"கரோனா எங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்ததோடு நின்றிருக்கலாம் வாழ்வின் ஸ்ருதியாக, லயமாக இருந்த எஸ்.பி.பி.யையும் பறித்துக் கொண்டது பேரிடியாக இருக்கிறது" என்கின்றனர் மதுரையைச் சேர்ந்த மேடை இசைக் கலைஞர்கள்.
தமிழகத்தில் வேறெந்த மாவட்டங்களிலும் இல்லாத அளவுக்கும் மதுரையில் மெல்லிசைக் குழுக்கள் இருந்த காலகட்டம் அது. 1970-களில் களைகட்ட ஆரம்பித்த மெல்லிசை கச்சேரி குழுக்கள் அப்போது தென்தமிழகத்தில் விஷேச வீடுகளின் பிரம்மாண்டம் என்றே சொல்லலாம். கல்யாணப் பத்திரிகையின் கீழே இன்னிசை நிகழ்ச்சி என்று அந்த இசைக்குழுவின் பேனர் பெயரையும் அச்சிடுவது வழக்கம். அந்தக் கல்யாணத்துக்கு போக வேண்டாம் என்று முடிவு செய்திருந்த சொந்தம் கூட குறிப்பிட்ட குழுவின் பாட்டுக் கச்சேரி என்பதற்காக செல்வதுண்டு. அப்படி, மெல்லிசை குழுக்கள் வாழ்வாங்கு வாழ்ந்த காலமது.
அந்த காலகட்டத்தில் எஸ்பிபியின் பாடல்களுக்கு இருந்த வரவேற்பும், அதை இசைக்கும் போது ஏற்பட்ட அனுபவங்களையும் இந்து தமிழ் திசையுடன் பகிர்ந்து கொண்டார் மதுரை ஜீவன் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற இசைக்குழுவின் உரிமையாளர் ஜீவன்.
» கொங்கு தேன் 28: பக்கத்தூரு ‘எடிசன்’
» தேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியம்; தேவை மாதம் ரூ.18000: கவனத்தில் கொள்ளுமா மத்திய அரசு?
"எஸ்பிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்தே எனக்குள் மிகுந்த சோகம் தொற்றிக் கொண்டிருந்தது. இன்று அவர் நம்முடன் இல்லை என்ற செய்தியை நம்ப முடியவில்லை. நம்ப விரும்பவும் இல்லை. என்னைப் போன்ற மேடை இசைக் கலைஞர்களைப் பொறுத்தவரையில் அவரின் மூச்சும் பாட்டும் அணையா விளக்கே.
1982-ல் ஜீவன் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற இன்னிசை கச்சேரி குழுவை ஆரம்பித்தேன். அப்போதெல்லாம் கோயில் திருவிழாவோ, திருமண விழாவோ இன்னிசை கச்சேரி தான் மக்களுக்கு மிகப்பெரிய பொழுதுபோக்கு. கூட்டத்திலே கோயில் புறா என்று எங்கள் குழுவின் பாடகர் பாட ஆரம்பித்தவுடனேயே இளசுகளின் கைதட்டல் காதைப் பிளக்கும். விசிலும், சத்தமும் அடங்கிய பின்னர் தான் யாரை இங்கு தேடுதம்மா என்று அடுத்த வரியைப் பாடவே முடியும். எங்கேயும் எப்போதும் என்று பாடும் போதும், சொர்க்கம் மதுவிலே என்ற பாடலை அரங்கேற்றும் போதும் மக்கள் முகங்களில் தென்படும் மகிழ்ச்சி தான் எங்களுக்கான டிப்ஸ்.
துண்டு சீட்டில் இந்தப் பாட்டை பாடவும் என்று எழுதி அனுப்புவார்கள். சில ஊர்களில் ரஜினி பாட்டு, அதுவும் பாலு அண்ணா பாடிய பாடல்களாக மட்டுமே கேட்பார்கள். காதலின் தீபம் ஒன்று ஒலிக்காத மேடை இருக்காது. சில ஊரில் கூக்கூ என்று குயில் கூவாதோ என்று இசைக்காமல் நகர்ந்துவிட முடியாது.
இன்றுவரை புத்தாண்டில் 12 மணி அடித்ததும்.. ஹேப்பி நியூ இயர் என்று சகலாகலா வல்லவனாக எஸ்பிபி மட்டும்தான் ஒலித்துக் கொண்டிருக்கிறார்.
மேடைக் கச்சேரிகளின் உயிர்நாடியாக ராஜாவும் பாலுவும் இருந்தனர். ஒரு மாதத்தில் 30 நாட்களும் நாங்கள் கச்சேரிக்கு சென்ற காலம் எல்லாம் உண்டு. அத்தனை அயர்ச்சிக்கும் இடையே நான் எனது ட்ரம்ஸ் வாத்தியத்தில் இசைக்க பாலுவின் பாடல் ஒலிக்க அயர்ச்சி எல்லாம் காணாமல் போகும். எல்லா கச்சேரிகளிலும் எஸ்பிபி பாடல்களே அதிகம் இருக்கும்.
ஒருமுறை மதுரை மேடை இசைக் கலைஞர்களின் தேர்தலை ஒட்டி, எஸ்பிபி, எம்எஸ்வி, தேவா ஆகியோரை அழைத்து கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தோம். அப்போது எஸ்பிபி-யை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவரது பாடல்களைப் போலவே பழக சுகமாக இருந்தார். எங்களுக்காக அத்தனை அத்தனைப் பாடல்களை மேடையில் பாடிக் கொடுத்தார். சினிமா பாடல்கள் ரெக்கார்டிங் செய்யும் போது ஆகச்சிறந்த இசைக்கலைஞர்களுடன் பாடியவர், எங்களின் குழுக்களில் ஆங்காங்கே சிறு குறை தெரிந்தாலும் அதை அவரின் குரலால் ஈடு கட்டியதோடு கலைஞர்களை பாராட்டியும் சென்றார்.
70-களில் ஆரம்பித்த மெல்லிசை கச்சேரிகளின் ஆதிக்கம் 90-களின் ஆரம்ப காலகட்டம் வரை மிகச்சிறப்பாகவே இருந்தது. தொழில்நுட்பம் வளரவளர கச்சேரிகளில் மைனஸ் டிராக் என்ற பூதம் நுழைந்தது. இசைக் கலைஞர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டு பாடல்களைப் பாடினர். அந்தக் காலத்தில் ஒரு டிரம்ஸ், கீ போர்டு, வயலின், கிட்டார், பேஸ் கிட்டார், லீட் கிட்டார் என குழுவாக வாசித்த மகிழ்ச்சியும் உணர்ச்சியும் குறைந்து போனது.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக எங்களின் குழுவுக்கு உயிரும், குழுவினருக்கு உணவும் தந்த சாமி பாலசுப்ரமணியம். அவர் மறைந்தாலும் அவரின் மூச்சும் பாட்டும் அணையா விளக்கே" என்று கண்ணீருடன் முடித்தார்.
bharathi.p@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
27 days ago
வலைஞர் பக்கம்
29 days ago