கொங்கு தேன் 27: அருட்பெருஞ்ஜோதி

By செய்திப்பிரிவு

பொள்ளாச்சில எனக்கு 3 மாமன்மாருக இருந்தாங்க. பெரிய மாமா மாரப்பகவுண்டர் சந்தைப் பேட்டையில வைக்கோல் பிரிகள் வித்திட்டிருந்தாரு. 2-வது மாமா ரங்கசாமி சந்தை நாள்ள 2 வண்டி வாடகைக்கு விட்டுட்டிருந்தாரு. 3-வது மாமா ஆறுமுகக்கவுண்டர் சென்ட்ரல் லாட்ஜ் பிரியாணி ஓட்டல் தேர்முட்டி வீதியில நடத்திகிட்டிருந்தாரு.

பெரிய மாமா மகன் பழனிசாமி பிற்காலத்தில 4, 5 லாரிகள் சொந்தமா வாங்கி ஓட்டினாரு. ஆரம்பித்தில ஏ.பி.டி பஸ்ல பழனி போற வண்டில கண்டக்டரா இருந்தாரு. ஊரிலிருந்து அத்தை பையன் நான் வந்திருக்கேன்னு பழனிக்கு அந்த பஸ்ல ஓசி சவாரில கூட்டிட்டு போனாரு.

சந்தையில் வைக்கோல் விற்ற மாமாவிடம் ஆசீர்வாதம்

1950கள்ள, ஏபிடி பஸ்கள் சூரியனோட ஒளிக்கதிர்கள் 360 டிகிரியும் பாயும்ங்கற மாதிரி -பொள்ளாச்சிலருந்து மேக்கே டாப்சிலிப், பெரியபோதுக்கு போகும். வடமேற்கே பாலக்காடு போகும். வடக்கே கோயமுத்தூர் போகும். வடகிழக்கே பல்லடம், திருப்பூர் போகும். கிழக்கே உடுமலைப் பேட்டைக்கு போகும். தெற்கே வால்பாறை போகும்.

அதாவது பொள்ளாச்சிலருந்து எந்த ஊருக்குப் போறதுன்னாலும் கண்ணை மூடிட்டு ஏ.பி.டி பஸ் ஸ்டேண்டு போயிடலாம்.

உடுமலை ரோடு, கோயமுத்தூர் ரோடு சந்திப்பில, ஊருக்கு நடுவில, பழைய பஸ் ஸ்டேண்ட் வடக்குப் பாத்து இருந்துது.

உள்ளே போனா பச்சை பஸ் -ஜன்னல் பகுதி மஞ்சள் கலர்ல நிறைய பஸ்கள் வரிசையா நிக்கும்.

ஆபீஸ்ல மூக்குக்கண்ணாடி மாட்டிகிட்டு அகன்ற நெற்றியோட ஜிப்பா போட்டு ஒருத்தர் டேபிள் முன்னாடி உட்கார்ந்து சிரிச்ச மொகத்தோட இருக்கற மாதிரி போட்டோ அதுதான்.

அருட்செல்வர் என். மகாலிங்கம்னு பின்னாடி தெரிஞ்சுகிட்டேன். கொங்கு மண்ணின் அடையாளம் -பொள்ளாச்சி நகரின் முகம் அருட்செல்வர்.

என்.மகாலிங்கம்

எல்லா சிறப்பு குணங்களுமுள்ள, எல்லாரையும் நேசிக்கிற அன்பின் வடிவமானவர் சாந்த சொரூபி.

கொங்கு மண்டலத்தில ஆன்மீகம், பண்பாடு, இலக்கியம், கல்வி, தொழில், விவசாயம்னு இத்தனை சிறப்புக்களோட -இவற்றின் அடையாளமா வாழ்ந்த ஒரு முழு மனிதர்.

இறை நம்பிக்கை. காந்தீயத்தை உயிரா மதிக்கிறவர். மது, சூது, மாமிசப் பொருள்களோட எந்த தொடர்பும் வச்சுக்காம, வாழ்ந்ததனாலேயே -ஓட்டல்கள், சினிமா தியேட்டர் போன்ற துறைகளில் கால் பதிக்காதவர்.

அரசியல் தொடர்பு 15 வருஷம் இருந்துச்சு. காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வா இருந்த காலத்தில பரம்பிக்குளம் -ஆழியார் திட்டத்தை முடிக்க பாடுபட்டார்.

ஆன்மீக ஈடுபாடு காரணமா சச்சிதானந்தா சுவாமிகள், காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், வேதாத்ரி மகரிஷி- சித்பவானந்தான்னு பல பெரியவர்களோட தொடர்பு வச்சிருந்தாரு.

வேதாத்ரி மகரிஷி- சுவாமி சச்சிதானந்தாவுடன்

ஆழியாறில் வேதாத்ரி மகரிஷி ஆசிரமம் அமைக்க 11 ஏக்கரா நிலம், நன்கொடையா குடுத்தாரு.

ஆலயம், மசூதி, மாதா கோயில் -எதை புதுப்பிக்கணும்னு நியாயமான கோரிக்கை வச்சாலும் உடனே நன்கொடை தருவாரு.

