மனமே நலமா: 5- கருணை பொருளாதாரம் சார்ந்ததா?

By பாரதி ஆனந்த்

"உங்கள் வாழ்நாளில் உங்களைச் சார்ந்தோரின் மகிழ்ச்சியை எழுதும் எழுதுகோலாக இருக்க இயலாவிட்டாலும் பரவாயில்லை; அவர்களின் துயர் துடைக்கும் அழிப்பானாக இருக்க முயற்சி செய்யுங்கள்.. " எங்கேயோ எப்போதோ படித்த வாசகம். இதைத் தான் இந்தக் கட்டுரையும் முன்வைக்கிறது.

கடந்த மார்ச் மாதம் தொடங்கிய கரோனா ஊரடங்கு மணிமேகலைக்கு வாழ்வில் எதிர்பாராத திருப்பத்தைக் கொண்டு வந்தது. கணவரைப் பிரிந்த மணிமேகலைக்கும், மகனுக்கும் துணையாக இருப்பதாகக் கூறிய அண்ணனோ பொருளாதார, உளவியல் ரீதியாக அவளுக்குப் பெருஞ்சுமையாகவே இருந்தார். ஓராண்டுக்கு முன்னர் மணிமேகலை எப்படியோ துணிச்சலை வரவழைத்துக் கொண்டு எந்தத் துணையும் தேவையில்லை. இருக்கும் வேலையைக் கொண்டு பிழைத்துக் கொள்வோம் என்று அண்ணனுடன் உறவை முறித்து வீட்டை விட்டு வெளியேறினாள்.

அப்போது சென்ற அண்ணன் கரோனா லாக்டவுன் ஆரம்பிப்பதற்கு சரியாக 10 நாட்களுக்கு முன்னதாக மணிமேகலையின் வீட்டிற்குத் திரும்பி வந்திருந்தார். ஆனால், ஆச்சரியமாக அவர் மீது அன்று குடி நெடியில்லை. கையறு நிலையில் வந்திருப்பது அவரின் வார்த்தைகளிலும் தோற்றத்திலும் தெரிந்தது. என்னை மருத்துவமனை கூட்டிச் செல்வாயா? எனக் கெஞ்சலாகக் கேட்டார். மணிமேகலை என்ன செய்வதென்று தெரியாமல் கை பிசைந்து நின்றாள். ஆனால், மகனோ மனிதாபிமானத்தின் அடிப்படையில் உதவ வேண்டும் என்று நிர்பந்தித்ததால் மணிமேகலை அண்ணனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள்.

தொடர்ச்சியான பரிசோதனைகளுக்குப் பிறகு அவருக்கு தீவிர நரம்புத் தளர்ச்சி நோய் உறுதியானது. நீண்ட காலம் வாழ வாய்ப்பில்லை என்பதும் தெரிந்தது. மாத்திரை, மருந்துகளுடன் வீட்டுக்கு அழைத்து வந்தாள். தன் வேலைகளைத் தானே கவனித்துக் கொண்டு முன்பிருந்த ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாமல் அமைதியாக இருந்த அண்ணன் ஒரு சில வாரத்தில் நடக்க முடியாமல் முற்றிலும் முடங்கினார். நாட்கள் செல்லச் செல்ல உணவு, தண்ணீர், இயற்கை உபாதைகள் எல்லாமே படுக்கையில்தான் என்ற நிலைமை வந்து சேர்ந்தது. மணிமேகலைக்கு நிர்பந்தங்கள் கூடின. சுற்றமும் நட்பும் உனக்கு இத்தனை தீங்கிழைத்தவர் என்று பட்டியல் போட்டனர். சொந்த அண்ணனாகவே இருந்தாலும் அவருக்கு இப்படி பணிவிடை செய்யத் தேவையில்லை என்று அறிவுரைப் படலங்களால் சோர்வை ஏற்படுத்தினர்.

