கொங்கு தேன் 30: ‘வாடாப்பா, ஒரம்பரைக்காரா...!’

By செய்திப்பிரிவு

கிராமம்ங்கிறது அம்மா மடி மாதிரி.அதில கிடைக்கிற சொகம் சொர்க்க லோகத்தில கூட கிடையாது.

வேலி,வேலியா ஒடக்கா (ஓணான்) விரட்டி விட்டு, கோவப்பழம் சாப்பிட்டது. கொடுக்காப்புளியங்காங்கற சீனிப்புளியங்கா சாப்பிட்டது. சப்பாத்திக்கள்ளீல இருக்கற சப்பாத்திப்பழம், ‘பிங்க்’ கலர்ல இருக்கும். அதை ரெண்டு, மூணு தின்னுட்டு ‘வெளிக்கு’ (மலம்) வராம தவிச்சது. கிளுவம் பழம் சாப்பிட்டது. கோரைக்கிழங்கு சாப்பிட்டது. கருஞ்சுக்கிட்டி, செஞ்சுக்கிட்டி பழம் சாப்பிட்டது. பில்லி ஆடுனது (கில்லி-தாண்டு). சேபி குண்டாட்டம் (கோலிக்குண்டு), பச்சா கட்டி குண்டாட்டம் (சோடா மூடிகளை ரவுண்டா வச்சு கோலிக்குண்டு உருட்டி தட்டி எடுப்பது) ஆடினது, தெள்ளாட்டம், சடுகுடு விளையாடியது, கார்த்திகை தீபம் அன்னிக்கு சூந்து (சைக்கிள் டயரில் தீ பொருத்தி) ஆடுனது,

‘ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ; தாழம்பூ சித்தாடை தலைநிறைய முக்காடு, முக்காட்டை வாங்கிப் போட்டு போறாளாம் ஓலையக்கா’ன்னு பொங்கலுக்கு பொங்கல் ஆத்துமேட்டுல பாடிட்டுப் போனது. ‘கால்புடிக்கற கவுண்டம்புள்ளைக்கு மாசம் பத்து ரூபாய்’னு, ரெண்டு பேர் தோள்ள கைபோட்டு கோர்த்துகிட்ட அவங்க கையில முழங்கால் வச்சு சவாரி பண்ணினது. எருமைக் காளான் பறிச்சிட்டு வந்து, ரெண்டா மூணா கிள்ளி வாக்கணத்தில போட்டு வறுத்துத் தின்னது. கொசுத்தொளில (தூறல் மழை) கொங்காடை போட்டுட்டு ராத்திரில சோளக்காட்டுக்கு காவல் இருந்தது. சிக்கி முக்கி கல்லுல நெருப்பு வரவழைச்சு, காயி(கி)தத்துல தீப்பத்த வச்சு வேடிக்கை காமிச்சது... இதெல்லாம் இந்தப் பிறவில திரும்பவும் வாழ்ந்து பாக்கணும்னு ஆசையா இருக்கு. நடக்குமா?

இதையெல்லாம் விட்டுட்டு ‘எங்கத்தை சொன்ன மாதிரி ‘பரதேசம்’ போறோமே!’ன்னு அப்ப ஏக்கம் வரத்தான் செஞ்சுது.

பரமசிவன் கோயிலுக்கு பின்னாடி ஒரு முட்டாங்கல்லு இருந்திச்சு அதுகிட்ட போயி, ‘இனிமே நான் உங்ககிட்ட இருக்க மாட்டேன்!’னு சொன்னேன். தும்பைப் பூ செடியப் பார்த்ததும் கண்ணுல தண்ணி கட்டீடுச்சு. சாவடிக்காட்டு பூவரசம் மரத்தை பாத்தேன். தொண்டைக்குழில குண்டு சிக்கின மாதிரி ‘களுக்’னு ஒரு அடைப்பு. இதெல்லாம் இனி நாம பாக்க மாட்டம்ல? அது மாதிரியே பூத்து நிக்கிற ஊமத்தம் பூ, ஆவாரஞ்செடி எல்லாத்துகிட்டவும் தன்னப்போல பேசிட்டிருந்தேன்.