70 நூல்கள், தமிழ் இலக்கியம், ஆன்மீக நூல்களை பதிப்பிச்சிருக்காரு. திருமூலரின் திருமந்திரம், தமிழ்-ஆங்கிலம் 2 மொழிலயும் பதிப்பிச்சிருக்காரு.

ஓவியர் எஸ்.ராஜம் 90 வயது தாண்டி வாழ்ந்தவர் - அஜந்தா ஓவியப் பாணியில, ஓவியங்கள் தீட்டறதில -அவருக்கு இணையா இங்கொருத்தரை சொல்ல முடியாது. அவரை வச்சு சித்திர பெரிய புராணம், சித்திர திருவிளையாடல்-னு ஓவியங்கள் மூலமா புராண கதைகளை பதிப்பிச்சாரு.

கல்வித்துறைக்கு ஏகப்பட்ட பள்ளிகள், பாலிடெக்னிக்குகள், கல்லூரிகள் இருந்தாலும் பொள்ளாச்சில டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில் நுட்பக் கல்லூரி -கோவையில குமர குரு தொழில்நுட்பக்கல்லூரி அவரோட அடையாளமா இருக்கு.

1300 வருஷம் பழமையான பவானி சங்கமேஸ்வரர், ஆதிகேசவ பெருமாள் கோயில் மாதிரி -பல கோயில்களை புதுப்பிச்சு கும்பாபிஷேகம் பண்ண நிதியுதவி செஞ்சிருக்காரு.

வள்ளலார், காந்தி இவரோட வழிகாட்டிகள்ங்கறதனால 49 வருஷங்கள் அக்டோபர் 2-ந்தேதி வள்ளலார்-காந்தி விழாவை தொடர்ந்து நடத்தினவர். என்னைப் பாக்கும்போதெல்லாம், ‘உங்களோட ஓவியங்களை நம்ம ஓம் சக்தி இதழ்கள்ளே மாசம் ஒண்ணை பப்ளிஷ் பண்ணலாமான்னு கேப்பாரு.

‘நான் ஒரே ஆல்பமா மொத்த ஓவியங்களையும் போடலாம்னு பிளேன் பண்ணியிருக்கேங்கய்யா!’ ன்னு சொல்லுவேன்.

2005-ல என்னுடைய ‘ராஜபாட்டை அல்ல’ நூலை ஒரு நாள் சாயங்காலம் 5 மணிக்கு செயிண்ட் மேரிஸ் ரோட்டுல உள்ள அவரோட மெட்ராஸ் வீட்டுக்குப் போயி கொடுத்துட்டு வந்தேன்.

கே.பி.எஸ்-எம்.ஜி.ஆருடன் என்.எம்

3 நாளில ராத்திரி பகலா படிச்சு 5 பக்கம் கைப்பட பாராட்டி எழுதி அனுப்பினாரு. எங்க ஊர் பரமசிவன் கோயில்ல சிவ லிங்கமோ வேற சிலைகளோ இல்லாம வெறும் வேல்களை வச்சு கும்பிடறது ஆச்சர்யமா இருக்கு. ஒரு நாள் வந்து பாக்கறேன்னாரு.

சினிமா உலகத்தைப் பத்தி எனக்கு அவ்வளவா தெரியாது. ஆனா, ஜெமினி கணேசன் -ஷூட்டிங் டைம்ல உங்களுக்கு சோறு ஊட்டி விட்டாருன்னு படிச்சப்போ அன்பு, பரிவு, பாசம் எல்லா இடத்திலயும் இருக்குன்னு தெரிஞ்சுகிட்டேன்னாரு.

சூலூர்ல நான் படிச்ச ஹைஸ்கூலை முன்னாள் மாணவர்கள் எல்லாரும் சேர்ந்து தத்து எடுத்துகிட்ட கதையை ஏற்கனவே சொல்லியிருக்கேன். அதுக்கு ரூ. 18 லட்சம் நானே வசூல் செஞ்சு குடுத்த விஷயத்தை எல்லாம் கேள்விப்பட்டு சந்தோஷப்பட்டவரு, சொந்த ஊர்லயும் பள்ளிக்கூடம் கட்டுங்க. அதுதான் நமக்கு பெருமைன்னாரு.

என் ராமாயணம் உரையை பாத்திட்டு நீங்க தமிழ் பண்டிதரா-ன்னு கேட்டாரு. நான் எஸ்.எஸ்.எல்.சி தமிழ்மீடியத்தில படிச்சேன்னேன். அப்புறம் இதெப்படி? பிரம்மாண்டமான கூட்டம் மூச்சு விடாம கம்பன் பாடல்களை, இவ்வளவு தெளிவா சொல்லியிருக்கீங்க-ன்னு கேட்டாரு.

சூலூர் பள்ளி புதிய கட்டிடம்.

பேராசிரியர் சாலமன் பாப்பையாதான் கம்பராமாயணத்துக்குள்ளே என்னை மூழ்கடிச்சவரு. மதுரையில ஒரு கம்பன் கழக நிகழ்ச்சியில என்னை ராமாயணம் பேசச் சொல்லி வற்புறுத்தினாரு. 10 பாட்டு படிச்சுட்டுப் போயி, அதை பேசி, கிடைச்ச வரவேற்பை பாத்து, கம்பன் மேல பைத்தியமாயிட்டேன்னு சொன்னேன்.