ஆனால், மணிமேகலையின் மகன் மட்டுமே யார் என்ன சொன்னாலும் சரி, ஒரு மனிதர் வீழ்ந்துபோகும் சூழலில் அவருக்குத் துணையாக இருப்பது அறம் என்றான். எல்லா மனிதருக்கும் பிறக்கும்போது கிடைத்த மரியாதை மரணத்திலும் கிடைக்க வேண்டும் என்றான். அவளுக்கு அவன் புத்தனாகத் தெரிந்தான். எத்தனையோ சிக்கல்களுக்கும் சிரமங்களுக்கும் இடையே இன்றும் மணிமேகலையும் அவளின் மகனும் நோய்வாய்ப்பட்ட அந்த நபரை கவனித்துக் கொள்கிறார்கள். பொறுமை, சகிப்புத்தன்மை, மணிமேகலையின் மகன் போதித்த அன்பு இந்த மூன்றும் இருந்தால் மட்டுமே மரணப் படுக்கையில் இருப்பவர்களையும், தீராத வியாதியால் பாதிக்கப்பட்டவர்களை இப்படி அரவணைக்க முடியும்.

மணிமேகலையின் மகன் போல் எத்தனை பேர் உன்னதமான சிந்தையுடன் அன்பு செலுத்த தயாரிப்பார்கள் என உறுதிபடக் கூற முடியாது. ஆனால், அன்றாடம் அரசு மருத்துவமனைகளிலும், புற்றுநோய் மருத்துவமனைகளிலும், பேருந்து, ரயில் நிலையங்களிலும் "அம்மா, அப்பா, அண்ணா, அக்கா, அத்தை, மாமா, பாட்டி.. உட்கார்ந்திருங்க இதோ வந்துவிடுகிறேன்" என்று சொல்லிவிட்டு உறவுக்கு முற்றுப்புள்ளி வைத்துச் செல்பவர்களின் எண்ணிகை மட்டும் அளவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது என்பதை நிச்சயமாகக் கூறமுடியும். வயதானவர்கள் புறக்கணிப்பு, உடல், மனநலம் குன்றியோர் புறக்கணிப்பு என இரண்டு விதமான புறக்கணிப்புகள் நிகழ்கின்றன.

கருணை பொருளாதாரம் சார்ந்ததா?

பெரும்பாலும் புறக்கணிப்புக்குக் காரணமாகப் பொருளாதாரம் முன்வைக்கப்படுகிறது. கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் சென்றால்தான் சுயமரியாதையுடன் குடும்பத்தை நடத்திச் செல்ல முடியும் என்ற சூழலில் இருக்கும் ஒரு குடும்பத்தில் வயதான பெற்றோர் நோயாளியாகும்போது நெருக்கடி ஏற்படுகிறது என்பதை மறுக்க இயலாது. ஆனால், கருணை பொருளாதாரத்தையும் தாண்டியது.

நாள்பட்ட நோய்கள், இறுதிக்கட்டத்தில் இருக்கும் புற்றுநோயாளிகள், வயது மூப்பினால் நாட்களை எண்ணும் முதியோர், தீவிரமடையும் தன்மை கொண்ட நரம்பியல் கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோருக்கு கவுரவமான மரணத்தை உறுதிப்படுத்துவதுதான் மரண வலி தணிப்புச் சிகிச்சை (பேலியேட்டிவ் கேர்).

பேலியேட்டிவ் கேர் என்றால் என்ன?

பிறப்பு எப்படி இனிமையானதாக இருக்கிறதோ, பிறப்புக்கு எப்படி கவனிப்புகளும் சிகிச்சைகளும் இருக்கின்றனவோ அதேபோல் ஒரு மனிதரின் இறப்பும் கவுரமாக இருக்க வேண்டும். மரணத்தின் வாசலில் நிற்பவர்களுக்கு அன்பும், அரவணைப்பும் தரும் சிகிச்சைக்குப் பெயர் தான் பேலியேட்டிவ் கேர் (மரண வலி தணிப்புச் சிகிச்சை).