எங்க சின்னம்மா மகன் குமரேசன் என் நெழல். 1958-ல் மெட்ராஸ் புறப்பட்ட நாள்ளருந்து கடந்த 50 வருஷத்துக்கு மேல ரயில்வே ஸ்டேஷன்ல என்னை வரவேற்கிறதும்; வழியனுப்பறதும் அவருதான். முதல்ல ரயில்வே ஸ்டேஷன். இப்ப விமான நிலையம். மெட்ராசிலருந்து ஊருக்குப் போயிட்டா, திரும்பி புறப்படற வரைக்கும் நிழலாட்டமா என் கூடவே இருப்பாரு குமரேசன்.

பல்லடத்துக்கு வடக்கே மங்கலம் ரோட்ல இருக்கற நாரணாபுரம் ஒரு சின்ன கிராமம். அங்கே ஊர் மணியகாரர் தோட்டத்தை வாரத்துக்கு எடுத்து (விளைஞ்சதில் நிலத்துக்கு சொந்தக்காரருக்கு பாதி- உழைத்தவருக்குப் பாதி) விவசாயம் பண்ணீட்டு இருந்த நாராணாபுரம் சின்னம்மாவைப் பத்தி முன்னமே சொல்லியிருக்கேன். அந்த சின்னம்மா புள்ளதான் இந்த குமரேசன். அண்ணன் முறை. என்னை விட 3 வயசு பெரியவர்.

வாசல்ல காய்ஞ்சுட்டிருக்கிற ராகி, சோளத்தில நாய் பூனையெல்லாம் மிதிச்சிட்டுப் போகும். அதில 4 வள்ளம் (ஒரு வள்ளம்ன்னா 4 லிட்டர்) ராகி, சோளம் மாசா மாசம் மணியகாரர் அளந்து போடுவாரு. அதிலதான் சோறாக்கி, 7,8 குழந்தைகளோட அவங்க சாப்பிட்டு காலந் தள்ளணும். எங்க பெரியம்மா, சின்னம்மாக்கள் குடும்பத்தில யாரும் பள்ளிக்கூடம் போனதில்லே. ஒண்ணு மில்லு வேலை. இல்லே கூலி வேலைதான். நான் ஒருத்தன்தான் பள்ளிக்கூடம் போனவன். அதனால எல்லா சொந்தக்காரங்களுக்கும் நான்தான் செல்லப்பிள்ளை.

நாரணாபுரம், கல்லம்பாளையம், குளத்தூரு, கருப்பராம்பாளையத்து சொந்தக்காரங்க வீட்டுக்கு நான் போனா, அன்னிக்கு எல்லோருக்கும் நெல்லுச்சோறு (அரிசி சாப்பாடு) கிடைக்கும். அதனால ‘சின்னப்பொன்னா’ (அது என் செல்லப் பெயர்) எப்ப மறுக்கா எங்கூருக்கு வருவே?’ன்னு ஒடைஞ்ச குரல்ல கேட்பாங்க.

கிராமப்புறங்கள்ளே நோம்பி சாட்டுனா, எல்லா வீட்டிலயும் விதவிதமா மாவு. தின்பண்டம் (பலகாரம்) செய்வாங்க.

குடும்பத்துடன்

நான் மெட்ராஸ் போயி வெளியூர்க்காரன் ஆயிட்டதால, ‘வாய்யா ஒரம்பரைக்காரா!’ன்னு வீட்டுக்கு வீடு, ‘பச்சை மாவு, தினைமாவு, எள்ளுருண்டை, முறுக்கு, அதிரசம், லட்டு, ஜிலேபி, மைசூர்பா, மிக்சர்’னு குடுப்பாங்க. என்னால ஒண்ணு, ரெண்டு ஊட்ல சாப்பிட முடியும். மொத்தமா அஞ்சாறு ஊடுகள்ல என்ன குடுத்தாலும் குமரேசன்கிட்ட குடுத்து சாப்பிடச் சொல்லி, அவர் வயித்தை குப்பைத் தொட்டி ஆக்கிடுவேன்.

