக்கு!’

‘இடியாப்பம், பாயா’ -புரியவில்லை. ‘கொண்டு வா!’ன்னேன்.

நூல் நூலா ஒண்ணு (இடியாப்பம்) எலும்பைச் சுத்தி கொழுப்பு கொழ கொழன்னு -தண்ணியாட்டமா (பாயா) குழம்ப கொண்டாந்து குடுத்தான். பாக்கவே பிடிக்கலே. அப்படியே வச்சிட்டு காசை குடுத்திட்டு வந்திட்டேன்.

மோகன் ஆர்ட்ஸுக்கு ‘பார்ட் டைம்’ வேலை பார்க்க ஓவியர் சுந்தமூர்த்தி- எம்.எல்.பதின்னு ரெண்டு பேர் வந்து பேனர் வரைவாங்க. சுந்தரமூர்த்தி பிரஷ்ஷை கையாள்ற விதம் வண்ணக்கலவை கே. மாதவன் சீடர்னு ஞாபகப்படுத்தும்.

‘நயா தெளர்’னு இந்தில வந்த படத்தை ‘பாட்டாளியின் சபதம்’னு ‘டப்’ பண்ணி வெளியிட்டாங்க. அதில திலீப்குமார் முகத்துக்கு புது ‘டோன்’ல சுந்தரம் வண்ணம் தீட்டியது இன்னும் கண்ணுக்குள்ளே நிக்குது.

மோகன் ஆர்ட்ஸ்ல 10 மாதம் இருந்த காலகட்டத்தில ‘டென் கம்மாண்ட்மெண்ட்ஸ்’ (பத்துக் கட்டளைகள்) படத்துக்கு ஓடியன் தியேட்டருக்கு பேனர் வச்சு தியேட்டரையே மோகன் ஆர்ட்ஸ் மறைச்சிட்டுது.

இளவரசன், மேய்ப்பன்,மோசஸ் (பத்துக் கட்டளைகள்)

படத்தில வர்ற காட்சியை வண்ணப் புகைப்படமா எடுத்துக் கொடுத்திருந்தாங்க. கடல் பொங்கி அலைகள் விலகி 20 அடி உயரத்துக்கு மேல எழும்பி வழி விட அதுக்குள்ள மோசஸ் கூட, அந்த எகிப்து மக்கள், கூட்டம் கூட்டமா, குழந்தை குட்டிகளோட, ஆடு-மாடுகளோட நடந்து போற மாதிரி ஒரு காட்சி படத்தில வருது.

அதை அப்படியே 40 அடி நீளத்துக்கு வரைஞ்சு வச்சிருந்தாங்க. அந்த ரோட்ல, தியேட்டர் எதிர்ல கார், பஸ்கள் ஜாம் ஆகிற அளவுக்கு பேனரை வேடிக்கை பார்க்க திருவிழா கூட்டம் மாதிரி ஜனங்க கூடினாங்க.

எங்க கம்பெனி பிரமாதமா தியேட்டர் டெக்கரேஷன் பண்ணினதுக்கு, காம்பிளிமெண்டா 50 டிக்கெட் மேட்னி காட்சிக்கு கொடுத்திருந்தாங்க. அதுல எனக்கு ஒண்ணு கொடுத்தாங்க.

மத்தியான சாப்பாடு முடிஞ்சு புதுப்பேட்டை ரூமுக்குப் போய் டிரஸ் மாத்திட்டு வர்றப்ப எப்படியோ என் டிக்கெட் தொலைஞ்சு போச்சு. நான் படு உஷாரான ஆளு. ஏதோ கெட்ட நேரம். கீதா கேப்லருந்து புதுப்பேட்டை வரைக்கும் கண்களால ரோட்டை ‘ஸ்கேன்’ பண்ணிட்டு போறேன். டிக்கெட் கிடைக்கவே இல்லை. தியேட்டர் வாசல்ல 2 மணிக்கே மூச்சு முட்டற மாதிரி கூட்டம். எங்காளுக எல்லாம் உள்ளே போயிட்டாங்க. எனக்கு அழுகையா வந்துச்சு. கவுண்டர்ல போயி டிக்கட் வாங்க காசு இல்லே. பாதி தியேட்டர் அட்வான்ஸ் புக்கிங்ல ‘புல்’ ஆயிருச்சு.

மேனேஜர் வெளிய வந்தாரு. ‘சார்! மோகன் ஆர்ட்ஸில வேலை பாக்கறவன். இந்த டெக்கரேஷன் நாங்கதான் பண்ணினோம். எங்க யூனிட் ஆட்கள் உள்ளே போயிட்டாங்க. என் டிக்கெட் தொலைஞ்சு போச்சு’ன்னேன்.