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், இறுதிக்கட்டத்தில் இருக்கும் ஒரு புற்றுநோயாளிக்கு திடீரென காய்ச்சல் அதிகரிக்கும். அப்போது அவருக்கு காய்ச்சல் மாத்திரைகள் கொடுப்பது. வாந்தி அதிகமானால் ஒரு எமிசெட் மாத்திரை தருவது. வலியைக் குறைக்க மார்ஃபின் கொடுக்கப்பது என அறிகுறிகளுக்கு ஏற்ப வலி நிவாரணிகளை வழங்கப்படும்.

இதை ஆங்கிலத்தில் சிம்ப்டமேட்டிக் ட்ரீட்மென்ட் (Symptomatic treatment) என்பர். இனி சிகிச்சையால் எந்தப் பலனும் இல்லை என்ற நிலையில், ஒரு குடும்பத்தினர் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் குறிப்பிட்ட நோயாளியின் சிகிச்சைக்கு செலவழிக்கச் செய்வது மற்ற அனைவரின் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கிவிடுகிறது.

அதனால், இறக்கும் நிலையில் உள்ள நோயாளிகளுக்குத் தேவைப்படும் மருந்து, மாத்திரைகளைக் கொடுத்து, உளவியல் ரீதியாக கவனித்துக்கொள்வதை பேலியேட்டிவ் கேர்.

அப்பேற்பட்ட சிகிச்சையைச் செய்து வருகிறது மதுரையில் உள்ள நேத்ராவதி வலி நிவாரணம் மற்றும் ஆதரவு சிகிச்சை மையம். அந்த மையத்தில் மொத்தம் 7 மருத்துவர்கள் உள்ளனர். அவர்களில் பொது மருத்துவரான டாக்டர் பாலகுரு 'இந்து தமிழ்' இணையதளத்துக்காகப் பேசினார்.

முதியோர் இல்லத்திலிருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது என்ற கேள்வியை மருத்துவர் பாலகுருவிடம் முன்வைத்தோம்.

"முதியோர் இல்லத்தை யார் வேண்டுமானாலும் நடத்தலாம். ஆனால், பேலியேட்டிவ் கேர் மையத்தை மருத்துவர்கள் மட்டுமே நடத்த இயலும்.

பேலியேட்டிவ் கேர் ஆரம்பிக்க வேண்டும் என்றால் இந்தியன் அசோசியேஷன் ஆஃப் பேலியேட்டிவ் கேர் அனுமதி பெற வேண்டும், அதேபோல் வேர்ல்டு அசோசியேஷன் ஆஃப் பேலியேட்டிவ் கேரில் பதிவு செய்ய வேண்டும். அண்மையில், தமிழ்நாடு பேலியேட்டிவ் கேர் அசோசியேஷன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அங்கும் நேத்ராவதி மையத்தைப் பதிவு செய்துள்ளோம்.

நேத்ராவதியின் லட்சியம், வழியற்றோருக்கு கவுரவமான மரணத்தை உறுதிப்படுத்துவது. 2014 முதல் நேத்ராவதியில் பேலியேட்டிவ் கேர் அளிக்கப்படுகிறது. அதற்கு முன்னர் இருந்தே ஆதரவற்ற தெருவில் விடப்பட்ட முதியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நாங்கள் மதுரையில் நடத்தும் மையத்தில் 50 படுக்கைகள் உள்ளன. எப்போதுமே கிட்டத்தட்ட அனைத்துப் படுக்கைகளிலும் நோயாளிகள் இருப்பர். எப்போது எங்கள் மையத்தில் இந்த எண்ணிக்கை மிக மிகக் குறைகிறதோ அப்போது சமூகத்தில் மனிதர்கள் மனிதர்களாகவே மனிதாபிமானத்தோடு வாழ்கிறார்கள் என்று புரிந்துகொள்வேன்.

புறக்கணிப்புகளின் வேரை நாம் நமது கலாச்சாரத்தோடு பொருத்திப் பார்க்க வேண்டும். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மனிதனின் சராசரி வாழ்நாள் காலம் 100-க்கும் மேல் இருந்தபோது முதுமக்கள் தாழிகள் புழக்கத்தில் இருந்துள்ளது. அது அப்போதைய காலகட்டத்தில் கருணைக் கொலையாக இருந்தது. ஆனால், மனித சமூகம் நாகரிகமும், சட்டமும் அறிந்த பின்னர் கருணைக் கொலை என்று அப்படியெல்லாம் யாரது இறப்பையும் நாம் நிர்ணயித்துவிட முடியாது.