எதிர்காலமே இருட்டா இருந்த சின்னம்மா புள்ளைங்களை பொள்ளாச்சி மாமா சிபாரிசில சூலூர் பக்கமுள்ள மில்கள்ளே வேலைக்கு சேர்த்து விட்டேன். குமரேசனுக்கும் சதர்ன் டெக்ஸ்டைல்ல வேலை வாங்கிக்குடுத்தேன். இவங்கப்பா வாடகைக்கு பார வண்டி ஓட்டறவரு சூலூர் பக்கம் அதே வேலை செஞ்சாரு. வாரம் ஒரு நாள் சிநேகிதகாரனோட 2-வது ஆட்டம் சினிமாவுக்குப் போயிருவாரு. திரைப்படம் - பிலிம் வழியாக காட்டப்படுதுன்னு அவர் கடைசி வரைக்கும் நம்பவே இல்லை. நடிக்கறவங்கெல்லாம் மெட்ராசிலருந்து நம்மூருக்கு வந்து, நம்ம முன்னால பாடி, ஆடிட்டு, மறுநாள் கார்த்தால திரும்பிப் போயிருவாங்கன்னே நெனச்சிட்டிருந்தாரு.

கை நாட்டு போடும் சித்தப்பாவுக்கும், சின்னம்மாவுக்கும் என் கல்யாணத்தின் போது பாத பூஜை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. என் தாயார் விதவை என்பதை விட - அப்பா, அம்மா இரண்டு பேரும்தான் பாதபூஜையில் நிற்க வேண்டும் என்ற போது இவர்களை நிறுத்தி வணங்கினேன்.

பள்ளிக்கூட கட்டடத்தில் மழைக்குக்கூட ஒதுங்காத குமரேசன், பிரைவேட் வாத்தியார் வைத்து 1-ம் வகுப்பு புத்தகங்கள் எல்லாத்தையும் வாங்கி, சாயங்காலம் 4 மணியிலிருந்து 8 மணி வரைக்கும் விடாம படிச்சு, வருஷக்கடைசில தேர்வு எழுதுவார்.

அதே வாத்தியார் - இவர் தேர்ச்சி பெற்றதும், 2-ம் கிளாஸ் புத்தகங்களை வாங்கிக் குடுத்து பாடம் சொல்லி குடுப்பாரு. இப்படியே, ஸ்கூலுக்குள்ளே கால் வைக்காமலே ப்ளஸ்டூ வரை படித்து ப்ளஸ் டூ தோல்வியடைந்தாலும் நெஞ்ச நிமிர்த்தி நடந்தவர். அந்த வெறி, வேகம் மனசுல இருந்ததனாலதான் இவர் மூத்த பெண் சரோஜா 3 சாப்ட்வேர் கம்பெனிக்கு அமெரிக்கா பாஸ்டன் நகரத்தில் ‘ஹெட்’டாக இருந்திச்சு.

என் திருமணத்தில் குமரேசன்

ஒரு தடவை எனக்கு கிட்னில கல் இருக்குகுன்னு எக்ஸ்ரே பார்த்து சொன்ன டாக்டர் ‘அதை மருந்திலேயே கரைச்சிடலாம், இல்லைன்னா ஆபரேசன் பண்ணி எடுத்திடலாம்’ன்னு சொன்னாரு. நான் மெட்ராஸ்ல இருக்கேன். குமரேசனுக்கு எப்படியோ செய்தி எட்டீருச்சு. ஒரு வாரத்தில மெட்ராஸ் வந்தாரு. சோகமா மூஞ்சி இருந்திச்சு. பவ்யமா ஒரு கவரை குடுத்தாரு. பிரிச்சுப் பார்த்தேன். ரிஜிஸ்டர் பண்ணின பத்திரம். ‘நான் சுயநினைவோடு இதை எழுதுகிறேன். என் தம்பி சிவகுமாருக்கு ‘கிட்னி’ மூலம் ஏதாவது பிரச்சனை வந்தால், என் இரண்டு கிட்னிகளையும் அவருக்கு தானமாக கொடுக்க விரும்புகிறேன் என்பதை இந்த பத்திரத்தின் மூலம் உறுதி செய்கிறேன். என் உயிரைக் கொடுத்து என் தம்பியை காப்பாத்தறதை விட சந்தோஷம் இந்த உலகத்தில எதுவுமே இல்லை’.

படிச்சேன். அப்ப என் மனசில இருந்த உணர்ச்சியை வார்த்தைகளால எழுத முடியாது. ‘முட்டாள்; முட்டாள்! நீ நினைக்கிற அளவுக்கு எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எதுக்கு இப்படி பத்திரம் தயார் பண்ணனே’ன்னு திட்டிட்டு அவர் முன்னால அதை கிழிச்சுப் போட்டுட்டேன்.