‘‘சீட் நம்பர் தெரியுமா?’’

‘‘பாக்காம உட்டுட்டேன்!’’

‘‘இப்ப என்னை என்ன பண்ணச் சொல்றே?’’

‘‘மோகன் ஆர்ட்ஸ் ஆளுங்கல்லாம் உட்கார்ந்திருப்பாங்க. அங்க சீட் காலியா இருக்கும்!’’

‘‘அறிவிருக்கா? மோகன் ஆர்ட்ஸ்ன்னு போர்டு மாட்டிட்டா அவங்க இருப்பாங்க. எப்படி கண்டுபிடிக்கிறது?’’

‘‘எனக்குத் தெரியும் சார்’’

ஒரு உதவியாளரைக் கூப்பிட்டு, ‘‘இந்தப் பையனை உள்ளே கூட்டிட்டுப் போ. அவங்க ஆளுக உட்கார்ந்திருக்கற எடத்தில சீட் காலியாயிருந்தா உட்கார வை. இல்லாட்டி கழுத்தைப் புடிச்சு வெளிய தள்ளிவிடு’’ன்னு சொல்லி, என்னை அந்த அசிஸ்டன்ட்டோட உள்ளே அனுப்பினாரு.

நல்லவேளை. எங்காளுகளுக்கு நடுவுல ஒரு ‘சீட்’ காலியா இருந்திச்சு. உட்கார வச்சிட்டுப் போயிட்டாரு.

அங்கே போயி என்ன பிரயோஜனம்? கதவைத் திறந்திட்டு எங்க பக்கம் யார் வந்தாலும், ‘தெருவுல உட்டுட்டு வந்த டிக்கட்டை எடுத்திட்டு இந்தாளு வர்றானோ- அவன் கையில டிக்கட் இருந்தா நாம வெளியே போக வேண்டி வருமோ?’ன்னு -அப்பப்ப கதவையே பாத்து முழுசா, நிம்மதியா அந்தப் படத்தை அன்னிக்க பாக்கவே முடியலே.

டாக்டர் அப்துல்கலாம் ‘கனவு காணுங்கள் இன்னிக்கு இல்லாட்டி என்னிக்காவது ஒரு நாள் அது நிறைவேறும்!’னு சொன்னாரு.

மோகன் ஆர்ட்ஸ் காடாத் துணி மேல படுத்திட்டு ‘சிவாஜி மாதிரி நானும் நடிகன் ஆயிடுவேனோ’ன்னு நினைச்சுப் பார்த்தேன்ல. அது மெய்யாலுமே நிறைவேறிடுச்சு.

1958-ல கண்ட கனவு, 11 வருஷம் கழிச்சு 1969- மே மாதம் 1-ம் தேதியை மறக்க முடியாம செஞ்சுடுச்சு.

ஜெயகாந்தன் எழுதின ‘கைவிலங்கு’ குறுநாவலை ‘காவல் தெய்வம்’-ங்கற பேர்ல நடிகர் எஸ்.வி. சுப்பையா அண்ணன் படமா முதலில் தயாரிச்சாரு. கே.விஜயன் முதல் படமா அதை டைரக்ட் பண்ணினாரு. சிவாஜி சாமுண்டி கிராமணின்னு கள் இறக்கற தொழிலாளியா 3 நாள் கெஸ்ட் ரோல் பண்ணிக் குடுத்தாரு. நானும் லட்சுமியும் ஹீரோ, ஹீரோயின்.

காவல் தெய்வம் படத்தில் லட்சுமியுடன்...

எல்.ஐ.சி கட்டிடத்துக்குப் பக்கத்தில ‘குளோப்’ தியேட்டர்ல படம் (பின்னாளில் அலங்கார்) ரிலீஸ் ஆச்சு.

எஸ்.வி.சுப்பையா, செளகாருடன்

அப்பரண்டீசா’ நான் வேலை பாத்த கம்பெனியில நான் பார்த்து பிரம்மிச்ச பேனர் ஓவியர்கள் பிரம்மம், வஜ்ஜிரவேலு, வேலாயுதம் போன்றோர் என் உருவத்தையும் பேனர்ல வரைஞ்சு தியேட்டர்ல அலங்காரம் பண்ணியிருந்ததைப் பார்த்தேன். என் படத்தை வரையும்போது அந்த ஓவியக் கலைஞர்கள் மனசில எப்படியான நினைவுகள் ஓடியிருக்கும்? நினைச்ச மாத்திரத்தில் கண்ணில தண்ணி கட்டிகிச்சு.

---

தரிசிப்போம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 hours ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்