‘சித்திரச் சோலை’க்குள் நுழையும் முன்...
பள்ளியில் சேர்க்கும்போதே, ‘டாக்டர், இன்ஜினீயர், கலெக்டர், வக்கீல், நீதிபதி, ஸ்ரீஹரிகோட்டா விஞ்ஞானி!’ எனக் குழந்தைகளுக்குள் கற்பிதங்களைச் சொருகி வந்த பெற்றோர்கள் இப்பொழுதெல்லாம் ரொம்ப மேம்பட்டு, ‘இந்தப் படிப்பு படிச்சா கேம்பஸ்ல வேலை நிச்சயம்தானே? கைநிறைய சம்பளம் கிடைச்சிரும்ல? வீடு முழுக்க பணமா கொட்டும்ல?’ என ஆசைகளைத் திணிக்காமல் இருந்தால் ஆச்சர்யம்தான்.
இன்றைக்கு 62 வருடங்கள் முன்பு - கணவனை இழந்த -கல்வியறிவே இல்லாத - காட்டு வேலை செய்து வந்த - குக்கிராமத்துத் தாய் -கடனை உடனை வாங்கி- தன் ஒரே மகனை, ‘பட்டணம் போயி, பொம்மைக் காலேஜ்ல படிக்கப் போறானாமா! அவனுக்குப் புடிச்ச படிப்பு; படிச்சிட்டு நல்லாயிருந்தாப் போதும்!’ என்று சொல்லி சென்னைக்கு ஓவியக் கல்வி பயில அனுப்பியிருக்கிறார் என்றால், அந்தக் கொடுப்பினை நம் பன்முகக்கலைஞர் சிவகுமாருக்கு மட்டுமே வாய்த்திருக்க வேண்டும். அந்தத் தாயை நாம் முதலில் வணங்க வேண்டும்.
‘ஓவியம்’ என்பது வெறும் படிப்பு அல்ல; அவருக்குள் ஜீவிக்கும் அந்தராத்மா!’ என்பது நடிகர் சிவகுமாருடன் நெருங்கிப் பழகியவர்களுக்குத் தெரியும். கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என மும்-முதல்வரின் ‘சினிமா’ எனும் ‘ராஜபாட்டை’யில் மட்டுமல்லாது 192 திரைப்படங்கள், 86 முன்னணிக் கதாநாயகிகளுடன் நடித்திருக்கும் அவர் தன் நட்புகளைச் சந்தித்துவிட்டால் நெகிழ்ந்து போய் மணிக்கணக்கில் பேசுவது ஓவியங்கள் பற்றித்தான். அதில் பல வண்ணங்கள் விரியும். நிறைய பிரம்மாண்டங்களின் தரிசனம் கிடைக்கும். 7 ஆண்டுகள் மட்டுமே ஓவியத்துறையில் அவர் கால்பதித்து விட்டு சினிமாத்துறைக்கு வந்து விட்டாலும், ஈரேழு ஜென்மங்கள் ஓவியத்தில் இரண்டற கலந்ததைப் போல் விவரிப்பார்.
தான் பிறந்து வளர்ந்த சின்ன கிராமத்திற்குள் உள்ள வாழ்வியல் நுட்பங்கள். அம்மண் மணத்தின் சிணுங்கல்கள். அதற்குள்ளேயே நுழைந்து ஊடுருவி நுண்ணிய வெளியில் உணர்ச்சிக் குவியல்களை ‘கொங்கு தேன்’ எனும் தலைப்பில் இதுகாறும் 30 அத்தியாயங்களாக நமக்குப் பகிர்ந்தளித்து நெஞ்சம் நெகிழச் செய்த நம் பன்முகக்கலைஞர் சிவகுமார், இந்த அத்தியாயத்திலிருநது தன் ஆத்மார்த்தமான ஓவிய வெளி ‘சித்திரச் சோலை’ க்குள் பிரவேசிக்கிறார். இதுகாறும் அவரின் ‘கொங்கு தேன்’ சுவைத்த வாசகர்கள், இனி வரும் அத்தியாயங்களில் ‘சித்திரச் சோலை’யைத் தரிசியுங்கள். அதில் புதிய அனுபவங்களை மட்டுமல்ல, ஓவியக் கலைக்குள் நிரம்பித் ததும்பும் பிரம்மாண்டங்களையும் உணர்வீர்கள்.