ஒரு வேலையக் குடுத்து ‘அதை இப்படி செய்யணும்’ன்னு சொன்னா இம்மி பிசகாம அப்படியே செஞ்சு முடிச்சிருவாரு. மகள் சரோஜா. அகமதாபாத்தில் அப்போ வேலையில இருந்திச்சு. ரயில் டிக்கெட் எப்படி வாங்கணும்? ரிசர்வேஷன் கம்பார்ட்மெண்ட்ல, பேரை எப்படி பார்த்து -அந்த சீட்ல உட்காரணும், சாப்பாடு, தண்ணியெல்லாம் எப்படி முன்னாடியே எடுத்திட்டு போகணும் - அகமதாபாத் ஸ்டேஷன்ல சரோஜா வரலைன்னா -பப்ளிக் டெலிபோன்ல எப்படி போன் பண்ணி, ரிங் சத்தம் கேட்டவுடனே காசை உள்ளே போடணும்னு- சொல்லிக் குடுத்தா கம்யூட்டர் கூட தப்பு பண்ணும் இவர் பண்ண மாட்டார்.

குமரகோம் -ஆலப்புழை சுற்றுலா தலத்தில படப்பிடிப்பு. எப்படி பாலக்காடு பஸ் புடிக்கணும். அங்கிருந்து ஆலப்புழை பஸ்ல ஏறி அங்க வந்து எறங்கி, பஸ் இல்லேன்னா -குமரகோம் போக டாக்ஸி எப்படி புடிக்கணும்னு சொல்லிக் குடுத்தேன். அப்படியே மறுநாள் காலையில அலுங்காம குமரகோம் வந்து சிரிக்கறாரு.

ராமபக்த அனுமன்- அப்படிம்பாங்க -நான் ராமர் இல்லேன்னாலும் அனுமன் ராமன் மீது வச்சிருந்த பக்திக்கு கொஞ்சமும் குறைவில்லாத பாசம் எம்மேல வச்சிருக்கறவரு குமரேசன்.

மெட்ராஸ் போயி நான் என்ன ஆவேன்னு அவருக்கு தெரியாது. ஆனா, ஏதாவது ஒண்ணா ஆவேன்னு மட்டும் தெரியும். என்னோட அழுக்குத் துணிகளை வாங்கிட்டு சூலூர் குளத்தை ஒட்டியுள்ள தோட்டத்துக்கு கொண்டு போய் சுத்தமா துவச்சு, இஸ்திரி போட்டு கொண்டாந்து பெட்டியில அடுக்கிக் குடுப்பாரு.

எந்த தோட்டத்தில அவர் துணி தொவச்சாரோ, அதே தோட்டத்தை 1983-ல விலைக்கு வாங்கி குமரேசனையே விவசாயம் பார்க்க வச்சது ஒரு தனி கதை.

குமரேசனுடன்

இப்படி நெழலா இருந்தவர் கல்யாணத்துக்கு மெட்ராஸ்லருந்து என்னால போக முடியலே. அதுக்கு வட்டியும் முதலுமா அவரோட 3 பொண்ணுங்க கல்யாணத்திலயும் கலந்துகிட்டு ஆசீர்வாதம் பண்ணினேன். இதை விட முக்கியமான விஷயம், 3 வருஷம் குமாரசாமி வாத்தியாரு கூட கொங்கு சீமை முழுக்க சுத்தியலைஞ்சு, எனக்கு பொண்ணு தேடி என் சம்சாரத்தை கண்டுபிடிச்சு குடுத்தவர் இவருதான்.

அப்படிப்பட்டவரு சென்னைக்கு புறப்படற தம்பிக்கு என்னிக்கும் போல இன்னிக்கும் துணியெல்லாம் துவைச்சு கொண்டாந்தாரு.

மெட்ராஸ் போற பையனுக்கு ஃபுல் பேண்ட் 3, சட்டை 5, பொள்ளாச்சி மாமா மகன் ரத்தினம் அவங்க ஊர்லயே துணி வாங்கி தச்சு குடுத்தாரு.