சூர்யா, கார்த்தி, பிருந்தா மூணு பேர் கல்யாணத்துக்கும் நேர்ல வந்து அவர் வாழ்த்தினதை மறக்கவே மாட்டேன்.

பிருந்தா கல்யாணத்துக்கு ஜெயலலிதா அம்மா வந்து ஆசீர்வாதம் பண்ணினாங்க. சூர்யா-ஜோதிகா கல்யாணத்துக்கு கலைஞர் வந்து வாழ்த்தினாரு. கோயமுத்தூரு ‘கொடீசியா’வில நடந்த கார்த்தி- ரஞ்ஜினி கல்யாணத்துக்கு கொஞ்சம் லேட்டா வர்றேன்னு சொல்லி வந்து வாழ்த்தினாரு.

பிருந்தா-சிவா திருமணத்தில்

அந்த கல்யாணத்துக்கு நீங்க வந்து தாலி எடுத்துக் குடுத்து ஆசீர்வாதம் பண்ணினா நல்லா இருக்கும்ன்னுதான் சொன்னேன். காலைல 5 மணிக்கு அங்கே இருக்கணும்னா 3 மணிக்கு எழுந்து தயாராகணும். கொஞ்சம் சிரமம் அப்படின்னாரு. அதுதான் அன்னிக்கு அவர் லேட்டா வந்து வாழ்த்தினதுக்கு காரணம்.

2014-லில், உடம்பு ரொம்பவும் சரியில்லாமல் கோவை கே.எம்.சி.ஹெச்சில் அட்மிட் செஞ்சிருந்தாங்க.

அக்டோபர் 2-ந்தேதி 49-வது ஆண்டு வள்ளலார் -காந்தி விழா, சென்னையில் நடக்க இருந்தது.

டாக்டர்கள் சொன்னாங்க, ‘உங்க ஹெல்த் கண்டிஷன்ல, விமானப் பயணம் ஆபத்தானது!’ன்னு.

48 வருஷமா நான் நடத்திட்டு வர்ற விழா, நான் இல்லாம எப்படி? எது நடந்தாலும் சரி, நான் போயே ஆகணும்னு புறப்பட்டு சென்னை வந்திட்டாரு.

சூர்யா-ஜோதிகா திருமணத்தில்

அக்டோபர் 2-ந்தேதி மாலையில தயாராகி, வீல்சேரோட வேன்ல ராஜேஸ்வரி கல்யாண மண்டபம் போய் எறங்கராரு. வர்றவங்களை எல்லாம் சிரிச்சுப்பேசி வரவேற்கிறாரு.

நீதிபதி ராமசுப்ரமணியம், ஒளவை நடராஜன்னு பெரியவங்க வர்றாங்க. சந்தோஷமா அவங்களை வரவேற்று, ‘நீங்க மேடைக்கு போயி, நிகழ்ச்சியை ஆரம்பியுங்க. நான் இங்க இருந்தே பாக்கறேன்!’னாரு.

2 பேரும் மேடை ஏறி சரியா 6 மணி. இறை வணக்கம் அறிவிக்கிறாங்க. பொண்ணு 2 வரி பாடுது. அப்படியே இவரு சேர்ல சாஞ்சாரு. இந்த உலகத்தை விட்டு புறப்பட்டு போயிட்டாரு.

மண்டபத்துக்கு சாதாரண சேர்ல வந்து உட்காந்தவரு -நிகழ்ச்சி ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, ‘வேன்ல வீல் சேர் இருக்கல்ல, அதை எடுத்துட்டு வாங்க!’ன்னு சொல்லி, அது வந்தவுடனே ‘வீல் சேர்’ல மாறி உட்கார்ந்திருக்காரு.

தனக்கு இப்படி ஒரு முடிவு ஏற்படும்னு மனசில பொறி தட்டியிருக்கணும். நிகழ்ச்சில 4 பேர் கைகால புடிச்சு தூக்கிட்டுப் போனா, எல்லோருக்கும் ஒரு மாதிரி இருக்கும். வீல்சேர்ல உயிர்போனா, அப்படியே அலுங்காம தள்ளிட்டுப் போய் வேன்ல ஏத்த வசதியா இருக்கும்னு நினைச்சு, வீல்சேர்ல கேட்டிருக்காரு.

எனக்குத் தெரிந்து டாக்டர் அப்துல்கலாம் அவர்களுக்கு புடிச்சது மாணவர்கள் முன்னாடி பேசறது; பேசப்பேச அவர் உயிர் பிரிந்தது.

அருட்செல்வருக்கு பிடிச்சது வள்ளலார்-காந்திய விழா. அது நடக்கும்போது உயிர் பிரிஞ்சிருக்கு.

அருட்பெருஞ்ஜோதி; தனிப்பெருங்கருணை!

இந்த பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும்.

---

சுவைப்போம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

17 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

28 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்