********************************
1958 ஜூன் 12-ம் தேதி என் ஆதர்ஷ ஹீரோவை ரத்தமும் சதையுமாக நேரில் சந்தித்தேன். கிராமத்திலிருக்கும்போது பராசக்தி, மனோகரா, வணங்காமுடி, உத்தமபுத்திரன் படங்களைப் பார்த்து நாம வாழ்நாளில் ஒரு தடவை சிவாஜிய எப்படியும் பார்த்திரணும்னு மனசுக்குள்ளே சத்தியம் பண்ணிகிட்டவன் நான்.
அந்த வாய்ப்பு 16 வயசிலயே நிறைவேறும்னு கனவுல கூட நான் நினைச்சதில்லே. இன்னிக்கு நாம சிவாஜியை சந்திக்கப் போறோம்னு கண்ணுமச்சான் சொன்னதும் ஆகாயத்தில் மிதந்தேன். காலை 8 மணிக்கெல்லாம் ராயப்பேட்டை சண்முகமுதலி தெருவுல முட்டுச்சந்தில இருந்த கடைசி வீட்ல சிவாஜியை சந்திக்கப் போனோம்.
அப்பத்தான் குளிச்சிட்டு உடம்பு பூரா பவுடர் பூசிட்டு ஜட்டியோட வந்தாரு. வச்ச கண்ணு வாங்காம பார்த்தேன். இது கனவா -நனவா புரியலே. அந்த முட்டைக் கண்ணு -எங்களை ஊடுருவிப் பார்த்திச்சு. அந்த நீண்ட மூக்கு -சின்ன உதடுகள் -சிரிச்சா இடது பக்கம் தெரியற சிங்கப்பல் -உடற்பயிற்சி அதிகம் பண்ணாமலே, திரட்சியான தோள்கள் -நெஞ்சுக்குழியில 5,6 ரோமம், கூர்மையான கைவிரல்கள் -பிரம்மா, நின்னு நிதானமா படைச்ச உருவம்.
‘உத்தமபுத்திரன்’ - விக்ரமன் -பார்த்திபன் - இரண்டு உருவத்தையும் ஒண்ணா நான் வரைஞ்சிருந்த படத்தைக் குடுத்து கையெழுத்துப் போடச் சொன்னேன். அப்பத்தான் ‘அம்பிகாபதி’ படத்தில நடிச்ச நினைப்புல, நான் குடுத்த பேனாவை, எழுத்தாணி புடிக்கற மாதிரி நடுவில ரெண்டு விரலை மடிச்சுட்டு, சுண்டுவிரல், ஆள்காட்டி விரல்ல கட்டை விரல்ல புடிச்சு எழுத முயற்சி பண்ணினாரு. பேனா தகராறு பண்ணுச்சு.
‘தங்கவேல்!’ (அவரோட அண்ணன்) அப்படீன்னு குரல் கொடுத்தாரு. கட்டபொம்மன் மீசையோட, வெற்று ஒடம்பில லுங்கி கட்டிட்டு அவரு வந்தாரு. பேனா கொண்டாரச் சொல்லி, கசாமுசான்னு ஓவியத்து மேல கையெழுத்துப் போட்டுக் குடுத்தாரு.