மருத்துவர் பாலகுரு | புகைப்படம் சிகிச்சை பெறுபவரின் அனுமதியுடனேயே பிரசுரிக்கப்பட்டுள்ளது.

ஒரு நூற்றாண்டு பின்னால் சென்று பார்த்தால் நமது கலாச்சாரத்தில் கூட்டுக்குடும்ப முறை இருந்தது. அது பொருளாதார ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் குடும்ப உறுப்பினர்களுக்குப் பக்கபலமாக இருந்தது. கூட்டுக்குடும்ப முறையில், குடும்ப உறுப்பினருக்குத் தீராத நோய் வந்தாலோ அவர் நிரந்தரப் படுக்கை நோயாளியாக மாறினாலோ குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவர் பார்த்துக் கொள்ளும் சூழல் இருந்தது. ஆனால், இப்போது பெரும்பாலும் தனிக்குடும்பங்கள். இப்படியான குடும்பங்களில் யாரேனும் நோய் வாய்ப்பட்டால் அவர் சுமையாக மட்டுமே பார்க்கப்படுகிறார். வசதி வாய்ப்பிருந்தால் அத்தகையோரை உடனே ஒரு ஹோமில் சேர்ப்பதோ அல்லது ஹோம் கேர் நர்ஸ் நியமிப்பதோ புதிய இயல்பாகிவிட்டது. வசதியில்லாதவர்கள் என்றால் புறக்கணித்து எங்கேயோ விட்டுவிடுவது ஏற்றுக்கொள்ளப்பட்ட பழக்கமாகி இருக்கிறது.

நோய்வாய்ப்பட்டவரை சுத்தம் செய்தலோ பராமரிப்பதோ அருவருப்பாக இருப்பதாலேயே ஹோம் கேர் நர்ஸ் நியமிப்பதாக சிலர் கூறுகின்றனர். அவர்கள் நியமிக்கும் நபரும் சக மனிதர்தான் என்று எத்தனை பேர் சிந்திக்கின்றனர். உங்களால் முடியாத ஒரு விஷயத்தை பணத்தைக் கொடுத்து இன்னொருவரை செய்யச் சொல்வது எப்படி சரியான செயலாக இருக்க முடியும். எவ்வளவு பணம் கொடுத்தாலும் சக மனிதரை நீ இதைச் செய் என்று நிர்பந்திக்கும் அதிகாரம் இல்லைதானே. ஆகையால், நோய்வாய்ப்பட்டோரை கவனிப்பது என்பது பொருளாதாரம் சார்ந்தது அல்ல, அது மனிதாபிமானம் சார்ந்தது.

வீட்டில் இருக்கும் நோயாளியை டயப்பர் இருந்தால் மட்டும்தான் இயற்கை உபாதையின்போது கவனித்துக்கொள்ள முடியும் என்பதல்ல தேவையற்ற துணி கூட போதும். அதற்கு அடிப்படையில், நம்மைச் சார்ந்தவர்களை நாம் கவனித்துக் கொள்வது அடிப்படை மனிதப் பண்பு என்பதை உணர்ந்தால் முதியோர் இல்லங்களுக்கான அவசியம் ஏற்படாது. நாளையே நமக்கும்கூட அப்படியொரு நிலை வரலாம் அல்லவா?

ஹோம் கேர், முதியோர் இல்லங்கள், பாதுகாப்பு மையங்கள் பெரும்பாலும் வணிக ரீதியாக மாறிவிட்டன. இத்தகைய சூழலில் ஏழை , நடுத்தர குடும்பங்களுக்கு தோள் கொடுக்கும் நேத்ராவதி போன்ற மையங்கள் மிக மிகக் குறைவாகவே உள்ளன.