வேட்டைக்காரன்புதூருக்கு மேவறம் ஒடையக்குளம்னு ஒரு ஊரு. அந்த ஊர் ஜமீன் ஓ.எஸ்.பி மகன் சண்முகம் -இவரை சிவாஜி கண்ணுமச்சான்னு கூப்பிடுவாரு. -இவரு மெட்ராஸ் புறப்படற தகவல் எங்க மாமாவுக்கு கிடைச்சுது.

‘‘டேய்! ஒடையகுளத்துக்காரர் கூடவே நாமளும் மெட்ராஸ் போயிரலாம். தெக்கு வடக்கு தெரியாம அங்கே போய் திண்டாடறதுக்கு அவரு கூடவே போலாம். சட்டுபுட்டுனு நீயும் ரத்தினமும் ரெடியாயிடுங்கன்னாரு மாமா.

கோயமுத்தூர்லருந்து நீலகிரி எக்ஸ்பிரஸ்ல சென்னைக்கு புறப்படறோம். ஸ்டேஷன்லருந்து 1-வது பிளாட்பாரத்துக்கு படி ஏறும்போதே சொர்க்கலோகத்துக்கு கூட்டீட்டுப் போற படி இதுன்னு தோணுச்சு.

கோவை சென்ட்ரல் பிளாட்பாரம் (நான் வரைந்த ஓவியம்)

புறப்படற அவசரத்தில சீட் ரிசர்வ் பண்ண முடியலே, கண்ணு மச்சான் மட்டும் ரிசர்வ்டு கம்பார்ட்மெண்ட்ல வந்தாரு. நாங்க ‘அன்ரிசர்வ்டு’ பொட்டில. சரியான கூட்டம். உட்கார இடமில்லாம 3-வது கிளாஸ் பெட்டில ரெண்டு டாய்லெட்டுக்கும் இடையில சகிக்க முடியாத நாத்தம் வர்ற இடத்தில -‘டயாபடீஸ்’ வியாதியோட இருந்த மாமாவை படுக்க வச்சு சென்னைக்கு கூட்டீட்டு வந்து சேர்ந்தோம்.

சென்னை சென்ட்ரல்

சென்னை ரயில் நின்னதும், பிளாட்பாரத்தில எறங்கி நாலா பக்கமும் ரயில்கள் வர்றதும், போறதும், சனங்க எடம் புடிக்க ஆலாப் பறக்கறதும், ஸ்டேஷனுக்கு முன்னாடி நின்ன கார்கள், டாக்ஸிகளைப் பாத்து, வாயப்பொளந்ததும் இப்ப பாத்த மாதிரி மனசில ஒட்டியிருக்கு.

5-ம் ஜார்ஜ் மன்னன்

கருப்பு, மஞ்சப் பெயிண்ட் அடிச்சு 6 பேர் உட்கார்ற ‘செவர்லட்’ டாக்ஸியில தாமஸ் மன்றோ சிலை, 5-ம் ஜார்ஜ் மன்னன் சிலை, மவுண்ட் ரோடு ரவுண்டானா, வெலிங்டன், ஓடியன் தியேட்டர், ராயபேட்டை டவர், போலீஸ் ஸ்டேஷன் வழியா நியூ வுட்லண்ட்ஸ் ஓட்டல் போய் எறங்கினது - முதல்தளத்தில 110 -ம் நம்பர் ரூம்ல தங்கினது.

சென்னை மாநகராட்சி பில்டிங்

ஐஸ்கிரீம், பீச் மல்பா, ஃப்ரூட் சாலட், பாதாம்கீர்னு மாத்தி மாத்தி சாப்பிட்டு ரூம் கணக்கில எழுதினது - ராத்திரி பீச்சுக்குப் போய், கடல் தண்ணில காலை வச்சு -‘ஐயோ உள்ளே இழுக்குது’ன்னு கத்தினது- ‘FLY NOW PAY LATER - இப்ப பறந்துட்டு அப்புறம் காசு கொடு’ன்னு -75 ரூபா செலவுல ஏராப்ளான்ல எங்க மாமாவை கோயமுத்தூர் ஏத்தி அனுப்பினது இதெல்லாம் மறக்கற விஷயமா?

(இதுவரை சுவைத்த ‘கொங்குதேன்’ பகுதி இந்த அத்தியாயத்துடன் நிறைவு பெறுகிறது. அடுத்து வரும் அத்தியாயங்கள் ‘சித்திர சோலை’ பகுதியாக மலர்கிறது. தரிசிப்போம்...)

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்