ஓவியக்கல்லூரியில படிக்கப்போறதை சொன்னோம். அதை விட நான் ஒரு எடத்துக்கு அனுப்பறேன். மோகன் ஆர்ட்ஸ்-னு அந்த கம்பெனிக்குப் பேரு. சினிமாவுக்கு விளம்பர பேனர், கட்-அவுட் வரைஞ்சு தர்ற கம்பெனி. நீ, எம் படங்களை பாத்து இந்த ஓவியத்தை வரைஞ்சிருக்கறே. அவங்க 60 அடி உயரத்தில ‘வணங்காமுடி’-ல கையில விலங்கோட நான் நிக்கற உருவத்தை கட்-அவுட்டா வரைஞ்சு சித்ரா தியேட்டர்ல வச்சு மிரட்டினவங்க. பல வண்ணங்களைப் பயன்படுத்தி -கலர் போட்டோவுல நம்ம பாக்கறதை விட பச்சை, மஞ்சள், ரோஸ், ப்ரெளன்-னு சேர்த்து அருமையா வரைவாங்க. அங்க போய் சேர்ந்துக்க. நான் சொல்றேன்னாரு.
1958-ஜூன் 15-ந்தேதி மோகன் ஆர்ட்ஸ்ல அப்பரண்டீசா (பயிற்சி ஓவியனா) சேர்ந்தேன்.
கோயமுத்தூர்ல எப்பவாச்சும் சினிமா பாக்க சிநேகிதர்களோட சைக்கிள்ல போவேன். ராயல் தியேட்டர் வாசல்ல ‘பெண்ணின் பெருமை’ படத்தில சிவாஜியும், ஜெமினியும் நிக்கற மாதிரி 20- 25 அடிக்கு ‘கட்-அவுட்’ தியேட்டர் முன்னாடி வச்சிருப்பாங்க. சினி ஆர்ட்ஸ், என்.ஹெச்.ரோடு-ன்னு கீழே எழுதியிருக்கும். இப்ப ஜீவான்னு கோயமுத்தூர்ல இருக்கற ஓவியரோட அப்பா வேலாயுதம் அந்த பேனர்களை வரைஞ்சாருன்னு பின்னால தெரிஞ்சுகிட்டேன்.
இப்படி பிரம்மாண்டமா ஓவியம் வரையறவன்தான் பெரிய ஓவியன். அந்த மாதிரி நாமும் ஓவியம் வரையணும்னு மனசுக்குள்ள முடிவு பண்ணீட்டேன்.
கும்பிடப்போன தெய்வம் குறுக்க வந்தமாதிரி மோகன் ஆர்ட்ஸ்ல சேந்திட்டோம்னு சந்தோஷப்பட்டேன். நான் நினைச்சமாதிரி அது அவ்வளவு சுலபமான வேலை இல்லை.
காடா துணிய, 10 அடி உயரம், 20 அடி நீளத்துக்கு சதுரமா சட்டம் அடிச்சு, அதில இந்த துணிய டைட்டா இழுத்து பிரேம்ல சேர்த்து ஆணி அடிச்சிடுவாங்க. வஜ்ஜிரத்தை காய வாச்சு, ‘திக்கா’ பாயசம் மாதிரி இருக்கிற வஜ்ஜிரத்தை அந்த துணிமேல பூசி, வெயில்ல 2 நாள் காய விடுவாங்க. நல்லா காஞ்சதுக்கப்புறம் சாக்பீஸ் பவுடரை கரைச்சு -2-வது தடவை அந்த துணி மேல அடிப்பாங்க. படம் வரையறதுக்கான ‘கேன்வாஸ்’ அதுதான்.
சினிமா கொட்டாயிலே மின்சாரம் மூலமா, ‘ஆர்க்’லைட் பயன்படுத்தி அந்த வெளிச்சத்தில பிலிம்ல இருக்கிற உருவம் பூதக் கண்ணாடி வழியா திரையில பெரிசா தெரியற மாதிரி ‘லேண்ட்டர்ன்’-னு ஒரு புரொஜக்டர் தயார் பண்ணியிருக்காங்க.