எங்களைப் போன்றோருக்கான பிரதான சிக்கல், இட நெருக்கடி. வாடகைக் கட்டிடம் கிடைப்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. சொந்தக் கட்டிடம் என்றாலும் கூட அதிக பேரை அனுமதிக்கும் அளவுக்கு பெரிதாகக் கட்ட இயலவில்லை. கேரள அரசு, திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் இதுபோன்ற மரண வலி தணிப்புச் சிகிச்சைக்காக 5 ஏக்கரில் இடம் கொடுத்துள்ளது. அங்கே எங்களைப் போன்ற தன்னார்வ அமைப்புகள் நோயாளிகளை தங்கவைத்துப் பராமரிக்கின்றன. இடம் மட்டுமே அரசு கொடுக்கிறது. மற்ற பராமரிப்புச் செலவினங்களை தன்னார்வ அமைப்புகளே ஏற்றுக் கொள்கின்றன. அதைப்போல் தமிழக அரசும் செய்தால் எங்களது சேவைக்கரத்தை இன்னும் நீட்டலாம்" என்றார்.

நேத்ராவதி மையத்தில் பணியாற்றிவரும் செவிலியர் ஐஸ்வர்யாவிடம் அவரின் அனுபவப் பகிர்வைக் கேட்டோம். "நர்ஸிங் பயிலும் போது ஒரு வார காலப் பயிற்சிக்காக இங்கு வந்தேன். விருப்பமே இல்லாமல்தான் வந்தேன். ஆனால், இங்கு வந்த பிறகு இங்குள்ளவர்களின் கதைகளைக் கேட்டபோது மனிதாபிமானமற்ற மனிதராக இருப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்தேன். படிப்பு முடிந்தவுடன் நானே இங்கு விரும்பி வேலைக்கு வந்துவிட்டேன். இங்குள்ளவர்களுக்கு எல்லாப் பணிவிடைகளும் செய்கிறேன். சம்பளம் கண் முன் தெரிவதில்லை. இவர்களின் முகங்களே தெரிகின்றன. அவர்கள் புலம்பும்போது நாங்கள் இருக்கிறோம் என்று ஆறுதல் வார்த்தை சொன்னால் போதும். நெகிழ்ந்துவிடுவார்கள்" என்றார்.

ஐஸ்வர்யா- நேத்ராவதி மையத்தில் பணிபுரியும் செவிலி

உறவுகள் என்று பாராமலும் புறக்கணிப்பவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது, "நோய் யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஒருவேளை இதேநிலை அவர்களுக்கு வந்தால், அவர்களுக்கும் நாங்கள் இருக்கிறோம்" என அழுத்தமாகக் கூறினார்.

கேர் டேக்கர்களுக்கான ஆலோசனை:

நோயாளிகளை, முதியோரை கவனித்துக் கொள்ளும் கேர் டேக்கர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவது இயல்புதான் என்கிறார் மனநல ஆலோசகர் இளையராஜா.

"நிரந்தர நோயாளிகளையோ அல்லது படுக்கையில் இருக்கும் வயது முதிர்ந்தோரையோ பார்த்துக் கொள்பவர்களுக்கு நிச்சயமாக ஆரம்பநிலையில் மன அழுத்தம் ஏற்படுவது இயல்பே. உதாரணத்துக்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவரின் உறவினருக்கு முதலில் ஏற்படும் உணர்வு அதிர்ச்சி. அந்த அதிர்ச்சியுடன் அடுத்ததாக எப்படி சமாளிக்கப்போகிறோம் என்ற சந்தேகம் வரும். இந்த இரண்டும் முதல் 15 நாட்களுக்கு மிகப் பெரிய மன அழுத்தத்தைத் தரும். இதனை மருத்துவ மொழியில் two weeks symptom அல்லது two months symptom என்று குறிப்பிடுகிறோம். அதாவது அதிர்ச்சியோ அச்சமோ குறைந்தது 2 வாரத்திலிருந்து அதிகபட்சம் 2 மாதங்கள் வரை நீடிக்கும். அதன் பின்னர் தொடர்ச்சியாக மருத்துவமனை செல்லும்போது தன்னைப் போன்றே வரும் அரவணைப்பாளர்களைச் சந்திப்பார்கள். அப்போது யதார்த்த நிலையை உணர ஆரம்பிப்பார்கள். இதை நாங்கள் ஏற்றுக்கொள்ளும் பருவம் (acceptance stage) என்கிறோம். அந்த நிலையை எட்டும்போது, சரி நோய்வந்துவிட்டது. இனி நோயாளியையும் பார்த்துக் கொள்ள வேண்டும் நம்மையும் கவனித்துக் கொள்ள வேண்டும்" என்ற நிலையை எட்டுகின்றனர். இதனால், மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு இயல்புக்குத் திரும்புகின்றனர்.