சினிமா நடிகர்களோட புகைப்படங்களை கண்ணாடி ‘ஸ்லைட்’களில் ‘நெகடிவ்’வா பதிவு செஞ்சுக்குவாங்க. பூதக் கண்ணாடி இணைக்கப்பட்ட லேண்ட்டனில் இந்த ஸ்லைடை பொருத்தி உள்ளே விளக்குப் போட்டால் நெகடிவ்ல உள்ள பிம்பம் திரையில தெரியும். படம் பெரிதாக வரைய லேண்டனிலிருந்து 10 அடி, 15 அடி திரையை தூரமாக நகர்த்தி பிம்பத்தை ஃபோகஸ் செய்து பென்சிலால் கண், காது, மூக்கு, உதடு, தலைமுடி உள்ள பகுதியை திரைச்சீலையில் ‘மார்க்’ செய்து கொள்வார்கள்.
அதுக்கப்புறம் அந்த பென்சில் மார்க்குக்குள் சிவாஜி முகமோ, எம்.ஜி.ஆர் முகமோ ஓவியரின் விருப்பத்திற்கு ஏத்த மாதிரி வண்ணங்களில் தீட்டப்படும்.
மே மாத வெயில்ல ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகைக்குள்ள காற்று புகாத திறந்த வெளி ஷெட்டில், சட்டையெல்லாம் கழட்டிப் போட்டு ஒரு காடா துணி மட்டும் இடுப்புல கட்டிட்டு, உச்சந்தலையில இருந்து ஒழுகும் வியர்வையை துண்டை வச்சு தொடைச்சிட்டே 10-ம் நம்பர் பிரஷ்ஷை வச்சு அவ்வளவு பெரிய பரப்பளவுல வண்ணங்களைக் குழைச்சு அவங்க ஓவியம் தீட்டறதைப் பார்த்து பலநாள் விக்கித்துப் போயிருக்கிறேன்.
‘மைக்கேல் ஏஞ்சலோ’ங்கற உலகப் புகழ் ஓவியன் ஒரு சர்ச்சுக்குள்ள இருக்கிற ‘சீலிங்’ (மேற்பரப்பு)ல பைபிள் காட்சிகளை வரைய 40 அடி ‘கோடா’ மேலே ஏறி மாசக்கணக்கா படுத்திட்டே வரைஞ்சானாம். அந்தக் காட்சி, மோகன் ஆர்ட்ஸில் பிரம்மாங்கிற ஓவியர் வரையறப்போ நியாபகம் வந்துச்சு.
படம் ரிலீஸ் தேதி நெருங்கிட்டா முதலாளி கெடுபிடி அதிகமாகும். பல நாள் ராத்திரி 2 மணி வரைக்கும் வரைஞ்சிட்டு வீட்டுக்குப் போய் 4 மணி நேரம் உடம்பு வலி போக படுத்து புரண்டுட்டு, மீண்டும் வந்து மறுநாள் ஓவியத்தை தொடரும் கொடுமையெல்லாம் பார்த்து மிரண்டுட்டேன்.
விடியற்காலை, வேக வேகமா எல்லாம் முடிச்சு 10 அடிக்கு 20 அடியில 4 முகம் வரைஞ்சிருப்பாங்க. 10 அடிக்கு 10 அடியில 2 முகம் வரைஞ்சிருப்பாங்க. இதோட, 20 அடி கட் அவுட்ல ஹீரோ நிக்கற மாதிரி ‘பிளைவுட்ல’ வரைஞ்சு பின்னாடி சட்டம் அடிச்சு அதையும் சேர்த்து, டயர் வண்டில எல்லாம் ஏத்தி -கெயிட்டி தியேட்டர் தள்ளிட்டுப் போயி கார்ப்பெண்டர்களை வச்சு தியேட்டர்ல சாரம் அடிச்சு அதனோட சப்போர்ட்ல, பேனர், கட்அவுட்களை மாட்டிட்டு வீடு திரும்பினா, கை கால் குடைச்சல் சொல்லி மாளாது.
அந்த வலி போக நாட்டு சாராயம் குடிச்சிட்டு படுக்கையில் விழுவாங்க. கெணத்து வெட்டுக்குப் போறதுதான் கூலி வேலையில கொடுமையான வேலைன்னு நெனைச்சிட்டிருந்தேன். பிரம்மாண்டமா படம் வரையறவனுக்கு பெரும் பணம் குடுப்பாங்கன்னு நெனைச்சேன். சதுர அடி வரைய 1958-ல் வெறும் 15 பைசா கூலி. ‘குமுதம்’ பத்திரிகையில ஒரு கதைக்கு படம் போடற ஓவியன், வீட்ல செளகரியமா ஃபேனுக்கு அடியில உட்கார்ந்து படம் வரைஞ்சு கொடுத்தா 150 ரூபாய். 60 அடி ‘கட்டவுட்’ வரைய ஆயுளைக் குறைக்கும் அளவு நெத்தி வேர்வை சிந்தி, கோடா மேல ஏறி உயிரை பணயம் வச்சு -வரைஞ்சு முடிக்க 1 வாரம் ஆகலாம். அப்படி வரைய ஓவியனுக்கு ஒரு 150 ரூபாய் கிடைக்குமான்னு சொல்ல முடியாது.
இந்த பேனர் வரைற டெக்னிக்கை கண்டுபிடிச்சவர் ஓவிய மேதை கே. மாதவன். திருவனந்தபுரத்தில -கோயில் தேர்களில் சுத்திலும் இருக்கற மரச்சிற்பங்களை செதுக்கற ஆசாரிகள்னு நாம நெனைக்கிற விஸ்வகர்மா கூட்டத்தைச் சேர்ந்தவர்.
1940-களில் டி.கே.எஸ். சகோதரர்கள் நாடகத்துக்கு ‘சீன்’ படுதா வரைய ஆரம்பிச்சவர். அரண்மனை உள்பக்கம் மாதிரி சீன். நந்தவனம். நீரூற்று இருக்கிற மாதிரி ஒரு சீன். ஏழைங்க குடிசைகள் உள்ள தெரு மாதிரி ஒரு சீன். கோயில் முன்னாடி திருவிழா கூட்டம் இருக்கற மாதிரி காட்சி எல்லாம் துணியில வரைஞ்சு கொடுத்தவர்.
‘சந்திரலேகா’ படத்தை ஜெமினி வாசன் 1948-ல வெளியிட்டாரு. தமிழ்ப் படத்தை வெளியிட்ட சில மாதங்கள்ல இந்திப் படம் வெளியிட்டாரு. விளம்பரப் புலி. கல்கத்தா நகரத்துக்குள்ளே எத்தனை மின்சார கம்பங்கள் இருக்குன்னு எண்ணிப் பார்த்து சுமார் 10 ஆயிரம் மின்சாரக் கம்பங்களிலும் ‘சந்திரலேகா’ படத்தோட விளம்பரத் தட்டி மாட்டினவர்.
பம்பாய் மக்களை அதிர்ச்சியடைச் செய்ய ‘சந்திரலேகா’ பட கதாநாயகி டி.ஆர். ராஜகுமாரி முகத்தை மட்டும் 60 அடி உயரம் வரைஞ்சு ஊருக்குள்ளே சாரம் கட்டி தூக்கி நிறுத்தி பம்பாயையே திரும்பிப் பார்க்க வச்சவர். அந்த 60 அடி கட் அவுட்டை வரைஞ்சவர் இந்த கே. மாதவன்.
மே, ஜூன் மாசங்கள்ல தென்மேற்குப் பருவக்காற்று அரபிக்கடல்லருந்து வீசும் பம்பாய் ‘அக்டோபஸ்’ -மாதிரி வால் வாலா பூமி இருக்கற தீவு மாதிரி நகரம். இந்தக் காத்து வேகமா அடிச்சப்போ - 60 அடி அகலத்தில இந்த கட்டவுட் அப்படியே கீழே குப்புற விழுந்ததில் ரோட்ல போன 10, 15 கார்கள் நசுங்கிடுச்சாம். அப்ப உள்துறை அமைச்சரா இருந்த மொரார்ஜி தேசாய் இங்கே பம்பாய்க்குள்ளே இந்த மாதிரி கட் அவுட்டை வைக்கக்கூடாதுன்னு சட்டமே போட்டாராம்.