இது ஒருவகை மக்கள் என்றால், இன்னொரு பிரிவினர் இருக்கின்றனர். அவர்கள் தன்னைப் போன்ற பிரச்சினையில் உள்ளவர்களுடன் ஒரு குழுவாகத் திரள்கின்றனர். அவர்களுக்குள் அவ்வப்போது பேசி, நோயாளியைக் கையாள்வது பற்றி பரஸ்பரம் ஆலோசனைகளைப் பெற்றும் வழங்கியும் நிலைமையைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைக்கின்றனர்.

மனநல ஆலோசகர் இளையராஜா

ஆரம்பக் காலங்களில் அரவணைப்பாளர்களுக்கு தூக்கமின்மை, பசியின்மை, எதிலும் கவனத்தைக் குவித்தல் என்பது சிக்கலாகவே இருக்கும். ஆனால், உண்மை நிலவரத்தை ஏற்றுக் கொள்ளப்பழகும் போது சமாளிக்கும் திறன் தானாக வரும். நோயாளிகளைவிட அவர்களை பார்த்துக் கொள்பவர்கள் மன அழுத்தத்தில் சிக்கிக் கொள்ள 2 மடங்கு அதிக வாய்ப்புள்ளது. நோயாளிகளைக் கவனித்துக் கொள்வதோடு இடையிடையே தங்களுக்கான சிறிது நேரத்தை ஒதுக்கி பிடித்த விஷயங்களைச் செய்யலாம். பாடல்கள் கேட்பது, சிறு நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, இறை நம்பிக்கை இருந்தால் பூஜை செய்தல் என ஏதேனும் ஒன்றைச் செய்யலாம். தனிமைப்படுத்திக் கொள்வதில் இருந்து தற்காத்துக் கொண்டால் நிச்சயமாக மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம்.

ஒரு சிறு ஒப்பீட்டோடு சொல்ல வேண்டுமானால், மகப்பேறுக்குப் பின்னர் ஒரு தாய்க்கு மன அழுத்தம் ஏற்படும். போஸ்ட் பார்டம் டிப்ரஸன் என இதனை அழைக்கிறோம். தூக்கமின்மை, குழந்தையைப் பராமரித்தல் போன்றவற்றால் தன்னைத் தானே கவனித்துக் கொள்ள இயலாத சூழல் ஏற்படும். ஆனால், 2 மாதங்களில் புதிய சூழ்நிலைக்குத் தாய் பழகிவிடுவார். அதை வாஞ்சையோடு ஏற்றுக் கொண்டு புதிய சூழலில் தனக்கான நேரத்தையும் ஒதுக்கிக் கொள்வார். இதுபோல் தான் நோயாளிகளை அரவணைப்பதும் இயல்பாகிவிடும்.

இதையும் தாண்டி விரக்தியும், தற்கொலை எண்ணங்கள் போன்ற விபரீத யோசனைகள் வரும்போது மனநல ஆலோசகரை உடனடியாக அணுகுவது அவசியம்" என்றார்.

நம்மைச் சார்ந்தோர் நமக்காக எதையுமே செய்ய இயலாத சூழலிலும் கூட அவர்களை அரவணைப்போமேயானால் அதுவே பேரன்பு.

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

10 hours ago

வலைஞர் பக்கம்

12 hours ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

27 days ago

வலைஞர் பக்கம்

29 days ago

மேலும்