மாதவன் ஐந்தரை அடி உயரம் - 60 அடி படத்தை எப்படி வரைஞ்சாரு. அதே புரொஜக்டர் மாதிரி உள்ள லேண்டன் டெக்னிக்கில ராஜகுமாரி ஒரு கண் வரைய ஒரு நாள், அடுத்த கண் வரைய ஒரு நாள், மூக்கு வரைய ஒரு நாள், இப்படி பார்ட் பார்ட்டா வரைஞ்சு ஒண்ணு சேர்த்தா அது தூரத்திலிருந்து பார்க்கறப்போ அசல் ராஜகுமாரி முகம் மாதிரி தெரியணும்.
ஒரு நாள் அவரு நண்பர் மாதவன் சாரை தேடிப் போனாராம். வட்டமா ஒரு கோலிக்குண்டு வடிவத்தில 6 அடி சுற்றளவுல ஒரு முத்து வரைஞ்சிட்டிருந்தாராம். அந்த குண்டுக்குள்ளே நின்னிட்டிருந்தாராம். அதாவது கம்மல்-லோலாக்கு, - அந்த லோலாக்கில தொங்கற முத்துகள் -ஒரு முத்துவின் சுற்றளவுக்குள்ள மாதவன் உருவம் தெரிஞ்சுதாம்.
அப்ப, 6 அடி விட்டத்தில முத்துகள், அது பதிச்ச லோலாக்கு, அது தொங்கற கம்மல் -கம்மல் மாட்டப்பட்ட ராஜகுமாரி காது, அப்புறம் தலை- என்ன ஒரு பிரம்மாண்ட கட் அவுட். அதை வரைஞ்சவர்தான் மாதவன். பேனர் ஆர்ட் அசோசியேஷன் தலைவரா இருந்தாரு. ஓவியர் ஆர். நடராஜன் இவருக்கு மாமா மகன். அவரும் கலைமகள், மஞ்சரி, கல்கி பத்திரிகைகளுக்கு அட்டைப் படம் வண்ணத்தில வரைஞ்சு குடுப்பவர்.
ஒரு நாள் மாதவன் சார் வீட்டுக்கு - தி.நகர், வெங்கட்ராமன் தெரு -என்னைக் கூட்டிட்டுப் போய் நடராஜன் என்னை அறிமுகப்படுத்தி வச்சாரு.
திருச்சி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருப்பதின்னு கோயிலா போய் நான் வரைஞ்ச ஓவியங்களை அவர்கிட்ட கொண்டுபோய் காட்டுவேன். மனசுக்குள்ளே ஏற்படற பூரிப்பை புன்சிரிப்புல காட்டுவாரு. அப்புறம் அடுத்து எந்த ஊர் போறேன்னு கேட்பாரு. ஒரு நாள், ‘ஐயா, ஒரு சந்தோஷமான செய்தி. நான் சினிமாவுல நடிக்கப் போறேன்’னு சொன்னேன். 5 நிமிஷம் மெளனமாயிட்டாரு.
‘ஏன்யா! ஒண்ணும் சொல்ல மாட்டேங்கிறீங்க?’ ன்னேன். ‘ஒரு ஓவியன் செத்துப் போயிட்டான். அதுக்கு துக்கம் கொண்டாடிட்டிருக்கேன்’-னாரு.
‘ஐயா, நான் அதுக்குப்பறமும் வரைவேன்’’னேன், மயிரை புடுங்குவே போடா’ -அப்படின்னாரு. வருங்காலத்தில பெரிய ஓவியனா ஒருத்தன் உருவாயிட்டிருக்கான்னு சந்தோஷப்பட்டுட்டிருந்தவருக்கு நான் சொன்னது மனசில பேரிடியா இறங்கியிருக்கும்.
தரிசிப்போம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
5 hours ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago